Saturday, February 23, 2008

மோக்ளியின் ஷா - இன் -ஷா.றடிக்குக் கொஞ்சம் குறைவான உயரம். கறுப்பு நிறம். காற்றில் பரபரக்கின்ற முடி. சின்னச் சின்னதாய் இரு கண்கள். பார்ப்பவர்களை அப்படியே வசீகரித்துக் கொள்கின்ற முகராசி.

இந்த மனிதரிடம் அப்படி என்ன ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று மோக்ளி மயங்கினான்?

முதலில் இது போன்ற எந்த திரை நடிகர்க்கும் இரசிகனாய் இல்லாமல் தான் இருந்தான். அவன் திரைப்படங்கள் பார்ப்பதே மிகவும் அரிது என்பதால், இதில் விசிறியாய் இருப்பதெற்கெல்லாம் அவனுக்குத் தெரியாமல் இருந்தது.அவ்வப்போது செல்லும் உறவினர் வீடுகளில் இருக்கும் அவன் வயதையொத்த சிறுவர்கள் பைத்தியமாய் இருப்பதைக் கண்டு தான் அவனும் மயக்கம் கொள்ள ஆரம்பித்தான்.

அவனுக்குக் கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த காலங்களில் வீடியோ, டெக், கேசட் எடுத்துப் பார்த்த ராஜாதி ராஜா தான் அவனை முழுதும் அவர் பக்கம் திரும்ப வைத்தது எனலாம். எல்லோரும் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' தான் முழுமையான கமர்ஷியல் படம் என்று சொல்லிக் கொள்வார்கள். அது எந்த அளவுகோலில் என்று அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை 'ராஜாதி ராஜா' தான் சரியான கமர்ஷியல் படம்.

நாகரீக இளைஞன், கிராமத்து இளைஞன் (ஏ சென்டர், பி & சி சென்டர் இரண்டையும் கவர் செய்தல்), ஏமாற்றி விட்ட சொந்தக்காரர்களிடம் இருந்து சொத்தை மீட்க வேஷம் போட்டு வெற்றி பெறும் என்றும் பசுமை எம்.ஜி.ஆர். பார்முலா (நடுத்தர வர்க்கம் கவர்தல்), கோழையான இளைஞன் மாமா பெண்ணால் வீரனாய் மாறுவது (உள்ளிருக்கும் வீரத்தை உசுப்பி விடுதல் என்ற வகையில் இளைஞர்களையும், துறுதுறுவென இருக்கும் நதியாவால் பெண்களையும்..) எல்லவற்றிற்கும் மேலாக படம் முழுதும் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகளால் எல்லாரையும் ஈர்க்கும் வகையில் வந்த இப்படம் தான் அவனை பரம விசிறியாக்கச் செய்தது.

இது வளர்ந்து திருவிழாக் காலங்களில், கேசட் எடுத்துப் பார்க்கையில், தியேட்டருக்குச் செல்கையில் என்று தேடித் தேடிப் பார்த்த ராஜா சின்ன ரோஜா, மனிதன், பணக்காரன், மாப்பிள்ளை, பில்லா, ரங்கா, குரு சிஷ்யன், தர்மதுரை, தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது, மாவீரன், படிக்காதவன், போக்கிரி ராஜா, தில்லு முல்லு, வேலைக்காரன், தம்பிக்கு எந்த ஊரு எல்லாம் அவனையும் அந்தப் பைத்தியங்களின் கூட்டத்தில் ஓர் உறுப்பினர் ஆக்கியது.

பக்கத்து வீடுகளில் பார்க்கச் செல்லும் ஒளியும் ஒலியும் முடியும் வரை அவன் காத்திருக்க வேண்டியதானது. ஏனெனில் கடைசியாகத் தான் அவர் பாடல் ஒளிபரப்புவார்கள். நிகழ்வு தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் போகப் போகத் தேய்ந்து போனாலும் அவர் பாடலின் இசை தொடங்கினால் போதும், அவனது கண்களில் ஒளி பிறந்து விடும். அவ்வீட்டுப் பெரியவர்கள் கடுப்பாகி, 'இவன் ஒரு நடிகன் என்று இந்தப் பசங்க ஏன் தான் பைத்தியமாக இருக்கிறார்களோ' என்று கூறுவதுடன், இன்னும் நிறைய சொல்லுவார்கள்.

