Sunday, January 06, 2008

மஞ்சள் நதிக்கரை.



ரமான பொன் துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

தங்க வாட்கள் எடுத்து வீசி, வீசி விளையாடிக் கொண்டிருக்கின்றது சூரியன். மேகங்களின் கர் மேனிகளுக்குள் நுழைந்து, தகதகச் செய்கின்ற கிரணங்கள், தமது சூட்டைத் தணித்துக் கொள்ள நதியின் அலைகளின் மேல் பாய்கின்றன.

என்ன விந்தை..! செம்புலப் பெயல் நீராகச் சிவந்திருக்கின்ற நீர்த்துளிகள், இன்னும் பொன்னிறம் பெற்று மினுமினுக்கின்றன.

தூரத்தில் பறந்து கொண்டிருக்கின்ற பறவைகள் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டி விரைகின்றன. ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு தம்மை அணைத்துக் கொண்டிருந்த கதிரவன் மெல்ல மெல்ல இரவின் பெரும் போர்வைக்குள் மறைவதால் விடுபட்ட மேகக் கன்னிகள், கூடிக் கூடிப் பேசிக் கொண்டு கலைகின்றன.

இன்னும் வராத சின்னச் சின்ன மீன்களின் ஒளி தீண்டும் எல்லைக்குள் நாம் அமர்ந்திருக்கிறோம்.

கரும்பச்சைக் காடுகளின் நெருக்கமான இருளில் இருந்து நாம் விடுபட்டு, சிறிது நேரத்திற்குள் மறையப் போகின்ற கதிரின் மென் சூட்டின் அணைப்பில்...!

மஞ்சள் அலைகள் வந்து வந்து தீண்டுகின்ற கரையோரம் நம்மோடு தென்றலும், நம் காதலும்..!

சிலிசிலுவென அடிக்கத் துவங்குகின்றது மென் தென்றல். அதன் குளிரில் ஆடத் தொடங்கிய நாணல் புதர்கள் இன்னும் நம்மைத் தீண்டாத உணர்வுகளைத் தொட்டு எழுப்பி அசைகின்றன.

இன்னும் நெருங்கி வந்து இதழ் சேர்கையில், மெல்ல மூடுகின்றது நாணம் எனும் மாய வலை கண்களை.!

மறைகின்ற மென் பொன் வெயிலின் கரங்கள் வெப்பம் ஆக்கும் மற்றுமொரு நம்மை..!

No comments: