Tuesday, April 29, 2008

நீங்கள், நான் மற்றும் நான், நீங்கள்.

ங்களை மட்டும் அனுமதிக்கிறேன். வேறு யாராவது பார்த்தால் ஏழு வருடம் புழலிலோ, வேலூரிலோ களி திங்க வேண்டி வரும். தெரிந்திருக்கும். நான் ஒன்றும் தண்ணீர்த் தொட்டி திறந்து வைக்கப் போவதில்லை; மேம்பாலம் ரிப்பன் கட் செய்யப் போவதில்லை என்று!

கொலை சார்...! சூடாக அப்படியே கழுத்தின் கோட்டில் மெல்ல வழுக்கிக் கொண்டு வரும் வகையில் ரத்தம் வழிய வேண்டும். கண்கள் துடிக்க, கைகள் காற்றில் விசிற, கால்கள் மெல்ல அடங்க செய்ய வேண்டும்.

யாரை? அவளை.

அவள் யார்? சொல்கிறேன்.

அதற்கு முன் நான் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவளைச் சத்திக்க வேண்டும்; கடைசியாக ஒருமுறை என்று சொல்லி இருக்கிறேன். யாருக்கு என்பதை மறைத்து விட்டேன். எதற்கு சொல்ல வேண்டும்? அவளாகவே தெரிந்து கொள்ளட்டுமே..! பட், தெரிந்து கொள்ள அவள் இருக்க மாட்டாள்.

முதலில் ஷேவ் செய்து கொள்ள வேண்டும். பளிச்சென்று இருந்தல் தான் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் அவளுக்குப் பிடித்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

நுரை ததும்பி முகமெங்கும் பொங்க, முதலில் இடது கன்னத்தில் இழுத்தேன். கன்னம் பளிச்சென்று மாறியது. பொட்டுத் துளியாய் ஒரு இரத்தப் புள்ளி.

முதலில் வலது கன்னத்தை ஷேவ் செய்வது என்பது பழக்கத்தில் வந்துவிட்டது. காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க இது நேரம் இல்லை. இருந்தாலும் சொல்லி விடுகிறேன். நான் முடிக்கும் வரை நீங்கள் யோசிக்கலாம் அல்லவா? வலது பக்கம் செல்வது என்பது எல்லோர்க்கும் இங்கு பதிந்து போய் விட்டது. ரோட்டில் செல்லும் போது வலது புறமே செல்ல வேண்டும். பேருந்துகளில் வலதுபுறமே படிக்கட்டுகள். கொஞ்சம் பேர் வலது கையில் சாப்பிடுகிறார்கள்.

முதலில் பூத்த இரத்தத் துளியைத் துடைத்து விடுவதற்குள், இடது புறமும் சில துளிகள் எட்டிப் பார்க்கின்றன. பொறுத்துக் கொள் அருண்! இந்த எரிச்சலை அனுபவி! பரபரவென சொறிந்து கொள்ள வேண்டுமென்ற அரிப்பை அடக்கிக் கொள்! உள் ஊறும் கோபத்தை அவள் மேல் திருப்பு !

டெரிகாட்டன் க்ரீன் ஷர்ட். ஃபுல் ஹேண்ட். பீட்டர் இங்லாண்ட் ப்ளாக் நிற பாண்ட். அடிடாஸ் வாட்ச். சம்பந்தமே இல்லாத டை மட்டும் தான் கட்டவில்லை. அப்பட்டமான ப்ரொபஷனல் போல் இருந்தேன். நான் ஒரு கொலை செய்யப் போகிறேன் என்று கிளி ஜோசியக்காரனே வந்து சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை.

யூனிகார்னை எடுத்துக் கொண்டேன். சரியான குதிரை சார் இது! ஈ.ஸி.ஆர் ரோட்டில் இரவுகளில் நடக்கும் ரேஸ்களில் டோல்கேட் தாண்டி மகாபலிபுரம் வரை பறக்கின்ற வண்டிகளில் இது அடிக்கடி ஜெயித்து விடும் குதிரை.

அவளைப் போல! எங்கே பார்த்தேன் முதலில்?

கிண்டி ஸ்டேஷனில்!

