Thursday, September 28, 2006

அஞ்சலி.

அந்த அழகிய ஆத்மா வானத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

நீலப்போர்வையாய் ஈரத்துளிகள் வந்து மூடியவாறு, உருண்டோடுகின்ற, பூமிப்பந்தை திரும்பிப் பார்த்தது. பகையும், வெறுப்பும், கோபமும், சின்னச்சின்ன சந்தோஷங்களும், மலை போன்ற துக்கங்களும் நிர்ம்பிய பூமி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இனி இங்கு வர வேண்டாம் என்று, நினைக்கையில் ஏனோ ஒரு துக்கம் வந்தது. மெல்ல மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

திடீரென வழியில் இரு தேவமங்கைகள் வந்து வணங்கினர்.

"அம்மா.. தங்களை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்." என்றனர்.

ஆம்.. தேவலோகத்தைக் காண்பதில் இனிமையாகத் தான் இருக்கும். நறுமணம் வீசுகின்ற தேவதாரு மரங்கள். தெள்ளிய நீரோடை பாய்கின்ற தோட்டங்கள். குளிர் தென்றல் பவனி வருகின்ற அருவி பொழிகின்ற வனங்கள், என்றெல்லாம் தேவலோகம் இருக்கும் என்று தான் படித்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், தான் பெரும் விருப்புடன், விரைந்து கொண்டிருப்பது இவற்றைக் காணவா..? அன்று. என் உளம் கவர்ந்த கள்வரை அல்லவா..? அவரைப் பற்றி நினைத்தாலே இந்த பாழ்மனம் கலங்கி விடுகின்றதே.

ஆத்மா அந்த தேவமங்கையரை வணங்கியது.

"தெய்வப் பெண்களே..! தங்கள் தரிசனம் கிடைத்ததில் பெரும் பேறு பெற்றேன். தேவலோகத்தைக் காண்பதில் நான் பேரார்வம் கொண்டுள்ளேன் என்பது உண்மையே! ஆயினும் என் உள் மனதில், யாரைக் காண நான் விரைந்து சென்று கொண்டிருக்கின்றேன் என்பதை தாங்கள் அறியமாட்டீரா? என்னைத் தயை புரிந்து அவரிடத்தில் அழைத்துச் செல்லுங்கள்.." என்று வேண்டிக் கொண்டது, அந்த ஆத்மா.

தேவகன்னியர் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

"வாருங்கள். தங்களை அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவரும் உங்களைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்" என்றார் ஒரு தேவகன்னிகை.

என்ன..? அவர் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாரா?

ஏன் இந்தக் கால்கள் இவ்வளவு மெதுவாகச் செல்கின்றன? இந்தப் பெண்கள் இன்னும் சற்று வேகமாக சென்றால் தான் என்ன? இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டுமோ..?

மூவரும் விரைந்து சென்றனர்.

ச்சைப் பசேல் என்ற தோட்டம். மினிமினுத்துக் கொண்டிருந்த லக்ஷோப லக்ஷ நட்சத்திரங்களுக்கு நடுவே அமைந்திருந்தது. எங்கிருந்தோ வந்து, மனதை மயக்கிக் கொண்டிருந்தது மென் குழலோசை. சிலுசிலுவென தென்றல் வீசிக் கொண்டிருந்தது.

"தாங்கள் காண வேண்டியவர், இங்கு தான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் வருகிறோம்." விடைபெற்று மறைந்தனர் தேவகன்னியர்.

என்ன..? அவர் இங்கு தான் காத்துக் கொண்டிருக்கிறாரா..? மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்தது, அந்த ஆத்மா.

அவர் தான்..! அங்கே நின்று கொண்டிருப்பவர் அவரே தான்.! எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

"அன்பரே..!"

அந்தக் கம்பீர திருவுருவம் திரும்பியது. மறைகையில் இருந்த வயதான தோற்றம் இல்லை. குழந்தை தோற்றம். கொழு, கொழுவென இருந்த தேகம். கள்ளம் கபடமற்ற முகம்.

ஏன், என் கண்கள் தாமாகவே சுரக்கின்றன? அவரது உருவம் கூட மறைக்கிறதே..!

" நலம் தானா.. நலம் தானா.. உடலும் உள்ளமும் நலம் தானா.." ஆத்மா பாடியது.

"அன்பே..வந்து விட்டாயா..?"

"வந்து விட்டேன்.."

"இப்படி, அருகில் வந்து அமர்.."

"இங்கே வேண்டாம்.."

"இங்கே பார்! நம்மைப் பிரிப்பதற்கு எதுவுமில்லை. எந்த வேறுபாடுமில்லை. நான் தமிழன், நீ கேரளம் என்ற பேதமில்லை. நான் வேறு ஜாதி, நீ வேறு இனம் என்ற பிரிவு இல்லை. எந்தச் சமூகத்திற்காகவும் நாம் பயப்படத் தேவையில்லை. நமது தேகம் குறித்த எண்ணம் இல்லை. அத்தனை குப்பைகளையும் நாம் பூலோகத்திலேயே, புதைத்தும், எரிக்த்தும் வந்து விட்டோம். இங்கே இருப்பதெல்லாம் தூய்மையான அன்பு. நாம் எந்தக் கவலையும் இல்லாமல் பூரண அன்பு பூண்டிருந்த காலம், திரும்பியுள்ளது. இனி காலம் என்ற ஒன்றும் இல்லை.இனி என்றென்றும் இணைந்தே இருப்போம். தூய அன்பு. பரிசுத்தமான பாசம். இனி எந்தச் சக்தியும் நம்மை பிரிக்க முடியாது.."

திரைப்படங்களில் பக்கம் பக்கமாய்ப் பேசிய, அதே திருவுருவம் தான் இப்படி பொழிந்தது. இது பிறவிக்குணமா..? இல்லையில்லை, பிறவிகள் எல்லாம் தாண்டி வந்த பின்னும், இன்னும் இப்படிப் பேசுகிறார் என்றால், இது அதையும் தாண்டியது.

இவர் தெய்வமகனே தான்.

அருகில் அமர்ந்தனர்.

"எனக்காக நமது பாடலைப் பாடுவாயா..?"

"உங்களுக்கில்லாத்தா..?"

"மறந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..."

ஆனந்தத் தேன் துளிகள் சொரியச் சொரிய அந்த அழகுத் திருவுருவம் சுழன்றாடத் தொடங்கியது. அந்த தெய்வமகனோ, மறைந்திருந்து பார்க்க வேண்டிய அவசியமின்றி, முன்னால் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

2 comments:

லதா said...

// இவர் தெய்வமகனே தான் //

:-)))

வசந்த் said...

நன்றி லதா.. ஒரு பின்னூட்டமும் இல்லாம இந்த அஞ்சலி பதிவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி வருமோனு நினைத்தேன்.. நன்றி.