Sunday, May 27, 2007

அன்புடன் - படங்களும், படைப்புகளும்!

ன்புடன் இணையக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுக்கான கவிதைப் போட்டிகள், இனிதாக நிறைவுற்று, முடிவுகளும் அறிவிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டதால், நிபந்தனைகளுக்கு உடபட்டு, இப்போது அக் கவிதைகளை இப்பதிவில் இடுகிறேன்.

போட்டியில் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

படம் 1 :



படைப்பு 1 :

ருளின் விரல்கள் நீண்டு
எடுத்துக் கொள்கிறது
ஒளியின் கைகளில்,
நிறைந்திருக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை!

இதயத்தின் இடுக்குகளிலிருந்து
எண்ணம் நீளுகிறது,
உன் இதமான புன்னகையின்
கதகதப்பைத் தேடி.

படம் 2 :
படைப்பு 2 :

ழையோடும்,
என் மனதோடும்
நான்
மகிழ்ந்திருந்த
பொழுதுகள் சொல்லவா?

முதல் நாள்
பள்ளியில் சேர்கையில்
பெய்த மழை
சீருடையில்
வழுக்கிச் சென்றதில்
ஈரமானது
உள்ளங்கை!

சபித்த
மழை நாளில்
நிறுத்தப்பட்ட
இறுதிப் போட்டியின் வலி
கண்கள் வழி
கசிந்ததை
உணர்வாயா..?

கைக்கெட்டா
கொய்யாக் கனிகளை,
வெயில் பெய்த
ஒரு
மதியத்தின் மழை
பறித்துக் கொடுத்ததை
அறிவாயா..?

வெள்ளமெனத் திரளும்
இருட்டில்,
மழைத்துளிகள் படிந்த
இரு இதழ்களின்
அருகாமையில்
இனித்தது
அந்த இரவு
என்பதை
புரிந்தாயா?

ஈரத்தில்
ஒட்டிப் போன இறகுகளோடு
கூண்டுக்குள்
இறந்து கிடந்த
குருவி கண்டு
திட்டிய
மழை நாள்,
நீ கண்டதுண்டா..?

வெயில் எழுதிய
வலி நிரம்பிய
எழுத்துக்களை
நெஞ்சில்
சுமந்து நடக்கும்
நீ அறிவாயா..?

எங்கள் மனம்
போல்,
விரிசல் கண்ட
நிலம் மேல்
நீ நடந்து
தேடுவது
பானை நீரா?
எங்கள் கண்ணீரா?
வருந்தாதே!
கிடைக்கலாம்
இரண்டும் எப்போதாவது!

எங்கள்
நீராதாரங்களும்
வற்றிப் போய்,
நாங்களும்
உன் போல் ஆகும் வரை
மை ஈரம் தீர்க்க
எழுதிக் கொண்டிருப்போம் உனக்காக,
உடைந்த பானையும்,
உடையாத நம்பிக்கைகளுமாய்
தேடிக் கொண்டேயிரு
ஈரத்தை,
நிலத்திலோ,
எங்கள் நெஞ்சத்திலோ..!


படம் 3 :



படைப்பு 3 :

செந்நிற
ஆடையினால்
கிழக்கில் ஆழி,
நனைகையில்
சொல்வோம்
செம்மொழிப்
புத்தாண்டு வாழி..!

செந்துணி விலக்கி
சிறுமுகம் காட்டும்
சிறுபெண்!
வந்தனை கூறி
வரவேற்போம்,
இன்னாளில்
வெறுப்பேன்?

வெட்கம் பூசிய
மஞ்சள் அடிக்கும்,
முகமெங்கும்
இந்திய வாடை!
அக்கம்பக்கம் பார்க்க
திரை விலக்கும்
துணிவு
இன்று
பெண்ணின் ஆடை..!

அலைகடல்
உள்ளிருந்து
எழும் கதிர் போல்,
அம்மா ஆடையின்
நிழல் தாண்டி
வரும் குழந்தை போல்,
வரும் சர்வஜித்து,
கவலைகள் களைந்து,
நோய்கள் நசிவுற்று,
கைபடும் நல்காரியம்
யாவும்
நன்றாய் நிறைவுற,
சுபமஸ்து...!

http://groups.google.com/group/anbudan

2 comments:

Anonymous said...

நீங்க அன்புடன் கவிதைப் போட்டில
கலந்துகிட்டீங்களா?? :)

வாழ்த்துக்கள்!

அப்போ அன்புடன் முன்னாலயே தெரியுமா?? :(

நான் தெரியாதோன்னு நெனைச்சேன்..:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை.. நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தி வைத்தார்.. சும்மா இருக்கிறோமே யென்று மூன்று கவிதைகள் அனுப்பி வைத்தேன். வழக்கம் போல் ;-(...