இந்த Enigma வீடியோவிற்கு கதை சொல்லவே தேவை இல்லை. எல்லாம் நாம் அறிந்த கர்ணன் கதை தான். இளைய தலைமுறையினர் யாருக்காவது 'who is this Karnan ya...?' என்ற ஐயம் வந்தால், தலைவரின் தளபதி போல் என்று கொள்ளுங்கள். அட, அதுவும் தெரியாதவரா... அப்போது நீங்கள் இந்த வீடியோவை மட்டும் பார்த்து மகிழுங்கள்.
Saturday, March 22, 2008
நெல்லை - ஒரு நாள் பயணம்.

மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தேன்.
இரவின் மெளனமான குளிர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சல்லாத் துணியைப் போல் மேகப் புகைகளைக் கொண்டு, நிலாப் பெண் தன் வெண் முகத்தை மறைத்தும், காட்டியும் ஒரு இரகசிய நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழைத்தூறல் முன்பே பரப்பிய குளிர்மையை விட்டு வைத்திருந்தது. மஞ்சள் மின் விளக்குகளின் ஒளி, சாலையோரம் தேங்கியிருந்த மழைத் தேக்கத்தில் மரங்களின் இலைகளில் இருந்து நழுவும் துளிகள் விழுந்ததால் கலைந்து போய்க் கொண்டிருந்தது. வழக்கமாய் அலுவலகத்தில் இருந்து அந்நேரத்திற்கு திரும்புகையில், வாழ்த்துப் பாடி வரவேற்கும் பைரவர்களின் ஒலியும் இல்லை. தெருவே வெறிச்சோடி இருந்தது. கள்வர்களின் பயம் மட்டும் மனதின் ஓரம் மினுக்கிக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்று அதிகாலை 3 மணி.
அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இருந்த தம்பானூர் பேருந்து நிலையத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கூட்டமும் இங்கு இல்லை.
பூச்சிகள் பறந்து கொண்டிருந்த டியூப் லைட்கள், நகர்த்த இயலாமல் கால்களில் ஆணியடிக்கப்பட்ட சேர்களில் அமர்ந்தும், புரண்டும், சரிந்தும், வாய் திறந்தும், மூடியும், அரைக் கண்களை திறந்தும், மூடியும் இருந்த பல பிரயாணிகள், நாள் முழுதுமான பயணத்தில் களைத்த பேருந்துகள் ஓய்வு, திறந்திருந்த சில ஓட்டல்கள், நேரக் கண்காணிப்பாளர் அலுவலகம், சில பத்திரிக்கை கடைகள் ( அங்கிருந்த ஆடையில்லாத படங்களை வெறித்துப் பார்த்தும், நகர்ந்தும் சுற்றிக் கொண்டேயிருந்த சில கண்கள்), டீ ஆற்றும் ஒரே ஒரு அரசாங்கக் கடை, அங்கிருந்து மிதந்து வந்து காற்றின் பக்கங்களில் தன் வரிகளைப் பதித்துப் போன 'கண்ணன் ஒரு கைக்குழந்தை...'....
Get Your Own Hindi Songs Player at Music Plugin
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறுகையில் நான் பார்த்த திருவனந்தபுரம் முக்கிய பேருந்து நிலையம் இந்த அழகில் இல்லை.
மதுரையில் மாமா வீடு இருப்பதால் அங்கும், திருச்சியில் அத்தை வீடு இருப்பதால் அங்கும் சிறு வயதில் பல முறை சென்று வந்தாயிற்று. கோவை நம்ம ஊர். அங்கு சித்தப்பா வீடு இருந்ததால் அங்கும் பல முறை சென்றாயிற்று. சேலம் இன்னும் அருகில்! வடக்கும், கிழக்கும் நோக்கிய பயணங்களில் சேலம் தாண்டாமல் இருக்க முடியாது. சென்னையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்தது. பெங்களூரிலும் சில காலம் ஓடியது. ஹைதராபாத்தில் ஒரு சுற்றுலா சென்றதால், அதையும் பார்த்தாயிற்று. இன்னும் பார்க்காத தமிழக மாநகராய் நெல்லை மட்டும் இருந்து வந்தது. தெற்குப் பக்கமாக வர வேண்டிய அவசியம் இதுவரை இல்லாததால் நெல்லை பயணம் மட்டும் அமையாமலே இருந்தது. (இப்போது ஈரோடும், திருப்பூரும் மாநகர் வரிசையில் நின்று கொண்டதால், திருப்பூர் மட்டுமே இவ்வரிசையில் மிச்சம் இருக்கின்ற மாநகராய் உள்ளது.)
நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தருணம் அமைய வேண்டும் என்பதற்காகவே நெல்லை வருகை மட்டும் தள்ளிப் போடப்பட்டே வந்தது போலும்!
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்து விடுபட்டு, எவ்வித தகவல் இணைப்பும் இல்லாமல் போய்விட்ட பள்ளி நண்பர் ஒருவர் இப்போது நெல்லையில் குடும்பத்துடன் வசிப்பதாக தெரிய வந்த போது, அத்தருணம் வந்து விட்டது என்று தோன்றியது.
பங்குனி உத்திரம், மிலாது நபி, ஈஸ்டர் மூன்றும் இணைந்து வந்த இப்புனித வெள்ளியில் செல்ல வேண்டும் என்று இருந்தது போல், காலை உணவை தம்பானூரிலேயே முடித்துக் கொண்டு, நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறினேன்.
தொடர் மழையில் இருந்து காத்துக் கொள்ள ஒரு குடையும், குடை மறைக்க குமரன் சில்க்ஸின் பிளாஸ்டிக் கவர் பையும், பயணத்தின் போது படிக்க ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்டு இருந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' பற்றிய கையேடும் என்னுடன் பயணத்தில் துணை இருந்தன. தம்பானூரில் தமிழ்ப் புத்தகங்கள் ஏதும் கிடைக்காததால், 'இந்தியா டுடே' ஆங்கிலப் பதிப்பு மட்டும் வாங்கிக் கொண்டேன்.
ஜன்னல் திறக்க முடியாத இறுக்கத்தில், மேகங்கள் குவிந்திருந்த நாள் பொழுதின் குளிர்க் காற்று தீண்டாமல், ஒரு மெளனப் படம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். புரட்டத் தொடங்கி நன்றாக இருக்கிறதே, வாங்கிப் படிக்கலாம் என்று முடிவு செய்ய வைத்தது, 'இந்தியா டுடே' யில் இடம் பெற்றிருந்த அத்வானி அவர்களின் 'My Country, My Life' புத்தகத்தின் மதிப்புரை மற்றும் சில Excerpts.
மார்த்தாண்டம் அருகே சாலையோரமாகவே சில தேவாலயங்கள் வருவதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 8:50க்கு ஆரம்பித்த பயணம், எல்லையைக் கடந்து நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தை அடைந்து மூச்சை நிறுத்தும் போது, 11 மணி.
அந்நிலையத்தில் விகடன், குமுதம் மற்றும் ஜூ.வி. வாங்கிக் கொண்டேன். கைப்பையின் எடை சற்று அதிகரித்தது. நெல்லை செல்லும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன மழை மேகங்கள். வழியெங்கும் கடந்த 48 மணி நேரத்தில் இடைவிடாது பெய்திருந்த மாமழையின் விளையாட்டுக்கள். தன் உடலில், கடந்து செல்லும் வாகனங்கள் வாரி இறைக்கும் பழுப்பு நீரின் சேற்றைத் தாங்கிக் கொண்டு, பதிலுக்கு சாலையோரம் அமர்ந்திருந்த, நடந்த, நின்ற மனிதர்கள் மேல் சாலைக் குழிகளின் மழை நீரை பீச்சியடித்து... இந்த அலகிலா விளையாட்டை விளையாடிய படி பகல் 1 மணி சுமாருக்கு நெல்லை புது பேருந்து நிலையம் வந்தடைந்தது பேருந்து.
'நான் சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்று அடையாளம் சொல்ல, 'அது போல் ஆயிரம் கடைகள் இருக்கின்றன' என்று பதில் வர , வேறு வழியின்றி மற்றுமொரு அடையாளம் கூறினேன். 'இலவசக் கழிப்பிடம் அருகில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்றேன். 'அது நம்ம ஊரில் மிகக் குறைவு தான். எனவே இந்த அடையாளம் போதும்' என்றான். More Input Hops, But Very less Output Hops....?
உடலளவில் சற்று மாறிப் போயிருந்த நண்பன், மனதளவில் மாறாமல் என்னைப் பார்த்து 'என்னடா இப்படி ஆளே மாறிட்டே' என்றான். சிரித்தோம். பின் அங்கிருந்து பாளை பேருந்து நிலையம் வந்தோம். அங்கிருந்து நெல்லையப்பர் கோயிலைத் தாண்டி ஒரு நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றோம்.
பேச்சு. உணவு. பேச்சு. கொறித்தல். விட்டு விட்டு பொழிந்த, தூறிய, பெய்த, சிலுசிலுத்த மழையை இரசித்தல்.
மாலை 5.15 ஆனது. கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து நடந்து சென்றோம்.



நெல்லையப்பர் கோயில் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பிரம்மாண்டமாய் இல்லா விட்டாலும் இதுவும் பெரிதாகவே இருந்தது. நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தரிசித்து விட்டு, வசந்த மண்டபத்தில் பங்குனி உத்திர சிறப்பு திரு வீதி உலாவிற்காக அலங்காரம் செய்து கொண்டிருந்த பல்லக்கில் உற்சவர் தரிசனம், பிள்ளையார் பிடித்து பால் ஊற்றுதல், தாமிரசபை, எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு சல்யூட், திருகோயிலின் யானை நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகிலேயே அமர்ந்து பேச்சுக்கள் (ஏனெனில் அங்கு தான் யாரும் அதிக நேரம் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். யானை மேல் இருக்கும் ஆதி பயம் மட்டுமில்லாது, அதன் பெரிய உடலில் இருந்து வந்து கொண்டிருந்த விலங்கு மணம்..!) என்று இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கோயிலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தோம்.
வசந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிவ புராண நிகழ்ச்சிகள், கந்த புராண நிகழ்ச்சிகள் என்று ஓவியங்கள் வரையப் பட்டு இருந்தன. அதில் ஓர் ஓவியத்தில் அழகன் முருகனின் முக அழகு, அந்த செளந்தர்யம், வசீகரம், மந்தகாசப் புன்னகை, குறும்பு கொப்பளிக்க வள்ளியைக் காணும் காதல் கண்கள், நின்றிருக்கும் கம்பீரத் தோரணை.... அடடா....! ஒளவைக் கிழவி ஏன் இந்தச் சிறுவனை மட்டும் கொண்டாடினாள் என்பது புரிந்தது.
'நம்ம ஊரில் தான் பங்குனி உத்திரம் என்றால் முருகன் ஸ்பெஷல். இங்கு இது, சாஸ்தா ஸ்பெஷல்' என்று சொல்லப் பட்டிருந்ததால், வன்னியடி சாஸ்தா கோயிலில் இருந்து திருநீறு மற்றும் பொங்கல் வாங்கிக் கொண்டு கோயிலில் இருந்து வெளி வந்தோம்.
நெல்லையில் இருக்கும் ஒரே ஒரு பொழுது போக்கு இக்கோயில் என்பதால் ( இறைவா..! கோயில் பொழுது போக்குத் தலமா? உள்ளத்தின் பழுது போக்குத் தலம் என்றல்லவா நான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்...!) வஞ்சனையே இல்லாமல் சிறுவர் சிறுமிகள் தூண்களின் மேல் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தூண்களில் இருக்கும் சிலைகள் கண்கள் மூடி இருக்கும் அப்போது என்று தோன்றியது.
வெளியே வர, என் செருப்பு மட்டும் யாரும் சீண்டாமல் கிடக்க, கிடைக்க, நண்பனது செருப்பு காணாமல் போயிருந்தது. கொஞ்ச நேரம் தேடிப் பார்த்து விட்டு வெறுங்காலோடு வந்தோம். 'காலுக்கு வந்தது காலணியோடு போயிற்று' என்று சொன்னால் அடித்து விடுவானோ என்ற அச்சம் இருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டுக்கு வந்து சொன்னால், 'சரி! கொண்டு போயிருந்த குடை எங்கே?' என்று கேட்டார்கள். திக்கென்று இருந்த்து. நல்லவேளை கொண்டு வந்திருந்தோம். இல்லாவிடில் வழக்கமான 'தலைக்கு வந்தது தலைக் குடையோடு போனது' என்று மேலும் ஒன்று சொல்ல வேண்டி வந்திருக்கும்.
நாங்கள் கோயிலுக்குச் சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் வரை இறுக்க மூடியிருந்த வானம், வீட்டுக்குள் நுழைந்த சில நொடிகளில் பொங்கி கொட்டியதை நினைக்கையில் ஏதோ ஒன்று புரிந்தது போல் இருந்தது.

பின் மீண்டும் ஜங்ஷன் வந்து உண்மையான, சத்தியமான சாந்தி ஸ்வீட்ஸ் நாங்கள் தான் என்று போர்டு கூறிய கடையில் அல்வாப் பாக்கெட்டுகள் வாங்கினோம். இருட்டுக் கடை கதவு திறக்கும் முன்பே அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அப்பக்கம் செல்லவே இல்லை.
கொட்டும் மழையில் புதிய பேருந்து நிலையம், திருவனந்தபுரத்திற்கு நேரடி பேருந்து இல்லை என்பதால் மீண்டும் நாகர்கோயில் செல்லும் பேருந்துக்குள் ஏறிக் கொண்டேன், ரிப்போர்ட்டரை வாங்கி விட்டு..!
ஓரங்களில் ஊற்றிக் கொண்டே இருந்த பேருந்தில் ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டே கையில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களை படித்துக் கொண்டே வர, இரவு 9.50 மணி சுமாருக்கு எடுத்த பேருந்து, முன்னிரவு 11.30 சுமாருக்கு நாகர் கோயிலை அடைந்தது.
அங்கு வருவதற்குள் எல்லாப் புத்தகங்களும் காலியாகி விட்டிருந்ததால், நா.கோ.லில் எமெர்ஜன்சி நேரத்தில் மட்டும் வாம்க்கும் குங்குமம், கல்கி, நக்கீரன் வாங்கினேன். படிக்கும் அத்தனையும் ஜீரணிக்க Maazaவும் கூட..!
உடனே கிளம்பிய பேருந்தில் ஒட்டிக் கொண்டு, மஹா சித்தர்கள் கூறிய 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்' என்ற கேள்விக்குப் பதிலாக அதிகாலை 1:40 மணிக்கு தம்பானூர் வந்து இறங்கும் வரை பேருந்தில் நான் இருந்த நிலையைச் சொல்லலாம். பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாக அப்பயணம் கழிந்தது.
அடுத்து கழக்குட்டம் செல்லும் பேருந்து 2:30க்கு என்று தெரிந்து கொண்டதில், சும்மா இருக்க மாட்டாமல் தமிழ் 'இந்தியா டுடே ' வாங்கி அதை மேய, அதில் பாதி காலையில் வாங்கிய ஆங்கிலப் பதிப்பின் மொழியாக்கம் என்று புரிந்தது.
அந்த அகால இரண்டு மணிக்கும் இன் பண்ணிய இருவர் வந்து 'சார்! இது ஒரு நல்ல ஆஃபர். வெப்ஸ்டர்ஸின் டிக்ஷ்னரி. வேர்ல்ட்ஸ் இம்பார்டென்ட் ஃபேக்ட்ஸ். ஒரிஜினல் 1500 கிட்ட வரும். இப்போது சலுகை விலையாக 250க்கு தருகிறோம்' என்று கேட்க ஆரம்பித்தனர்.
அவர்களை மறுத்து நகர்ந்து கொண்டேன். வலை வந்த பிறகு, இது போன்ற தகவல் தொகுப்பு புத்தகங்களின் அவசியம் அற்றுப் போய் விட்டது என்று அவர்களிடம் சொல்ல நினைத்தாலும், இல்லை.
மலப்புரம் செல்லும் பேருந்து கிளம்புகையில், அதில் ஏறிக் கொண்டு, பூ ஒன்று குளத்தின் அலைகளில் மிதப்பது போல் மிதந்து கழக்குட்டத்தில் இறங்கிக் கொண்டேன்.
வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

வீடு இருக்கும் கருமை பூசிய தெருவில் நடக்க, அருகின் இரயில்வே தடத்தில் மின்வண்டி தடதடத்துப் போகின்ற சத்தம் கேட்டது. அதிலும் யாராவது ஒருவர் நான் நடந்து போகும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பாரோ என்று தோன்றியது.
அறைக்குள் நுழைந்து அந்த ஒரு நாளில் எடை கூடிப் போன கைப்பையைப் பிரித்து குடையை ஆணியில் மாட்டி வைத்தேன். Maazaவில் மிச்சத்தைக் காலி செய்தேன். வாங்கிய விகடன், குமுதம், குங்குமம், ஜூ.வி., ரிப்போர்ட்டர், நக்கீரன், இந்தியா டுடே, India Today, கல்கி அனைத்தையும் எடுத்து புத்தக அலமாரியில் அடுக்கி வைக்க, 'நானும் இருக்கிறேன் தீண்டப்படாமல்' என்ற வருத்தத்தோடு கையில் வந்து விழுந்தது 'Time Management' புத்தகம்.
ஏனோ ஒரு சிந்தனை அப்போது வந்தது.
விளக்கை அணைத்து விட்டு... Good Night...இல்லை... Good Morning. ஏதோ ஒன்று. தூங்க வேண்டும்.
Thursday, March 20, 2008
பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ் .

ஐன்ஸ்டீன் அண்ணாத்தைக்கு முதலில் சலாம்.
ஒன்றும் இல்லாததை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது தான்.
ஆனால் அதை அழுத்தி இருக்கிறார்கள். Squeeze செய்திருக்கிறார்கள். பாருங்களேன்.
http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2008/229/1
வாழ்வின் மாயா தத்துவத்தையும், இயற்பியலையும், புத்தமதத் தத்துவத்தையும் இணைத்து ஒரு பெரிய ஆர்டிகிள் எழுதி இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றிலாவது குறைந்தபட்சம் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் படித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் அப்படியே ஏறக் கட்டி விடுங்கள்.
http://www.higgo.com/quantum/laymans.htm
காந்தப் புலத்தைத் தூண்ட என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, பார்த்தீர்களா..?
இரண்டாம் உலக மகா போரில் ஜப்பான் பேரரசை நிலை குலைய வைத்த 'சின்னப் பையன்'.
ஒரு சதுரத்தின் பரிமாணம் 2. ஒரு கோட்டின் பரிமாணம் 1. ஒரு புள்ளிக்கு பரிமாணமே கிடையாது. சரி. எல்லாம் நாம் அறிந்தது தான்.
முக்கோணத்தின் பரிமாணம் என்ன? ஒரு மரத்தின் பரிமாணம், காலையில் சாப்பிட்ட இட்லியின், பரிமாணம், வானில் நகர்கின்ற மேகத்தின் பரிமாணம் என்னவாய் இருக்கும்?
அறிய ஆசையா? அணுகவும்.
பிரதி வாரம் செவ்வாய் காலை 7 மணி முதல், மதியம் 1 மணி வரையும் Massachusetts சர்வரிலும், வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் ஒன்பது முப்பது மணி வரை பிட்ஸ்பெர்க் சர்வரிலும் மாறிக் கொள்ளாமல், எப்போதும் ஒரே சர்வரில் நின்று அருள் பாலிக்கும் இங்கே :
http://www.math.umass.edu/~mconnors/fractal/sierp/sierp.html
குழப்பவியலைப் (Chaos Theory) பற்றிய குழப்பமான தத்துவங்களையும், குழப்பமான ஈக்வேஷன்களையும் நம்மைக் குழப்பாமல் , குழப்பவும் செய்யாமல், குழம்பவும் விடாமல் ஒரேயடியாக குழப்பி அடிக்காமலும் குழப்பமே இல்லாமலும் இங்கே ஒரு சிறிய அறிமுகம். என்ன கொஞ்சம் குழப்பி விட்டேனா, இல்லை குழம்பி விட்டேனா..? ரொம்பக் குழம்பாமல் இங்கு சென்று பார்க்கவும். உங்கள் குழப்பம் கொஞ்சம் தெளியலாம்.
குழப்பாண்டவரே துணை.
http://www.imho.com/grae/chaos/main.html
இல்லான் இல்லாள்...!

'இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கலாமோ? சக்கர கம்மியா குடுத்த காபிக்கு கத்தாம, சாக்ஸ் தொவைக்காம இருந்தா எரிச்சல்படாம, ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வந்தா ஆத்துல இல்லைனா டென்ஷன் ஆகாம இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். வைதேகி. இப்படி ஆகிடுச்சேம்மா. இனிமே உன்ன எங்க பாக்கப் போறேன். மேலோகத்திலயா? சொர்க்கத்திலயா? ம்ஹூம் நான் உன்ன பண்ணின கஷ்டத்துக்கெல்லாம் எனக்கு சொர்க்கமா கெடைக்கும்? நரகம் தான். சங்கரா..! நாராயணா..!'
ரங்கநாதன் கண்களை மூடிக் கொண்டார்.
"அம்மா! இந்தக் கணக்கு சரியாம்மா? கொஞ்சம் பாரேன். தப்பா போட்டிருந்தா ஸ்கூல்ல டீச்சர் தொடையிலயே கிள்றாம்மா..!"
"ஏண்டா! நோக்கு ஏழு வயசாறதோ இல்லையோ? இன்னும் என்னடா அம்மா அம்மானு முந்தானையையே புடிச்சிண்டு சுத்தறே! உங்கப்பா தான் அங்க பேப்பர் படிச்சிண்டு ஒக்காந்திருக்காளே! அவர் கிட்ட போய்க் கேளேன். அம்மா தான் இங்க சமையல்ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்லோ இல்லையோ? ஏன்னா...! செத்த இவனக் கவனிச்சுக்கப் படாதா? நான் இங்க ஒருத்தியா கிச்சன்ல அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன். இந்த மனுஷனுக்கு பேப்பர்...! காலயில எழுந்ததுல இருந்து பேப்பர் தான் உலகம். கக்கூஸ் போறதுல இருந்து, பல் தேச்சு ஆபீஸுக்குக் கிளம்பற வரைக்கும்.. அப்படி என்ன தான் பேப்பர்ல இருக்குமோ? ஆபிசுவரி வரைக்கும் கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கணுமா? எங்க மதினி வீட்ல எல்லாம் இப்படியா இருக்கா? காலையில எழுந்து பொம்மனாட்டிக்கு ஹெல்ப் பண்ணின்டு, அப்புறமா தான் ஆபிஸ் கிளம்பறா..! எனக்குனு வந்து வாச்சிருக்கே, இப்படி ஊருல இல்லாத மனுசனா...?"
"என்னடி! பொலம்பிண்டே இருக்க..! ச்சே..! ஒரு மனுஷன் காலங்காத்தால எழுத்தரிச்சு நிம்மதியா ஆபீஸுக்கு கெளம்பறதுக்குள்ள எத்தனை சத்தம்..? என்னடா வேணும் இப்ப உனக்கு..?"
"இல்லப்பா! இந்த கணக்கு சரியானு அம்மாவ பாக்க சொன்னேன்..."
"கொண்டா...! என்னடா கணக்கு போட்டிருக்க நீ! 73 + 27 நூறுனு தெரியலயே உனக்கு! 87னு போட்டு வெச்சிருக்க..! ஏண்டா இவ்ளோ வயசாறதே , ஒரு கூட்டல் கணக்கு சரியா போட வர்றதா உனக்கு? எடு அந்த ஸ்கேலை.! கையை நீட்டு!"
"அப்பா..! அடிக்காதீங்கப்பா...!"
"போறும்..! புள்ளய அடிச்சது! ஆத்துல இருக்கற கோபத்தை எல்லாம் பச்சப் புள்ள மேல தான் காட்டறது. கொண்டாங்க இப்படி! காத்தால எழுந்திரிச்சு ஆத்துக்காரிக்கு கூடமாட ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் அப்படினு தோணல. ஆனா புள்ளைய அடிக்கறதுனா மட்டும் அப்படியே ஆங்காரமா எழுந்திருச்சு வந்திடறது...!"
"அடச்சை..! நீ புள்ளயை சரியா வளத்திருந்தினா, இப்படி கணக்கு எல்லாம் தப்பா போட்டுண்டு வந்து நிப்பானா..?"
"ஏன் நீங்க தான் சரியா வளக்கறது! அப்படியே ராமானுஜம் ஆத்துல அரை கிலோ தயிரை தெனமும் குடிச்சு வளந்தாப்ல தான் பேசறது..! மாசா மாசம் சம்பளத்துல 400 ரூபா குறையறதேனு கேட்டா அதுக்கு சரியா கணக்கு சொல்றதில்ல. ஆபிஸுல கூப்பிட்டானு சொல்லி தண்ணி அடிக்க வேண்டியது.."
"என்னடி நாக்கு நீள்றது? நீ மட்டும் கணக்குல புலியோ? உங்கப்பன் கலியாணத்துக்கு போடறதா சொன்ன பதினைஞ்சு பவுன் நகைக்கு கணக்கு கேட்டா மட்டும் மூச்சே வராதே..! எல்லாம் ஏமாத்து குடும்பம். பெரியவா சும்மாவா சொன்னா? 'ஆழம் தெரியாம் கால விடாத'னு..!"
