Wednesday, December 19, 2007
திருப்பாவை :: பாடல் இ.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
இரவின் மெல்லிய கரங்கள் தாலாட்டும் நேரம்.
கொட்டிலில் இருந்து தாய்ப்பசுவும், கன்றுகளும் துள்ளி எழுந்து நடக்கத் துவங்குகின்றன. அந்த வைகறைப் பொழுதில் அருகில் இருக்கும் காட்டுக்கு மேயப் போனால், பின் பொங்கிப் பெருகும் பால் கிண்ணங்கள்.
இராதை மேலும் கூறுகின்றாள்.
"விண்ணையும், மண்ணையும் ஈரடியில் அளந்து விட்டு, மூன்றாமடிக்கு முடி சூடிய மன்னன் சிரசைக் கொண்டவன் அந்தப் பெருமான்.அந்த உத்தமன் பேர்பாடி, நாம் நம் பாவை நோன்பு மேற்கொள்ள என்னவெல்லாம் நற்காரியங்கள் நடைபெறும் தெரியுமா?
துளியும் பெய்யாமல் இரக்கமற்றோர் நெஞ்சம் போல் நிலத்தை வறண்டு விடச் செய்யாமலும், அளவின்றி பெய்து பெருமானை நிந்திப்போர் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் போல் நிலத்தை நீர்மயமாக்காமலும், அள்வோடு மாதம் மும்மாரி பெய்யும்.
அதனால் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் நிரம்பியவாறு விளைந்திருக்கும். அந்த வயல்களின் இடையே நீர் தேங்கியிருக்கும். அவற்றுள் மீன்கள் துள்ளி விளையாடும். அத்தகைய நீர்த் தேக்கத்தில், குவளை மலர்கள் பூத்திருக்கும். அந்த குவளை மலர்களின் நிரம்பி வழிந்தோடும் தேனை அருந்துவதற்கு வண்டுகள் அங்கே ரீங்காரமிட்டு இருக்கும்.
அது மட்டுமா?
பசுக்களின் மடி முழுதும் பால் நிறைந்து இருக்கும். அத்தகைய செல்வ நிலையை அடைவோம்.
இந்த நோன்பினால், குறிஞ்சி மலைக் காடுகள் செழிப்பாக விளைந்திருப்பதால், மழை நன்றாகப் பெய்யும். முல்லை நிலக் காடுகளும் அதனால் செழிப்படையும். மருத நில வயல்வெளிகள் பயிரோடு நிறைந்திருப்பதால், இந்த வயல்வெளிகளின் தெய்வங்களான பசுக்கள் மடியோடு மனமும் நிறைந்து பால் கொடுக்கும். அத்தோடு நெய்தல் நிலச் செல்வங்களான மீன்களும் துள்ளியாடும்."
...(தொடரும்)
DISC ::
இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment