Wednesday, February 20, 2008

அந்த மோக்ளி என்ன ஆனான்...?

டந்த கால் நூற்றாண்டு மனித வரலாற்றிலோ, மானுட சகாப்தத்திலோ வியக்கத்தக்க மாறுதல்களை கொண்டு வந்ததோ என்னவோ, எனக்கு ஒரு முக்கியமான காலகட்டம் தான். அட, நான் பிறந்து வளர்ந்த குழந்தைப் பருவமும், சிறுவன் காலமும் எனக்கு மிக முக்கியம் இல்லையா? அதைத் தான் கூறினேன்.

எத்தனை எத்தனை சம்பவங்கள்...! எத்தனை எத்தனை நிகழ்வுகள்..! எல்லாவற்றையும் காலக் கரையான் அரித்துக் கரைக்கும் முன் ஓரளவாவது நினைவுக்குக் கொண்டு வந்து பதிவு செய்வது, 'பின்னாடி வர்ற சந்ததிகள் பார்த்து தெளிவா புரிஞ்சு நடந்துக்குவாங்க' என்ற அக்கறையில் என்று இங்கு அவ்வப்போது எழுத நினைக்கிறேன்.

'ஆமா, இவரு பெரிய இவரு.. இவர் சொந்தக் கதை எல்லார்க்கும் தெரியணுமாக்கும்' என்று நினைப்பவர்கள் அப்படியே ஓடி விடவும். யாருக்குத் தெரியும், பிற்காலத்தில் 'உங்கள் வாழக்கை வரலாறு எழுத வேண்டும்' என்று ஏதேனும் சிறு பெண், மைக், காமிராவுடன் வந்து, சாய் நாற்காலியில் சாய்ந்து, பேரன், பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் என்னை வந்து கேட்டால், அவளிடம் சொல்வதற்கும் எனக்கு ஞாபகம் இருக்குமா என்ன? அதற்காக என்று வைத்துக் கொள்ளலாமே!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையெத்தனையோ நடந்திருக்கும். அவை அப்படியப்படியே மனதின் அடியாழத்தில் புதைந்து கொண்டிருக்கும். இன்றைய தினப்படி நாட்களில் நாளின் பெரும்பாலான காலம் கணிப்பொறியின் முகத்தைப் பார்த்தே கழிந்து கொண்டிருக்கின்றது. 'நான் இப்படி இருந்தவன் இல்லையே' என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், ' வால் பையனாக' சுற்றிக் கொண்டிருந்த காலங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

பெரும்பாலும் யாருடைய பெயரையும், அடையாளத்தையும் மறைத்தே சொல்ல விழைகிறேன். எதற்கு வீணாகப் பொல்லாப்பு? என்னைத் தெரியாதவர்களுக்கு அவர்கள் முகம் தெரியாத மனிதர்கள். என்னை அறிந்தவர்களுக்கு அவர்கள் யாரென்று தெரியும். எனவே தான்..!

மற்றபடி உங்கள் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை சுவாரஸ்யமான, சோகமான, கோபமான, நெகிழத்தக்க அத்தனையும் என் நாட்களிலும் நிகழ்ந்துள்ளன. அவற்றைப் பகிர்தலே இதன் நோக்கம். மறைக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் கண்டிப்பாக மறைக்கப்படும். நான் ஒன்றும் காந்தி இல்லை. சுவாரஸ்யமான 'பகிர்ந்து கொள்ளலாம், தற்/பிற் காலங்களில் எனக்கும், யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது' என்று நான் நம்பும் விஷயங்கள் மட்டும் வெளி வரும்.

எவ்விதமான காலக் கணக்கும் வைத்துக் கொள்ளாமல், ஒரு வரிசை இல்லாமல் நினைவுக்கு வரும் போது வரிசைப்படுத்தலே சுவாரஸ்யமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

காவிரிக் கரையோரம் ஒரு வளப்பமான டவுனில், பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவன் அவ்வப்போது வந்து அவன் கதையைக் கூறுவான். நானும் ஓரமாய் அமர்ந்து உங்களோடு அவன் கதையைக் கேட்கிறேன்.

த்தாவது வரைக்கும் எங்க வீட்டில டி.வி. இல்லை. ஏதாச்சு பாக்கணும்னா பக்கத்தில இருக்கற சித்தப்பா வீட்டுக்கோ, இல்ல ரேவதிக்கா வீட்டுக்கோ தான் போகணும். தீவாளி, பொங்கல் சமயமுன்னா அத்த வீட்டுக்குப் போய்க் கறிக் கொழம்போட இல்லனா கரும்பு ஒடச்சுத் தின்னுகிட்டு பட்டிமன்றம், பேட்டினு பாத்துட்டு வீட்டுக்கு வர வேண்டியது.

சனிக்கெழமயினா பக்கத்துல கொமாரபாளயத்துக்கு எங்க பெரீமா வீட்டுக்குப் போய்ட்டு ஞாயித்துக் கிழமை சாயந்திரம் படம் முடிஞ்சு தான் வீட்டுக்கு வருவோம். அவங்க வீட்டுல தான் Dyanora டி.வி.இருக்குதே. சனிக்கெழம சாயங்காலம் இந்திப் படம் பாப்போம். அப்புறம் அடுத்தா நா காலயில ராகிக் கஞ்சி குடிக்க (எங்கக்கா நல்லா செய்வாங்க. எங்கம்மா அந்த மாரி செஞ்சு தர மாட்டேங்கறாங்க.)

காலைய்ல ஏழு மணிக்கு கரெக்டா ஜங்கிள் புக் பாப்போம். எப்படியாவது எழுந்திருச்சு பாத்திடுவோம். மோக்லி தான் எங்க ஹீரோ. அப்புறம் மத்தியானம் க்ரெக்டா சாப்புடப் போகும் போது மாநில மொழித் திரைப்படம்னு ஏதாவது ஒரு பாஷையில படம் போடுவாங்க. கீழயே இங்கிலீஷ்ல வேற எழுத்து ஓடிக்கிட்டு இருக்கும். படமும் புரியாது. எழுத்தும் மண்டையில ஏறாது. இருந்தாலும் சாப்புடற வரைக்கும் அதை தான் பாப்போம். அப்புறம் தூங்கிடுவோம்.

சாயந்திரம் எழுந்திருச்சா காபி இல்லனா டீ மிக்சரோட படம் பாத்துட்டு ஏழு இல்ல எட்டு மணிக்கு வீட்டுக்கு சைக்கிளலயோ இல்ல பஸ்ஸுலயோ காவிரி ஆத்த தாண்டி வந்திடுவோம். சோகமா படுத்து தூங்குவோம். அடுத்தா நா ஸ்கூலுக்குப் போகணுமே!

அப்புறம் தலைவர் ஃபேன் ஆனதுக்கப்புறம், வெள்ளிக் கெழம சாயங்காலம் எப்படா தலைவர் பாட்டு போடுவாங்கனு பாத்துக்கிட்டே இருப்பேன். சில சமயம் போடுவாங்க. சில சமயம் இருக்காது. கமல் பாட்டு போடுவாங்க. எந்திரிச்சு வெளிய போயிடுவம்ல..!

சில நாள்ல திடீர்னு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. அப்பல்லாம் என்ன பாக்கறதுனே தெரியாது. டி.வி.ல ஏதாவது இந்தியில பேசிக்கிட்டே இருப்பாங்க. அதயே பாக்க வேண்டியது தான்.

தளபதி படத்துல தலைவர் திரும்புறாப்ல ஒரு போஸ் குடுப்பார்ல. அத பொங்கல் வாழ்த்தா வாங்கறதுக்குள்ள செம ரகளையாகிப் போச்சு. எல்லா படமும் சீக்கிரமே வித்துப் போயிடும். மத்தவங்க பொங்கல் வாழ்த்தெல்லாம் அப்படியே இருக்கும். ஆர்.எஸ்.பி. பக்கத்துல ஒரு கட்டில் கடயில தான் கடசியில கெடச்சுது. யாருக்கும் அனுப்ப மாட்டேன். வாங்கி வாங்கி நானே வெச்சுக்குவேன்.

2 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
மோக்ளியின் அறிமுகம் கிடைத்தது.நான் மோக்ளி ஷோ பார்த்ததில்லை..ஆனால் அறிந்திருக்கிறேன் அவனை(ரை)ப் பற்றி...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள்.

மோக்ளி பல இந்தியக் குழந்தைகளின் கனவு நண்பன்.