Wednesday, October 04, 2006

குடிமகன்.

"மாமி.. இந்த தீபாவளிக்கு எங்க ஸாரி எடுக்கப் போறீங்க..? போத்தீஸா.. சென்னை சில்க்ஸா இல்ல ஆர்.எம்.கே.வி.யா..? சொல்லுங்க மாமி..?""

கோடம்பாக்கத்தில் ஏறியதில் இருந்து, இதே கேள்வி தான். கெளசியைப் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியது, சரி தான். ஆனால் இந்த அனு கண்ணில் படாமல் கிளம்பியிருக்க வேண்டும். காலாண்டு லீவ் விட்டு விட்டார்கள், நானும் கெளசி அக்காவைப் பார்த்து விட்டு வருவேன் என்று என்னுடன் கிளம்பி விட்டாள். கெளசியை இங்கே தான் கோடம்பாக்கத்தில் குடுத்திருக்கிறோம். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இப்போது முழுகாமல் இருக்கிறாள். மாப்பிள்ளை ஆறு மாதம் US போகிறாராம். வந்து ஒத்தாசை பண்ணம்மா என்று கூப்பிட்டு இருந்தாள்.

பஸ் தி. நகர் பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

திடீரென்று பின்னால் ஒரே சத்தம்.

"டேய்.. எறங்குடா.."

"டிக்கெட் எடுக்க காசு வெச்சிருக்கியாடா..?"

"பாரு.. செருப்பை வேற கையில வெச்சுண்டு... ஏண்டி செத்த ஜன்னலோரம் நகந்து ஒக்காந்துக்கோ.. சனியன், மேல விழ மாதிரியே வர்றான்..."

"பகல்லயே குடிச்சிட்டு வர்றான்.. இவனையெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் குடுக்கணும் சார்.."

"டேய்... கீழ எறங்கறயா.. இல்லயா..?"

"என்ன சார்.. குடிகாரன்கிட்ட பேச்சு.. தூக்கி வெளிய போடுங்க சார்.."

" நீங்க சொல்லீட்டு அடுத்த ஸ்டாப்ல எறங்கிப் போயிடுவீங்க.. நான் தூக்கிப் போட்டுட்டு, அவன் கீழ எங்கயாவது விழுந்து, செத்து, கித்து தொலைச்சான்னா.. எனக்கு எதுக்கு சார் பொல்லாப்பு..?"

என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும், அனுவும் திரும்பினோம். அப்பா..! ஒடம்பு என்னமாய் பெருத்திருச்சு. கொஞ்சம் திரும்பிப் பார்க்கறதுக்குள்ள கழுத்தில 'சுரீர்'னு ஒரு வலி, மின்னல் மாதிரி வந்திட்டுது. கஷ்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

40 - 45 வயதான ஒரு ஆள். தலையெல்லாம் கலைந்து போய், சட்டை பட்டன்கள் இரண்டு தெறித்து போய், வேட்டி அவிழ்ந்தும், அவிழாமலும், தடுமாறிக் கொண்டிருந்தான். நன்றாக குடித்திருப்பான் போல. அவனை எப்படி வெளியேற்றுவது என்பது தான் அங்கே நடந்து கொண்டிருந்த டிஸ்கஸன் என்று தெளிவானது.

பஸ் மெல்ல நகரத் தொடங்கியது.

கண்டக்டர் நீளமாக ஒரு விசில் அடித்தார்.

"மாணிக்கண்ணே.. கொஞ்சம் இங்க வாங்க.." கண்டக்டர் தான்.

பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றது. ஓட்டுனர் 'தடார்..புடார்' என்று எழுந்து பின்பக்கம் போனார். அவனை வெறுப்பான ஒரு பார்வை பார்த்தார். 'திடீர்' என்று குனிந்து, அவன் கால்களைப் பிடித்தார். 'தர..தர..'வென இழுத்து, வெளியே கொண்டு வந்து போட்டார்.கேவலமான ஒரு வார்த்தை சொல்லி விட்டு, இருக்கைகு வந்து, கீர் போட்டார்.

சலசலப்பான ஓர் ஆரவாரம் எழும்பியது. நானும், அனுவும் மெல்லத் திரும்பினோம்.

"சொல்லுங்க மாமி. தீபாவளிக்கு எங்க துணி எடுக்கப் போறீங்க..?"

எனக்கு 'சீ' என்றாகி விட்டது. என்ன பெண் இவள்? ஒரு மனிதனைத் தூக்கி எறிந்து விட்டு, இவர்கள் அடுத்த வேலை பார்க்கிறார்கள். இந்தப் பெண், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகவோ, அட்லீஸ்ட் நினைத்ததாகவோ தெரியவில்லை. நிஜமாகவே சின்னப் பெண்ணா.. இல்லை என்னைக் கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது என்று வேறு பேச்சு பேசுகிறாளா..? இல்லை, இது போன்ற மனிதர்களை நினைத்துப் பார்க்கவே கூடாது என்று இவள் பெற்றோர், சொல்லித் தந்திருப்பார்களோ..?

எனக்குக் கொஞ்சம் தலை வலித்தது.

ஏனோ, மதியம் பாத்திரம் விளக்கும் போது, குடிகாரக் கணவன் பற்றி, புலம்பிக் கொண்டே அழுகின்ற சரசுவின் ஞாபகம் வந்தது.

பஸ் சீராக ஓடத் தொடங்கியது.

No comments: