Thursday, February 28, 2008

சுஜாதா - பெயர் தந்த படைப்பாளி.



ரு பிரபலமான எழுத்தாளர் என்பதையும் தாண்டி தனிப்பட நெருக்கம் கொள்ள எத்தனை காரணங்கள் உள்ளன எனக்கு!!

பையன் பிறந்த பின் என்ன பெயர் வைக்க என்று குழம்பாமல், சுஜாதாவின் 'வசந்த்' போல் வர வேண்டும் என்று பெயர் வைத்தார்கள். அப்படி எனக்கு பெயர் தந்த படைப்பாளி அல்லவா அவர்?

நேற்று இந்த பதிவை எழுதி விட்டு, இன்று காலையில் ஹிந்துவைப் புரட்டினால், அதிர்ச்சி. ஒன்றுமே ஓடவில்லை. அலுவலகத்தில் சென்று சேர்ந்து, ஒரு வேலையும் நடக்கவில்லை. 'வயிற்று வலி' என்று சொல்லி விட்டேன். உண்மையில் வலி தானே..!!!

ள்ளியில் படிக்கும் போது 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு புத்தகம் பரிசாகக் கொடுத்தார்கள். அதில் படித்த சுஜாதாவின் 'நகரம்' என்ற சிறுகதை அத் தொகுப்பில் படித்த பல சிறுகதைகளில் வித்தியாசப்பட்டு இருந்தது.

அறிமுக பாராவில் மதுரையைப் பற்றிக் கூறும் போது, அவரது எழுத்து எங்கெங்கோ சென்று பறந்து, பின் நடைமுறைக் காலத்திற்கு வந்து நிற்கும். அக்கதை அவரைப் பற்றிய ஓர் இரகசிய வாசலைத் திறந்து வைத்தது என்றால் மிகையில்லை. அதற்கு முன்பே அவரது கதைகள் படித்திருக்கலாம். சரியாக நினைவில்லை.

ஆனால் அவரது கதைகள் பிறரது கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது புரிந்தது. சின்னச் சின்ன வாக்கியங்கள், அலட்சியமாகப் பேசும் கதாபாத்திரங்கள், சட் சட்டென தாவும் சூழ்நிலைகள் என்று அவரது கதைகளின் வழி அவரது திறன் புரியலானது.

தூர்தர்ஷனில் 'என் இனிய இயந்திரா' காணும் போது பிரமிப்பாய் இருந்தது. '90களில் இப்படி ஒரு சிந்தனை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்? பெரும்பாலோர் காதலையும், குடும்பச் சிக்கல்களையும் பொட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கையில் வளரும் சிறுவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டன சாகசக் கதைகள் மூலம் அவரது எழுத்துக்கள்.

விகடனும், குமுதமும் தொடர்ச்சியாக வாங்கத் தொடங்கிய பின் படித்த 'பிரிவோம் சந்திப்போம்', கற்றதும் பெற்றதும் முதல் பாகம் அவரின் பிரம்மாண்டத்தை அனுபவங்கள் வழி அலசிப் போடும் இலாவகம் எல்லாம் அவரது திறமையையும் தீராத தேடலையும் படம் போட்டுக் காட்டின.

குமுதத்தில் வந்த 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்தது என்பதில் எனக்கு மகிழ்வே!

சுஜாதாவின் கதைகளில் மிளிரும் இளமையும், கவர்ச்சியும், துள்ளலும் எத்தனை பரவசத்தை அளிக்குமோ அதற்குச் சிறிதும் சளைக்காது கவர்ச்சி தூக்கலாக படம் வரைந்த ஓவியர் ஜெ., கதைகளின் போக்கிற்கெ வாசகனைக் கொண்டு வந்து விடுவர். சுஜாதா - ஜெ காம்பினேஷன் எத்தனை கதைகளில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன...!

குமுதம் ஆசிரியரான காலத்தில், ஒரு வருடம், குமுதத்தின் முகத்தையே மாற்றி வைத்தார். இரவில் பூக்கும் குமுத மலரை அடையாளமாகக் கொண்டிருந்த குமுதத்திற்கு இளமையைக் கொண்டு வந்தார். ஆனால் எழுத்தாளர் ஒருவர் ஒரு கூட்டுக்குள் அடைய வேண்டி வந்ததன் இழப்புகள் அவரை மீண்டும் சிறகடித்துப் பறக்கும் பறவையாக்கின.

குமுதத்தில் எழுதிய 'படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி', கணிப்பொறியே அறியாத இக் கிராமத்துச் சிறுவனுக்கு சிலிக்கான் சில்லுகள் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்தது.

ஜூ. வி. -ல் வந்த 'ஏன்? எதற்கு? எப்படி?' என்ன ஓர் அற்புதத் தொகுப்பு! சிக்கலான கேள்விகள் மூலமும், எளிய வினாக்கள் மூலமும் மதனின் கைவண்ணத்தில் Googling இல்லாத காலகட்டத்தில் அறிவியலின் கையைப் பிடித்து தமிழ் உலகத்திற்குச் சுற்றிக் காட்டினார் எனலாம்.

'ஆழ்வார்கள் -ஓர் எளிய அறிமுகம்' மூலம் அவரது பன்முகத் திறமைகளில் பலவற்றை அறிய முடிந்தது.

'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மூலம் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். கிச்சா, பாச்சு, மாஞ்சு எல்லோரையும், மாட வீதிகளையும், தெற்கு கோபுரத்தையும், அம்மா மண்டபத்தையும் வடக்குவிளையான் கிரிக்கெட் அணியையும் அமெரிக்க அம்பிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? முக்கியமாக அரங்கத்து தேவதைகளையும், அரஸ்-ன் தூரிகைக் கன்னிகளாய் அவர்கள் வெளிப்பட்ட அழகையும்...!

இப்போது அந்த நண்பர்களைத் தேடி சென்றுள்ளார் போலும்! மீண்டு வந்து மற்றுமொரு 'கற்றதும் பெற்றதும்' எழுதுவார்.

ல்லூரியில் சேர்ந்த போது, கணிப்பொறியே தெரியாத காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்களை கண்ணியில் காண்கையில் எத்தனை மகிழ்வாய் இருக்கும்? ஒரு தெரியாத தேசத்தில் நண்பனைக் கண்ட மகிழ்வு அது. அது அம்பலம்.

அவர் எழுதிய இணையம் பற்றிய தமிழ்ப் புத்தகமும், அதில் குறிப்பிட்டிருந்த பல இணைய முகவரிகளும் அந்த ஆரம்ப காலகட்டத்தில் அத்துணை துணையாக இருந்தது.

கரையெல்லாம் செண்பகப்பூ படமாகப் பார்த்த கட்டத்தில் தான் அந்நாவல் வடிவம் மிகவும் பிடித்துப் போனது.

அறிவியல், நடைமுறைக் கதைகள் , பழந்தமிழ் இலக்கியம், ஆழ்வார்கள், இளவயது நினைவுகள் என்று கலந்த் கட்டி எழுதி தான் ஒரு பல் துறை நிபுணன் என்பதை நிரூபித்தார்.

இன்று பிழைக்க ஓர் ஊர் சென்றாலும் மொழி உணர்வை விடாது பதிவுகளிலும், எழுத்துலகிலும் எழுதி வரும் எத்தனையோ பேரின் முன்னோடி சுஜாதா, அறிவியல் துறையில் இருந்தாலும் அது பிழைப்புக்கு, மகிழ்ச்சிக்கு தம் எழுத்து என்று வாழ்ந்து காட்டியதன் மூலம்!

செந்தமிழ் மொழி பெரும்பாக்கியம் பெற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழைப் பெருமை படுத்த தோன்றி கொண்டே இருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் அறிவியல் பாய்ச்சல் போடும் போது, தமிழும், தமிழனும் தேங்கி விட்டு காணாமல் போய் விடக் கூடாது என்று பிறந்தவர் தான் இவர்.

எளிய தமிழில் அறிவியலை அறிமுகப்படுத்துவதில் இருந்து, சங்கத் தமிழை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது வரை ஒரு தொடர்ச் சங்கிலியின் இன்றியமையாத கண்ணியாக இருந்தார் எனில் அதில் மிகையில்லை.

ப்போது அவரது மரணம் தமிழ்க் குடும்பங்களுக்கு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வலியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் தான் அந்த ஓர் எழுத்தாளராய் அம்மனிதரின் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கின்றது. ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்த அந்த மாமனிதர் அமைதியில் நிறைவு கொண்டு அங்கேயே இருந்து விட மாட்டார்..!

ஒரு பயணம் சென்றிருப்பது போல் அரங்கனின் அடி காண சென்றிருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து வந்து தம் பயண அனுபவங்களைக் கண்டிப்பாக எழுதுவார்.

அது வரை கணேஷ் - வசந்தையும், மதுமிதாவையும், தேவதைகளையும், மாஞ்சுவையும், திருவரங்கத்தையும் பார்த்துப் பார்த்து நம்மை அமைதிப்படுத்திக் கொள்வோம்...!

5 comments:

lakshmishankar said...

Dear "Vasanth"

Yes, I too was shocked on seeing the news in The Hindu. Just yesterday, I was browsing through "WriterSujatha.com" and today this news sounds like some cruel play by fate.

Sujatha has been the inspiration to many of today's writers including Mr.Balakumaran. His stories and articles have often left me wondering how he finds the time to research the topics he writes. Sujatha's death leaves a big void in the Tamil Literary World that will not be filled in the near future.

Let's pray for the grieving family.

வந்தியத்தேவன் said...

மிகவும் அருமையான அஞ்சலிக்கட்டுரை, நிச்சயமாக கணேஷ்ம் வசந்த் அழியாப்புகழ் பெற்ற கதாநாயகர்கள் தான் அவர்கள் இருக்கும் வரை அமரர் சுஜாதாவின் புகழும் இருக்கும்.

Anonymous said...

Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?

Anonymous said...

அந்த சிறுவனின் போட்டோ சூப்பர் . தெருவோர சிறுவனாக இல்லாமல் shoe pant போட்டுக்கொண்டு அழுவது . உன்னை matriculation பள்ளியிலேயே படிக்க வைத்திருந்தால் தமிழில் இந்த அளவு புலமை வந்திருக்குமா .நிறைய நேரங்களில் நான் நினைத்துக் கொள்வதுண்டு matriculation பள்ளியில் படிக்க வைக்காமல் போய் விட்டோமே என்று . ஆனால் அதுவும் நன்மைக்கே என்று இப்பொழுது புரிகிறது .தமிழில் உனக்கு இவ்வளவு ஆர்வமா. sujathavukkum உனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருவருமே software engineer.,rohini நட்சத்ரம் .ஸ்ரீ ரங்கத்தை இருவருக்குமே ரொம்ப பிடிக்கும் .அவருக்காவது சொந்த ஊர் .உனக்கு . அது எப்படி. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதைகளில் அறிவியல் கதை ,கிராமத்து கதை,கணினி கதை, என்று பல முகங்கள் உண்டு நீயும் ஒரு குட்டி எழுத்தாளர்தான் அதில் எனக்கு பெருமை உண்டு. எனக்கு சிறு வயதிலேயே சுஜாதாவை மிகவும் பிடிக்கும் .அப்பொழுது சயர்க்கைகோல் பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார் ,அது நன்றாக இருக்கும் .அதுவும் தமிழில். அதனாலேயே அவரது கதா பாத்திரங்களில் ஒருவரான வசந்த் பெயரையே உனக்கும் வைத்தேன் .நீயும் சுஜாதாவின் ரசிகனாக ஆகி விட்டாய்.

இரா. வசந்த குமார். said...

Dear Lakshmishankar,

It was really a very shocking news to me also. Really it will not be the same for a tamil reader further. without reading sujatha's writings, how can we read any tamil magzine? Truly, it is a void that sujatha left to us. It wont get filled by anyone.

அன்பு வந்தியத்தேவன் ஐயா... மிக நன்றிகள். எழுத்தாளர்கள் கோலோச்சிய '70- '90 காலகட்டங்களில் சுஜாதா ஒரு சக்ரவர்த்தியாக இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது அக்காலத்துக் கதைகள் படிக்கையில் அது சத்தியம் என்று தெரிகின்றது. அவருக்கு மரணம் கிடையாது. அவரது எழுத்துக்கள் வழி என்றும் ஜீவித்திருப்பார்.

Anony.. Its True. Within lakhs of tamil minds, he live eternity...

அம்மா.. உங்களது ஒப்பீடு எனக்கு மகிழ்வு தருகின்றது. மிக்க நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு!