மகாகவியை ஒரு தேசபக்திக் கவிஞனாக, புரட்சிக் காரனாக, போராளியாக, சமூக சீர்திருத்தவாதியாக, துணிச்சல்காரனாக (காந்திக்காககூட காத்திருக்க மாட்டேன் என்றானாமே), பெண் விடுதலை வீரனாகக் காட்டிய பாடல்கள் ஆயிரம். பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் பாடல்கள் தந்து உதவிய பாட்டுக்காரனாக நினைவில் இருத்திக் கொண்டிருக்கையில், 'நானும் ஒரு சித்தனாக வந்தேனப்பா' என்று அறிவித்தானே, அதற்கான பாடல் இது!
பாரதியை 'அவர், இவர்' என்று போலித்தனமான மரியாதை தந்து குறிப்பிடுவோர் மிகக் குறைவு என்று நினைக்கிறேன்.

பெருந்தீக்கு எதற்கு பொன்னாடை?
யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும் நடமாடிய காலத்தில் பிறக்க வேண்டியவன் தப்பித் தவறி இந்தக் காலத்தில் பிறந்து விட்டான். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் தேச விடுதலைக்காக பாட வேண்டியனானான். இருந்தும் அவனது சித்த மனம் சொல்லத் துடித்த வரிகளும் அவ்வப்போது தம்மை வெளிப்படுத்திக் கொண்டன.
மற்றுமொரு நல்ல உதாரணம் 'நல்லதொரு வீணை செய்தே'.
பிறந்ததில் இருந்து உடல் மாறிக் கொண்டிருக்கின்றது. மனம் மட்டும் அதே போல் இருக்கின்றது. இன்று உடல் பருமனாக இருக்கின்ற மனிதன், ஒரு மாதம் உணவே உண்ணாமல் இருந்தால், உடல் வற்றி மிக இளைத்தவன் ஆகின்றான். அப்போது அவன் அவன் இல்லையா? அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோமா? அப்போதும் அவன் அவன் தானே! அப்படியானால் இந்த உடல் என்பது அவன் இல்லை.
பிறகு ஏன் உடல் முற்றும் இல்லாது போன நிலையில் அவனை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை? அந்த மனம், ஆன்மா அது தான் அவனா?
பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு துளியினும் துளியாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், வாழ்க்கை நடத்த என்ன காரணம்?
நாம் வருவதற்கு என்ன காரணம்? நம் வாழ்வே யாரோ ஒருவருடைய கனவோ? அவன் கனவு கலைந்து விழித்தால் நான் தொலைந்து விடுவேனா?
எரிகின்ற விளக்கை ஊதினால், அந்த நெருப்பு எங்கு சென்று விடுகின்றது? அது போல் இந்த நினைவும், எண்ணங்களும் எங்கு செல்லும், பின்? ஒரு பானை நிறைய நீர் வைத்து, ஒரு துளையிட்டால் நீர் முழுதும் ஓடி விட்டு பானை காலியாகி விடுகின்றதே. இந்த மண்பாண்ட மனித உடலில் இருந்து எதுவும் சென்று விடுவதில்லையே, ஏன்?
இந்த மூளையும், எலும்பும், வெறும் புரதங்களாலும், அமினோ அமிலங்களாலும், டி.என்.ஏக்களாலும் தான் ஆனதோ? உயிரியல் ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக் கூடு தான் நானுமோ?
அடுத்த நாள் இளங்காலையில் சாம்பலில் இருந்து தேடி ஒரு எலும்பை எடுத்துக் காட்டி 'இது தான் உன் பாட்டி' என்றார்களே, அந்த கணத்தில் புரிந்த மாயை எக்கணத்தில் மனதை விட்டு மறையும்? அதற்குப் பின் பார்க்கின்ற மனிதர்கள் எல்லாம் அவ்வப்போது, அடையாளங்கள் அற்ற 'என்பு தோல் போர்த்த உடம்பு' என்று உணர்கின்ற போது எந்த உணர்வும் அற்ற வெற்று வெள்ளைத் திரையாய் மனம் மாறுகின்றதே, அது எதனால்?
No comments:
Post a Comment