Saturday, March 22, 2008
நெல்லை - ஒரு நாள் பயணம்.
மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தேன்.
இரவின் மெளனமான குளிர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சல்லாத் துணியைப் போல் மேகப் புகைகளைக் கொண்டு, நிலாப் பெண் தன் வெண் முகத்தை மறைத்தும், காட்டியும் ஒரு இரகசிய நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழைத்தூறல் முன்பே பரப்பிய குளிர்மையை விட்டு வைத்திருந்தது. மஞ்சள் மின் விளக்குகளின் ஒளி, சாலையோரம் தேங்கியிருந்த மழைத் தேக்கத்தில் மரங்களின் இலைகளில் இருந்து நழுவும் துளிகள் விழுந்ததால் கலைந்து போய்க் கொண்டிருந்தது. வழக்கமாய் அலுவலகத்தில் இருந்து அந்நேரத்திற்கு திரும்புகையில், வாழ்த்துப் பாடி வரவேற்கும் பைரவர்களின் ஒலியும் இல்லை. தெருவே வெறிச்சோடி இருந்தது. கள்வர்களின் பயம் மட்டும் மனதின் ஓரம் மினுக்கிக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்று அதிகாலை 3 மணி.
அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இருந்த தம்பானூர் பேருந்து நிலையத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கூட்டமும் இங்கு இல்லை.
பூச்சிகள் பறந்து கொண்டிருந்த டியூப் லைட்கள், நகர்த்த இயலாமல் கால்களில் ஆணியடிக்கப்பட்ட சேர்களில் அமர்ந்தும், புரண்டும், சரிந்தும், வாய் திறந்தும், மூடியும், அரைக் கண்களை திறந்தும், மூடியும் இருந்த பல பிரயாணிகள், நாள் முழுதுமான பயணத்தில் களைத்த பேருந்துகள் ஓய்வு, திறந்திருந்த சில ஓட்டல்கள், நேரக் கண்காணிப்பாளர் அலுவலகம், சில பத்திரிக்கை கடைகள் ( அங்கிருந்த ஆடையில்லாத படங்களை வெறித்துப் பார்த்தும், நகர்ந்தும் சுற்றிக் கொண்டேயிருந்த சில கண்கள்), டீ ஆற்றும் ஒரே ஒரு அரசாங்கக் கடை, அங்கிருந்து மிதந்து வந்து காற்றின் பக்கங்களில் தன் வரிகளைப் பதித்துப் போன 'கண்ணன் ஒரு கைக்குழந்தை...'....
Get Your Own Hindi Songs Player at Music Plugin
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறுகையில் நான் பார்த்த திருவனந்தபுரம் முக்கிய பேருந்து நிலையம் இந்த அழகில் இல்லை.
மதுரையில் மாமா வீடு இருப்பதால் அங்கும், திருச்சியில் அத்தை வீடு இருப்பதால் அங்கும் சிறு வயதில் பல முறை சென்று வந்தாயிற்று. கோவை நம்ம ஊர். அங்கு சித்தப்பா வீடு இருந்ததால் அங்கும் பல முறை சென்றாயிற்று. சேலம் இன்னும் அருகில்! வடக்கும், கிழக்கும் நோக்கிய பயணங்களில் சேலம் தாண்டாமல் இருக்க முடியாது. சென்னையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்தது. பெங்களூரிலும் சில காலம் ஓடியது. ஹைதராபாத்தில் ஒரு சுற்றுலா சென்றதால், அதையும் பார்த்தாயிற்று. இன்னும் பார்க்காத தமிழக மாநகராய் நெல்லை மட்டும் இருந்து வந்தது. தெற்குப் பக்கமாக வர வேண்டிய அவசியம் இதுவரை இல்லாததால் நெல்லை பயணம் மட்டும் அமையாமலே இருந்தது. (இப்போது ஈரோடும், திருப்பூரும் மாநகர் வரிசையில் நின்று கொண்டதால், திருப்பூர் மட்டுமே இவ்வரிசையில் மிச்சம் இருக்கின்ற மாநகராய் உள்ளது.)
நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தருணம் அமைய வேண்டும் என்பதற்காகவே நெல்லை வருகை மட்டும் தள்ளிப் போடப்பட்டே வந்தது போலும்!
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்து விடுபட்டு, எவ்வித தகவல் இணைப்பும் இல்லாமல் போய்விட்ட பள்ளி நண்பர் ஒருவர் இப்போது நெல்லையில் குடும்பத்துடன் வசிப்பதாக தெரிய வந்த போது, அத்தருணம் வந்து விட்டது என்று தோன்றியது.