அதெல்லாம் வேண்டாம். (பிறகு இது ஒரு ஜெயமோகன் கட்டுரையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.) எனக்கு என்ன வேண்டும்? அவரது படங்கள் எனக்குப் பரவசம் அளிக்கிறது. அது போதும். மற்றபடி அவரது தனி வாழ்வில் என்னவாய் இருந்தாலோ, என்ன செய்தாலோ எனக்கு என்ன வந்தது? இந்தப் பெரியவர்கள் எல்லாம் ரஜினியைத் தூஷிப்பதற்கு மனரீதியில் ஒரு காரணம் கண்டுபிடித்து வைத்துள்ளேன். அது பிறகு.

ஞாயிறு அவர் படம் போட்டால், ஏழு மணிக்கு ஒரு பத்து நிமிடம் இடைவேளை விடுவார்கள், தலைப்புச் செய்திகளுக்காக. அந்த குறுகிய இடைவெளியில் அவன் சென்று 500 மீட்டர் தொலைவில் இருக்கும் பொரி கடலைக் கடைக்குச் சென்று, கேட்டு, பொட்டலம் கட்டி, பணப் பட்டுவாடா முடிந்து வீட்டிற்கு வர வேண்டும். அவனது ஓட்டம் அன்று மட்டும் தான் ஊர் பார்க்கும்.

அவ்வப்போது பார்க்கும் பழைய படங்களில் அவரது நடிப்புத் திறமையும் அவனை ஈர்த்துக் கொண்டே போனது. மிகச் சரியான உதாரணம் ஜானி.அவருக்கே பிடித்த படம் என்று அவர் கூறிக் கொள்வது 'முள்ளும் மலரும்' என்றாலும், இவனுக்குப் பிடித்து அவர் நடிப்பின், ஆளுமையின் உச்சம் ஜானி என்று தான் கூறுவான்.

ஏன் என்று சொல்லத் தெரியாது. ராஜாவின் இசை மழையா, ஸ்ரிதேவியின் அமைதியான நடிப்பா (கமல் படங்களில் கெட்ட ஆட்டம் (குரு)), அற்புதமான ஒளிப்பதிவா , இரு வேடங்களில் வெளுத்து வாங்கி இருக்கும் ரஜினியின் நடிப்பா என்று பிரிக்கத் தெரியாது. ஆனாலும் அவனுக்கு மிகப் பிடித்த அவரது படங்களில் ஜானியும் ஒன்று. இப்போதும் எப்போதாவது இரவு நேரங்களில் இப்படம் போட்டால், சானல் மாற்றுவதே இல்லை இவன்.

பிறகு தொடங்கியது தான் மற்றொரு வரிசைப் படங்கள்.

தீபாவளிக்கு தளபதி, பொங்கலுக்கு மன்னன், தமிழ்ப் புத்தாண்டுக்கு அண்ணாமலை, அடுத்த பொங்கலுக்கு எஜமான் என்று வரிசையாகத் திருவிழாக்களை அவன் கொண்டாடத் தொடங்கினான்.

தீபாவளிக்கு வந்த தளபதியின் முன்னால் குணா ஊற்றிக் கொண்டது அறிந்து அவன் அவ்வளவு சந்தோஷப் பட்டான். அப்போது 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று விஜயகாந்த் படமும் வந்தது. அது வந்த இழுப்பிலேயே மூச்சை நிறுத்திக் கொண்டது. அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டது கிடையாது. தலைவர் படம் ஓடுகின்றது எல்லா படங்களையும் தூக்கி உடைப்பில் போட்டு, அது போதும்.

பின் பொங்கலுக்கு வந்த மன்னனைத் தாண்டி 'சின்னக் கவுண்டர்' ஓடியதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வந்த அண்ணாமலை கூட வந்த சிங்கார வேலனையும், ரோஜாவையும் மீறி ஓடியதில் மகிழ்ந்து தான் போனான். பிறகு பார்க்கும் போது 'ரோஜா' ஓட வேண்டிய படம் தான் என்று புரிந்து கொண்டான். ஆனாலும் 'சிங்கார வேலனை' ஏற்றுக் கொள்ளவில்லை அவனது அன்றைய மனம்.

பின் தலைவரது பயணம் கொஞ்சம் கொஞ்சமாய் அரசியலின் திசையில் மாறத் தொடங்கியதும், படங்களும் அந்த நோக்கிலேயே வரத் தொடங்கியதும், அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவம் வரத் தொடங்கியதும் கொஞ்சம் குறையத் தொடங்கியது, அவனது வெறித்தனமான இரசிப்பு.

