Saturday, January 12, 2008

சுவாமிஜி.



ன்று சுவாமிஜி விவேகானந்தரின் பிறந்த தினம்.



நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு சேர்வதற்காக எங்கள் ஊரில் பள்ளியைத் தேடியதில், இடமில்லை என்று சொல்லப்பட்ட பள்ளிகளில் ஒன்று 'சுவாமி விவேகானந்தா துவக்கப் பள்ளி'. பின் வேறொரு பள்ளியில் சேர்ந்தேன். இப்படித் தான் முதன்முதலில் (அசந்தர்ப்பமாக)சுவாமிஜியின் பெயர் அறிமுகமானது.

என் சகோதரருக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்தது. அவ்வப்போது அவருக்குக் கொடுக்கும் புத்தகங்களில் ஒன்று நானும் படித்தேன். (நமது புத்தகப் பைத்தியந்தான் இங்கேயே சொல்லி இருக்கிறதே..!). 'சிறுவர்களுக்கான விவேகானந்தர்'. அவரது வாழ்வில் சிறு வயதில் செய்த குறும்புகள், தியான வாழ்வு, இரக்க மற்றும் தைரிய நிகழ்வுகள் என்று சிறுவர்களுக்கு பிடித்தவற்றைக் கூறி இருந்தார்கள்.

த்தாம் வகுப்பு முடிந்து, பரிசு கொடுத்த வைபவத்தில், நான் ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கூறினேன். 'என்ன இந்த புக் இவ்ளோ தடியா இருக்கு. யார் தலையில் கட்டப் போகிறார்களோ' என்று. கடைசியில் கிட்டியது(ஐயோ.. மலையாளம்..!) என் தலை...!

இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான 'சுவாமி விவேகானந்தர்'. ஆசிரியர் ரா.கணபதி அவர்கள்.

சில நாட்களிலேயே இரவெல்லாம் விழித்துப் படித்து முடிக்கையில் இவரை மிகவும் அருகில் இருந்துப் பார்த்து, வாழ்ந்தது போன்ற உணர்வு கிடைத்தது உண்மை.

பிறகு எங்கள் ஊர்க் கோயிலுக்குச் சென்று வரும் போதெல்லாம் மடத்தின் சின்னச் சின்ன வெளியீடுகள் (2 ரூபாய், 4 ரூபாய் விலை) வாங்கி வந்து படிப்பது வழமையாகிப் போனது.

சென்னை வந்த பின், அவ்வப்போது மயிலை சென்று கபாலியைக் கண்டு வருகையில் மடத்தையும் சென்று பார்த்து விட்டு வருவேன். அங்கும் சும்மா இல்லாமல் புத்தக வரிசை ஆரம்பித்தது. அங்கு வாங்கிய 'கைலாஷ் யாத்திரை' என்ற சி.டி... சொல்லக் கூடாது சார்.. அந்த உணர்வை நீங்கள் அனுபவித்தால் தான் தெரியும்.

இமயத்தின் பிரம்மாணடமும், அந்த வெள்ளைப் பனி மலையில் படர்ந்திருக்கும் ஆன்மீகமும், இமயம் மீதான அன்பை மேலும் வளர்த்துக் கொள்ள இந்த சி.டி. உதவியது. (இன்று பாரதத்தின் தென் முனையில் இருந்தாலும் என்றாவது அந்த பத்ரிகேஸ்வரனின் தரிசனம் பெற வேண்டும் என்பது உள் அவா.)

No comments: