Thursday, September 28, 2006

கொஞ்சம்...! (A)



ஒளியுமிழ் வெண்பந்தின் பாதையெங்கும் பரவி நிற்கின்ற கருமேகங்கள் கலைந்து செல்கின்ற பேரிருள் பொழுது! மோனத் திருக்கோலமாய் ஆரோகணிக்கும், பிம்ப மரங்களின் இடைவெளியெங்கும் வழிந்து கொண்டிருக்கிறது வெண்ணொளி! மினுக் மினுக்கென்று மின்னிக் கொண்டிருக்கும் வெண்பொரித் துகள்கள் பதிந்திருக்கும் பெருவெளியெங்கும் விரவியிருக்கும் இருள் மாயம்!

இருந்தும் இல்லாத பனித்துகள்கள் பெய்யும் முன்னிலாக் காலம்! காற்றின் ஈரப்பதம் கொஞ்சம் கூடிப் போயிருக்கும் நேரம்!

நாம் இருவர் மட்டும் அமர்ந்திருக்கிறோம்.

வெண்முலாம் பூசிய நதியின் அலைகள் வந்து, நனைத்து விட்டு நகர்கின்ற, ஈரக் கரையோரம் நாம்! சில்வண்டுகளின் ரீங்காரம், கரகரத் தவளைகளின் குரல், பிசுபிசுப்பில் நனைந்த காற்று, தூரத்து ஒற்றை மின்விளக்கின் கண் சிமிட்டல் ஒளி சுமந்த தென்றல், சலசலத்த நாணல் புதரிலிருந்து எட்டிப் பார்க்கும் பாம்பு, இவற்றோடு நாமும்!

கண்களுக்குள் நம்மைத் தேடிப் பார்த்துவிட்டு, ஓய்ந்த நேரம், நம் கைகள் தம் பயணத்தைத் துவக்குகின்றன. வெண் போர்வையாய் நிலவொளியைப் போர்த்திக் கொண்ட நாம், பொங்கிய வேர்வைத் துளிகளை, நனைந்த புல்வெளிக்கு, நொறுங்கிய மண்துகள்களுக்கு நன்றியாய் தெரிவிக்கிறோம்.

மூடல் மறந்த நிலையில், துவங்கிய ஒரு பயணத்தின் தேடல், கூடலில் நிறைந்த பின் ஒரு பாடலை மெல்லியதாய் நீ முணுமுணுக்கிறாய்.

இந்த குளிர் இரவின் வாசம் எங்கும் நாம் வசியம் செய்திருக்கிறோம். அயர்ந்து விலகிய பின், பெருமூச்சுகள் செறிந்த பின்னிரவுப் பொழுதில், உன் விழிகளைப் பார்க்கிறேன்.

இருதுளிகள் பூத்த கண்கள் நிறைந்து வழியும் பால்கிண்ணத்தில் மிதக்கும் திராட்சைப் பழங்களாய் தோன்றும்.

No comments: