Friday, February 29, 2008
சுஜாதா - அஞ்சலி 2.
சுஜாதாவின் குரல் கேட்க.
ஓர் எழுத்தாளரின் மறைவுக்கு இவ்வளவு வருத்தம் ஏற்படுமா என்பது எனக்கே வியப்பாக இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கையில் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அனைவரும் எந்தளவிற்கு துக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது.
ஒரு படைப்பை அனுபவிக்கும் போது நமது உணர்வுகள் அந்த படைப்பின் வழி பயணம் செய்கின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவ்வுணர்வுகளோடு அப்படைப்பு பின்னிப் பிணைகின்றது என்பதைப் பொறுத்து தான், அதன் விளைவுகளோ/ பாதிப்புகளோ நம்மில் விளைகின்றது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது, அதன் வழி நாமும் பயணிக்கிறோம். ஆனால் அதன் பாதிப்பு அவ்வளவு அற்புதமாக வருவதற்கு பலருடைய உழைப்பு தேவைப்படுகின்றது. அருமையான காட்சியைச் சிந்திக்கும் இயக்குநர், மனதின் அடியாழத்தோடு ஊடுறுவும் வகையில் இசையமைக்கின்ற இசையமைப்பாளர், காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர் என் பலர் தேவைப்படுகின்றனர். இவற்றுள் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால், அதன் பாதிப்பு தக்கன அமையும்.
ஆனால் எழுத்தின் வழி பயணிப்பதற்கு எழுத்தாளரின் கற்பனை வளம் மட்டுமே போதுமானது. மிகச் சுலபமாக நம்மை தனது தளத்திற்கு இழுத்துச் செல்லாமல், அழைத்துச் செல்கின்ற நடை இருக்கும் போது நமது பயணம் என்றும் மறவாமல் இருக்கச் செய்கின்றது.
ஒரு கதை படிக்கும் போது, நமக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நம்மை நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். பெரும்பாலும் கதாநாயகன். அவனது எண்ணங்களில் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவனது வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்களில் நம்மை நாம் காணும் போதோ, நாம் செய்ய விரும்புகின்ற செயல்களை அவன் செய்யும் போதோ நாம் மிகச் சுலபமாக கதையோடு நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகின்றது.
அத்தகைய பெரும்பான்மையான கதைகளை எழுதியவர் சுஜாதா என்பதில் மறுப்பில்லை.
துப்பறியும் நாவல்களின் கணேஷ் - வசந்தாகவோ, தேஜஸ்வினியில் தேஜஸ்வினியாகவோ, அவளது தகப்பனாகவோ, 'மாஞ்சு'வில் மாஞ்சுவாகவோ, அவனது தம்பியாகவோ, அவர்களது அம்மாவாகவோ, ஆராவமுதனாகவோ, 'பிரிவோம் சந்திப்போம்'ல் மதுமிதாவாகவோ, 'ஆ'வில் அந்த நோய் வந்து தவிக்கின்ற நாயகனாகவோ, 'ரங்கத்து தேவதைகளில்' கிச்சாவாகவோ, பாச்சுவாகவோ, டீக்கடை வைத்திருக்கும் நாயராகவோ, லால்குடி பாஸஞ்சரில் பயணிக்கும் ரங்கத்து சிறுவனாகவோ தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அந்தச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள், சுஜாதாவை மறக்க முடியாது.
படைப்பாளிகளுக்கு மரணம் என்று இருக்க முடியுமா என்ன? கம்பனுக்கும், மகாகவி பாரதிக்கும் மரணம் வந்து விட்டதா என்ன? அது போல் சுஜாதாவின் எழுத்துக்கள் இருக்கும் வரை அவர் மரணித்து விட்டதாக கூற முடியுமா?
பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பிறகு தமிழ் உரைநடையில் ஒரு பெரும் புரட்சியும், மாற்றமும் கொண்டு வந்தவர் சுஜாதா என்பது பிற பதிவுகளைப் படிக்கையில் தெரிகின்றது.