பங்குனி உத்திரம், மிலாது நபி, ஈஸ்டர் மூன்றும் இணைந்து வந்த இப்புனித வெள்ளியில் செல்ல வேண்டும் என்று இருந்தது போல், காலை உணவை தம்பானூரிலேயே முடித்துக் கொண்டு, நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறினேன்.
தொடர் மழையில் இருந்து காத்துக் கொள்ள ஒரு குடையும், குடை மறைக்க குமரன் சில்க்ஸின் பிளாஸ்டிக் கவர் பையும், பயணத்தின் போது படிக்க ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்டு இருந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' பற்றிய கையேடும் என்னுடன் பயணத்தில் துணை இருந்தன. தம்பானூரில் தமிழ்ப் புத்தகங்கள் ஏதும் கிடைக்காததால், 'இந்தியா டுடே' ஆங்கிலப் பதிப்பு மட்டும் வாங்கிக் கொண்டேன்.
ஜன்னல் திறக்க முடியாத இறுக்கத்தில், மேகங்கள் குவிந்திருந்த நாள் பொழுதின் குளிர்க் காற்று தீண்டாமல், ஒரு மெளனப் படம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். புரட்டத் தொடங்கி நன்றாக இருக்கிறதே, வாங்கிப் படிக்கலாம் என்று முடிவு செய்ய வைத்தது, 'இந்தியா டுடே' யில் இடம் பெற்றிருந்த அத்வானி அவர்களின் 'My Country, My Life' புத்தகத்தின் மதிப்புரை மற்றும் சில Excerpts.
மார்த்தாண்டம் அருகே சாலையோரமாகவே சில தேவாலயங்கள் வருவதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 8:50க்கு ஆரம்பித்த பயணம், எல்லையைக் கடந்து நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தை அடைந்து மூச்சை நிறுத்தும் போது, 11 மணி.
அந்நிலையத்தில் விகடன், குமுதம் மற்றும் ஜூ.வி. வாங்கிக் கொண்டேன். கைப்பையின் எடை சற்று அதிகரித்தது. நெல்லை செல்லும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன மழை மேகங்கள். வழியெங்கும் கடந்த 48 மணி நேரத்தில் இடைவிடாது பெய்திருந்த மாமழையின் விளையாட்டுக்கள். தன் உடலில், கடந்து செல்லும் வாகனங்கள் வாரி இறைக்கும் பழுப்பு நீரின் சேற்றைத் தாங்கிக் கொண்டு, பதிலுக்கு சாலையோரம் அமர்ந்திருந்த, நடந்த, நின்ற மனிதர்கள் மேல் சாலைக் குழிகளின் மழை நீரை பீச்சியடித்து... இந்த அலகிலா விளையாட்டை விளையாடிய படி பகல் 1 மணி சுமாருக்கு நெல்லை புது பேருந்து நிலையம் வந்தடைந்தது பேருந்து.
'நான் சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்று அடையாளம் சொல்ல, 'அது போல் ஆயிரம் கடைகள் இருக்கின்றன' என்று பதில் வர , வேறு வழியின்றி மற்றுமொரு அடையாளம் கூறினேன். 'இலவசக் கழிப்பிடம் அருகில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்றேன். 'அது நம்ம ஊரில் மிகக் குறைவு தான். எனவே இந்த அடையாளம் போதும்' என்றான். More Input Hops, But Very less Output Hops....?
உடலளவில் சற்று மாறிப் போயிருந்த நண்பன், மனதளவில் மாறாமல் என்னைப் பார்த்து 'என்னடா இப்படி ஆளே மாறிட்டே' என்றான். சிரித்தோம். பின் அங்கிருந்து பாளை பேருந்து நிலையம் வந்தோம். அங்கிருந்து நெல்லையப்பர் கோயிலைத் தாண்டி ஒரு நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றோம்.
பேச்சு. உணவு. பேச்சு. கொறித்தல். விட்டு விட்டு பொழிந்த, தூறிய, பெய்த, சிலுசிலுத்த மழையை இரசித்தல்.
மாலை 5.15 ஆனது. கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து நடந்து சென்றோம்.
