Monday, September 07, 2009

காவிரிக் கரையோரத்திலேயே...



திருவோணம் விடுமுறைகளின் போது என்ன செய்வது என்று போரடிக்க, ஏதோ ஒரு நினைப்பில் ஒரு ஜோசியரைச் சென்று பார்த்தேன். அவர் அலசி, ஆராய்ந்து, எல்லா பேப்பர்களையும் கணக்கிட்டுப் பார்த்து, எண்களையும், எழுத்துக்களையும் கலைத்து, நிறையப் பேசி, மூன்று மணி நேரத்தின் முடிவில் சில கோயில்களைச் சொன்னார். அங்கெல்லாம் போய் வந்தால், நினைப்பது கைகூடும் என்றார். என்ன நினைக்கின்றேன் என்றே தெரியவில்லை. எனினும் ஊர் சுற்றலாம் என்ற களிப்பில் அன்றிரவே கிளம்பினோம்.

பேருந்தின் மத்தியப் பிரதேசத்தில் மூன்று பேர் இருக்கும் இருக்கை ஒன்று பிடித்து வைத்துக் கொண்டோம். தலைக்கு மேல் பரண். கால் அருகில் பெட்டிக்குள் ஸ்பீக்கர்கள். கொண்டு வந்திருந்த சென்னை சில்க்ஸ் ப்ளாஸ்டிக் பைக்குள் அத்தனையும் அடங்கி விட்டதால், மடியிலேயே வைத்துக் கொண்டேன். அம்மாவும், தம்பியும் கொறிக்க ஏதேனும் வாங்கி வரச் சென்று விட்டர்கள். ஓட்டுநர் தலைக்கு மேல் தமிழ்ப்படம் முடிந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் தலை தான் இல்லை. அவர் 22.15க்குத் தான் வருவார்.

நாங்கள் ஏறும் போது யாருமே இல்லாமல் இருந்தது. கிளம்புவதற்குள் பஸ் நிரம்பி, நிற்கத் தொடங்கி விட்டார்கள். 'கரூரில் இறங்கிக் கொள்கிறேனே','ஏன் சார், ஊஞ்சலூரில் நிற்காதா..?' போன்ற உப தொந்தரவுகளை எல்லாம் நடத்துனர் மிகப் பொறுமையாகச் சமாளித்து, வண்டியை ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நகர்த்துவதற்குள் 22.20 ஆகியிருந்தது. நாங்கள் மூன்று கும்பகோணங்கள் வாங்கிக் கொண்டோம்.

நகரத் தொடங்கியதும் டி.வி. அணைக்கப்பட்டு விட்டது. இரவும், குளிரும் எங்களை விடாமல் துரத்திக் கொண்டே வந்தன; இறுக்கச் சாத்திய கண்ணாடிகளின் மேல் மோதி உடைந்தன. மெல்லிய நீல ஒளி போர்த்திய சதுரப் பெட்டிக்குள், எங்கோ ஒரு துளை வழியாக சிலுசிலுப்பு மட்டும் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டிருந்தது. ரெயில்வே கேட்டில் சில நிமிடங்கள் தங்கி, அதிவிரைவாகக் கடந்த நீலப் பெட்டித் தொடரை வேடிக்கைப் பார்க்கையில், ஜன்னல்கள் தீற்றல்களாக மறைந்து, அதன் நீள ஒலி தேய்ந்து மறைவதைக் கேட்டோம்.

கரூரில் மேம்பாலம் இன்னும் நிறைவாகவில்லை. நிலையத்துக்குள் செல்லாமலேயே திருச்சி ஹைவேயில் நுழைந்து விட்டது. மடக்கியே வைத்திருந்த கால்களில் விரல்களுக்கிடையே நசநசத்தன. ஏதேதோ எழுதிக் கொண்டே வந்தேன். பின் மெல்ல மெல்ல உறக்கத்தின் மர்ம விரல்கள் தொட்டு, மெல்ல அவிழ ஏதோ ஒரு மாய கணத்தில் தூங்கிப் போனேன்.

சடக்கென ஒரு நேரத்தில் தூக்கம் என்னைக் கைவிட்டுவிட, நாளையப் பெளர்ணமிக்கு நிலா தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். விசுக்கென கடந்த மஞ்சள் போர்ட், 'முத்தரசநல்லூர்' என்று சொல்லியது. திருச்சிக்கு இன்னும் ஏழு கி.மீ.க்கள் என்று அம்பு திசை சொல்லியது. அருகிலேயே ஒட்டி உருண்டோடிய வாய்க்கால் முழுக்க நிரம்பி, கரையில் தளும்பியது. ஸ்ரீரங்கக் கோபுரத்தில் மின் விளக்குகள் வரிசையாய்த் தெரிந்தன. மாநகரைச் சுற்றி வந்து, சத்திரம் பேருந்து நிலையம் வழியாகச் செல்லாமல், மெயின் கார்ட் கேட்டில் நுழைந்தது.

மலைக்கோட்டையின் படிக்கட்டுகள் புள்ளி புள்ளிகளாய்த் தெரிந்தன. தாயுமானவர் சன்னிதியின் தங்கக் கோபுரம் அதிமஞ்சளாய் ஜொலித்தது. ரிக்ஷாக்காரர்கள் அந்த பின்னிரவு இரண்டு மணிக்கும் சவாரி பார்த்தார்கள். இரவு நேரப் பேருந்துகள் ஸ்டாப்புகளில் காத்தன. ஹோட்டல்களின் வாசல்களில் கழுவிய நீர் தேங்கியிருந்தது. கே.ஏ.எஸ்.ராமதாஸ் எழுத்தின் கீழ் திருப்பதி கோபுரம். சென்னை ஏர்பஸ்கள் எசகுபிசகாய்ச் சிக்கிக் கொண்டிருந்தன. கொஞ்சமே தள்ளி இருக்கும் ஜங்ஷனில் இருந்து ஏதோ ஒரு இரயில் கிளம்பும் வீரிய ஹாரன் கேட்டது. ட்யூப்கள்ல் தொங்கிய எண்ணெய் காகிதத்தில் பூச்சிகள் இறந்து ஒட்டி இருந்தன. பத்து நிமிடங்களில் பஸ் மீண்டும் நகர்ந்து, ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்குவதற்குள்...மீண்டும் தூக்கம்.

ஞ்சாவூர் வந்ததே தெரியவில்லை. இன்னும் குளிர் குறையவில்லை. அங்கிருந்து கிளம்பி நெடுஞ்சாலைகள் குறுகிக் குறுகி ஒல்லியாகி ஒற்றைத் தார்ப் பட்டையாகும் போது, சுத்தமாக தூக்கம் ஓடி விட்டது. இருபுறமும் அத்தனையும் வயல்கள். அந்த அதிகாலை பூக்கும் அழகான நேரத்தில் இருள் மென்மையாகக் கரையத் தொடங்கியிருந்தது. இப்போது சில்லென்று காற்று தன் பெரும் ஆரவாரத்தோடு நுழைய ஜன்னலை முழுக்கத் திறந்து வைத்துக் கொண்டேன். ஆனாலும் முதலிரவுக்குப் பெண் போல் நாணம் தழுவிக் கொண்டு காற்று தத்தித் தத்தி ஓடும் பேருந்துக்குள் புகுந்து புகுந்து கலந்தது.

குடந்தை என்றும் குறிப்பிடப்படும் கும்பகோணத்தில் பேருந்து நுழைந்து, கிடைத்த இடத்தில் செருகிக் கொண்டு நின்ற போது விடிவதற்கான விளிம்பில் இருந்தது வானம். காலை ஐந்து தாண்டி ஐந்து நிமிடங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆண்கள் இலவசச் சிறுநீர்க் கழிப்பிடத்தின் அருகில் நகராட்சியின் பூக்கடை மார்க்கெட் விரிந்திருந்தது; பழ மார்க்கெட் கலந்திருந்தது. இருவருக்குமான பொதுக் கழிப்பிடத்தின் மத்தியில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த லுங்கியர் முன்னால் நாணயங்கள் சிதறிக் கிடந்தன. தண்ணீர் வரவில்லை என உள்ளிருந்து யாரோ சொல்ல, விளக்குக் கம்பத்தின் கீழ் தூங்கிய ஒருவரைக் கத்தி எழுப்பி மோட்டர் போட வைத்து, பச்சைப் பாம்புச் சட்டைப் பைப்பினை தொட்டி வாயில் செருகினார். கல்லணை செல்லும் பேருந்தின் தலைவிளக்குகள் அணைந்து, எரிந்து, அணைந்தன. திருவையாறு போர்டைப் பார்த்ததும் தி.ஜானகிராமன் நினைவு வந்தது. 24 மணிநேர மருந்துக் கடையில் மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தனர். மன்னார்குடி செல்லும் பேருந்து ஒன்றில் ஊதுபர்த்தி செருகி வாசமாய் இருந்தது. குப்பைகள் இலக்கில்லாமல் கலைந்தன. மெட்டல் சேர்களில் குடும்பங்களாய்த் தூங்கிக் கொண்டிருந்தனர். ஸ்வீட் கடை, புத்தக கடை, ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் டிப்போ ஆபீஸ் அத்தனையும் மற்றுமொரு நாளுக்காகத் தயாராகிக் கொண்டிருக்க, பூச்சிகள் இறைந்த சோடியம் வேப்பர் மஞ்சளாய்க் கொட்டியது.

மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறி, நிலையத்திலிருந்து தப்பித்து பயணம் தொடங்கிய போது நாள் புலர்ந்தே விட்டது. செழித்த பழமாய் வயல்களின் உடலிலிருந்து மெல்ல எழும்பியது சூரியன். அதன் செவ்விதழ்கள் உறிஞ்சக் காத்துக் கிடந்தன பனித்துளிகளைச் சுமந்த கதிர்கள். வானம் தெள்ளென தெளிந்து, நீல மேலாடையில் நனைந்திருந்தது. புள்ளினங்கள் 'கீச்சு...கீச்சென' கத்திக் கொண்டே அங்குமிங்கும் உற்சாகமாய்ப் பறந்து திரிந்தன. காற்றில் குளிர் மெளனமாய் இறங்கி, மிக இலேசாக வெம்மை ஊடுறுவுவதை உணர முடிந்தது. எத்தனை குளங்கள்...! எத்தனை ஓடைகள்...! எத்தனை வாய்க்கால்கள்...! அத்தனையிலும் நுரைகள் குலுங்க, பச்சை நீரோட்டம் பாய்ந்து ஓடியது. வெளிச்சம் பரவப் பரவ, சேடிப் பெண்களாய்ப் புளியன்கள் வரிசையாய்ச் சாமரம் வீசினர். கிணறுகளிலும், அத்தனை நீர்நிலைகளிலும் யாரோ சிலர் குளித்துக் கொண்டிருந்ததனர். குடந்தையிலிருந்து 16 கி.மீ.யில், ஆலங்குடியில் இறங்கிக் கொண்டோம்.

சிவன் கோயில்களில், மூலவரைச் சுற்றி வரும் போது, தெற்கு பார்த்து, யோக வடிவில் அமர்ந்திருப்பவர் குருபகவான். தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். வியாழக்கிழமைகளில் ஸ்பெஷல் வழிபாடுகள் இவருக்கு நடைபெறும், மஞ்சள் இவருக்குப் பிடித்த வண்ணம். சிவபெருமானின் மற்றொரு அவதாரமே இவர். நவக்கிரகங்களின் அத்தனை பிரசித்தி கோயில்களும் தஞ்சை மாவட்டத்திலேயே சுற்றிச் சுற்றி அமைந்திருக்கின்றன. ஆலங்குடி என்பது குருஸ்தலம்.

நாங்கள் இறங்கிய ஸ்டாப்பின் அருகிலேயே 'தமிழரசி லாட்ஜ்' இருந்திருக்கின்றது. கவனிக்கவில்லை. கோயில் கொஞ்சம் நன்றாகவே உள் தள்ளி இருக்கின்றது. வரவேற்பு வளைவிற்குள் நுழைந்து, நடக்கிறோம்...நடக்கிறோம்...ந்து கொண்டே இருக்கிறோம். வளைவுகள், சந்துகளில் நடந்து குட்டி ஆடுகளையும், கைப் பம்ப்பில் தண்ணீர் அடிக்கும் பெண்களையும் பார்த்தோம்; பெருமாள் கோயில் ஒன்று இடையிலேயே கூப்பிடுகின்றது. தாண்டிப் போனால், ஒரு ரிட்டையர்ட் இண்டியன் அட்மின் ஆபீஸர் விட்டுச் சுவற்றில் நான்கு போர்டுகள் உருவாக்கப்பட்டு, இன்றைய திருக்குறளும், நல்லவனாய் இருக்க வழியும், ராமகிருஷ்ணரின் பொன்மொழியும் எழுதப்பட்டிருக்க, அவர் தொங்கும் தோட்டத்திற்கு நீரூற்றிக் கொண்டிருந்தார். வழி கேட்டு இன்னும் நடந்தோம். டீக்கடைகளில் பாய்லர்கள் அப்போது தான் கழுவப்பட்டுக் கொண்டிருக்க, சுப்ரபாதம் எங்கோ அருகில் கேட்டது.

ஒருவழியாகக் கோயிலைக் கண்டுபிடிக்க, வாசலிலேயே இருந்த அர்ச்சனைத் தட்டுக் கடைக்காரரைக் குளிக்க இடம் கேட்டோம். மீண்டும் வந்த வழியில் கொஞ்சம் சென்றால், அய்யர் ஒருவர் வீட்டில் கழிக்க, குளிக்க இடம் தருகிறார்கள். தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே! முடித்து விட்டு என்னிடமே அர்ச்சனைப் பொருட்கள் வாங்குங்கள் என்று சிரித்தார். நல்ல விசாலமான குளியல் தொட்டி, தோட்டத்திலேயே மேலே திறந்த பாத்ரூம். புத்துணர்வோடு மேக்கப் எல்லாம் முடித்து கோயிலுக்குள் புகுந்தோம்.

நல்ல தரிசனம்; விளக்கேற்றினோம்; பிரசாதம் உண்டோம்; காலையில் கொஞ்சம் சுற்றிச் சிற்றி நடந்தோம். அர்ச்சகர் தட்டுகளிலும், ஆளுயர உண்டியல்களிலும் காசுகள் போட்டோம். ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு, வெளியே வந்து வழியைப் பிடிக்கும் போது, ஒரு பெண். ஹூக்கு பிய்ந்த சட்டை. முட்டி வரை மட்டுமே எட்டி இருக்கும் பூப் பாவாடை. கிளர்ந்து நிற்கும் மஞ்சள் பரட்டைத் தலை. ஒரு காதில் மட்டும் கண்ணாடித் தோடு. அம்மணமாய் ஒரு பையக் குழந்தையுடன் பையப் பைய நடந்து வந்து, "அண்ணே...அண்ணே...! காசு குடுங்ணே..! சாப்புட்டு ரெண்டு நாளாச்சுண்ணே..!"

பெருமாள் கோயிலுக்குப் போகும் உத்தேசம் நெருக்கமான பயணத் திட்டத்தால் தவிர்க்கப் பட்டு, மீண்டும் பஸ் பிடித்து குடந்தைக்கே திரும்பினோம். வழியில் வயல்கள். தஞ்சை மாவட்டத்திற்கு இப்போது தான் முதன்முதலாக வருகிறேன். ஏனோ மோகமுள் நினைவில் பொங்கிப் பெருகியது. ஏனோ தி.ஜா.வின் சில சிறுகதைகள் கண்களுக்குள் மோதின. காற்றில் இசை தவழ்ந்து வருவது போல் ஓர் எண்ணம். வெய்யில் மெதுவாக ஏறத் துவங்கிவிட்டது. டீக்கடை முகங்களில் Y.S.Rரைத் தேடும் போஸ்டர்கள்.

கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில், கெளரிசங்கரில் தயிர்வடை, பொங்கல் சாப்பிட்டு மென் போதைக்குத் தயாரானேன். திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் கொண்ட நகரத்தில் எதையும் பார்க்கும் நேரம் இப்போதைக்கு இல்லாததால், மீண்டும் பஸ் ஏறி விரைந்தோம். கைகளில் சூடான பேப்பர்கள். தலைப்புச் செய்திகளில் தவறி விழுந்த ஹெலிகாப்டர்.

"...க்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார்! எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய் விட்டது. நந்திபகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்திபகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்குத் தக்கபடி பிரகாரங்கள் இருக்க வேண்டாமா? இப்போது சோழநாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல...."

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் நெரிசலாய் இருந்தது. சாலையை அடைத்துக் கொண்ட சைக்கிள் தள்ளுவண்டிகள்; கவிழ்த்த கூடைகளின் முதுகுகளில் சுற்றிய சரம் சரமாய் ஈரம் தெளிக்கப்பட்ட பூக்கள்; போஸ்டர்களில் பல வண்ண எழுத்துக்களில் அண்ணன்கள், தளபதிகள் அலைகடலென வந்து குமிய்மாறு அழைக்கிறார்கள்; சிக்கன போஸ்டர்களில், அதை விடச் சிக்கனமாய்ப் பெண்கள் 'A' முத்திரைக் கீழ் சிணுங்குகிறார்கள்; வெம்மை உக்கிரத்துடன் அணைக்கிறது; நடைபாதையின் சுவரெங்கும் சிறுநீர்த் தடங்கள். ட்ராபிக் விதிகளை மதிக்காது கலக்கும் வாகனங்கள்; ஆம்புலன்ஸ் விரைகின்றது; வல்லம், தேனி பேருந்துகள் லேசாய் நிரம்பிக் கடக்கின்றன; கறுப்புக் கண்ணீரில் ரெட்டிக்காகத் தட்டிகள் எலெக்ட்ரிக் கம்பங்களில் தொங்குகின்றன; விதவிதமான சினிமா அறிவிப்புகள், நாலு சக்கரக் கூரை வண்டியில் ஐஸ்மோர், குளிர்பானக்கள்; கர்ச்சீப்பில் மறைந்த முகம் விற்கும் பொம்மைகள் வெயிலுக்குத் தலையாட்டுகின்றன; ட்ராவல்ஸ் பஸ்கள் இடம் பார்த்துச் செருக, பள்ளிக் குழந்தைகள் இரண்டிரண்டாய் நகர, எப்போதோ உயிர்த்திருந்த அகழியில் குப்பைகள் சேர்ந்து, பிறவிப்பயன் இழந்து பேருக்கு வெற்றுக்குழியாகியிருக்கையில், கனவான ஒரு பொற்காலத்தின் மிஞ்சிய ஒரு பெரும் அடையாளமாய் வெளியுலகப் பரபரப்பிற்குச் சற்றும் சம்பந்தமின்றி விரிந்திருக்கின்றது தஞ்சைப் பெருவுடையார் பிரகதீஸ்வரர் திருக்கோயில்.