அவரது இயல்பான மாறுபட்ட களங்களை இணைக்கின்ற திறமை அதில் முக்கியமான ஒன்றாகப் படுகின்றது.
காஷ்மீர் தீவிரவாதம் பற்றி, சுந்தரபாண்டியபுரத்தின் சின்னப்பெண் மூலம் சொல்ல வைக்கும் போதும், இலங்கைப் பிரச்னையைப் பற்றிச் சொல்ல முயல்கையில் சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் மூலமாகக் கூற வைக்கும் போதும், ஒரு தீவிரமான மனதுக்குள் குரல் கேட்கும் வியாதியை, திருச்சியில் ஒரு காலத்தில் நடந்த கள்ளக் காதலுடன் இணைக்கும் போதும் (ஆ..!), 'ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி' யை திருவல்லிக்கேணியின் பிராமண சாது இளைஞனின் மனதுக்குள் வைத்து பிராண்ட வைக்கும் போதும், அரசு இயந்திரத்த்கின் செயல்களை, ஒரு சாதாரண டி.வி.காமிராமேனின் வாழ்வின் நிகழ்வுகளைக் கொண்டு சொல்லும் போதும், புரியாத நோய் ஒன்றை கிராமத்துப் பெண்ணின் மனதைக் கொண்டு சொன்ன விதமும் (மதுரை), எளிய சொற்கள் மூலம் கணிப்பொறியியலை அறிமுகம் செய்து வைக்கும் போதும் வாசகனின்/ ரசிகனின் மனதுக்கு கொஞ்சம் இளைப்பாற்றல் தருகிறார்.
'கொஞ்சம் புரியாதது போல் இருக்கிறதே' என்று மனம் கொஞ்சம் சலிக்கும் போது, சடாரென வாசகனின் மனதுக்கு நெருக்கமான சூழலைக் கொண்டு வந்து சேர்க்கும் போது, அவனது மனம் மீண்டும் ஆர்வத்தைப் பற்றுகிறது. மீண்டும் கதைப்பயணம் தொடர்கிறது. சுஜாதாவின் வெற்றிக்கும், அவர் இத்தனை பெரும் வாசகர்களைப் பெற்றிருப்பதற்கும் (பெற்றிருந்ததற்கும்... ;-( ) அவர் எந்தப்புள்ளியில் இந்த தள மாற்றம் செய்ய வேண்டும் என்பது உணர்ந்திருப்பது தான். (உணர்ந்திருந்தது..;-( ) (கடந்த காலத்தில் எழுதவே வர மாட்டேன் என்கிறது. இன்னும் அவர் இறந்து போனார் என்பது எட்டவே இல்லை. 'கற்றதும் பெற்றதும்' இல்லாத விகடனைக் காணும் போதும், 'சுஜாதா பதில்கள் ' இல்லாத குங்குமம் காணும் போது தான் அந்த வெற்றிடம் புரியும் என்று தோன்றுகிறது.) அந்த இரு தளங்கள் எவையெவையாக இருக்க வேண்டும், அதன் கூட்டிணைவு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற மிகச் சரியான விகிதாச்சாரம் தெரிந்து வைத்திருந்ததும், அவற்றை மிகச் சரியாகக் கூர்மையாக செய்ததும் தான்.
அவரது இந்த இயல்பே, தொழில்நுட்பத்தையும், பழந்தமிழையும் இணைக்க வைத்தது என்றும், அதற்கு அவரது பிராமண திருவரங்கக் குடும்பப் புலமும், தொழில் நுட்பத்தின் பொறியியல் பின்புலமும் தளமாக அமைந்தது எனலாம். அந்த Mentality, பலதரப்பட்ட மாறுபட்ட களங்களை சேர்த்து வைத்து கதைகளை, திரைக்கதைகளை அமைக்க வைத்தது எனலாம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையும், ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அதனை தமிழில் பொழிவதற்கு அவருக்கு தமிழின் மீதிருந்த ஆர்வமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
சுஜாதா என்ற மிகப்பெரும் எழுத்தாளரை, விஞ்ஞானியை, எளிய முறையில் அணுக முடிந்த மனிதரை, நடைமுறையின் கதைகளை எழுதிய கற்பனைச் சுரங்கத்தை அளவிட்டுப் பார்ர்க எழுந்த முயற்சி அல்ல. அதற்கான தகுதியும், வயதும் இல்லாதவன் நான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும் எனக்குத் தோன்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இதை எழுதுகிறேன்.
அவரது பல்துறைத் திறமும், ஆர்வமும் அவர் ஒரு யுக மனிதர் எனச் சொல்ல வைக்கின்றது. அவரது பலதுறை நடைமுறை வசனங்கள் பல துறைகளின் தின வாழ்வைக் காட்டுகின்றன. முக்கியமாக கணேஷ் - வசந்த் மூலம் நீதிமன்றங்களில் என்ன நடக்கின்றது, அதன் தின வசனங்கள் எப்படி இருக்கும் என்பதை எனக்குத் தெரிய வைத்தது.
பல கதை எழுத்தாளர்களின் கதைகள் காலப்போக்கில் பிடிக்காமல் போய் விட, இன்னும் தொடர்ந்து வருகின்றது சுஜாதாவின் எழுத்து என்பதில் அவரது திறன் புலனாகின்றது. காலத்திற்கேற்ப மாற்றம் கொண்ட கதை உலகமும், தீராத, குறையாத கற்பனை வளமும் அவரது தொடர் வெற்றிகளுக்கு காரணம்.
ஐயா, நாம் ஒருபோதும் நேரில் கண்டதில்லை என்ற போதும் உங்களது கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் வழியாக இது நாள் வரை உங்களோடு தொடர்பு வைத்திருந்தோம். இனிமேல் உங்களது ஸ்தூல உடல் இங்கு இருக்கப் போவதில்லை எனினும், எழுத்துக்கள் வழி நீங்கள் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கத் தான் போகிறீர்கள் என்பதிலும் இனிவரும் எத்தனையோ தலைமுறைகளோடும் உங்களது உரையாடல்கள் காலங் காலமாக உரையாடிக் கொண்டே இருக்கும் என்பதிலும், சந்தேகமென்ன?
நீர் எங்களுக்குச் சொல்லுவதற்கென எத்தனையோ கதைகளைப் புதைத்து வைத்து வாடுகின்றன திருவரங்கத்தின் காவிரிக் கரையும், வானியலின் செவ்வாய்க் கிரகமும்..! கண்களில் பொங்குகின்ற கண்ணீர் மறைக்கின்றது எழுத்துக்களை..! செழுந்தமிழ் மகனே சென்று வாரும்..! நீர் சொல்வதைக் கேட்பதற்கென திறந்த காதுகளைக் கொண்டு காத்திருக்கும் தமிழ்த் தலைமுறைகள் என்றென்றைக்கும்...!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பதிவுக்கு நன்றி வசந்தகுமார்
அன்பு கானா பிரபா.. மிக்க நன்றி...
என் காலேஜ்க்கு ஒரு முறை வந்திருக்கிறார். அப்பொழுது அவர் ஒரு கம்பியூட்டர் தெரிந்த ஒரு நபர் என்ற முறையில் மட்டுமே அறிமுகம். பிறகு வந்த நாட்களில் அவர் எழுத்தை படித்து, அன்று அவருடன் பேசவில்லையே என்ற வருத்தம்.
அவர் எழுத்துக்கள் இருக்கிறது. எழுத்தாளன் மறைவதில்லை.
கல்கி எழுத்துக்கள் படிக்கும் போது அவர் உயிருடன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? எழுத்துக்களே அவர்கள்.
அன்பு பின்னோக்கி...
ஆமாம். நீங்கள் சொல்வதும் உண்மைதான். படைப்புகள் இருக்கும் வரை படைப்பாளிக்கு மரணமில்லை.
Post a Comment