Thursday, January 10, 2008

சேர நாட்டுப் பொழுதுகள் - 2.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் ஏற, காலை 8:20க்கு கிளம்பிய இரயில் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு வந்து (இதுவரை நான் பார்த்தேயிராத நெல்லை, நாகர்கோயில் வழியாக) கேரள் எல்லையை அடைந்து ஒரு நிறுத்தத்தில் (நெய்யாற்றின்கரா) நிற்கையில், தொடங்கியது சிலுசிலுப்பான ஒரு பயணம்.

பின் ஒரு விடுதியைத் தேடிப் பிடித்து (இரவு 11:30) இரவு தங்கி, பிறகு வீடு பிடித்து ஒரு வழியாகச் செட்டில் ஆகி, இப்போது இந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக மொழிப் பிரச்னை இங்கு இல்லை என்றே படுகிறது. அனைவர்க்கும் தமிழ் புரிகின்றது. மலையாளத்தில் பிறர் பேசினாலும் முக்கால்வாசி புரிந்து விடுகின்றது. கொஞ்சம் ஆங்காங்கே கேப் விழுகின்றது. அதை நானே நிரப்பிக் கொள்கிறேன்.கடைகளிலோ, பேருந்துகளில் செல்கையிலோ எந்தத் தொல்லையும் இல்லை.



பேருந்துகள் எல்லாம் ஒரு பேருந்து, ஒரு வாசல் என்ற கணக்காக ஒரு வாசல் மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது மற்றொரு வாசலையும் திறந்து இறக்குகிறார்கள். பெரும்பாலும் டிராவல் வண்டி போல் 3+2 என்ற வரிசைகள் அமைந்திருப்பதால், ஏறி, இறங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாய் தான் இருக்கிறது.

உணவைப் பொறுத்தவரை நாம் தான் கேட்டுப் பெற வேண்டும். சிலசமயம் மஞ்சள் குண்டு அரிசி, அல்லது வெண் அரிசியே குண்டான ரூபத்தில் அல்லது நாம் உண்ணும் சாதாரண அரிசி என்று பல வகைகளில் கிடைக்கிறது. இன்னொன்று, தோசை மட்டுமே கிடைக்கிறது. இட்லி கண்ணிலேயே தெரிய மாட்டேன் என்கிறது. தொட்டுக்கொள்ள நாம் எதுவும் சொல்லவில்லையென்றால் மீன் குருமா கண்டிப்பாக கிடைக்கும், அஃப்கோர்ஸ் நான் - வெஜ் ஓட்டலில் தான்! வெஜ் என்றால் சுண்டல் குருமா! எதுவானாலும் தேங்காய் அள்ளி, அள்ளிப் போடுகிறார்கள்.

நான் போய்ச் சேர்ந்த அன்று தான் 'ஃபிலிம் ஃபெஸ்டிவல்' தொடங்கி இருந்தது. டைம் இல்லாததாலும் (ஆமா..!) வீடு பார்க்க வேண்டியதாலும் அதை மிஸ் பண்ணி விட்டதாக இப்போது உணர்கிறேன்.

No comments: