Monday, December 17, 2007

திருப்பாவை :: பாடல் அ.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!


மெல்லப் பனி பெய்து கொண்டிருக்கின்றது.

பச்சை இலைகளால் தன்னை மூடிக் கொண்டிருந்த பல விருட்சங்களும் குளிர் தாங்காமல் இன்னும் தம்மை இறுக்கிக் கொள்கின்றன. அந்த சலசல்ப்பில் விழித்துக் கொண்ட சின்னச் சின்னக் குஞ்சுகளைத் தாய்ப் பறவை தம் சிறகுகளால் அணைத்துக் கொள்கிறது.

அந்த தாயின் கணகணப்பில் இன்னும் சுகமாக பறவைக் குஞ்சுகள் சுகமாக உறங்கத் தொடஙுகின்றன.

கரும்பச்சை இலைகளின் நரம்புகளின் மீதெல்லாம் நனைத்தவாறு உருண்டு, புரண்டு, ஓடி கீழே விழுகின்றன பனித் துகள்கள்.

சற்று தொலைவில் யமுனை நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அக்கரையிலும் இக்கரையிலுமாக மினுக்கிக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் நிழலைத் தன் ஆடையாக அணிந்து கொண்டிருக்கின்றது. காற்றில் அசைந்தாடுகின்ற அந்த மஞ்சள் தழல்களின் அசைவைத் தன் மேல் அணிந்து கொண்டது மட்டிலும் திருப்தியுறாத யமுனை, மேலே பார்க்கின்றது.

பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் மேனியெங்கும் சிணுங்கிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான, பல கோடிக்கணக்கான வெண் வைரப் பொறிகளை அள்ளி தன் மேல் வாரி இறைத்துக் கொண்டது, யமுனை நதி.

மஞ்சள் சரிகை மேல் பொறித்த கண்ணாடித் துகள்கள் போல் வண்ண ஆடை அணிந்த பின் தான் நதி பெரு மகிழ்வெய்தியது. அந்த பேரழகை தன் தாயான கடலன்னையிடம் காட்டிட வேண்டும் என்ற பேராவலோடு, நகர்ந்தது.

அதன் கவலை அதற்கு..! இன்னும் சற்று நேரம் சென்றால், அவளது மனம் கவர்ந்த காதலனான கதிரவன் வந்து விடுவான். இவள் இவ்வளவு நேரம் அணிந்து அழகு பார்த்த இந்தப் பேரெழிலான ஆடையை அகற்றி விடுவான். நாணமடைகின்ற நதிப்பெண் என்ன செய்வாள்? அந்தக் கதிரவனின் செந்நிறத்தைத் தான் பூசிக் கொள்ள வேண்டும்.

அத்தோடு விடுவானா அவன்? அவளது நாணத்தைக் கண்டு பெருமிதம் கொள்வதோடு விட்டு விடுகிறானா, என்ன? இல்லையே! அவளுக்கு நாணத்தைத் தந்தவனே, அதை எடுத்துக் கொள்கிறான். பின் அந்த பேதைப்பெண் என்ன தான் செய்ய முடியும்? தனது ஆவியோடு கலந்த நாயகனை ஆவிரூபமாகச் சென்று அடைகின்றாள்.

கல்பகாலமாக நடந்து வருகின்ற இந்த காதல் நாடகத்தை எண்ணி, எண்ணி ஆயர்பாடிக் கரையின் யமுனைப் பெண் புன்முறுவல் பூத்தவாறு நகர்ந்து செல்கின்றாள்.

ஆயர்பாடி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அங்கே நடக்கும் நாடகங்கள் தாம் எத்தனை?

ண்ணனின் நினைவாகவே வாழ்கின்ற இராதையின் கண்களில் உறக்கம் சிறிதும் இல்லை. அவளது எண்ணமெங்கும் நிறைந்து வழிவது கண்ணனின் நினைவுகளே! அவனோடு விளையாடிய கணங்கள், அவனது கைகளைப் பற்றி யமுனை நதியில் குதித்துக் கும்மாளமிட்ட நேரங்கள், அந்த மாயவனின் கரு நிறத்து விரல்களைப் பிடித்துக் கொண்டு காட்டில் சிறுவயதில் ஆடுமாடுகளோடு அருகில் அமர்ந்திருந்த காலங்கள், அந்த மாதவனின் செந்நிற இதழ்கள் தடவித் தடவி அவன் மூச்சுக் காற்றை நிரப்பி நிரப்பி தன்னை வெளிப்படுத்தும் குழலின் நாதம் கேட்டுக் கொண்டு பேரானந்தப் பெருவெளியில் கரைந்து போனது...

என்று எத்தனை நினைவுகள்..!

எப்படி அவளுக்கு உறக்கம் வரும்? அவள் கண் திறந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த மாயக் கண்ணனின் திருவுருவம் அல்லவோ வந்து நிற்கின்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்வெளிகள் அவனது 'பச்சை மாமலை போல் மேனி'யை அல்லவா காட்டுகின்றது? சலசலத்து ஓடுகின்ற நதியும், அகண்டு விரிந்துள்ள வானமும் அவனது நீலவண்ணத்தை அல்லவா நினைவூட்டுகின்றது? மேற்றிசையில் வந்து சூழ்கின்ற கருவண்ண முகில்கள் மட்டும் சும்மாவா செல்கின்றது? அவனது சுருள் சுருளான கருங்குழலை அல்லவா சொல்லிச் செல்கின்றது?

எதுவும் காண வேண்டாம் என்று கண்களை மூடிப் படுத்தாலோ, அந்த மாயன் சும்மா விடுகின்றானா? அவளது கண்களுக்குள்ளும் வந்து காதல் புரிகின்றானே, அவள் என்ன செய்வாள்?

இருந்தாலும் குடும்பத்தினர் கவலையுறுவரே என்று உறங்குபவள் போல் நடிக்கின்றாள்.

அவளது குடும்பத்தினர் மட்டும் அவளை, அவள் நிலையை அறியாரா? அவர்களும் அதனை அறியாதது போல் நடிக்கின்றனர்.

அது மட்டுமா? ஆயர்பாடியுள் இருக்கும் ஒவ்வொருவரும் இத்தகைய நாடகம் அல்லவா நடித்து வருகின்றனர்.

த்தகைய ஒரு மார்கழி மாதம்.

சிலுசிலுக்கின்ற ஈரக்காற்றின் ஊடாக ஒரு மெல்லிய ஆடையாக பாய்ந்து பொழிந்து கொண்டிருக்கின்றது வெண்ணிலா. தன் அமுதக் கிரணங்களால், யமுனை நதியை அந்தப் பரமன் உறையும் பாற்கடல் போலவே வெண்மையாக்கிக் காட்டுகின்றது. பரந்தாமனின் பேரன்பில் நனைந்த அடியவர்களது முகத்தில் ஜொலிக்கின்ற தேஜஸ் போல் வெண்ணிலா நிறைந்த வான்.

அத்தகைய ஒரு நன்னாள் இது.

இன்றைய அதிகாலை நேரத்தில், இராதை எழுந்து விட்டாள். தனது மனையின் கதவுகளை மெல்ல அணைத்து விட்டு வெளியே வருகின்றாள்.

சென்ற இரவில் பேசிக் கொண்ட படி தோழிகள் வந்திருப்பார்கள் என்று பொதுவிடம் சென்று பார்க்கின்றாள். அந்தோ! பேரிரவின் ஒற்றை வெண்ணிலா போலவும், பெரும் பகலின் ஒற்றைக் கதிரைப் போலவும், தோட்டத்தின் மரங்களின் இடையில் ஊடுறுவி வருகின்ற குளிர்க்காற்றுக்குத் துணையாகத் தனிமையாக அவள் மட்டும் நிற்கின்றாள்.

ஒவ்வொருவரின் மனையாகச் சென்று அழைக்க முடிவெடுக்கிறாள்.

பாடுகிறாள்.

" செல்வம் கொழிக்கின்ற ஆய்பாடியின் சிறுமிகளே! கண்ணனின் நினைவைச் சுமந்து சுமந்து கவலையில் சோர்வுற்றதால், கைகளில் இருந்து கழன்று விழுந்து விட்ட கருவளையங்களை எடுத்து கண்களைச் சுற்றி அணிந்து கொண்ட இளம் கன்னியரே! வாருங்கள் நீராடச் செல்வோம்.

பசுமாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் காமதேனுவைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனின் செல்வக் குமாரனும், தன் மகனைப் போன்றே நிறம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்களைச் சுற்றி மையிட்டு மையிட்டு கருவிழிகளைப் பெற்ற யசோதையின் இளம் மகன் அந்தக் கண்ணன்.

அவனது மேனி எத்தகையது? பொழியப் பொழியத் தீராத கருமுகில் போன்ற நிறத்தது அவன் மேனி. அவன் கண்களோ சிவந்த நிறமுடையது. அவன் கண்கள் எதனால் அப்படிச் சிவந்து போயிற்று? நீங்கள் அறிவீர்களா?

ஒருமுறை நமது ஆடைகளை அவன் எடுத்துக் கொண்டு நம்மிடம் விளையாடினானே? அப்போது கூச்சத்தால் நாம் நாணி நின்றோமே , அந்த நமது நாணம் தான் அப்படி அவன் கண்களில் அப்பிக் கொண்டது.

அவன் முகமோ மதிய நேரத்தில் நகர்ந்து வருகின்ற கதிரைப் போன்றது. அத்தகைய ஜொலிப்பும், தேஜஸும் ஒளிர்கின்ற தெய்வீக முகம் அது.

அந்தக் கண்ணன் வேறு யாருமல்ல. பாற்கடலின் அலைகளின் மேல் படுத்துக் கொண்டு அலகிலா விளையாட்டு ஆடுகின்ற நாராயணனே!

அவனே நமக்கு வாழ்வும், வளமும் தருவான். வாருங்கள் இந்த உலகத்தில் உள்ளோர் எல்லோரும் உணர்ந்து கொள்ள பாடிப் பரவுவோம்..!"

...(தொடரும்)

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

No comments: