"டேய் கண்ணையா..! எங்கடா இன்னிக்கு ரொம்ப நேரமா வர்றாப்ல இருக்கு..?" ஜமீந்தார் வீட்டுக் கணக்குப் பிள்ளை கேட்டார்.
"சாமி, மன்னிச்சுக்கணும். ஆத்தாக்கு பெரியம்ம போட்டிருக்குங்க. அதான் காலங்காத்தாலயே குருவம்மாகிட்ட காட்டிட்டு, மூலிகை பறிச்சுட்டு வர, கொஞ்சம் பொளுதாயிடுச்சுங்க. சாமி மன்னிச்சுக்கணும்.." கண்ணையன் கூனிக்குறுகி சொன்னான்.
"சரி.. போ.. பெரியாடு ஒண்ணு செனையா இருக்கு. அதக் கொஞ்சம் என்னனு பாத்துட்டுப் போ."
"அதாங்க.. இன்னிக்கு நான் கருப்பாட்ட பாத்துக்கறேங்க. சின்னசாமிய இன்னிக்கு மேச்சலுக்கு அனுப்பலாம்னு இருக்கனுங்க.."
"ஏண்டா, அவன் ஒளுங்கா மேச்சுக்கிட்டு வருவானா.? ஆடெல்லாம் பத்திரமா வரணும். ஒண்ணு கொறஞ்சாலும், உன் தோலு பிரிஞ்சுரும். தெரியும்ல..?"
"இல்லிங்கய்யா.. ஏதும் பிரச்ன வராம பாத்துக்கறேங்க. அப்ப உத்தரவு வாங்கிக்கறேங்க"
"ம்...ம்.."என்றபடி கணக்குப் பிள்ளை மாளிகைக்கு உள்ளே சென்றார்.
கண்ணையன் மாளிகைக்கு தெற்கே போகத் தொடங்கினான். நேத்தே, இந்தக் கருப்பாடு ரொம்ப வலியாத் துடிச்சிட்டு இருந்துச்சு. அனேகமா இன்னிக்கு பிரசவம் ஆகிடும் போல.தென் மூலையில் இருந்த ஆட்டுக் கொட்டாயை நெருங்கினான்.
"டேய் சின்னச்சாமி.." குரல் கொடுத்தான்.
"தா.. இங்க இருக்கண்ணா.." என்றபடி ஒரு சிறுவன் கொட்டாயில் இருந்து வெளியே வந்தான். தலையில் ஒரு நைந்த துண்டு. இடுப்பில், ஒரு வெள்ளைக் கோவணம் தொங்கிக் கொண்டிருந்தது.
"என்னடா பண்ணிட்டு இருக்க?"
"யண்ணே.. இந்த கருப்பாடு வயிறு இந்த பெருசா இருக்கல்ல.. அத என்னனு பாத்துக்கிட்டு இருக்கேன்..."
"போடா பொளப்பத்தவனே.. அடுத்த வேளை கஞ்சிக்கு அரிசி இல்ல. அரண்மனைக்கு பொண்ணு பாக்க போனானாம்.. போய் பொளப்ப பாருடா.. இந்தா எல்லா ஆடுகளையும் களத்தி வுடு.. கருப்பாடு இங்கனயே இருக்கட்டும்.. நான் பாத்துக்கறேன். இன்னக்கு நீ போயி மேச்சுக்கிட்டு வா.."
"சரிங்கண்ணே.. கருப்பாடை நல்லா பாத்துக்கங்கண்ணே.. பாவம் வவுறு ரொம்ப நோகும் போல. நான் வேணா குருவம்மாவ கூட்டிக்கிட்டு வரட்டுமா.."
பாருடா, இந்தப் பயலுக்குப் பாசத்த.. நானும் இப்புடித் தான் இருந்தன்.. அப்புறம் ஆச, ஆசயா வளக்குற ஆடுங்க எல்லாம், உள்ள, கறி சோறா போகுதுனு தெரிஞ்சப்புறம், மனசே வுட்டுப் போச்சு. இவுனுக்கும் கொஞ்ச நாள்ள உலகம் புரிஞ்சப்புறம், பளகிப் பூடும்.
"எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ பத்திரமா அல்லாத்தையும் பாத்துக்கடா.."
சரிங்கண்ணே.." என்றபடி, எல்லா ஆடுகளையும், கயிறு பிரித்து விட்டு,
சின்னச்சாமி ஓட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.அவன் கையில், அவன் ஆத்தா கொடுத்து விட்ட போசியில் பழைய சாதமும், காய்ந்த ஊறுகாயும் இருந்தன.
கருமாத்துப்பட்டி, தென்மேற்குத் தொடர்மலைகளின் அடிவாரத்தில் இருந்த குக்கிராமம். இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்கள் ஆண்டு கொண்டிருந்த காலகட்டமது. வெள்ளைக்காரன் கொடுத்த அயல் மதுவுக்கும், வெள்லைத் தோல் மாதுகளுக்கும் மயங்கி, ஜமீந்தார்கள சொக்கிக் கிடந்த காலகட்டம். கறுமாத்துப்பட்டியில், நெல்லை சரகத்துக்கு உட்பட்ட ஒரு குட்டி ஜமீந்தாரின் பழைய பங்களா இருந்தது. ஜமீந்தார், எப்போதாவது ஒருமுறை தான் அங்கே வருவதால், அவரது கணக்குப் பிள்ளை, அதை தனக்கு உரிமைப்படுத்தி, உபயோகப்படுத்தினார்.
No comments:
Post a Comment