நெல்லையப்பர் கோயில் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பிரம்மாண்டமாய் இல்லா விட்டாலும் இதுவும் பெரிதாகவே இருந்தது. நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தரிசித்து விட்டு, வசந்த மண்டபத்தில் பங்குனி உத்திர சிறப்பு திரு வீதி உலாவிற்காக அலங்காரம் செய்து கொண்டிருந்த பல்லக்கில் உற்சவர் தரிசனம், பிள்ளையார் பிடித்து பால் ஊற்றுதல், தாமிரசபை, எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு சல்யூட், திருகோயிலின் யானை நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகிலேயே அமர்ந்து பேச்சுக்கள் (ஏனெனில் அங்கு தான் யாரும் அதிக நேரம் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். யானை மேல் இருக்கும் ஆதி பயம் மட்டுமில்லாது, அதன் பெரிய உடலில் இருந்து வந்து கொண்டிருந்த விலங்கு மணம்..!) என்று இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கோயிலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தோம்.
வசந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிவ புராண நிகழ்ச்சிகள், கந்த புராண நிகழ்ச்சிகள் என்று ஓவியங்கள் வரையப் பட்டு இருந்தன. அதில் ஓர் ஓவியத்தில் அழகன் முருகனின் முக அழகு, அந்த செளந்தர்யம், வசீகரம், மந்தகாசப் புன்னகை, குறும்பு கொப்பளிக்க வள்ளியைக் காணும் காதல் கண்கள், நின்றிருக்கும் கம்பீரத் தோரணை.... அடடா....! ஒளவைக் கிழவி ஏன் இந்தச் சிறுவனை மட்டும் கொண்டாடினாள் என்பது புரிந்தது.
'நம்ம ஊரில் தான் பங்குனி உத்திரம் என்றால் முருகன் ஸ்பெஷல். இங்கு இது, சாஸ்தா ஸ்பெஷல்' என்று சொல்லப் பட்டிருந்ததால், வன்னியடி சாஸ்தா கோயிலில் இருந்து திருநீறு மற்றும் பொங்கல் வாங்கிக் கொண்டு கோயிலில் இருந்து வெளி வந்தோம்.
நெல்லையில் இருக்கும் ஒரே ஒரு பொழுது போக்கு இக்கோயில் என்பதால் ( இறைவா..! கோயில் பொழுது போக்குத் தலமா? உள்ளத்தின் பழுது போக்குத் தலம் என்றல்லவா நான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்...!) வஞ்சனையே இல்லாமல் சிறுவர் சிறுமிகள் தூண்களின் மேல் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தூண்களில் இருக்கும் சிலைகள் கண்கள் மூடி இருக்கும் அப்போது என்று தோன்றியது.
வெளியே வர, என் செருப்பு மட்டும் யாரும் சீண்டாமல் கிடக்க, கிடைக்க, நண்பனது செருப்பு காணாமல் போயிருந்தது. கொஞ்ச நேரம் தேடிப் பார்த்து விட்டு வெறுங்காலோடு வந்தோம். 'காலுக்கு வந்தது காலணியோடு போயிற்று' என்று சொன்னால் அடித்து விடுவானோ என்ற அச்சம் இருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை.
வீட்டுக்கு வந்து சொன்னால், 'சரி! கொண்டு போயிருந்த குடை எங்கே?' என்று கேட்டார்கள். திக்கென்று இருந்த்து. நல்லவேளை கொண்டு வந்திருந்தோம். இல்லாவிடில் வழக்கமான 'தலைக்கு வந்தது தலைக் குடையோடு போனது' என்று மேலும் ஒன்று சொல்ல வேண்டி வந்திருக்கும்.
நாங்கள் கோயிலுக்குச் சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் வரை இறுக்க மூடியிருந்த வானம், வீட்டுக்குள் நுழைந்த சில நொடிகளில் பொங்கி கொட்டியதை நினைக்கையில் ஏதோ ஒன்று புரிந்தது போல் இருந்தது.
பின் மீண்டும் ஜங்ஷன் வந்து உண்மையான, சத்தியமான சாந்தி ஸ்வீட்ஸ் நாங்கள் தான் என்று போர்டு கூறிய கடையில் அல்வாப் பாக்கெட்டுகள் வாங்கினோம். இருட்டுக் கடை கதவு திறக்கும் முன்பே அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அப்பக்கம் செல்லவே இல்லை.
கொட்டும் மழையில் புதிய பேருந்து நிலையம், திருவனந்தபுரத்திற்கு நேரடி பேருந்து இல்லை என்பதால் மீண்டும் நாகர்கோயில் செல்லும் பேருந்துக்குள் ஏறிக் கொண்டேன், ரிப்போர்ட்டரை வாங்கி விட்டு..!
ஓரங்களில் ஊற்றிக் கொண்டே இருந்த பேருந்தில் ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டே கையில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களை படித்துக் கொண்டே வர, இரவு 9.50 மணி சுமாருக்கு எடுத்த பேருந்து, முன்னிரவு 11.30 சுமாருக்கு நாகர் கோயிலை அடைந்தது.
அங்கு வருவதற்குள் எல்லாப் புத்தகங்களும் காலியாகி விட்டிருந்ததால், நா.கோ.லில் எமெர்ஜன்சி நேரத்தில் மட்டும் வாம்க்கும் குங்குமம், கல்கி, நக்கீரன் வாங்கினேன். படிக்கும் அத்தனையும் ஜீரணிக்க Maazaவும் கூட..!
உடனே கிளம்பிய பேருந்தில் ஒட்டிக் கொண்டு, மஹா சித்தர்கள் கூறிய 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்' என்ற கேள்விக்குப் பதிலாக அதிகாலை 1:40 மணிக்கு தம்பானூர் வந்து இறங்கும் வரை பேருந்தில் நான் இருந்த நிலையைச் சொல்லலாம். பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாக அப்பயணம் கழிந்தது.
அடுத்து கழக்குட்டம் செல்லும் பேருந்து 2:30க்கு என்று தெரிந்து கொண்டதில், சும்மா இருக்க மாட்டாமல் தமிழ் 'இந்தியா டுடே ' வாங்கி அதை மேய, அதில் பாதி காலையில் வாங்கிய ஆங்கிலப் பதிப்பின் மொழியாக்கம் என்று புரிந்தது.
அந்த அகால இரண்டு மணிக்கும் இன் பண்ணிய இருவர் வந்து 'சார்! இது ஒரு நல்ல ஆஃபர். வெப்ஸ்டர்ஸின் டிக்ஷ்னரி. வேர்ல்ட்ஸ் இம்பார்டென்ட் ஃபேக்ட்ஸ். ஒரிஜினல் 1500 கிட்ட வரும். இப்போது சலுகை விலையாக 250க்கு தருகிறோம்' என்று கேட்க ஆரம்பித்தனர்.
அவர்களை மறுத்து நகர்ந்து கொண்டேன். வலை வந்த பிறகு, இது போன்ற தகவல் தொகுப்பு புத்தகங்களின் அவசியம் அற்றுப் போய் விட்டது என்று அவர்களிடம் சொல்ல நினைத்தாலும், இல்லை.
மலப்புரம் செல்லும் பேருந்து கிளம்புகையில், அதில் ஏறிக் கொண்டு, பூ ஒன்று குளத்தின் அலைகளில் மிதப்பது போல் மிதந்து கழக்குட்டத்தில் இறங்கிக் கொண்டேன்.
வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.
வீடு இருக்கும் கருமை பூசிய தெருவில் நடக்க, அருகின் இரயில்வே தடத்தில் மின்வண்டி தடதடத்துப் போகின்ற சத்தம் கேட்டது. அதிலும் யாராவது ஒருவர் நான் நடந்து போகும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பாரோ என்று தோன்றியது.
அறைக்குள் நுழைந்து அந்த ஒரு நாளில் எடை கூடிப் போன கைப்பையைப் பிரித்து குடையை ஆணியில் மாட்டி வைத்தேன். Maazaவில் மிச்சத்தைக் காலி செய்தேன். வாங்கிய விகடன், குமுதம், குங்குமம், ஜூ.வி., ரிப்போர்ட்டர், நக்கீரன், இந்தியா டுடே, India Today, கல்கி அனைத்தையும் எடுத்து புத்தக அலமாரியில் அடுக்கி வைக்க, 'நானும் இருக்கிறேன் தீண்டப்படாமல்' என்ற வருத்தத்தோடு கையில் வந்து விழுந்தது 'Time Management' புத்தகம்.
ஏனோ ஒரு சிந்தனை அப்போது வந்தது.
விளக்கை அணைத்து விட்டு... Good Night...இல்லை... Good Morning. ஏதோ ஒன்று. தூங்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அப்பா !! என்ன மாதிரி வர்ணனைகள்... படிக்கும் போது..சே இதை நாம் கவனிக்கவில்லையே என்ற உணர்வு..எப்படி இவரால் மட்டும் இவ்வளவு நுணுக்கமாக இடங்களை, ஆட்களை பார்க்க முடிகிறது...அருமை..அருமை....
அன்பு பின்னோக்கி...
மிக்க நன்றிகள். நுணுக்கமாக கவனிப்பதற்கு இப்போது தான் கற்றுக் கொண்டு வருகிறேன். ஒரு படைப்பாளிக்கு அது ரொம்பத் தேவையான பழக்கம் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். :)
நெல்லையப்பர் கோவில் போயிட்டு இருட்டுக்கடை அல்வா வ விட்டுட்டீங்களே.
Post a Comment