வானத்தில் யாரோ தம் வலுக்கரங்களின் கூர்நகங்களால் கீறி விட்டதைப் போல் மேகப் புகைகள் நீலப் படுதாவில் விசிறியடிக்கப்பட்டிருந்தன. வெய்யில் செம்மையாக வெம்மையாக ஊற்றிக் கொண்டேயிருந்தது. சாக்குப் பாதையினை எட்டுவதற்குள் கற்பாதைகளில் கால்கள் சுட்டுக் கொண்டன. இங்கு இதோடு மூன்றாவது முறை என்றாலும், மூலவரைப் பார்ப்பது இதுவே முதல் முறை. 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே... அன்பினில் விளைந்த ஆரமுதே... இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்... எங்கெழுந்தருளுவது இனியே...!' மனதின் ஒரு துணுக்கு அரற்றிக் கொண்டே வந்தாலும் ஆதார ஆர்வக் கண்கள் 'கல்லிலே கலை வண்ணங்களைக்' கண்டு கொண்டே வந்தன. கூரை தாங்கும் தூண்களையும், தலைகீழாய்த் தோங்கும் வெளவால் படைகளையும், துவாரபாலகர்களையும், எங்கெங்கு கண்டாலும் செதுக்கிய தமிழ் எழுத்துக்களையும், பனியன், மடித்துக் கட்டிய வேட்டியில் வரிசையில் நகர்ந்த தெலுங்குக் கிழவர்களையும், ஜீன்ஸ் முறுக்கிய இளம் மார்புகளையும் தாண்டினால், பிரம்மாண்டமாய் இருக்கிறது லிங்கம். தீபாராதனை; திருநீறு; தூணிலேயே மிச்சத்தைக் கொட்டுதல்;

வெளி வந்தோம். தொடங்கியது கேமிரா வேட்டை..!

ஒவ்வொரு பகுதியிலும் செதுக்கியிருக்கும் சிற்பங்களைக் கண்டு களிக்க ஒரு நாள் போதாது. முடிந்தவரை நோக்கியா செல் வழி நோக்கிய படங்களைச் சிறைப்பிடித்தோம். சுற்றுச்சுவரில் வரைந்த தஞ்சாவூர் பெயிண்டுங்குகள் மேல் எம் இனியத் தமிழர்கள் தம் கைவரிசைகளைக் காட்டியதில், ஆக்ரோஷ மகிஷாசுரமர்த்தினி காலுக்கருகில், 'ரமேஷ் - கவிதா'! சுப்ரம்ணியர் கோயில் தூணில் பாதி குதிரை வடிவம்; மீதி குழம்பிய உருவம். நந்தி சிலை அருகில் ஒரு பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம். தோழிகள் மாறி மாறி போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, நந்தி நாவைச் சுழட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கோயிலின் வெட்டவெளிக்குள் காற்று பிய்த்துக் கொண்டு போனது. முதல் கோபுரத்தில் கெமிக்கல் பூச்சு நிறைந்து, இரண்டாம் கோபுரத்தில் கட்டை போட்டிருந்தார்கள். முன்பக்கப் பூங்காவில் படுத்துப் பார்த்தால் சுகமாய்த் தூக்கம் வரும் போது, வாசலில் நின்றிருந்த கோயில் யானை, அசைந்தசைந்து மணியோசை எழுப்பித் தன் கொட்டடிக்குக் கொண்டு செல்லப்பட்டது.



















கிளம்பும் போது வானம் தேக்கி வைத்திருந்த அத்தனை மேகங்களையும் கொண்டு வந்து நிறுத்தி தஞ்சையின் வெளியெங்கும் குழுமித்திருந்தது. குமுறிக் கொள்ளும் முகில்கள்; கொத்துக் கொத்தாய்க் கருமைகள்; எப்போது வேண்டுமெனிலும் பெய்யத் தயாராய்! ஆனால் நாங்கள் திருச்சிக்குத் திரும்பும் வரை ஒரு சொட்டு கூட விழவில்லை.

திருச்சியிலிருந்து இரவு பதினொரு மணிக்கு ஈரோடு கிளம்பி, கரூர் வரும் வரைத் தூங்கித் திடுமென விழித்துக் கண்ட ஆகாயத்தில் ஒற்றையாய்த் தேங்கி நின்ற வெள்ளை உருண்டைத் துளியின் துயரை நினைத்த போது சில வரிகள் தோன்றின. எழுதி வைத்துக் கொண்டு மீண்டும் நித்திரையில் மூழ்கினேன்.

'கொஞ்சம் அலட்சியத்துடன் தீட்டப்பட்டிருந்த மேகத் தீற்றல்கள் திட்டுத் திட்டாய் மிதக்கின்றன. ஒரே ஒரு கொண்டல் கிழிசல் பெளர்ணமியைத் தின்ன முயற்சிக்கின்றது. இரவின் அத்தனைக் குளிர்ப் பிரதேசங்களையும் வெண்ணிலா தன் பாதரசப் பனி ஒளியின் கீழ்ப் பதுக்கிக் கொள்கின்றது. காலம் முத்தமிட்டுக் கிறங்கி நிற்கும் இந்த இருள் பொழுதில் மகரந்தம் எந்தப் பூவிலிருந்து எந்த பூமிக்குப் பாய்கின்றது? தன் பொன் கரங்களால் எதை நீட்டிப் பிடிக்க சிவப்பாய் முத்தமிட்டுக் கதிர் கிளம்புகின்றது? கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் குட்டிச் சிறகுகளால் மூடப்பட்டிருக்கும் எந்தப் பறவை விடியலை முதலில் அறிவிக்கின்றது?'

Wednesday, September 02, 2009

காமக் கடும்புனல். (A)



வ்வருட ஈரோடு நூல் அழகத்தில் வாங்கிய ஒன்று மகுடேசுவரனின் 'காமக் கடும்புனல்'. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணியாற்றுவதாகப் பின்னட்டை மடிப்பு சொல்கிறது. நாஞ்சில்நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

காமஞ் சான்ற பெருமகன் அல்லன்

அதன் நுண்ணியல் கலைகளில்
வல்லானும் அல்லன்

தனித்திருக்கும் எளிய கோழை
இக்கவிதைகளின் ஆசிரியன்

என்று சொல்லித் தப்பித்து துவங்குகின்ற இந்நூலின் அத்தனை கவிதைகளும் பாடுவது காமம் என்ற மெல்லிய ஓர் உணர்வு பற்றி. அது ஆக்ரமிக்கும் தனித்திருப்பவனின் மனதின், உடலின் வெக்கைகள் பற்றி; அது எழும் போது கட்டவிழ்த்துப் பாயும் பெரும் திராவக வெறி பற்றி; அது படர்வதில் துடிக்கின்ற இளமை பற்றி; அது மெல்ல மெல்ல விழித்து, கை கால்கள் நீட்டி, ஊளை இட்டு, கூச்சல் போடத் துவங்கி, வேகம் உணர்ந்து எழுந்து, துடித்து, கர்ஜித்து சக்தியையெல்லாம் திசையெங்கும் வெள்ளமென விசிறியடித்துப் பிறகு தளர்ந்து, அடங்கி, சுருண்டு அப்புறம் மெல்ல தூங்கப் போகும் அடிப்படை முயங்கலைச் சொல்கின்றன.

காமக் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
நீணாக நறுத்தண்டார் தயங்கப்பாய்த் தருளினாற்
பூணாக முறந்தழீஇப் போததற்கான் அக கைலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே
அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை பிண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இருலென ஏணி இழைத்திருக்குங்
கானகல் நாடன் மகன்!

என்ற குறிஞ்சிக் கலி 36-வது பாடலின் தலை வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டுள்ள இந்நூல் இத்தனை சிரமமாக இல்லாமல் எளிமையாகக் கேட்கிறது ::

வாய்யா வா
வரலாற்றறிஞரே வா

சரித்திரத்தின்
பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு

போர்க்களத்தில் வென்ற படை
தோற்ற தேசத்து மகளிரை
என்ன செய்தது?

*

ஒவ்வொரு முறையும்
வெளியேற்றப்படுகிறாய்
வைபவத்திற்கு முன்பாகவே

தளரா நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும் நுழைகிறாய்
விசேஷ அமுதைப் பருகும் வெறியில்

முன்னதாகப் போய்விடுகிறாய்
அல்லது தாமதித்துவிடுகிறாய்

எப்படியாவது
ராஜாவைக் கண்டுவிடு

அன்று
ராஜபோஜனம்தான்

சில, சமூக வழக்கில் வெகு பச்சையென சொல்லப்படும், ஆனால் அந்தரங்கத்தில் மிக மிக நெருக்கமானச் சிலவற்றைச் சொல்கின்றன.