வீரா அளவுக்கு அருணாச்சலம் அவனுக்குப் பிடிக்கவில்லை. தலைவரும் கொஞ்சம் படங்களை நிறுத்திக் கொண்டதில் பிற நடிகர்களின் நல்ல படங்களையும் பார்க்கத் தொடங்கினான். முக்கியமாக கமலின் பல படங்கள். ஆனாலும் தலைவர் என்று ஒருவர் தான் இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் கூட பார்க்கக் கூடாது என்று உறுதியோடு இருந்ததில் இருந்து அவன் விதிவிலக்கு எடுத்துக் கொண்டது ஒரே ஒரு படம் பார்ப்பதற்கு மட்டும் தான். அது 'முத்து'.

பின் வந்த பாட்ஷா, படையப்பா, பாபா, சந்திரமுகி எதுவும் அவன் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்தது தான் படையப்பா. அதற்கு முன் கல்லூரி விடுதியில் தான் முதல் முறையாகப் பார்த்தான். விடுதியில் எல்லா வகைப் படங்களும் எல்லோருடைய ஹார்டு டிஸ்குகளுக்கும் வராது. சிலர் பார்ப்பார்கள், சிலர் பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் படங்கள் அழிக்கப்படும். ஆனால் ஒரு வருடம் வரை கல்லூரி விடுதியில் சுற்றிக் கொண்டே இருந்தது 'படையப்பா' சி.டி. அப்போது தான் புரிந்தது நம்மைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது.

சந்திரமுகி பார்க்கையில் இந்தச் சிங்கத்தின் பார்வையில் இருக்கும் தீ அவ்வளவு சீக்கிரம் அணையக் கூடியதில்லை என்று புரிந்தது. என்ன ஒரு வில்லத்தனம்!!

பாபா பிறகு பார்க்கும் போது அது ஒன்றும் அப்படி மோசமான படம் இல்லை என்று அவனது இரசிக மனத்திற்குப் பட்டது.

மோக்ளியின் மனத்திற்கு இன்னும் புரிபடாமல் இருக்கும் ஒரு விஷயம், இன்னும் அவன் ஏன் 'சிவாஜி - THE BOSS' பார்க்கவில்லை என்பதும், அதை விட முக்கியம் அவன் பார்க்காதிருப்பதை ஏன் அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவிலை என்பதும் தான்.

ன்று சின்னச் சின்னப் பசங்கள் எல்லாம் 'இளைய தளபதி', சின்னத் தளபதி', 'புரட்சித் தளபதி', 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்றெல்லாம் போட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது அவனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏண்டா, உங்களுக்கே இதெல்லாம் ஓவராகத் தெரியவில்லை? எருமை மாட்டு மேல் சாக்பீஸால் 'மகாராஜா' என்று எழுதிக் கொண்டால் அது மன்னன் ஆகி விட முடியுமா? இப்படி வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோமே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை?

தலைவர் வரும் போது, இருந்த எந்த நடிகரைப் பார்த்து ஸ்டைல் செய்தார்? அவர் அவரது தனி இராஜபாட்டையில் செல்லவில்லையா? உங்களிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லை போல். அதனால் தான் அவரது பாதையில் போக முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கே தெரிய வேண்டும்.

ஒருவரது நல்ல பண்புகளைப் பிரதியெடுத்துக் கொள்வது தவறில்லை. தலைவரது பெருந்தன்மை, எளிமை, பரோபகாரக் குணம், வேகம், ஆன்மீகம், இவ்வளவு பெரிய நிலையை அடைந்த பின்னும் இருக்கும் அடக்கம் (கன்னட திரை உலகில் இராஜ்குமார் மற்றும் குடும்பத்தினரின் திரை அரசியல் இங்கு இவர் செய்கிறாரா?) இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஏன் நானும் நீங்களும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் அவரிடம் உள்ளன.

