Tuesday, February 19, 2008

ஒதுங்கிக் கொள்வது நன்று!

விகடனில் வந்த ஜெயமோகன் அவர்களின் பதிவைப் பற்றிய கட்டுரையைப் பற்றி எழுதாவிட்டால், அது தமிழ் வலைஞரின் இலக்கணம் ஆகாது என்பதால் இப்பதிவு.

அக்கட்டுரையை வாசித்ததோடு சரி. பிறகு ஜெயமோகன் அவர்களின் வலைக்குச் சென்று மீதத்தையும், மீதக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது. எனவே இது விகடனில் படித்ததன் பேரில் எழும் விளைவு மட்டுமே.

அவர்களது ஊரில் இவர்களைப் பற்றி எப்படியெல்லாம் பேசிக் கொண்டார்கள் என்பதைப் பற்றி மட்டும் கூறியுள்ளார். வேறு ஏதேனும் ஊரிலும் இவரைப் பற்றி தரக்குறைவாக கூறலாம். அதையும் இவர் பதிவு செய்வாரா? நேற்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இவர்களைப் பற்றிய பதிவுகள் நிச்சயம் நல்லதாகவே இருக்கும். ஜெ கூறியுள்ளதைப் போல் வெறி ரசிகர்கள் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.

நாம் இவர்களின் படங்களில் இருந்து ஏதேனும் நன்மை இருக்குமானால், அதனை எடுத்துக் கொள்வோமானால் அது நன்மை பயக்கும். மாறாக பொது வாழ்வில் உள்ளவர்கள் பற்றி வருகின்ற ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பதிவு செய்வதால் யாருக்கும் எவ்விதமான பலனும் இருக்கப் போவதில்லை. அது மஞ்சள் பத்திரிக்கைகளின் விற்பனைத் தந்திரம். அவர்களிடமும் ஆதாரம் ஏதேனும், அந்த வதந்திகளை ருசுப்படுத்த இருக்குமா என்றால், இருக்காது.



உற்சாகம் ஊட்டக் கூடிய பாடல்களையும், வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைத் தன் படங்களில் பயன்படுத்தியதன் மூலம் பார்ப்பவர்களுக்குப் பயன் தந்தார் எம்.ஜி.ஆர். அவர் அதனை ரசிகர் குழாம் கூட்டவும், பின் கட்சி தொடங்குகையில் ஓட்டுப் பொட்டலம் கட்டவும் பயன்படுத்தினார் என்று கூறுபவர்கள் கவனிக்கவும். அப்படி மக்கள் கூட்டத்தைக் கவர்வது தான் இவரது குறிக்கோளாக இருந்திருக்குமானால், கவர்ச்சி நடிகைகளை ஆட விட்டு, 'மஞ்சள் தேய்க்கவா, மஞ்சத்தில் பூசவா' என்று பாடல்களை ஓட விட்டிருக்கலாம்.

இல்லையே! எத்தனை தத்துவமான பாடல்கள், அறிவுரைப் பாடல்கள்.! அவற்றை அவர் தன் வாழ்வில் பயன்படுத்தினாரா என்பது எனக்குத் தெரியாது! நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே! சுவர் அறிய வேண்டியதில்லை சுவரொட்டியின் வாசகங்கள்!

ஒருவரது உடல் நிலையை வைத்து அவரை எடை போடுவது எப்படி சரியான அளவீடாக இருக்க முடியும்? குண்டடி படுவதற்கு முன் அவரது குரல் நன்றாகத் தானே இருந்தது. பிறகு ஏற்பட்ட நிகழ்விற்குப் பின் உடல் நிலை மாற்றமடைந்தாலும் செயல்பாடுகளில் மாற்றம் ஏதேனும் இருந்ததா?

அவ்வப்போது படிக்கின்ற துணுக்குகளில் எம்.ஜி.ஆர். அவர்களின் தயாள குணமும், பரோபகார பண்பும், தெரிய வந்து கொண்டிருக்கின்றது. இதெல்லாம் எப்போது செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின் உதவி பெற்றவர் கூறும் போது தானே தெரிய வருகிறது.

தன்னைக் காண மலையாளி எவரேனும் வரின், அவரிடம் மலையாளத்தில் பேசுபவர், வேறு யாரேனும் தமிழர் அறைக்குள் நுழைய தமிழுக்குத் தாவி விடுவாராம். ஏனெனில் வருபவர் மனம் கோணி விடக் கூடாதெனவும், முக்கியமாக மூவருக்கும் புரியும் மொழியில் பேசுவது தான் நன்று என்றும் அந்த படிக்காத மேதைக்குத் தெரிந்திருக்கிறது. இப்பண்பைப் பற்றி எழுதுவார்களா? மாட்டார்கள்.



சிவாஜி அவர்களது நடிப்பு ஓவர் ஆக்ட் என்பவர்கள், அவர் நாடக உலகில் இருந்து வந்தவர் என்பதும், அவர் ஏற்று நடித்த வேடங்கள் அத்தகைய நடிப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்தன என்பதையும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

சிவாஜியை 'நடிப்பின் இலக்கணம்' என்று கூறுகிறார்கள். அந்தளவுக்கு ஒப்பிட எனக்குத் தெரியாது. நான் பார்த்த சில படங்களிலேயே எனக்குப் பிடித்து விட்ட நடிப்பு அவரது! குறிப்பாக அவரது பிற்காலப் படங்கள். தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை..!

தங்கை மணமாகிச் செல்ல காத்திருக்கையில் பாடுவது என்னய்யா தவறு? எல்லார் வீட்டிலும் மனதிற்குள் அழுவார்கள். மனதில் அழுவதை திரையில் காட்டவும் பாடல் தேவை.

இன்னும் நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று இல்லை. தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரியும்.

ந்த எழுத்தாளருடைய எழுத்துக்களை நான் படித்ததில்லை. படித்து, அவருடைய படைப்புகளை வைத்து மட்டுமே அவரைப் பற்றி நான் கூற முடியும். மற்றப்டி இவர் கண்ணாடி போட்டுள்ளார், 'சுத்த கண்ணு தெரியாத கபோதி' என்று எங்கள் தெருமுனைக் கூட்டத்தில் கதைப்பார்கள் என்று நான் எழுதினால், அது அவரைப் பற்றிய நல்ல பதிவாய் இருக்க முடியுமா? இது தான் நீங்கள் உங்களைப் பற்றி வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறீர்களா?

அன்னம் தண்ணிப்பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளுமாம். பன்னி இலை நிறைய சாப்பாடு போட்டாலும் எதையோ தேடி ஓடுமாம். என்ன செய்ய, அவையவை பழக்கம் அப்படி! நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒதுங்கிப் போய் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவது தான், நம் மீது சேறு படாமல் தப்பிக்கும் முறை. மாறாக அறிவுரை சொல்லக் கிளம்பினால் நம்மேலும் பாயும்!

தேவையா நமக்கு?

சத்தமாய்ப் பேசும் சக்கைகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். சத்துக்கள் மட்டுமே சவுக்கியமாய் வாழும்....!

2 comments:

PPattian said...

//சத்தமாய்ப் பேசும் சக்கைகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். சத்துக்கள் மட்டுமே சவுக்கியமாய் வாழும்....!//

செம்ம பன்ச்சு.. ரோபொவில ரஜினிக்கு பரிந்துரைக்கலாம்..

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் ஐயா... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு...!