மாணவர் விடுதி
திரைப் பெண்டிர் சுவரொட்டி

மங்கையர் விடுதி
வெள்ளரி முள்ளங்கி கத்தரி

*

மகளுக்குச் சிறு வயது
வந்திருப்பதும் தகுதி குறைந்த வரன்

மணம் முடித்துவிடவே
தீர்மானிக்கிறாள் தாய்

இரவில் உறங்காது புரளும் மகள்
போர்வைக்குள்
விரலால் நிரடிக் கொண்டிருப்பது
தெரிந்த பிறகு

*

பிரம்மச்சரிய அறை
மிட்நைட் மசாலா

எழுகுறி நோக்கிக்
கடிது விரையுது
உடையவர் கை

*

வியர்த்துப் போன முகங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவ்வப்போது தரையிறங்குகிறார்.

ஆருலே அது
என்ற காட்டுல உட்கார்றவ

சொக்கியா
செரிசெரி
பொறவு
சோளக்கொல்லைப் பக்கம்
வா

அவ்வப்போது கவிஞனுக்கேயுரிய சமூகக் கோபங்கள் தவிர்க்கவேயியலாமல் வந்து விடுவது எதிர்பார்க்காத முத்தங்கள்.

கவனித்திருக்கிறேன்

பெண்ணாசையால்
மிதமிஞ்சி ஆடியவர்கள்

பெண்தயவில்
மலஜலம் கழிக்க நேர்ந்ததை.

கோபம் வரச் செய்தது ஒரே ஒரு கவிதை.

பொதுத் தொலைபேசியகம்

அமர்ந்திருந்தவள்
பொது மகள் போலிருந்தாள்

அணுகி
'எவ்வளவு?' என்றேன்

'ஒரு தடவை பண்ணா
ஒண்ணே கால் ரூபா'

மிக மலிவாகத் தோன்றியது
எனக்கு

கடைசிக் கவிதை ஒன்றில் சரணடைந்து விடுகிறார்.

ஆசனத்தில்
சீழ் வடியும் புண்களுடன்
படுத்த படுக்கையாய் இருந்தேன்

செவிலிப்பெண் ஒருத்தியின்
கண் துஞ்சாத
கழிவு கண்டு முகம் சுளியாத
சேவகத்தால் நலமுற்றேன்

பெண்மையின் உயர்பொருளை
அன்று புரிந்துணர்ந்தேன்

இக்கவிதைகளை
அவளிடம் மறைக்க விரும்புகிறேன்.

களிப்பேருவகை(A)யில் பதுங்கிப் பதுங்கி எழுதும் எனக்கு, காமக் கடும்புனலின் துளிகள் பாக்கெட்டில் கல்கண்டுகள் போல் இனிக்கின்றன.

புத்தகம் : காமக் கடும்புனல்

புத்தக வகை : கவிதைகள்.

ஆசிரியர் : மகுடேசுவரன்.

கிடைக்குமிடம் : United Writers, 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 86.

பதிப்பகம் : United Writers.

விலை : 100 ரூ.

பொன்னி.

ஃபேக்டரியில் ரெண்டாவது ஷிப்ட் முடிய ஒரு மணி நேரம் இருந்தது. அதிகாலை ஆறு மணிப் பனியில் பார்க்க கட்டம் கட்டமாய் மின் விளக்குகள் தெரிந்தன. சிமெண்ட் கூரைகளின் உச்சியில் போக்கிகளிலிருந்து அழுக்காய்ப் புகைகள் மொத்தமாய் மேலேறிக் கலைந்து கலைந்து மறைந்தன. க்வார்ட்டர்ஸின் மெய்ன் கேட் சாத்தப்பட்டு, குட்டிக் கதவு திறந்திருந்தது. தொட்டாற்சிணுங்கியும், தாத்தாப்பூச் செடிகளும் மறைத்திருந்த கம்பி வேலியைத் தாவி பத்ரி உள்ளே நுழைந்து விட்டது. வாசல் ஆரம்பத்திலேயே இருந்த பிள்ளையார் கோயில் சுவற்றில் மறைந்து நின்றது. பொன்னி சைக்கிள் மணி அடித்துக் கொண்டேயிருந்தாள். கூண்டுக்குள்ளிருந்து செக்யூரிட்டி எட்டிப் பார்த்தான்.

பொன்னி கறுப்பு ரிப்பன்களால் தலை பின்னியிருந்தாள். கருகமணி மாலை போட்டிருந்தாள். ப்ளாஸ்டிக் வளையல்கள் சுற்றியிருந்தாள். கண்ணாடி மூக்குத்தி பளிச்சென்றிருந்தது. சின்னதாகப் பொட்டு. தோடுகள் கறுத்திருந்தன. சட்டை, கழுத்தில் கொஞ்சம் கிழிந்திருந்தது. பூக்கள் பதித்த பாவாடை கால் வரை நீண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் ஒரு மெளத் ஆர்கான் செருகியிருந்தாள்.

"என்ன..?"

"இஞ்சினியர் சார் வீட்டுக்குப் போகணும்..!"

"உங்கம்மா வரலையா..?"

"பாட்டிக்கு உடம்பு சரியில்லை. புன்னம் போயிருக்காங்க.."

"சரி..சரி..! இதுக்குள்ளயே வா..! ஸார் வீடு தெரியும்ல..? நேராப் போய், ரெண்டாவது ரைட்ல..."

"...நாலாவது வீடு! தெரியும். அம்மா சொல்லிட்டாங்க..!" குட்டிக் கதவுக்குள் சைக்கிளை நுழைத்து, தாவித் தாவி பெடல் போட்டு, ஏறி ஓட்டினாள். பதுங்கியிருந்த பத்ரி உற்சாகமாய்க் குலைத்து சைக்கிள் பின்னாலேயே ஓடியது.

"ஹ! இது எப்ப வந்துச்சு...!!" செக்யூரிட்டி கத்தினான்.

ஃபேக்டரியையும் க்வார்ட்டர்ஸையும் இணைக்கும் முதன்மைச் சாலையில் சில மாருதிகள் பனிப்புள்ளிகளுடன் நின்றிருந்தன. மான்டிசோரி பள்ளி சாத்தியிருந்தது. மையப் பூங்காவில் ஸ்வெட்டர், துண்டுகள் சகிதம் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். மஞ்சள் சோடியம் விளக்குகள் காற்றைச் சோகையாய் நனைத்தன. டென்னிஸ் கோர்ட்டில் அங்கிள்கள் வேர்த்தனர். ஓரப் பசுமைகளில் பூச்சிகள் சுற்றின. ஒரு கீரி சரக்கென்று இங்கிருந்து அங்கு ஓடியது. பத்ரி குலைத்தது.

சீஃப் இஞ்சினியர் என்பதால் தனி வீடு கொடுத்திருந்தார்கள். ஜொலித்த ரெண்டு விளக்குகள் தவிர தெருவில் யாரும் இல்லை. மறு முனையில் கிணறும், பாய்லர் பைப்லைன்களும் தெரிந்தன. பொன்னி காம்பவுண்ட் சுவற்றிலேயே சைக்கிளைச் சாய்த்து நிறுத்தினாள். க்ரில் கேட்டில் கவரில் பால் பாக்கெட்டுகள் தொங்கின. மோட்டார் போடப்பட்டிருந்தது. ஒரு லேடிஸ் சைக்கிள் புறா போல் நின்றிருந்தது. அருகிலேயே ஸ்கார்ப்பியோ.

காலிங் பெல் அடித்தாள். உள்ளே சங்கீதம் ஒலித்தது. இரண்டாம் முறையின் பின், போர்டிகோ லைட் எரிந்தது. நிஷா நைட்டியில் வந்தாள். முடியில் க்ளிப் குத்திக் கொண்டே,

"யாரு வேணும்..?"

"அம்மாவால வர முடியல. பாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்னு புன்னத்துக்குப் போயிருக்காங்க. வீட்டு வேலைக்கு என்னைய அனுப்பியிருக்காங்க..!"

"பரிமளம் பொண்ணா நீ..?"

"ஆமாங்க..!"

"சரி..! பால் பாக்கெட் எடுத்திட்டு, இந்த வழியா பின்னாடி வா..!" பக்க வழியைக் காட்டி, மறுபடியும் உள்ளே புகுந்து, கதவடைத்துக் கொண்டாள். போர்டிகோ வெளிச்சம் அணைந்தது.

"ஷ்..! நீ இங்கயே இரு. சத்தம் போடாத, என்ன!"

பத்ரி மெல்லமாய் ஒலித்து விட்டு, வாலை விசிறியது. சைக்கிள் முன்பேயே கால்களை நீட்டி முகத்தைப் பதுக்கிப் படுத்துக் கொண்டது. ஓர் ஈ அதன் மூக்கைச் சுற்றியதை உற்றுப் பார்த்தது.

கேட்டைத் திறந்து, பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டாள். ஜில்லென்றிருந்தது. கன்னத்தில் வைத்து சிலிர்த்துக் கொண்டே, கம்பிக் கதவை இழுத்துச் சாத்தி, கொக்கியை மாட்டினாள். லேடிபேர்டைத் தடவினாள். பக்க வழியில் நிறையத் தொட்டிகளில் நிறைய செடிகள் இருந்தன. ஒரு ரோஜா அடர் ரோஸாகப் பூத்திருந்தது. சுவர்களில் பச்சையாய் இருந்தது. பின்கட்டுக்கு வந்து விட்டாள். அதற்குள் நிஷா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். நைட்டியை ஒழுங்குபடுத்தியிருந்தாள். கசமுசாவென கூந்தல் சுருட்டப்பட்டு செருகப்பட்டிருந்தது.

"உன் பேர் என்ன..?"

"பொன்னி..!"

"நல்ல பேர்..! பொன்னி! முதல்ல கிச்சன் ஸிங்க்ல இருக்கற பாத்திரம் எல்லாத்தையும் விளக்கி வெச்சிடு. அப்புறம் பால் காச்சி வெச்சு, நாலு டம்ளர் பூஸ்ட் போட்டு வெச்சிடு..! என்ன..!"

"சரிங்மா..!"

உள்ளே நுழைந்தவுடனே கிச்சன். ஸிங்க்கில் அத்தனை பாத்திரங்கள் இருந்தன. ஸ்டவ் அருகே ஊதுவர்த்தி ஒன்று சுத்தமாக காலியாகி, சாம்பல்களாய் ஆகி இருந்தது. பாவாடையை கொஞ்சமாக எடுத்து லேசாக செருகிக் கொண்டாள். குழாயைத் திருப்ப, இருமிக் கொண்டே தண்ணீர் பாய்ந்தது. நாரை நனைத்து, நடுவில் குழி விழுந்திருந்த சோப்பில் அழுத்தினாள்.

ழாவது பாத்திரம் விளக்கும் போது, ஸ்க்ரீனுக்குப் பின்னாலிருந்து டோரா கேள்வி கேட்டாள். பிறகு நிஷா கேள்வி கேட்டாள்.

"ஸ்ருதி..! காலைல எழுந்தவுடனே டி.வி.யா..? பாத்ரூம் போனியா..?"

"விடு..! இன்னிக்கு சாட்டர்டே தான. பாத்துட்டுப் போகட்டும்..!" ஒரு வயதான குரல் கேட்டது.

"அம்மா..! நீங்க செல்லம் குடுத்து தான் பொண்ணு ரொம்ப கெட்டுப் போறா. பாருங்க, எழுந்து இன்னும் ப்ரஷ் பண்ணல. ஃபேஸ் வாஷ் கூட பண்ணல. அதுக்குள்ள டோராவப் பாக்க உக்காந்திட்டா..! ஸ்ருதி..! கெட் அப்..! கோ டு பாத்ரூம்..!"

"மம்மி..! ப்ளீஸ் மம்மி!" ஒரு குட்டிப் பெண்.

"நோ! நான் டாடிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடப் போறேன். ஐ காண்ட் இக்னோர் தி இர்ரெஸ்பான்ஸிப்ளிட்டிஸ். எங்க டாடி..?"

"இன்னும் தூங்கறான். ஆமா, பரிமளம் வந்துட்டாளா..?"

"இல்லம்மா. ஊருக்குப் போயிருக்காங்களாம். அவங்க பொண்ண அனுப்பியிருக்காங்க. அவ தான் பாத்திரம் விளக்கிட்டு இருக்கா..!"

"அப்படியா..? ஆயுர்வேத தைலம் வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு இருந்தேன். பாழாப் போன மூட்டு வலி இருக்கே..!"

மாடியிலிருந்து குரல் இறங்கி வந்தது.

"எங்க என் டார்லிங்..?"

"மம்மி இங்க தான் இருக்காங்க. பேட் மம்மி. சேட்டர்டே கூட ஃப்ரீயா இருக்க விடாம டென்ஷன் பண்ணுறாங்க.."

"என்ன நிஷா அப்படியா சொன்ன..? நீ பாருடா செல்லம்..! நானும் வர்றேன்..!"

"ஆமா உட்கார்ந்து டோரா பாருங்க. உங்களுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு. மேடத்துக்கு எட்டு மணிக்கு ம்யூஸிக் க்ளாஸ் இருக்கு. அப்புறம்..."

"அடுத்த வாரம் அஸோஷியேஷன்ல ம்யூஸிக் காம்படீஷன் இருக்கு. போதும்மா..! த்வுஸண்ட் டைம்ஸ் நீ சொல்லிட்ட..!"

"அதெல்லாம் என் பொண்ணு அசத்திடுவா..! நீ பாருடா..!"

"எப்படியோ போங்க..!"

நிஷா கிச்சனுக்கு வந்தாள். பொன்னி ஸ்டவ் பக்கத்தில் கையில் துணியோடு நின்றாள். நீல விரிவில், பால் பொங்க யோசித்துக் கொண்டிருந்தது.

"பொன்னி..! படிக்கறயா..?"

"ஆமாம்மா! எட்டாவது..!"

"படிக்கற பொண்ணு இப்படி வேலை செய்ய வரலாமா..?"

"இல்லம்மா! எப்பவும் செய்ய மாட்டேன். அம்மாவுக்கு முடியலைன்னா தான் நான் வேலை செய்யப் போவேன். சிலசமயம் வேலை செய்யறது நல்லது தான். தெரிஞ்சுக்கோன்னு அம்மாவே அனுப்புவாங்க.."

"ஸ்ருதீ...! இங்க வந்து பாரு..!"

உள்ளிருந்து அரவிந்தும், ஸ்ருதியும் கிச்சனுக்குள் வந்தார்கள். டீ.வி. சத்தம் குறைக்கப்பட்டது.

"ஹாய்..! யார் இந்த குட்டிப் பொண்ணு..?"

"பரிமளம் பொண்ணு.பேரு பொன்னி. ஸ்ருதி..! பாத்தியா? உன் வயசு தான் ஆகறது. எவ்ளோ நல்லா வேலை செய்யறா தெரியுமா? நீ என்னிக்காவது செஞ்சிருக்கியா..? சாப்ட்ட தட்டைக் கூட கழுவ மாட்ட..!"

உடனே ஸ்ருதி ஒரு விரோதப் பார்வை பார்த்தாள்.

"டியர்..! எல்லாரும் அவங்கவங்க வீட்ல அப்படித் தான். ஏய் பொன்னிப் பொண்ணு, நீயும் சாப்ட்ட தட்ட கழுவ மாட்ட தான..?" நிஷாவுக்குத் தெரியாமல் கண்ணடித்தான்.

"ஆமாங்க. எங்கம்மா தான் கழுவி வெப்பாங்க. அப்ப இதே மாதிரி தான் திட்டுவாங்க..!" பொய் சொன்னாள்.

"தட்ஸ் இட்..! டேங்க் நிரம்பிடுச்சுனு நினைக்கிறேன்..!" அரவிந்த் பின் வெளியே போனான். நிஷா குக்கரில் அரிசியைக் கழுவிப் போட்டாள். "இந்த கேஸ்கட்டை மாத்த மாட்டீங்களா..? வழு வழுன்னு ஆயிடுச்சு..!"

"ஹாய்! என் பேர் ஸ்ருதி. நீ எந்த ஸ்கூல் படிக்கற..?" சட்டென சிநேகமானாள் ஸ்ருதி.

நெற்றியைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, "ராமகிருஷ்ணால..! நீ..?"

"எஸ்.எம்.எஸ்.ல..! வேலையெல்லாம் முடிச்சிட்டு வர்றியா? டோரா பாக்கலாம். டெய்லி இந்த பாட்டிகூட பாத்து ஒரே போர்..!"

"ம்..! வர்றேன்..!"

நிஷா குளிப்பதற்குப் போய்விட்டாள். பொன்னி நாலு டம்ளர்களில் பூஸ்ட் கலக்கி வைத்து விட்டு, ஒன்றை மூடியால் மூடி வைத்தாள். மூன்றை தட்டில் எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனைத் திறந்தாள்.

ஜில்லென்றிருந்தது. ஏ.ஸி.போட்டிருந்தார்கள். கண்ணாடி ஷோகேஸ் பளிச்சென்றிருந்தது. அதில் குட்டிக் குட்டியாய் நிறைய கரடி பொம்மைகள் இருந்தன. ஒட்டியதாய் ஒரு டி.வி. அதில் டோரா, குரங்குடன் நடந்து கொண்டிருந்தாள். மேலே போட்டோவில் ஒரு குழந்தையை முத்தமிடும் இளம் அரவிந்த். ஸ்ருதி ஒரு குட்டி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ஒரு பாட்டி சோபாவில் அமர்ந்து, கால்களைத் தடவிக் கொண்டிருந்தார். அரவிந்த் ஒரு மர நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிடமும் டம்ளரைக் கொடுத்தாள். அங்கேயே நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வளைந்து வளைந்து சென்றது. அதன் எல்லையில் ஒரு ரோமானியப் போர் வீரன் சிலை கையில் வேலோடு நின்றது. அதன் நுனியில் ஒரு மஞ்சள் பை தொங்கியது. டீப்பாய் மேல் மூன்று செல்ஃபோன்கள் இருந்தன. மூலைகளில் தொட்டிச் செடிகள். ஒரு டிஜிட்டல் கடிகாரம். அவளது ஏழ்மைத் தோற்றம் அந்த ஸீனில் அவளுக்கு ஒருவித கான்ட்ராஸ்ட்டாகத் தோன்றியது.

"வா..! நாம டோரா பாக்கலாம்..!" ஸ்ருதி அவளைக் கைப்பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள். மெத்தென்றிருந்தது. ஸ்ருதி கை ஸாஃப்ட்டாக இருந்தது.

"ஸ்ருதிக்குட்டி! டைம் ஆச்சும்மா! ம்யூஸிக் க்ளாஸ் போகணும். எழுந்திரு. மாடிக்குப் போய்க் குளிச்சிட்டு வா..!" அரவிந்த் சொன்னவுடனே பொன்னி எழுந்து நின்று கொண்டாள். அவளுக்கு திடீரென ஏதோ ஒரு கூச்ச உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது. காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனை விலக்கி விட்டு வெளியேறினாள்.

விசிலடிக்கவா வேண்டாமா என்று யோசித்த குக்கரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிஷா குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் வந்தாள். இட்லி குக்கரில் மாவு ஊற்றும் போது,

"அம்மா..! பாத்திரம் எல்லாம் விளக்கி வெச்சுட்டேன். வேறு ஏதாச்சும் வேல இருக்கா..?"

"துணி துவைக்கணும். வாஷிங் மெஷின் ரிப்பேர். நீ துவைச்சிருவியா..?"

"துவைச்சிருவேம்மா..!"

"சரி! வெளிய கல்லு இருக்கும். பக்கத்துலயே பக்கெட்ல ஊற வெச்சிருக்கு பாரு. துவைச்சிடு..! அரவிந்த், உங்க பொண்ணு ரெடியா..? ம்யூஸிக் க்ளாஸ் போகணும்..!"

பொன்னி ம்யூஸிக் க்ளாஸ் பற்றி விசாரிக்க விரும்பினாள். அங்க மெளத் ஆர்கான் நல்லா வாசிக்கச் சொல்லித் தருவாங்களா? அவளுக்கு சடாரென சைக்கிள், பத்ரி ஞாபகம் வந்தது. பக்க வழியாகவே சென்று பார்த்தாள். இளம் வெயில் வியாபித்திருந்தது. தெரு விளக்குகள் தூங்கப் போயிருந்தன. பத்ரி, செடிகளுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. பொன்னியைப் பார்த்ததும் செல்லமாய்க் குலைத்து மேலே தாவியது.

"இங்கயே இரு..! சின்ன வேலை ஒண்ணு இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன். அப்புறம் போலாம். என்ன..?" புரிந்து கொண்டது போல் பத்ரி வாலாட்டி விட்டு, மீண்டும் செடிகளுக்குள் விளையாடப் போய் விட்டது. விரலை ஆட்டிச் சொல்லும் போது தான் கவனித்தாள். அடர் பழுப்பாய்ச் சில கட்டிகள் ஒட்டியிருந்தன. நெருக்கமாக முகர்ந்து பார்த்து, சுரண்டி நாக்கில் நனைத்தாள். பூஸ்ட் கசப்பாக இருந்தது.

மெளத் ஆர்கானை எடுத்துக் கொண்டு பின்கட்டுக்கு வந்து துவைக்கும் கல்லுக்குப் பக்கத்தில் சென்று பார்த்தாள். நிறைய புடவைகள். கண்ணாடி வைத்தது. ஜிகினா பதித்தது. வாஷிங் பவுடர்களின் மாயாஜால புசுபுசு நுரைகளுக்கு நடுவே வெயில் ஒளியில் மின்னின. பொன்னி துணிகளை எடுப்பதற்கு முன், மெளத் ஆர்கானில் தூசி போக 'உஃப்..உஃப்..' என்று ஊதினாள். பின் உதடுகள் மேல் வைத்து மிக இனிமையாக ஊதத் தொடங்கும் போது, ஃபேக்டரியிலிருந்து, ஷிஃப்ட் மாறுவதற்கான சைரன் ஒலி பிரம்மாண்டமாய்க் கிளம்பி, அவளைக் கரைத்தது.

Monday, August 31, 2009

Happy Onam Wishes.



நாளை மறுநாள் மகாபலிச் சக்ரவர்த்தி கேரள மண்ணிற்கு விஜயம் தருகிறார். தீபாவளிக்கு கூட லீவு தராமல், இங்கே உச்சக் கொண்டாட்டம் திருவோணத் திருநாளிற்கே..!

டெக்னோபார்க்கில் எல்லோரும் இன்று மாலையில் இருந்தே பண்டிகை மூடுக்கு வந்து விட்டார்கள். அவசர அவசரமாக ரிலீஸ் செய்ய வேண்டிய மாட்யூல்களை அனுப்பி விட்டு, எல்லோருக்கும் 'ஓணம் ஆஷம்ஸுகள்' ஃபார்வேர்ட் செய்து விட்டு, ஒரு ரிலீஃப் மூடில் ஸ்வைப் கார்ட் தேய்த்து வெளியேறுகிறார்கள். பர்வீன், ஏ1, பிஸ்மி ட்ராவல்ஸ் புக்கிங் ஆஃபீஸ்கள் முன் பயண பேக்கில் அடைத்த அழுக்குத் துணிகளும் ஃபாண்டா பாட்டிலுமாக ஜீன்ஸ் பெதும்பைகள் காத்திருக்கிறார்கள். கழக்குட்டத்தில் 'குடும்பஸ்த்ரீ' என்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் ஊறுகாய்கள், குளியல் பொடி, மஞ்சள் தூள், அரப்புப் பொடிகள் ஆகியவற்றை நேற்று ஒரே நாளிலேயே விற்றுத் தீர்த்து விட்டு, இன்று சிட்டிக்குள் பட்டறை போட்டிருக்கிறார்கள். திடீரென ஜனித்த கூரைகளில், ட்யூப் லைட்களின் அடியே பறங்கிக்காயும், வாழைச் சீப்புகளும் பரப்புகிறார்கள். ஹோட்டல்கள் மூன்று நாட்களுக்கு மூட்டை கட்டி விடலாமா என்று யோசிக்கிறார்கள். அட்வான்ஸாக சம்பளம் போட்டு விட்டதால், ஏ.டி.எம்.கள் ஏழு மணிக்குளேயே காலியாகி, லேட்டர்களுக்கு 'ஸாரி' சொல்லி விட்டன. செல்போன் ஷாப்புகள், ரெடிமேட்ஸ் அண்ட் கட்பீஸ் கடைகள், -1 தள கல்ஃப் கிஃப்ட் ஷாப்புகள் எல்லாவற்றிலும் கூட்டம் அப்புகிறது.

சிக்கன் கார்னரிலும், லோக்கல் கையேந்தி பவனிலும் ஜனம் அதகளம் செய்கிறது. கன்ஸ்ட்ரக்ஷனுக்காக கூட்டி வரப்பட்ட வட இந்தியர்கள், வெளுத்த முடியை நீவிக் கொண்டு, கடக்கும் மஞ்சள் மங்கைகளை ஓரக்கண்ணால் விசாரிக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் 'ப்ரமரம்' ரெண்டாவது வாரமாக ஒடுகின்றது. அதிசயமாக! மகாதேவர் கோயிலின் குட்டிக் குட்டி விளக்குகள் சிமிட்டிக் கொள்கின்றன. அன்னபூர்ணாவில் தமிழ் மென்னியர்கள் எக் தோசையும், புளிச் சாதமும், சாயாவும் கலந்தடிக்கிறார்கள். ஹாஸ்பிடல் வெட்டுச் சந்தில் இருக்கும் பகவதி கோயிலில் விநாயகரை ஸ்பீக்கரில் அழைக்கிறார்கள்.

திருவிழாவின் உற்சாக மனநிலை ஒரு ஜூரம் போல் மாநிலமெங்கும் பரவுவதை தலைநகரத்திலிருந்து உணர முடிகின்றது. ப்ரெளஸிங் மையத்திலிருந்து இதை டைப் அடிக்கும் நானும் நாளை இரவு கிளம்புகிறேன்.

ஐந்து நாட்கள் விடுமுறை. டெக்னோபார்க்கும், ஒட்டிய ஓட்டல்களும், சிங்கிளர்கள் மேன்ஷன்களும், தனி வீடுகளும், லேடீஸ் ஹாஸ்டல்களும், மறைத்த இணையப் பெட்டிகளும் நாளையிலிருந்து semi - deserted ஆக இருக்கும்.

எல்லோருக்கும் திருவோண வாழ்த்துக்கள்..!!!

படம் நன்றி :: http://farm4.static.flickr.com/3051/2864731990_36df86009f_m.jpg

***

ரெஷஸன் நேரமாக இருப்பதால், சென்ற முறை போல் இல்லாமல் எளிமையாகவே ஓணம் கொண்டாடினோம். நாள் முழுதும் வேட்டி சட்டையில் குளுகுளுப்பாகவே இருந்தது. அலுவலக நங்கைகளும் கேரளப் பாரம்பரிய சேலையில் வந்தார்கள். வித்தியாசமாக இருந்தது. :)

மதியம் மட்டும் அல் - ஸாஜ் ஆடிட்டோரியத்தில் உணவு ஓணசதயம் (ஓண உணவிற்குப் பெயர்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்று விட்டு, தின்று விட்டு, ஒன்றரை மணிக்கு மேல் கோடிங்குகளுக்குத் திரும்பினோம்.

Thursday, August 27, 2009

கிளி முற்றம்.

ஸ் பாஸ் புதுப்பிக்க டிப்போவிற்குப் போவோம். எப்போதும் நான்கைந்து பஸ்கள் பாகங்கள் உரிக்கப்பட்டு ஸ்கெலடன்கள் தெரியும்படி நிற்கும். உருவி விட்ட பழுப்புச் சீருடையில் கறுப்புத் தெறித்த மெக்கானிக்குகளின் கால்கள் மட்டும் வெளியே நீட்டப்பட்டிருக்கும். தூரப்பேருந்துகள் தட்டுத்தடுமாறி நுழைந்து லிட்டர்களாய்க் குடிக்கும். எண்ணெய் கலந்த நீர் பல வர்ணங்களில் சுழித்தோடும். மாமா போன்ற டயர்கள் அடுக்கியிருக்கும் உள்ளறை ஒன்றில், அடுத்த ஒரு மாத ஆயுள் கொண்ட சீட்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது, ஷிப்ட் மாறும் ட்ரைவர்களைக் கடப்போம். காற்றில் டீஸல் வாசம் விரவியிருக்கும்.

பெய்ண்ட் உதிர்ந்த பல கட்சி போர்டுகளையும், முற்பகல் வெயிலில் சுரத்திழந்து சுருண்ட கொடிகளின் கம்பங்களையும் பின் தள்ளிச்சென்றால் ஓர் எஞ்சினியரிங் கல்லூரியும், ஓர் ஆர்ட்ஸ் கல்லூரியும் வரும். தாண்டி கிட்டத்தட்ட மூன்று கி.மீ தள்ளி தான் அடுத்த பஸ் ஸ்டாப் இருக்கும். இடைப் பிரதேசத்தில் காவலர்கள் போல் புளியமரங்களும், சரளைக் கற்களும், இளநீர்ச் சாக்குகளும், விசுக்கென விரையும் பாடி கட்ட வேண்டிய லாரிகளும், மொத்தமாய் ஒற்றை வெயிலும் மற்றும் நாங்களும் தான் இருப்போம்.

சங்கரின் வீடு கிழக்கில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. ஹைவேயிலிருந்து கிளை பிரிந்து மாரியின் பெட்டிக்கடையை ஒட்டிய மண் பாதையில் நடந்து போனால் முதல் வீடு. கிழக்குப் பார்த்திருக்கும். வாசலில் ஊதா நிறத்தில் 'S' என்று பெரிய எழுத்தில் எழுதிய மாருதி. வீடு ஒரு சாதாரண கிராமத்து நடுத்தர அளவில் இருக்கும். இரண்டு முன்னறைகள். ஒரு சமையலறை. ஒரு ஸ்டோர் ரூம். அதில் நிறைய மூட்டைகள் அடுக்கப்பட்டு எப்போதும் ஒரு வித மக்கிய வாசம் வரும். பின்னால் ஒரு அறை, அவன் படிப்பதற்காக ஒரே ஒரு ஜன்னல் மட்டும் வைக்கப்பட்டு பரண்களோடு இருக்கும். அதில் ஒரு கண்ணாடி முகம் பதித்த மர பீரோ. கிரிக்கெட் விளையாடக் கிளம்பும் போதும், அதில் முகம் பார்த்து மேக்கப் செய்து கொண்டு, இரண்டாவது ஓவரிலேயே கலைந்து விடுவான். அதற்கு நேர் எதிரிலேயே மற்றொரு சின்ன அறை. பின்னங்கதவைத் திறந்தால், ஒரு மகா வெளி.

நெடுஞ்சாலைக்கும் வீட்டுக்கும் இடையில் அந்த வெளி இருந்தது. அதில் ஒரு பகுதி வயலாக்கப்பட்டிருக்கும். சீஸனுக்கேற்றாற்போல் அதில் கரும்பு, மஞ்சள், சோளம் என்று வித்தை காட்டி விளைவிப்பார்கள். மறு பாதியில் நிறைய மரங்கள் இருந்தன. கொய்யா, மா, கொன்றை, ஒல்லியாய் ஓர் அரசு இன்னும் பெயர் தெரியாத மரங்கள். ஆடி மாதத்தில் அங்கே ஊஞ்சல் கட்டி அரை வட்டம் செல்வோம். சில சமயம் மைனாக்கள் வந்து கம்பி வேலி கட்டிய கற்களின் மேல் உட்கார்ந்து கூவிப் பறந்து விடும்.

கொய்யா மரங்கள் இருந்ததால் நிறைய கிளிகள் வரும். பச்சையாய், நுனியில் மட்டும் சிகப்பாய் அழகாய் இருக்கும். சின்னச் சின்னதாய்க் கூறு வோட்டு கைகளில் வைத்து 'கிக்கீ...கிக்கீ..' என்று கத்தினால், தோள் மேல் வந்து அமர்ந்து கொத்தி எடுத்துச் செல்லும் அளவிற்கு அந்தக் கிளிகள் எங்களுக்குப் பழக்கமாயிருந்தன. சில கிளிகள் வீடுக்குள்ளேயும் வரும். அந்த தோட்டத்திற்கே நாங்கள் 'கிளி முற்றம்' என்று தான் பெயர் வைத்திருந்தோம். அரச மரத்தில் ஒரு கரும் பொந்து இருக்கும். 'அதில் தான் வந்தனா எனக்கு தரப் போற லவ் லெட்டரை எல்லாம் வெச்சு மறைக்கப் போறேன்' என்ற சேகர் தான் இந்தப் பெயர் வைத்தான். அவனுக்கு லேசான இலக்கிய விபத்து கொஞ்சம் முன்பாகவே நேர்ந்து விட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டர்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்த போது, அவன் மட்டும் சர்க்கிள் லைப்ரரிக்குச் சென்று மெம்பரானான். அவன் சொன்ன ஐடியா 'சிவகாமியின் சபதத்திலிருந்து' சுடப்பட்டது என்பது வெகு காலங்களுக்கு அப்புறம் தான் எனக்குத் தெரிய வந்தது. சரி, இந்த வந்தனா யார்..? சொல்கிறேன்.

அவர்கள் மூன்று வீடுகள் தள்ளி இருந்தார்கள். கிட்டத்தட்ட சங்கர் வீடு அளவிற்கே செல்வந்தம். ஒரே ஓர் அண்ணன். புல்லட்டில் வருவான். எங்களை வழியில் கோஷ்டியாகப் பார்த்தால் 'என்னடா வீட்டில் சொல்லட்டுமா..?' என்பான். என்னவோ எங்களின் உத்தமத்தன்மைக்கு வீடுகளில் கேரண்டி செய்திருப்பவன் போல்! 'சொல்லிக்கோ போ..!' என்பான் சங்கர். எங்களுக்கு உதறல் எடுக்கும். கேட்டால், 'அவன் தங்கச்சி என்னை ரூட் விடறாடா..! இவன் என்ன செஞ்சிர முடியும்..!' என்பான்.

அவளும் கொஞ்சம் அப்படித் தான் நடந்து கொண்டதாகத் தெரிந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சம் மதுபாலா ஜாடை இருந்தது. அந்த வெக்கைக்கு ரோஸாய் கன்னம் சிவக்கும். நாங்கள் ஆறு மணி வரைக்கும் விளையாடி விட்டு, காய்ந்து போய், ஸ்ரீராம் நகர் தெருக் குழாயில் திருகித் தண்ணீர் குச்சியைக் குடிக்கும் போது, எதிரில் சைக்கிளில் ஜொலிப்பாய் போவாள். கூட சில துணை தேவதைகளும்! ஹிந்தி படிக்கிறாளாம்.

நாங்கள் கொய்யாக்களையும், நாகநந்திப் பூக்களையும் பறித்து, சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டு அசிங்கமாய் நடக்கும் போது, கரெக்டாக வந்து சேர்ந்தாள். சின்னச் சின்னதாய் பூப்போட்ட பாவாடையும், அலையலையாய்த் திரண்ட பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தாள். மஞ்சள் முடிகள் கைகளில் சுருண்டிருந்தது. பெரிய ப்ளாஸ்டிக் வளையல். ஒரு கையில் வாட்ச். டெய்ல் மாதிரி ஏதோ ஒரு சங்கதியில் தலையை முடிந்திருந்தாள். அதில் ஒரே ஒரு ரோஜா, இலையோடு ஈரமாய் இருந்தது. அந்த மாலை நேரத்தில் மஞ்சள் கதிர்கள் முகத்தில் விழுந்து புரண்ட போது, கிட்டத்தட்ட தேவதை போலிருந்தாள். எல்லோரும் அப்படியே ஸ்டன்னாகி நிற்கும் போது, உள்ளேயிருந்து சங்கர் அம்மா வந்து விட்டார்கள்.

"ஆண்ட்டி...! அம்மா இதை உங்ககிட்ட குடுத்திட்டு வரச் சொன்னாங்க.." பின்புறத் திண்ணையில் வைத்திருந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள். "ஹரித்வார்ல இருந்து மாமா வந்திருந்தாங்க. ஏதோ ஸ்வீட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.."

"ஸ்வீட்டா வந்து..? நான் சாப்பிட மாட்டேன். அவருக்கும் சுகர் ஆச்சே..!"

'வந்து வந்து... ஸ்வீட் தந்து தந்து..' சேகர் அதற்குள் கவிதை எழுதும் முஸ்தீபில் இறங்கியிருந்தான். அவன் வாரப் பத்திரிக்கைகளைத் தாண்டி, புதுக்கவிதைகளைத் தொடங்கி விட்டதை இது உறுதிப்படுத்தியது.

"உங்க வீட்ல இருக்கற வேற யாராவது சாப்பிடுவாங்கனா குடுங்க ஆண்ட்டி..!" சொல்லி விட்டு எங்கள் எல்லார் மேலும் ஒரு பார்வையை விசிறி விட்டு மின்னலாய் மறைந்தாள்.

"நிறைய இருக்கும் போல இருக்கு. நீங்க எல்லோரும் எடுத்துக்கோங்க..!" குந்தி தேவி போல் அவர் சொல்லி விட்டுப் போய் விட, இங்கே அடிதடி.