ஆனால் அந்த உயர் பண்புகளை கற்றுக் கொண்டு நமக்கான நம் பாதையில் செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அவரது பாதையிலேயே போக முயல்வது, யானை அவிழ்த்துக் காயப் போட்டிருக்கும் அண்டர்வேரில் எலிக்குஞ்சு நுழைய முயல்வது போல். எவ்வளவு முயன்றாலும் உங்களால் அதைப் போட்டுக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல கீழே விழுந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

போங்கடாங்க.......!!!நன்றிகள் : http://www.rajinifans.com மற்றும் YouTube ரசிகக் கண்மணிகளுக்கு.

8 comments:

ரவிசங்கர் said...

எனக்கும் ஜானி ரொம்பப் பிடித்த படம்

இரா. வசந்த குமார். said...

அன்பு ரவிசங்கர் அவர்களுக்கு... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு...
/*
எனக்கும் ஜானி ரொம்பப் பிடித்த படம்
*/
மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்ற படம் ஜானி......

உமையணன் said...

எத்தணை முறை பார்த்தாலும் எனக்கு அலுக்காத படங்கள் மூன்று.
காந்தி, ரோஜா பிறகு ஜானி.
அதிலும் குறிப்பாக ஸ்ரீதேவியின் அழுகைக்குப் பிறகு காதலிக்க ஒத்துக்கொள்ளும் கட்டம், ரஜினியின் ஆளுமை மிளிரும் கட்டம்.
இப்போது நான்காவதாக ஒரு படம் அமைந்திருக்கிறது. அமேலி.

இரா. வசந்த குமார். said...

அன்பு உமையணன்... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு....! அமேலி இனிமேல் தான் பார்க்கணும்.

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு...
ஜானி படம் பற்றிய தங்கள் பகிர்வு அருமை.'ஜானி' படம் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாதுன்றது என் கருத்து.
//ராஜாவின் இசை மழையா, ஸ்ரிதேவியின் அமைதியான நடிப்பா (கமல் படங்களில் கெட்ட ஆட்டம் (குரு)), அற்புதமான ஒளிப்பதிவா , இரு வேடங்களில் வெளுத்து வாங்கி இருக்கும் ரஜினியின் நடிப்பா என்று பிரிக்கத் தெரியாது//
அதையெல்லாம் ஒருங்கிணைத்த மகேந்திரனின் நீரோடை போன்ற தெளிவான இயக்கம்தான் காரணம் என நான் கருதுகிறேன்.எனக்கு இப்படத்தில் பிடித்த சீன்களைப் பட்டியலிட்டால் ஒரு பதிவே போடலாம்.
ரஜினி ஜவுளிக்கடையில் தீபாவிடம் பேசும் வசனம்.(இப்பொழுதும் ஷாப்பிங் சென்டர்களில் நான் எதை வாங்குவது எனத் திணறி நிற்கையில் நினைவுக்கு வந்து போகும்)
ரஜினி ஸ்ரீதேவியின் இசையில் மயங்கி, கொள்ளையடிக்கப் போகாமல் ஆட்டோகிராஃப் வாங்கும் காட்சி.
ஸ்ரீதேவியின் வீட்டுக்கு பூக்கள் அனுப்புவது
ஸ்ரீதேவியின் காதலின் ஆழத்தைக் கண்டு கொலைகார ரஜினி சரணடைய முடிவெடுக்கும் காட்சி
காட்டில் ரஜினியின் மேல் சுபாஷினி கொள்ளும் சிறுகாதல்(இன்ஃபாச்சுவேஷன்...?)
பாடல்களும்,படமாக்கிய விதமும்...
'என் வானிலே' பாடலின் ஆரம்பத்தில் வரும் குரல் 'நோ..நோ..நோ...ஜஸ்ட் லிஸன்' வரிகளும், அதன் இனிமையும்
படத்தில் எனக்குப் போரடித்த ஒரு காட்சி உண்டெனில் அது இரு ரஜினியும் காட்டில் சண்டையிடும் நீளக்காட்சி.ஓரிரு காட்சிகள் திரும்பத்திரும்ப சேர்த்திருப்பார்கள்.அமெச்சூர்தனமாகத் தோன்றியது.(ஒருவேளை 80களில் பார்த்திருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ...?)
தமிழில் எனக்குத் தெரிந்து இரு வேடக் கதாநாயகனின் படம், மசாலாத்தனமில்லாமல் வந்தது இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.இது பெற்ற வெற்றியும் எனக்கு இன்னும் ஆச்சரியம்தான்.
அதைவிடப் பெரிய ஆச்சரியம் ரஜினி அப்போதிருந்த காலகட்டத்தில் இதுபோன்ற கதையில் நடிக்க ஒப்புக்கொண்டது.ரஜினியின் நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்.ஸ்ரீதேவியின் பாந்தமான நடிப்பு.(அவரின் உதவியாளர் கூட அடக்கி வாசி(நடி)த்திருப்பார்).எளிய ஒளிப்பதிவு(அஷோக்குமார் என நினைக்கிறேன்).
மகேந்திரனிடம் 'கை கொடுக்கும் கை' தனக்குக் கை கொடுக்கும் என ரஜினி எண்ணியிருந்திருப்பார்.இல்லையெனவும் ரஜினி பாதையை மாற்றியிருப்பார் என நினைக்கிறேன்.
ரஜினியின் 'தில்லுமுல்லு' எனக்கு மிகவும் பிடித்த மற்றுமொரு ரஜினி படம்.இன்று கூட அதன் காட்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
ரஜினியின் 'முள்ளும் மலரும்' எனக்கு மிகவும் பிடித்த படம்.அதில் சரத்பாபு,ரஜினியை வேலையை விட்டு நீக்கியவுடன் ரஜினி சொல்லும் ஒரு வசனம்,"ரெண்டு கை இல்ல சார்,ரெண்டு கால் போனாலும் பொழச்சுப்பான் இந்த காளி".. செம ஸ்டைல்...க்ளைமேக்ஸ் காட்சி கண்கலங்க வைத்தது.
ரஜினியின் சமீபத்திய படங்களில் பிடித்தது 'தளபதி'.மற்றவை தங்களின் நாசரின் 'முகம்' பட ஒப்பீட்டில் சொல்லி இருப்பது போல் பொழுதுபோக்குச்சித்திரங்கள்.
'சிவாஜி' மூளையைக் கழற்றி விட்டுப்பார்த்தால் ஓரளவு ரசிக்கலாம்.ஷங்கரின் பழைய குண்டுச்சட்டிக்குள், கஷ்டப்பட்டு சுஜாதா(வாத்தியார்) ஓட்டிய குதிரைக்காகப் பார்க்கலாம்.ரஜினி அஸ் யூஸ்வல்.
சற்று நீளமாகப் போய்விட்டதோ....?

தமிழ்ப்பறவை said...

அடடா... சொல்ல மறந்துட்டேன்.. இப்பதிவில் நீங்கள் போட்டிருக்கும் நான்காவது ரஜினி புகைப்படம் வெகு அருமை.

தமிழ்ப்பறவை said...

அது யாரு 'மோக்ளி' நீங்களா...?(பழைய பதிவுகளைப் படித்தால் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்).முயற்சிக்கிறேன்.நாட்கள் ஆகிவிடுமென்பதால் இப்படி ஒரு கேள்வி.'ஷா‍ இன் ஷா' என்றால்...?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நீங்கள் சொல்லவே வேண்டாம். தலைவரைப் பற்றி எழுத உட்கார்ந்தாலே பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே இருக்கலாம். நீண்ட பதிலாகப் போய் விட்டதை எண்ணவே வேண்டாம்.

தில்லுமுல்லு மற்றொரு காமெடி க்ளாஸிக். தம்பிக்கு எந்த ஊரு பார்த்திருக்கீங்களா..? அல்டிமேட் ஆக்ஷன் + காமெடி. 'பாப்பா போட்ட தாப்பா'வை மறக்க முடியுமா?

மோக்ளி யாமே! 'காவிரிப் பையனின் கதை' கேட்டகிரியில் முதல் போஸ்டைப் படித்துப் பார்த்தால் காரணம் புரியும்.;-)

என்.டி.டி.வி. விருது வழங்கும் விழாவில், ஷாருக் மற்றும் தலைவர் (இருவரும் பாட்ஷா என்ற பெயரில் படங்கள் நடித்துள்ளதால்) ஷாரூக் ஒரு கேள்வி கேட்டார். 'நானும் எப்படி உங்களைப் போல் ஷா - இன் - ஷா ஆவது?'

'You will become Shaw - in - Shaw' என்பதே தலைவரின் பதில். எனவே தான் நான் ஷா - இன் - ஷா என்று குறிப்பிட்டுள்ளேன்.

காண்க ::

http://robotrajini.com/watch-rajini-on-ndtv/

http://www.ndtv.com/convergence/ndtv/videopod/default.aspx?id=22347