ஒரு காலை! சென்னையின் காலை நேரங்களை இரண்டு வகைகளாக மட்டுமே வகைப்படுத்தலாம். வேலை நாட்கள். விடுமுறை நாட்கள். மற்றபடி நாட்கள் கணக்கில் வித்தியாசமே சொல்ல முடியாது. அப்படி ஒரு செவ்வாய்க் கிழமை தான் அவளைப் பார்த்தேன்.

தாம்பரத்தில் இருந்து பீச் வரை செல்லும் மின்புயல் வந்து நின்றது. கொத்துக் கொத்தாய் இறங்கியும், ஏறியும், கால்களை மிதித்தும், பெட்டிகளை நசுக்கியும், வியர்வை கொதி வெயிலில் குளித்துக் கசங்க, விசில் அடித்தது. மெல்ல நகர்கையில் அவள் ஓடி வந்தாள்.

மஞ்சள் சுடிதார். ரோஸ் துப்பட்டா. கையில் கொஞ்சம் புத்தகங்கள். சின்னப் பொட்டு. ஒற்றைப் பின்னல். 'இந்த வண்டி மிஸ் பண்ணினால், அரை நாள் லீவ் விழுந்து விடுமே' என்ற அச்சம் அவள் கண்களில் தெரிந்தது. முடிவு செய்தேன். வலது கையில் 'ப' கம்பித் தொங்கலை இறுக்கிப் பிடித்து, இடது கையை நீட்டினேன். அரைக்கும் அரை நொடி தயங்கியவள், வலக்கையில் புத்தகங்களை இறுக்கப் பிடித்து, சட்டென்று அவளது இடக்கையை நீட்டினாள்.

அப்படியே இழுத்துக் கொண்டேன். யாருக்கும் அப்படியொரு ரோஜாப் பூ அழகியை தவிர்க்க மனம் வராததால், கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டார்கள். ஒற்றை இடக்கால் உள்ளே இருக்க (யாருடைய கால்களை எல்லாம் மிதித்தாளோ? ஒரு முணுமுணுப்பு கூட கேட்கவில்லை!) வலக்கால் வெளிக் காற்றில் அலைபாய, அடையாறு சாக்கடையை (அது நதியா? சரி தான்!) கடக்கையில் மட்டும் இறுக்கக் கண்களை பூட்டிக் கொண்டாள். 'தடக்..தடக்' என ஒவ்வொரு காலாய்க் கடக்க, கொஞ்சம் உள்ளேயே இழுத்துக் கொண்டேன். புத்தகங்களை யாரோ வாங்கிக் கொள்ள மற்றொரு கை என் தோள்களை அழுத்திப் பிடித்திருக்க, மேலேயே சரிந்து இருந்தாள்.

உடனே காதல் முளைத்திருக்குமே? புரிகிறது. உங்கள் பார்வையிலிருந்து தெரிந்து கொள்கிறேன், உங்கள் கேள்வியை!

தெல்லாம், மஞ்சள் கலர் டாய்லெட்டும், கொஞ்சம் உயர ப்ளாட்பாரங்களில் ஒண்ணுக்கடித்து அடித்து, பழுப்பு சாயம் ஏறி நாற்றமெடுத்த, மூலைகளில் வெற்றிலை, புகையிலை துப்பல்கள் நிறமேற்றிய திரையரங்குகளில் ஓடும் மூன்றாம் தர தெலுங்கு டப்பிங் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆகும்.

காலை பத்து மணி சென்னை வெயில் கொளுத்தித் தள்ள, உள்ளாடை வரை உருகி உருகி வியர்வை பெருகி ஓட, நசநசக்கும் கூட்ட நெரிசலில் உயிர் பிழைத்திருக்கவே ஒரு 'ப' கம்பியை நம்பி அந்தரத்தில் பயணம் செய்யும் யுவனுக்கும், யுவதிக்கும் Survival எண்ணம் மட்டுமே மிச்சம் இருக்கும்.

சைதையில் துளியூண்டு மன்பதை இறங்க, கிடைத்த இடத்தில் நுழைந்து கொண்டாள். பின்பு, நுங்கம்பாக்கம் வரை நடந்த உரையாடலை நீங்கள் எல்லாக் கதைகளிலும், படங்களிலும் கொஞ்சம் ஒத்த வசனங்களோடு கேட்டிருக்கலாம். இருந்தாலும் உங்களுக்காக:

"ரொம்ப தேங்ஸ் சார்!!"

