கெழக்க மொளச்ச கதிரும் மேக்க மறஞ்சாச்சு!
வெளக்க ஏத்தி வெக்க, வேதனயும் சேந்தாச்சு!
பாத வழியப் பாத்து பூத்த கண்ணும்
வேத்து வேத்து தண்ணி பொழிஞ்சாச்சு!
ஈர வெறகு மேல சேந்த ஈசலு போல
கூரக் கீத்து மேல தூத்துன தூறலு போல
பாற மேல பூத்த பச்சல போல்
ஊறிப்புட்டீரு உள் மனசுல..!
வெள்ளாம வெளஞ்சு நிக்க
வெள்ளாடு மேயாம காத்து நிக்க
கை கொள்ளாம கொண்டு போக
வெள்ளன வருவிகளோ, வராம போவீகளோ?
ஆத்தோரம் நடக்கயில, அல வந்து அடிக்கயில
சேத்து சேத்து நடக்க, சேத்து வெச்ச காலுல
சேத்து தடம் பதியப் பதிய
பாத்து பாத்து நடந்த பழய நெனப்பும்,
வாக்கா வரப்போரம் வக்கணயா ஒக்காந்து
எக்காளமா எசமானமா எட்டி எட்டிப் பறிச்சு
நிக்காம கொள்ளாம ஒடிப் போயி
பக்கா பக்காவா தின்ன மாங்காவும்,
அய்யனாரு சாமி அருவா பாத்து பயந்ததும்,
பொய்யா மீச வரஞ்சு மெரள வெச்சதும்,
அய்யா அம்மானு அலறியடிச்சு ஓடுனதும்,
மெய்யா நெனப்பில்லயா மச்சான் நெஞ்சுக்குள்ள..?
திருவிழாவுல சீனிமுட்டா வாங்கித் தந்து
தெருமுச்சூடும் திமிரா காட்டுனதும்,
உருமா மாமன் கையில மாட்டி, ஓடி
பெருமா கோயிலுல பதுங்குனதும்,
ஏதேதோ பேசிப் பேசி ஏரிக்கர வர
போதம் ஏறிய கரயோரம் நின்னு
வாதம் விவாதம் பண்ணி உள்ள குதிச்ச
பாத தடமெல்லாம் பதராப் போச்சா?
|
தொடர்புடைய மற்றும் சில பாடல்கள் :
பாடுகிறேன்...!
அசத்திப்புட்ட புள்ள...!
போறவளே பொன்னுத்தாயி...!
2 comments:
வசீகர வார்த்தைகளை விட இந்த மாதிரியான வட்டார வழக்கு கவிதைகள் எனக்கும் பிடித்தமானவை.
வாய் விட்டு சொல்லிப் பார்க்கலாம் :)
அன்பு அருட்பெருங்கோ.. ரொம்ப உண்மைங்க.. என்ன தான் நாம அப்படியே வார்த்தைகளை வளைச்சு வளைச்சு எழுதினாலும், அடி மனசுல இருக்கற கிராமத்தான் அவனோட மொழியில பேசும் போது, அதோட வீச்சும், சுகமும் தனி தாங்க...
Post a Comment