Thursday, March 20, 2008
இல்லான் இல்லாள்...!
'இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கலாமோ? சக்கர கம்மியா குடுத்த காபிக்கு கத்தாம, சாக்ஸ் தொவைக்காம இருந்தா எரிச்சல்படாம, ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வந்தா ஆத்துல இல்லைனா டென்ஷன் ஆகாம இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். வைதேகி. இப்படி ஆகிடுச்சேம்மா. இனிமே உன்ன எங்க பாக்கப் போறேன். மேலோகத்திலயா? சொர்க்கத்திலயா? ம்ஹூம் நான் உன்ன பண்ணின கஷ்டத்துக்கெல்லாம் எனக்கு சொர்க்கமா கெடைக்கும்? நரகம் தான். சங்கரா..! நாராயணா..!'
ரங்கநாதன் கண்களை மூடிக் கொண்டார்.
"அம்மா! இந்தக் கணக்கு சரியாம்மா? கொஞ்சம் பாரேன். தப்பா போட்டிருந்தா ஸ்கூல்ல டீச்சர் தொடையிலயே கிள்றாம்மா..!"
"ஏண்டா! நோக்கு ஏழு வயசாறதோ இல்லையோ? இன்னும் என்னடா அம்மா அம்மானு முந்தானையையே புடிச்சிண்டு சுத்தறே! உங்கப்பா தான் அங்க பேப்பர் படிச்சிண்டு ஒக்காந்திருக்காளே! அவர் கிட்ட போய்க் கேளேன். அம்மா தான் இங்க சமையல்ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்லோ இல்லையோ? ஏன்னா...! செத்த இவனக் கவனிச்சுக்கப் படாதா? நான் இங்க ஒருத்தியா கிச்சன்ல அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன். இந்த மனுஷனுக்கு பேப்பர்...! காலயில எழுந்ததுல இருந்து பேப்பர் தான் உலகம். கக்கூஸ் போறதுல இருந்து, பல் தேச்சு ஆபீஸுக்குக் கிளம்பற வரைக்கும்.. அப்படி என்ன தான் பேப்பர்ல இருக்குமோ? ஆபிசுவரி வரைக்கும் கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கணுமா? எங்க மதினி வீட்ல எல்லாம் இப்படியா இருக்கா? காலையில எழுந்து பொம்மனாட்டிக்கு ஹெல்ப் பண்ணின்டு, அப்புறமா தான் ஆபிஸ் கிளம்பறா..! எனக்குனு வந்து வாச்சிருக்கே, இப்படி ஊருல இல்லாத மனுசனா...?"
"என்னடி! பொலம்பிண்டே இருக்க..! ச்சே..! ஒரு மனுஷன் காலங்காத்தால எழுத்தரிச்சு நிம்மதியா ஆபீஸுக்கு கெளம்பறதுக்குள்ள எத்தனை சத்தம்..? என்னடா வேணும் இப்ப உனக்கு..?"
"இல்லப்பா! இந்த கணக்கு சரியானு அம்மாவ பாக்க சொன்னேன்..."
"கொண்டா...! என்னடா கணக்கு போட்டிருக்க நீ! 73 + 27 நூறுனு தெரியலயே உனக்கு! 87னு போட்டு வெச்சிருக்க..! ஏண்டா இவ்ளோ வயசாறதே , ஒரு கூட்டல் கணக்கு சரியா போட வர்றதா உனக்கு? எடு அந்த ஸ்கேலை.! கையை நீட்டு!"
"அப்பா..! அடிக்காதீங்கப்பா...!"
"போறும்..! புள்ளய அடிச்சது! ஆத்துல இருக்கற கோபத்தை எல்லாம் பச்சப் புள்ள மேல தான் காட்டறது. கொண்டாங்க இப்படி! காத்தால எழுந்திரிச்சு ஆத்துக்காரிக்கு கூடமாட ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் அப்படினு தோணல. ஆனா புள்ளைய அடிக்கறதுனா மட்டும் அப்படியே ஆங்காரமா எழுந்திருச்சு வந்திடறது...!"
"அடச்சை..! நீ புள்ளயை சரியா வளத்திருந்தினா, இப்படி கணக்கு எல்லாம் தப்பா போட்டுண்டு வந்து நிப்பானா..?"
"ஏன் நீங்க தான் சரியா வளக்கறது! அப்படியே ராமானுஜம் ஆத்துல அரை கிலோ தயிரை தெனமும் குடிச்சு வளந்தாப்ல தான் பேசறது..! மாசா மாசம் சம்பளத்துல 400 ரூபா குறையறதேனு கேட்டா அதுக்கு சரியா கணக்கு சொல்றதில்ல. ஆபிஸுல கூப்பிட்டானு சொல்லி தண்ணி அடிக்க வேண்டியது.."
"என்னடி நாக்கு நீள்றது? நீ மட்டும் கணக்குல புலியோ? உங்கப்பன் கலியாணத்துக்கு போடறதா சொன்ன பதினைஞ்சு பவுன் நகைக்கு கணக்கு கேட்டா மட்டும் மூச்சே வராதே..! எல்லாம் ஏமாத்து குடும்பம். பெரியவா சும்மாவா சொன்னா? 'ஆழம் தெரியாம் கால விடாத'னு..!"
"இதோ பாருங்க..! என்ன பத்தி என்ன வேணாலும் பேசுங்கோ! பொறுத்துக்கறேன்! எங்க ஃபேமிலியப் பத்தியோ, அப்பாவைப் பத்தியோ ஏதாச்சும் கொற சொன்னீங்க, அப்புறம் நான் என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது.."
"என்னடி செஞ்சுக்குவ...! உங்கப்பன் வீட்டுக்கு ஓடிப் போய்டுவியோ? அங்கயே தரித்திரம் தல விரிச்சு ஆடுது..!"
"நான் எதுக்கு அங்க போகணும்..? எங்கப்பான் பெருமாள் காலடியில போய் சேந்திடுவேன். அப்புறம் நீங்களாச்சு, உங்க பதினஞ்சு பவுன் நகையுமாச்சு..! கட்டிண்டு அழுங்கோ.."
"எப்படி செஞ்சுக்குவே அம்மா பரதேவத...?"
"எப்படியோ செஞ்சுக்கறேன். லோகத்துல வர்றதுக்கு ஒரே வழி. போறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. டேய், நீ இங்க வாடா..!..."
"எப்படி ஆச்சு...?" பார்வதி மாமா கேட்டாள்.
"என்னனு சொல்ல மாமி..? காலையில சண்டை. வழக்கமா நடக்கற சண்டை இல்லை. கொஞ்சம் பெரிய வார்த்தை எல்லாம் வந்து விழுந்திடுச்சு. அந்த கோபத்தோடவே ஆபிஸுக்கு கெளம்பிப் போயிருக்கார். நான் ஒரு பாவி! அவருக்கு ஆபிஸுல ஆயிரம் டென்ஷன் இருக்கும். அதையெல்லாம் வீட்டுல தான் காட்ட முடியும். காட்டி இருக்கார். அதைப் புரிஞ்சுக்காம அவர்கூட எப்பயும் சண்டை போட்டுண்டே இருந்திருக்கேன். இன்னிக்கு அந்த கோபத்துல போய்க் குடிச்சிருக்கார். ஸ்கூட்டர் ஓட்டிண்டு வரும்போது லாரில அடிபட்டி அங்கேயே....! பெருமாளே! சாகும் போது என்ன நெனச்சிண்டாரோ? நான் பாவி..! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா அவர் கூட வாழ்ந்திருக்கலாமே....!" வைதேகி தலையில் அடித்துக் கொண்டாள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்னாருக்குடா அம்பி ட்விஸ்ட்டு...
Post a Comment