"இதோ பாருங்க..! என்ன பத்தி என்ன வேணாலும் பேசுங்கோ! பொறுத்துக்கறேன்! எங்க ஃபேமிலியப் பத்தியோ, அப்பாவைப் பத்தியோ ஏதாச்சும் கொற சொன்னீங்க, அப்புறம் நான் என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது.."
"என்னடி செஞ்சுக்குவ...! உங்கப்பன் வீட்டுக்கு ஓடிப் போய்டுவியோ? அங்கயே தரித்திரம் தல விரிச்சு ஆடுது..!"
"நான் எதுக்கு அங்க போகணும்..? எங்கப்பான் பெருமாள் காலடியில போய் சேந்திடுவேன். அப்புறம் நீங்களாச்சு, உங்க பதினஞ்சு பவுன் நகையுமாச்சு..! கட்டிண்டு அழுங்கோ.."
"எப்படி செஞ்சுக்குவே அம்மா பரதேவத...?"
"எப்படியோ செஞ்சுக்கறேன். லோகத்துல வர்றதுக்கு ஒரே வழி. போறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. டேய், நீ இங்க வாடா..!..."
"எப்படி ஆச்சு...?" பார்வதி மாமா கேட்டாள்.
"என்னனு சொல்ல மாமி..? காலையில சண்டை. வழக்கமா நடக்கற சண்டை இல்லை. கொஞ்சம் பெரிய வார்த்தை எல்லாம் வந்து விழுந்திடுச்சு. அந்த கோபத்தோடவே ஆபிஸுக்கு கெளம்பிப் போயிருக்கார். நான் ஒரு பாவி! அவருக்கு ஆபிஸுல ஆயிரம் டென்ஷன் இருக்கும். அதையெல்லாம் வீட்டுல தான் காட்ட முடியும். காட்டி இருக்கார். அதைப் புரிஞ்சுக்காம அவர்கூட எப்பயும் சண்டை போட்டுண்டே இருந்திருக்கேன். இன்னிக்கு அந்த கோபத்துல போய்க் குடிச்சிருக்கார். ஸ்கூட்டர் ஓட்டிண்டு வரும்போது லாரில அடிபட்டி அங்கேயே....! பெருமாளே! சாகும் போது என்ன நெனச்சிண்டாரோ? நான் பாவி..! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா அவர் கூட வாழ்ந்திருக்கலாமே....!" வைதேகி தலையில் அடித்துக் கொண்டாள்.
பீச்சாங்கர...!

கடல் நீருக்கு வெள்ளை ஆடைகளை அணிய வைத்து, அலைகளாய்க் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கருணையே இல்லாத கதிரவன் காற்றைப் பொசுக்கிக் கொண்டிருந்தான். காற்றின் கண்ணீர் கானல் நீராய் கசிந்தது.
"இப்ப இன்னாத்துக்கு இங்க இட்டாந்த? அதும் இப்டி ஒரு மொட்ட வெயில்ல..?"
"இன்னாம்மே! கொஞ்ச நேரம் குஜாலா இருக்காலாம்னு சவாரி கூட போகாம இங்க வந்தா..."
"அய்ய! அதுக்காண்டி தான் இஸ்துகினு வந்தியா? வூட்டாண்டயே சொல்லிருக்க வேண்டியது தான..."
"அது எப்டி? புள்ளங்க தான் மூணு மூன்றையானா இஸ்கோலுல இருந்து வூட்டுக்கு ஓடியாந்துருமே..!"
"அதான் மச்சான் இங்க கூட்டிகினு வந்தியா? நானும் பீச்சுக்கு கூட்டினு போனு எத்தினி தபா கூவிகினே இருந்தேன். ஐயாவுக்கு தோணுச்சினா தான் நடக்கும் போல..! அது சரி..! இன்னாய்யா இது பாக்க சின்னஞ்சிறுசுக மாரி இருக்குதுங்க! அந்த போட்டுக்கு அடியில உக்காந்து இன்னா பண்ணுதுங்க..?
"ஆங்..! கோலி வெள்ளாடறாங்கோ? இன்னாடி நீ? ரெண்டு புள்ள பெத்தவ மாரியா கேக்கற..?"
"அதுக்காண்டி..! இன்னாயா அக்கிரமா இருக்கு! பாத்தா படிக்கற புள்ளைங்க மாரி இருக்குதுங்க. இப்டி பட்டப் பகலுல மனுசன் போய்க்கினும் வந்துகினும் இருக்கற பப்ளிக் பிளேஸ்ல இந்தக் கருமாந்திரம் பண்ணிட்டு இருக்குதுங்க! இதுங்க அப்பனாத்தா பாக்க சொல்லோ எப்டி மனசு நொந்து போகும். கஷ்டப்பட்டு வாயக் கட்டி, வயித்தக் கட்டி அவுங்க கஷ்டப்பட்டு ஒயச்சு, காசு சேத்து, புள்ளங்களாவது நல்ல இருக்கணும்னு பெரிய பெருய இஸ்கோலுலயும், அது இன்னாய்யா அது... அக்காங், காலேசு அங்க எல்லாம் சேத்து வுட்டா, இதுங்க பண்ற காரியத்துக்கு எனக்கே செருப்ப கயட்டி நாலு அடி அட்ச்சா இன்னானு தோணுது.."
"அடேங்கப்பா! இன்னா ஒனக்கு இவ்ளோ கோவம் வருது! இதுக்கே இப்டி டென்சன் ஆகறியே, இன்னும் பெசன்ட் நகரு பீச்சுப் பக்கமெல்லாம் பயங்கர கலீஜா இருக்கும். சவாரி போச் சொல்ல கண்ண மூடிக்கினு தான் கிராஸ் பண்ணிப் போவேன். அத எல்லாம் பாத்தா இன்னும் என்ன சொல்லுவியோ?"
"பீச்சுனா பாக்க சொல்ல நல்லாருக்கும். புள்ளங்களையும் கூட்டிகினு வரலாம். செலவு கம்மியா பொயுது போகும்னு நெனச்சா, இந்த எளவையெல்லாம் பாக்க அதுங்கள வேற கூட்டிகினு வரணுமானு தோணுது..!"
"அப்ப பீச்சுக்கு கூட்டிகினு போனு அப்பபோ சவுண்டு விடுவியே, அதெல்லாம் ஒனக்கோசரம் இல்லையா..?"
"அடப்பாவி மனுசா! நீ அப்டியா நெனச்சுக்கினு இருந்த! ஏன்யா! ரெண்டு புள்ள பொறந்தாச்சு. அதுங்க இஸ்கூலுக்கு போற வயசாகிடுச்சு! இன்னமும் நீயும், நானும் மட்டும் பீச்சு, பார்க்குனு சுத்தறதுக்கு நாம் இன்னா நேத்து தான் கலியாணம் பண்ண சோடியா? இனிமே புள்ளைங்க நல்லது தான் நமக்கும்.."
"அது சர்தான்! வாத்தியாரே பாட்டுல சொல்லி இருக்காரே!"
"இன்னானு..?"
" 'இனி புருசனுக்கு கெடியாது கொயந்தைக்கு தான் முத்தம்'னு.."
"கரீட்டு தான்! வாத்தியாரு சொன்னா அது என்னிக்காவது தப்பா போயிருக்கா..? சரி வா! புள்ளைங்க வந்திடப் போகுதுங்க! போய் சோத்த ஆக்கணும்! நீயும் சவாரி போய்ட்டு வா..! வழியுல இந்த மாரி கண்றாவியெல்லாம் பாத்து மனசக் கெடுக்காத. வூட்டுல நான் ஒருத்தி உசுரோட இருக்கேங்கறத மறந்திடாத. இன்னா புரிஞ்சுதா.?"
"சர்தான் புள்ள! வா! வூட்டுக்குப் போலாம். இன்னோரு தபா, இந்த மாரி எல்லாம் நடக்காம பீச்சு சுத்தமா இருக்க சொல்லோ, புள்ளங்களயும் கூட்டிகினு வருவோம். நீ சொன்ன மாரி, இனிமே புள்ளங்க சந்தோசம் தான் நமக்கும்! ஆனா, நம்ம புள்ளங்கள இதுங்க மாரி தறுதலயா வளக்கக் கூடாது. தங்கம் கணக்கா தான் வளக்கோணும். இன்னா, ஒனிக்கு ஹாப்பி தான...?"
" தோடா.. தொர இங்கிலீசு எல்லாம் பேசுது...!"
பொறிந்த வெயிலின் சிதறல்களாய் இருவரும் சிரித்தனர்.
Subscribe to:
Posts (Atom)