இரண்டு பதிவுகளை அக்டோபர் - 06 போட்டிக்காக அனுப்பி வைத்து விட்டு, பிறகு தான் விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி எனக்குத் தோன்றியதைக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
திடீரென்று கடைசித் தேதி 18 என்று ஆனது ஏன் என்று தெரியவில்லை. இந்த மற்றத்தால் இன்னும் அதிக படைப்புகள் வருமா, குறையுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
ஒருவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் போட்டிக்காகப் பதிவு செய்யலாம். ஒரே படைப்பிலக்கியத்தின் கூறினைக் கொண்ட (உதா: கவிதை) மூன்றிற்க்கு மேற்பட்ட ஆக்கங்களையும், தொடர் ஆக்கங்களையும் தவிர்த்தல் சிறப்பு.
இந்த நிபந்தனை கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஒருவர் சிறுகதையில் வல்லவராய் இருக்கலாம். ஒருவர் கவிதை கலக்கலாய் எழுதலாம். சிறுகதை சிறப்பாய் எழுதுபவர், எடுத்துக் கொண்ட கருவை சம்பவங்களால் நிரப்புவார். கவிதயைக் கவினுற அமைப்பவர், வார்த்தைகளால் வர்ணஜாலம் காட்டுவார். ஒரே படைப்பிலக்கிய கூறில் மூன்று படைப்புகளுக்கு மேல், ஒருவருக்குத் தோன்றி, இந்த நிபந்தனையின் காரணமாக, அவற்றை போட்டிக்கு அனுப்பாமல் போனால், இழப்பு யாருக்கு? பதிவு நுகர்வோனுக்குத் தானே? 'தவிர்த்தல் சிறப்பு' என்று சொல்லப்பட்டிருப்பது நிபந்தனை ஆகாது எனினும், அது ஒரு நிரடலாய் இருப்பதை விதி அமைப்போர் கவனம் கொளல் நலம்.
போட்டிக்கான ஆக்கங்களும், தலைப்பும் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இது ஏற்கனவே இருந்த நிபந்தனை தான் எனினும், இதைப் பற்றியும் இங்கே கொஞ்சம் சொல்லிவிடுவது நன்று எனக் கொள்கிறேன். தமிழ் வலைப் பதிவு இடுபவர்கள் அனைவருக்கும் தமிழ் மேல் கொண்ட காதலில் தான் தமிழில் எழுதுகிறார்கள். அனைவரும் முடிந்த அளவு, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தான் எழுத முயல்கிறார்கள். இருப்பினும், கதை நடை, கதையின் போக்கு, கதை சொல்லி போன்ற பல காரணிகளைப் பொறுத்து, வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபடுகின்ற சூழல் ஏற்பட்டு விடுகின்றது.
அப்படித் தூய தமிழில் மாற்றி எழுதினால், ஆசிரியர் உணர்த்த வரும் உணர்வை நுகர்வோர் அடைதல் சற்று சிரமமாகின்றது. 'அப்படி பிற மொழி வார்த்தைகளில் எழுதி தான் தமிழர்கள் உணர்வுப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமெனில், அப்படியொரு, உணர்வே எம் தமிழருக்குத் தேவையில்லை' என்று கூறாதீர்கள். கிணற்றுத் தவளையாய் இருக்க வேண்டாமே..! மேலும், இது போன்ற மிகக் குறைந்த பிற மொழி வார்த்தைப் பிரயோகங்களால் நம் தமிழ் அன்னைக்குப் பங்கம் வராது. தான் ஊட்டிய 'பப்பு மம்மம்' உண்டு வளர்ந்த குழந்தை இன்று 'சப்பாத்தியும், சென்னா மசாலாவும்' சுவைத்து மகிழ்ந்தால், எந்தத் தாயும் கவலையுறாள். வேறு என்ன உண்டாலும், அவன் தமிழ்மகன் என்பது மறவாது, மறையாது. அது போலத் தான், இதுவும்.
எதற்கு இந்த விளக்கம் என்றால், செப் - 06 போட்டிக்கு வந்த தலைப்பை ('கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?') சிலர் விமர்சித்திருந்தது தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை, வேறு எந்த வார்த்தைகளில் சொல முடியும்?
'கொஞ்சம் உய்ர்த்தி விடுகிறீர்களா?'
'கொஞ்சம் தூக்கி விடுகிறீர்களா?'
'கொஞ்சம் முன்னேற்றி விடுகிறீர்களா?'
....
பல்பொருள் வார்த்தையாய் 'லிப்ட்' அமைந்ததால், பல பரிமாணப் படைப்புகள் சாத்தியமாயிற்று. எனவே தலைப்பில் தமிழ் இருக்கிறதா, படைப்பில் தமிழ் மட்டுமே இருக்கிறதா என்று ஆராயாமல், படைத்த தமிழ்மகன், தமிழாய் சொல்லியிருக்கிறானா என்று பார்ப்பது, பரவலான தளப் படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பது, என் எண்ணம்.
2 comments:
//
ஒருவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் போட்டிக்காகப் பதிவு செய்யலாம். ஒரே படைப்பிலக்கியத்தின் கூறினைக் கொண்ட (உதா: கவிதை) மூன்றிற்க்கு மேற்பட்ட ஆக்கங்களையும், தொடர் ஆக்கங்களையும் தவிர்த்தல் சிறப்பு.
//
இது நல்லதுதாங்க. கவிதை எழுதுபவர் 10 அல்லது 15 கவிதை நாலு நாலு வரியா எழுதறாருண்ணு வச்சுக்கங்க. அப்ப, எப்படி ஓட்டு போடுவீங்க? ஓட்டு போடறவங்களுக்கு ஆர்வமுள்ள மாதிரியும் போட்டி அமையணும் அப்படின்னா, ஒரு 5 படைப்புக்குள்ளாற வந்தாத்தான் நல்லா இருக்கும். தேன்கூடு இதைத் திருத்தி 5 என்று போட்டால் நன்றாக இருக்கும்.
//போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். //
இரண்டு நாட்களில் பெரிதாக மாற்றம் எதுவும் இருக்காது. ஆனால், ஒட்டு போடுவதற்கான காலம் அதிகரிச்சு இருக்காங்க. 6 நாள் போல இருக்கு.
10 அல்லது 15 கவிதை நாலு, நாலு வரிகளாய் எழுதினால் நல்லது தானே! தொடர் ஆக்கங்கள் இல்லாமல் தலைப்பை நியாயப்படுத்தும் வித்தியாசமான 10 அல்லது 15 ஆக்கங்கள் வந்தால் தவறில்லையே! நமக்கும் படிக்க நன்றாக இருக்கும் அல்லவா..? அந்த 10 அல்லது 15 ஆக்கங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
Post a Comment