Saturday, April 28, 2007

போறவளே பொன்னுத்தாயி...!


கொத்துக் கொத்தாய்க் காய்ச்சிருக்கு மஞ்சக் கொல்லை - உன்னைப்
பொத்திக் பொத்தி வெச்சுக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள!
முத்து முத்தாய்ச் சிரிச்சிருக்கு தென்னம்புள்ள - வந்து
முத்தம் எல்லாம் கொடுத்துவிட்ட சின்னப்புள்ள!

தேடித் தேடிக் காலெல்லாம் கருப்பாச்சு - உசுரத்
தேடித் தேடி உடம்பு உருக்குலைஞ்சாச்சு!
உண்ணாம உறங்காம கண்ணு நெருப்பாச்சு - அழகு
உருவம் பாத்தபொறவு உறக்கம் தொலஞ்சாச்சு!

சிரிச்சு சிரிச்சு நீ மனசுக்குள்ள வந்தாச்சு - உன்
சிரிப்பு சத்தம் கேட்காம காதுக செவுடாச்சு!
வெடிச்சு வெடிச்சுப் போகும் பருத்தி குரலாச்சு - காய்ச்ச
வெண்டக்கா வெளஞ்சு நிக்கும் வெரலாச்சு!

தொட்டுத் தொட்டுப் போகும் நுரை ஆத்தோடு - உன்னத்
தொட்டுத் தொட்டுப் பேச வரவா மூச்சுக் காத்தோடு!
பட்டுப் பட்டுத் துணியெல்லாம் எதுக்காக - உம்மேல
பட்டுப் பட்டு வரும் தென்றல் எனக்காக!

சிந்த சிந்த வார்த்தையெல்லாம் பொறுக்கிக்கிட்டேன் - நீ
சிந்தாத எழுத்துக்கென்னை உருக்கிக்கிட்டேன்!
நீ நனஞ்ச மழைக்காக குடையாவேன் - நீ
நனயாத இரவுகளில் உடையாவேன்!

நீ சிரிக்கும் போதெல்லம் எங்கோ சறுக்கறேன்!
உன் சிதறி விட்ட புன்னகையைப் பொறுக்கறேன்!
என் பேனா மை தீரும்வரை கிறுக்கறேன்!
உன் பெண்மை எனக்காகும் வரை இரவைக் குறுக்கறேன்!
28.June.2004

No comments: