Friday, June 01, 2007

மோகினி.

காலைப் பொழுது பொலபொலவெனப் புலரத் தொடங்கியது.

மேற்கின் மலைத் தொடர்களின் மேனியைத் தழுவி வந்து கொண்டிருந்த காற்று, மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. தீ வதந்தி நாலாபுறமும் பரவுவது போல், கருங்குயிலின் இனிய கூவலொசையோடு, வெண்புள்ளினங்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகளின் கீச்சுகீச்சென்ற உச்சரிப்புகள் அங்குமிங்கும் தாறுமாறாய்க் கேட்டுக் கொண்டிருந்தன. குளிர்ந்த தென்றல் பட்டு, உறக்கத்திலிருந்த தென்னங்கீற்றுகள், தோட்டங்களின் ஆலமரங்களின் பச்சையிலைகள், பசுமை விளைந்திருந்த வயற்காடுகள் தலையாட்டி மகிழ்ந்தன.

தூண்கள் எங்கும் தீப்பந்தங்கள் ஏந்தியிருந்த திவான் அரண்மனை, சுறுசுறுப்பு அடையத் தொடங்கியது. பணி மாறிய வீரர்கள் தூக்கக் கலக்கத்தோடு கலைந்து செல்ல, புதிய வீரர்கள் புத்துணர்வோடு நிற்கத் தொடங்கினர்.அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டை மதிற்சுவரின் மேல், கதிரவன் தன் தங்கக் கிரணங்களை வீசத் தொடங்கினான்.

அந்த அதிகாலை நேரத்திலும், முன்வளாகம் முழுதும் மக்கள் அடைத்தவண்ணம் இருந்தனர்.

"ஏம்பா, காலங்காத்தால நம்மளை எதுக்கு ராசா வரச் சொல்லோணும்..?"

"வேறென்னவா இருக்கப் போவுது? ஏதாவது பிரச்சனைனு சொல்லிட்டு நம்மகிட்ட இன்னும் ஏதாவது பணம் புடுங்க வரச் சொல்லியிருப்பான்.."

"இல்ல.. அவனோட எட்டாவது கல்யாணத்துக்கு நம்மளை எல்லாம் கூப்புட வரச் சொல்லியிருப்பானோ..?"

"இருக்கலாம். யாருக்குத் தெரியும்..? எப்ப வெள்ளைக்காரன் நம்ம நாட்டுல கால் எடுத்து வெச்சானோ, அப்பவே எல்லாம் வெளங்காமப் போச்சு.."

"உஷ்..! மகாராஜா வர்றார். ஏதாவது சொல்லி, அவன் காதுல விழுந்திடப் போகுது..."

வழக்கமான வாழ்த்துக்களோடு, திவான் ரங்கநாத பூபதி முற்றத்துக்குள் வந்தார்.

முடி முதல் அடி வரை இழைத்த தங்க நகைகள், தலையில் கிரீடம், வெண் பட்டு நூலால் நெய்த முன்னங்கி, முத்து மாலைகள், இடையில் தரித்த குறுவாள், உடலுகு முன்னே ஓர் அடி தள்ளி நகர்கின்ற தொப்பையுமாக திவான் உள்ளே வந்தார்.

அருகில் நின்று வணங்கிய கணக்கரைப் பார்த்து, "கணக்கரே..! தாங்கள் படிக்கலாம்.." என்றார்.

கணக்கர் படிக்கலானார்.

"நமது திவான் அவர்களின் நீதியும், நேர்மையும், நிறைந்த நல்லாட்சியின் கீழ் வாழ்கின்ற கொங்கு மண்டலத்தின் முப்பத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்த ஆண்டுக்கான நிலவரி, தானிய வரி, ராஜ்ய வரி ஆகியன மும்மடங்கு உயர்த்தப் படுகின்றது. கோயமுத்தூரில் இருக்கும் ஆங்கில கவர்னர் அவர்களின் சீரான ஆலோசனையின் பேரிலும், நமது திவான் அவர்களின் கூர்மையான அறிவுத் திறமையின் காரணத்தாலும் இந்த விதி உடனே அமலுக்கு வருகின்றது. பாளையக்காரர்கள் இதனை நினைவில் கொண்டு, உடனே நிறைவேற்றித் தர வேண்டியது. மறுத்தால், அவர்களது பாளையம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப் படுகின்றது.

மற்றுமொரு முக்கியச் செய்தி. சேர நாட்டைச் சேர்ந்த கோட்டயம் சம்ஸ்தானத்தின் இளைய அரசி, மாயாமோகினி அவர்கள் நமது தேசத்தின் கோயில்களைக் கண்டு களிக்க வருகிறார். அவர் ஆலய தரிசனம் செய்கையில், பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டியது அந்தந்த பாளையக்காரர்களின் நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

இது நமது திவான் அவர்களின் ஆணை..."

மக்கள் கூட்டம் முணுமுணுப்புடன் கலைந்து சென்றது. பாளையக் காரர்கள் அதிர்ச்சி நிரம்பிய கண்களுடன் சென்றனர்.

பாலக்காடு கணவாய் சில்லென்று இருந்தது. கேரளக் காற்றின் பாய்ச்சலால், வயலில் பூத்திருந்த நெற்கதிர்கள், புதுப் பெண்ணின் குரலுக்கெல்லாம் தலையாட்டும் கணவனாய் போதையில் தலையாட்டிக் கொண்டிருந்தன. மேகம் கலையாத வானின் விளிம்புகளை சூடாக்கிக் கொண்டிருந்தது பகல்.

கணவாய் வழியாக ஐம்பது குதிரை வீரர்கள், ஒரு பல்லக்கு, நுழைந்து கொண்டிருந்தனர். சாலையோரங்களில் இருந்த குடியானவ மக்களை ஒதுக்கி விட முன்னே சென்றனர் இரண்டு வீரர்கள்.

"அம்மணி.. யாராயிருக்கும் இது..?"

"அட.. ராசா சொன்னாராம்ல.. யாரோ இளவரசி வர்றாங்கன்னு.. அவங்களா இருக்குமோ, என்னவோ..?"

"யாராய் இருந்தால் என்ன? இவங்க வந்து நம்ம கோயில், குளமெல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு நாம காசு செலவு பண்ணனுமாமே..?"

"உஷ்..! சத்தமாப் பேசாதீங்க..! அவ காதுல விழுந்திடப் போகுது..!"

அடர்ந்த வனங்கள் நிறைந்த பாதை வழியெங்கும் பயணம் செய்து வந்திருந்த பல்லக்கு, மனித குரல்கள், கேட்டவுடன் தன் திரைகளை விலக்கியது.

திகாலையின் பனித்துகள்களை எல்லாம் உறிந்து, எடுத்துக் கொண்ட சூரியன் அவற்றையெல்லாம் கோர்த்து நெய்த ஆடையாலான வெள்ளைத் திரையை விலக்கியது, ஒரு பொற்கை. சந்தனக் கீற்று என்று சொல்லத்தக்க வகையில் இருந்த அக்கைகளை, வழி தெரியாமல் உள் நுழைந்த வண்டை மூடிக் கொண்டு காக்கின்ற பூவின் இதழ்களைப் போன்று, தங்க வளைகளும், வைரம், முத்து பதித்த மணியாரங்களும், அணைத்துக் கொண்டிருந்தன.

திரையின் இடுக்குகள் வழியே, ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

மேகத்திலிருந்து எட்டிப் பார்த்த முழுநிலா, மூங்கில் காட்டின் வண்டின் துளைகளில் காற்று புகுந்து வெளிப்படுகையில், பரவும் குழலோசை, கம்மென்று வீசும் மல்லிகை மணம், கருக்கல் நேரங்களில் கீழ்த்திசையில் சீறிப் பாய்கின்ற வெண்மின்னல் என்று எப்படி வேண்டுமானாலும், அப் பூமுகத்தை கூறலாம். கவிராயர்களும், விகடகவிகளும், பெரும்புலவர்களும், இலக்கிய சிங்கங்களும் இருந்திருப்பின் இவ்வாறெல்லாம் பாடியிருப்பார்கள். ஆனால் அங்கு இருந்ததோ, முகத்தில் கடுமையும், நெஞ்சில் வீரமும் கொண்ட வீரர்களும், உழைபே வாழ்வாகக் கொண்ட குடியானவர்களும் தான். அதனால், அக்குடியானவர்கள் அந்த அழகிய திருமுகத்தைக் கண்டு வாயடைத்துப் போயினர் என்று சுருக்கமாகநாம் கூறி விடுவோம். மேலும் விரித்துக் கூற, நாமொன்றும் கவிராயர்களோ, விகடகவிகளோ, பெரும்புலவர்களோ, இலக்கிய சிங்கங்களோ இல்லையே..!

கணவாய் வழியாகத் திவானின் அரணமனை நோக்கிச் செகையில் வழியில் உள்ள பாளையக்காரர்களின் பூரணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டு நகர்ந்து செல்கையில், அரண்மனைக்கு வந்து சேர்வதற்கு மாலை வந்து விட்டது.

திவான்,அவரது மனைவியர், மக்கள் யாவரும் திரண்டு வந்து வாசல் நின்று இளவரசியை வரவேற்றனர். இளவரசியின் பேரெழிலைக் கண்டு, திவான் வாயடைத்துப் போனார்.

ஆகா..! இப்பெண் இருபது ஆண்டுகள் முன் பிறந்திருக்கக் கூடாதா? நான் வயதாகியிருக்கும் போது தான் என் கண்ணில் பட வேண்டுமா? வயதானால் என்ன? என்னால் இவளை மணக்க முடியாதா? முடியும். இவள் இப்போது என் இராஜ்ஜியத்தில் இருக்கிறாள். என்னை மீறி என்ன செய்து விட முடியும் இவள்? பார்த்து விடுவோம்.

எண்ணங்கள் இவ்வாறு இருந்தாலும், முகத்தில் பவ்யம் வரவழைத்துக் கொண்டு, இளவரசியை எதிர் கொண்டார், திவான்.

"வரணும்.. வரணும்..! இளவரசி..! தங்கள் வருகையால், இந்த கொங்கு மண்டலமே இன்று பாக்கியம் எய்தது..!" என்றார்.

இளவரசி புன்னகை புரிந்தவாறே, பல்லக்கிலிருந்து இறங்கி, அவர்களை எதிர் கொண்டாள். மெல்லிய அல்லிக் கொடியொன்று, வீசும் மாலையின் இதமான காற்றுக்கு ஆடுவது போல், இளவரசி மென்னடை நடந்து வந்தாள்.

"ஐயா..! எனது அறை எதுவென்று கூறினால், சிரம பரிகாரம் செய்கிறேன். நாளை முதல் இத்தேசம் முழுதும் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து வருவேன்.." என்றாள்.

"அம்மணி..! இவ்வரணமனையின் எப்பகுதியையும் தாங்கள் தங்களுடையதாகக் கருதலாம். எனினும், தங்கள் தனிமைக்காக, வடமேற்கில், உள்ள, விருந்தினர் மண்டபத்தைப் புதுப்பித்துள்ளோம். தாங்கள் அங்கேயே தங்கியிருக்கலாம். எனது பணியாளர்கள் தங்களுக்கு வழிகாட்டுவார்கள்.." என்றார் திவான்.

இள்வரசி, அவளுடைய தோழிகளுடன் திவான் கைகாட்டிய பணியாளர்களுடன் நகர்ந்தாள்.

பாவம், திவானின் உள்ளத்தின் போக்கை அறியாத இளவரசி, அரண்மனையின் பிரம்மாண்ட தூண்களையும், தகதகவென எரிகின்ற தீப்பந்தங்களையும் கண்டவாறு நடந்தாள்.

சிரிப்பாள்.

No comments: