மெல்லியதாகத் தூறல் தூறிக் கொண்டிருந்தது.
அய்யனார் கோயிலின் தெற்கே இருந்த ஆலமரத்தின் அடிவாரத்தில் ஊரே கூடியிருந்தது. லாந்தர் விளக்குகள் மினுக்கிக் கொண்டிருந்தன. ஆன்கள் எல்லாம் தலைக்கு முண்டாசு கட்டியிருக்க, பெண்கள் கூடைகளைக் கவிழ்த்து உட்கர்ந்திருந்தனர்.
பெருந்தனக்காரர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.
"இப்ப, இங்க கூடியிருக்கர நெல்லிக்காரன்பட்டி சனங்களுக்கு வணக்கம். கொஞ்ச நாளா நமக்கும், பக்கத்தில இருக்கற தோப்பனூர்பாளையத்துக்கும் வாய்க்கா தகரறு இருக்குனு எல்லார்க்கும் தெரியும். டேம்ல இருந்து வர்ற தண்ணிய அவங்க வயலுக்குப் பயன்படுத்திக்கிட்டு, நமக்குத் தராம, வீரபாண்டி ஏரிக்குத் திருப்பி விட்டர்றாங்க. இதப் பத்தி அவங்க பஞ்சாயத்துக்குத் தெரிவிச்சும், அவங்க எதுவும் பண்னல. கலெக்டர் வரைக்கும் போய் சொல்லியும் ஒண்ணும் வேலையாகல. இதுக்கு மேல என்ன பண்ணணுங்கறத பத்திப் பேசத் தான் நாம கூடியிருக்கோம்..!"
"இன்னும் என்னத்த போயி பேசறது? நாலு பேர வெட்டிட்டு வந்தா கம்முனு இருப்பாங்க.." சேகர் சீறினான். பொழுது போகாமல் சுடுகாட்டுக்கு அருகில் உட்கார்ந்து, பகலெல்லாம் சீட்டாடி வெட்டியாய்ப் பொழுது ஓட்டுகின்ற கும்பலில் ஒருவன். 'சும்மா இருந்த குரங்குக்கு சொறி பிடித்தது போல' இவனுக்கு இந்த பிரச்னை கிடைத்து விட்டது. இதை வைத்து ஊரில் நல்ல பேர் எடுக்க முடியுமா என்று திட்டமிட்டிருந்தான். பின்ன, நாளப்பின்ன ஊருக்குள்ள பொண்ணு கிடைக்க வேண்டாமா?
"எலே.. சும்மா உட்காருடா.. வெட்டப் போறானாம். வெட்டிட்டு வந்தா வெவெகாரம் தீந்துடுமா? இப்ப நாம ஊருக்குள்ள பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க இது மாதிரி எசகுபிசகா ஏதாவது பண்ணினீங்கன்னா அப்புறம் போலீசு கேசாகிடும். அப்புறம் காலாகாலத்துக்கும் ரெண்டு ஊருக்கும் பிரச்னையாத் தான் இருக்கும்.." ஜேசுப் பிள்ளை பேசினார்.
ஜேசுப் பிள்ளை ஊரில் மரியாதையோடு பார்க்கப்படும் பெரிய மனிதர்களில் ஒருவர். சுபாஷின் ஐ.என்.ஏ-வில் பணியாற்றியவர்.
ஜேசுப் பிள்ளை தொடர்ந்தார்.
"ஏண்டா.. இப்படி ஊருக்கு ஊரு அடிச்சிக்கறதுக்காடா நாங்க வெள்ளைக்காரன்கிட்ட அடிபட்டு, மிதிபட்டு விடுதலை வாங்கிக் குடுத்தோம்? பேச வந்துட்டான். நீ போயி நாலு பேர வெட்டிட்டு வா. அவன் வந்து நாலு பேரை வெட்டுவான். இப்படியே, எல்லரும் வெட்டிக்கிட்டு போனப்புறம், ரெண்டு ஊரிலயும் யாருமே இருக்க மாட்டீங்க. அப்புறம் யாருக்குடா தண்ணி வேணும்..?
இந்த வேலையைத் தான்டா வெள்ளைக்காரன் பண்ணிட்டு போனான். அன்னிக்கு அடிச்சுக்க ஆரம்பிச்ச இந்துக்களும், இசுலாமியர்களும் இன்னும் நல்லா ஒட்ட முடியாம, தள்ளி தள்ளி தான்டா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அவன் பண்ணிட்டு போன அதே வேலையை நீங்க தொடரப் போறீங்களா..?"
"அப்ப, இதுக்கு என்ன தான் முடிவு..?" கேட்டான் சுருளி. அவனும் சுடுகாடு கும்பலில் ஒருவன்.
"நம்ம அய்யனார் கோயில் பண்டிகைக்கு அவங்களும் பாத்தியப்பட்ட ஊரு தான். அதனால, பண்டிகையில அவ்ங்க ஊரு கடைங்களுக்கு எல்லாம், கொஞ்சம் தள்ளுபடி காண்டிராக்ட் விலை நிர்ணயம் செய்வோம்.." ஜேசுப் பிள்ளை கூறினார்.
சேகர் வெகுண்டான்.
"என்னங்க இது..? சுத்த கிறுக்குத் தனமா இருக்கு. நமக்குத் தண்ணி குடுக்க மாட்டேங்கறாங்க. அவனுங்களுக்கு, கொறைஞ்ச விலைக்கு காண்டிராக்டா..? உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிருச்சா..?"
"டேய்..! நாக்கை அளந்து பேசுடா..! யாருட்ட பேசிக்கிட்டு இருக்கனு தெரியுதில்ல..?" பெரிய தனக்காரர் கத்தினார்.
"இதப் பாருங்க! அவங்களுக்கு அவங்க பண்ற தப்ப உணர்த்தணும். அவ்வளவு தான் வேல. அதை விட்டுட்டு, அவங்களை பழிஎடுக்கிறேன்னு கிளம்பறது, தப்பு. அவங்களுக்கு தப்பை புரிய வெச்சா, அவங்களா வந்து, தப்பை புரிஞ்சுக்கிட்டு, நமக்குத் தண்ணி குடுப்பாங்க. அதுதான் ரெண்டு ஊருக்கும் நல்லது. இதப் பத்தி பேச நாளைக்கு, நம்ம ஊருல இருந்து கொஞ்சம் பேரு, அங்க போயி பேசுவோம். அதை விட்டுட்டு எவனாவது வெட்டறேன், குத்தறேன்னு கிளம்பனீங்கனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நாட்டுக்காக ஊரையே எதிர்த்திட்டு, ஆர்மியில போய் சேர்ந்தவன் நான். வெள்ளைக்காரன் கிட்டயே, ஜெயில்ல அடி வாங்கினவன். இப்ப ஊர் நன்மைக்காக, நாலு பேரைச் சுட்டுட்டு ஜெயிலுக்குப் போக தயங்க மாட்டேன்..." மிரட்டி விட்டார் ஜேசுப் பிள்ளை.
"ஆமா.. அதுதான். நாளைக்கு பஞ்சாயத்துல இருந்து, நாலு பேரு போவோம். ஐயா சொன்னது ஞாபகம் இருக்கட்டும். இப்ப எல்லாரும் கலைஞ்சு போங்க. மழை பெருசா வர்ற மாதிரி இருக்கு.." பெரிய தனக்காரர் முடித்தார்.
ஊர் கலைந்து போனது.
கிழக்குத் திசையில் இருந்து பளீரென்று, மின்னல் பாய்ந்தது.
(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)
8 comments:
ஐயா,
ஐ என் ஏ-வில் பணி புரிந்தவர் கூட காந்தீய வழியில் சிந்திப்பது மாதிரியான பாத்திரப் படைப்பால், அஹிம்சையின் வலிமையை உணர்த்தியுள்ளீர்கள். வாழ்க மஹாத்மா.நல்ல படைப்பு.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளிதரன்.
மிக்க நன்றி முரளி..! மிகச் சரியாக நான் சொல்ல வந்ததைப் புரிந்துள்ளீர்கள். வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வரவும்.
வசந்த், நன்றாக வந்திருக்கிறது கதை.
இரண்டு ஊர்களையும் எப்படி சம்மதிக்க வைத்தார் என்பதையும் கொடுத்திருக்கலாம்...நம்ம சுப்ரீம் கோர்ட்டுக்கு அதுதானே தெரியல :-(
மற்றபடி நல்ல கருத்து நல்ல சிந்தனை
நல்ல ரத்தினச் சுறுக்கமான கதை - விடுதலை - வாங்கிய விடுதலை ஞாபகப்படுத்தப் படுகிறதா?
சரியா சொன்னீங்க, சந்திர சேகர் ஐயா.. வாங்கின விடுதலையை மறந்திடக் கூடாது இல்லிங்களா, ஐயா..
ரொம்ப நல்லா இருந்ததுங்க கதை காந்திய வழியில் சிந்திக்கணும் என்று நல்ல கருத்துள்ள கதை.
கதையும், பாத்திர படைப்பும் நிறைவாக இருக்கிறது !
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !
கோவி கண்ணன் மற்றும் குமரனுக்கு நன்றிகள்.
Post a Comment