நான்கு பேரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்திழுக்கப் போராட, சங்கர் 'சைலன்ஸ்' சொல்லி விட்டான்.

"நல்லா கேட்டுக்குங்க. வந்து என்ன சொன்னா? எங்க வீட்ல இருக்கற வேற யாருக்காவது...! அப்டின்னா என்ன அர்த்தம்? என்னைத் தான சொல்லியிருக்கா. எல்லோரும் ஒதுங்கிக்கோங்க..."

"அதெப்படி? இப்ப உங்க வீட்ல நாம எல்லாரும் தான் இருக்கோம். அவ எங்கள்ல யாரையாச்சும் சொல்லியிருக்கலாம்ல..?" சேகர் அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கண சூட்சுமத்தைப் பிடித்து விட்டான். அவன் லைப்ரரியில் லைஃப் டைம் மெம்பரானது வீணாகவில்லை.

நானும், சுரேந்தரும் அமைதியாக நின்றோம். இது போன்ற உரிமைப் போர்களில் வீணாகத் தலையிட்டுப் பின்னர் கிடைக்கப் போகும் பங்கில் விரிசல் விழ விடக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் நிறைய அனுபவங்களில் தெரிந்து கொண்டிருந்தோம். பின்னர் ஒரு வழியாகச் சமாதானமாகிப் பிரித்துப் பார்த்து, நிறைய நிறைய இருந்ததால், எல்லோரும் பங்கிட்டுத் தின்றோம். ஒருவனே தின்றால் வயிற்றுக்கு ஒத்துக்காது என்ற உயிரியல் உண்மை அதற்குள் அவர்களுக்குப் புலப்பட்டிருந்தது.

ந்தனா இது போல் குழப்பமாகத் தான் நடந்து கொண்டாள். சுரேந்தருக்கு ஒரு தங்கை. அமுதா. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அவளிடம் இவனைப் பற்றி ஏதோ சொன்னாளாம். அது வந்து பேச்சு வாக்கில் சொல்லி விட, அண்ணனை இரண்டு வாரங்களுக்கு கையில் பிடிக்க முடியவில்லை. பின் அவளிடம் போட்டுப் பிராய்ந்து பார்த்ததில், இவள் வந்தனாவிடம் எக்ஸாம் ஹாலில் ரப்பர் கேட்டிருக்க, அவள் உன் அண்ணனிடம் வாங்கி வைத்திருக்க வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறாள்.

எக்ஸாம் ரெஃபரன்ஸுக்காக லைப்ரரி பக்கம் போனவளிடம், விகடனை மறைத்து, எம்ப்ளாய்மெண்ட் நியூஸை எடுத்து வைத்து, ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாகவும், அதற்காக சைனிக் பள்ளியில் சேரப் போவதாகவும் பீலா விட்டிருக்கிறான் இன்னொருவன். அவள் 'நாக்பூரில் ஒரு பெரியப்பா இருக்கிறார்கள். ரெஸிடென்ஷியல் சைனிக் ஸ்கூல் நடத்துகிறார்களாம். போகிறாயா?' என்று கேட்டு விட, சைக்கிளை எடுத்து பறந்து விட்டான்.

என்னிடம் வந்து ஒருமுறை சயின்ஸ் படங்கள் வரையக் கஷ்டமாயிருக்கிறது. வரைந்து தருகிறாயா என்று கேட்டாள். அப்போது என் உயிரியல் படங்கள் பாய்ஸ் ஹை ஸ்கூல் தாண்டி இவர்கள் வட்டாரத்திலும் மங்காப் புகழ் பெற்றிருந்தது. என் அக்கா தான் ராத்திரி எல்லாம் உட்கார்ந்து வரைந்து தருகின்ற ரகசியத்தை நான் வெளியிட்டதேயில்லை. வந்தனா கேட்டதும் உள்ளுக்குள் ஜில்லிப்பாய் இருந்தாலும், அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து தரச் சொல்லி ('இரு இரு அம்மாட்ட சொல்லிடறேன்.!') கொடுக்கும் போது, சுரேந்தர் போட்டுக் கொடுத்து விட்டான்.

எங்களில் சங்கருக்கு மட்டுமே கூடுதலாய்ச் சில தகுதிகள் இருப்பதைக் காலக்கிரமத்தில் புரிந்து கொண்டோம். ஒரே தெரு. ஒரே பொருளாதார நிலை. கொஞ்சம் வனப்பு கலந்த நிறம். நாங்கள் பிறகு ஓசி கொய்யாக்கனிகளுக்கு பங்கம் வருவதைக் கருதி, ஒதுங்கிக் கொண்டோம்.

ஒரு நாள் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தான்.

"என்னடா..?"

"ஓ.கே. சொல்லிட்டாடா. அதுக்கு அடையாளமா நம்ம கிளி முற்றத்துல அரச மரம் இருக்குல்ல. அங்க வெச்சு ஒரு கிஸ் குடுத்தாடா. எங்க தெரியுமா...?"

"அதான் சொன்னியே..! அரச மரத்துல..!" சேகர் கம்மிய குரலில் சொன்னான்.

"ச்சீ! அது இல்லடா.! இங்க..!" உதட்டைக் காட்டினான். கொஞ்சம் லிப்ஸ்டிக் கலர் தெரிந்தது.

"இங்கயா..? உதட்டுலயா..? எப்டிடா இருந்துச்சு..?"

"டேய்..! அவ என் வைஃபா வரப் போறா..! இப்டி எல்லாம் கேக்காதீங்க..!"

"ஓ...! ஸாரிடா..!"

பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள். கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது. நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம். புல்லட் அண்ணனும் நெருக்கமானான். மதீனா டீ ஸ்டாலில் அவன் சிகரெட் பிடித்ததைக் கூட நான் யாரிடமும் சொல்லவில்லை. அவன் எக் பஜ்ஜி வாங்கிக் கொடுத்தான்.

அவனுடைய கிரிக்கெட் குழுவில் எல்லாரும் தடித் தூண்களாக இருப்பார்கள். நாங்கள் ஆர்.கே.நகர் பிட்சில் விளையாடும் போது, லேட்டாகவே வந்து வேண்டுமென்றே எங்களுக்கு குறுக்காகவே பிட்ச் வைத்து இம்சைப்படுத்துவார்கள். இப்போது புல்லட் அண்ணனின் அன்பு வட்டத்துக்குள் நாங்கள் வந்து விட்டதால், 'முஸ்தபா... முஸ்தபா..' ஆனோம். சுரேந்தருக்கு சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, வளையம் விடும் வரை வளர்ந்தான்.

கிளிமுற்ற அரச மரப் பொந்தில் சிகரெட் துண்டுகள் தேங்கின. உழவுக்கு வருபவர்கள் பார்த்து விட்டு பற்ற வைக்க, க்ரூப் ஸ்டடி இன் கிளி முற்றத்திற்கு கட் விழுந்தது. பிறகு அவன் வீட்டுக்குப் போவதும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வந்தது. மூன்றாண்டுகள் தொடர் மழையில்லாததால், உழவு நிறுத்தப்பட்டதாம். கிளி முற்றத்து பழ வருமானம் கை கொடுத்ததாம்.

ஸ்கூல் முடிந்ததும் நான் சென்னைக்குக் கிளம்பி விட, சுரேந்தர் திருப்பூரில் மில்லுக்குச் சென்று விட, சேகர் இலக்கியத்திற்கு கமா போட்டு எம்.எம்.ஸி.யில் ஊசி பிடித்தான். சங்கர் அடுத்த ஸ்டாப் ஆர்ட்ஸ் காலேஜிலேயே பி.காம் சேர்ந்தான். அவளும் அங்கேயே சேர்ந்ததாளாம்.

தேர்ட் இயர் செமஸ்டருக்குப் படித்துக் கொண்டிருந்த போது, சுரேந்தர் ஹாஸ்டலுக்குப் போன் செய்து சொன்னான். "ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்காததால சங்கரும் வந்தனாவும் ஓட்டிப் போகப் பார்த்து, புல்லட் அண்ணன் மூணாவது கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகும் போது புடிச்சுட்டான். வீட்ல செம அடி. அவளை நாக்பூருக்கு அனுப்பிட்டாங்க..."

யாரோ ஒரு சேலம் சேட்டு வீட்டை வாங்கியிருந்தான். "அவங்க அப்பா எல்லாத்தையும் வித்துட்டு தென்காசி பக்கமா போய்ட்டாங்களாம். இவன் படிப்பை நிறுத்திட்டங்க. அய்யம்பாளையத்துல இருந்த பண்ணையை கூட வித்துட்டாங்க.."

க்கா பையனுக்கு காது குத்துவதற்காக இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது பஸ்ஸில் இருந்து எட்டிப் பார்த்தேன். வயல் முழுக்க நிரவப்பட்டு, சமவெளிகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. மஞ்சள் பிள்ளையாராய் HD கல் அம்புக்குறியோடு உள்ளே தள்ளி இருந்தது. சர்வேயர்கள் தத்தம் கருவிகளுக்குள் தலை புதைத்திருந்தார்கள். கிளி முற்றத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டிருந்தன. பக்கத்து சீட்டில் வெற்றிலை மடித்துக் கொண்டிருந்தவர் சொன்னார். பஸ் ஸ்டாப் வரப் போகிறதாம்.