"இட்ஸ் ஓ.கே. இட்ஸ் மை ட்யூட்டி! பை த வே, நோ மோர் சார். அடுத்த ட்ரெய்ன்ல வரக்கூடாதா?"

"இல்லை. இதுல தான் கரெக்ட் டைம்க்கு காலேஜ்க்கு போக முடியும்."

"அப்ப, கொஞ்சம் சீகிரமாகவே வந்திருக்கலாம் இல்லையா?"

"எப்பவுமே முன்னாடியே வந்திடுவேன். இன்னிக்கு வீட்டில கொஞ்சம் வேலை அதிகமா வந்திடுச்சு! அதனால...."

"பஸ்ல போகலாம் இல்லையா?"

"பஸ்ல ரொம்பக் கூட்டம். அது மட்டும் இல்ல. அப்பாக்கு ரெயில்வே பாஸ் இருக்கு. அதைத் தான் நான் யூஸ் பண்ணிப் போய்க்கிட்டு இருக்கேன்."

"எந்த காலேஜ் நீங்க?"

மவுண்ட் ரோட்டின் ஒரு பூஞ்சோலையைச் சொன்னாள்.

"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?"

"நான்..."பாக்கெட்டில் இருந்து ஒரு ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டினேன்.

லது கை 'ப'வைப் பிடித்திருக்க, இடது விரல்களில் மினுமினுத்த காந்த அட்டையில் என் ஜாதகமே பதிக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ணுற்றவள் அதிசயித்தாள்.

"நீங்க அந்தக் கம்பெனியிலயா ஒர்க் பண்றீங்க? அதில தான் எங்க அக்கா ஹஸ்பண்டும் இருக்கார். நீங்க எந்தா ஆஃபீஸ்?"

"ராயப்பேட்டை. சர்ச் பார்க் கான்வெண்ட் கட்ல திரும்பி இராயப்பேட் ஃப்ளைஓவர் பார்த்து நடந்தோம்னா வரும்."

"அவர் அம்பத்தூர் ஆஃபீஸ்..!"

அதற்குள் நுங்கம்பாக்கம் வந்திருக்க, "பை..!" "பை..!"

மேலும் வளர்ப்பானேன்?

தினமும் கிண்டியில் இருந்து நுங்கை வரை ஒரு காதல் தடம் உருவானது. ப்ராட் கேஜா, மீட்டர் கேஜா என்று குழம்பாமல், பொன் பாதை உருவானது. எனக்கும் கவிதை எழுத வந்தது.

'நீ
இரும்புத்
தண்டவாளத்தில்,
நடந்து வரும்
ஒரு
கரும்பு'

என்று உடைத்து, உடைத்து எழுத 'கவிதை சூப்பர்' எனப் பொய்ப்பட்டது.

சத்யம், தேவி, ஈகா, அபிராமி, மாயாஜால், 6டிகிரி, பிரார்த்தனா என்று தியேட்டர்களின் மென் சீட்டுகளின் புதைகளில் புதைந்து வளர்ந்தது. சங்கீதா, தோஸா கார்னர், ஷேக்ஸ் அண்ட் க்ரீம்ஸ், முருகன் இட்லி கடை, சரவணபவன், சவேரியா என்று சுவைக்கப்பட்டது. மயிலை, பெசன்ட் நகர், வடபழனி, தி.கேணி என்று தெய்வீகமாக்கப்பட்டது. போத்தீஸ், சென்னை சில்க்ஸ், சங்கரபாண்டியன், குமரன் என்று பளபளவென செலவழிக்கப்பட்டது.

ன்று அவளை வரச் சொல்லி இருக்கிறேன். ஓர் இருட்டின் அறைக்கு. ரெஸ்டாரண்ட்டில் நமது காதலுக்கு ஒரு சமாதி. இனி உன் வழி தனி. என் வழி தனி. இனிமேல் உனக்குப் பார்த்தவனை மணக்கலாம். இரு அழகிய குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். அவை உச்சா போக டயஃபர் மாற்றி, மதியத்தின் சீரியல்களில் மூழ்கி கண்ணீர் விட்டழ, மாலையில் வீடு திரும்பும் புருஷனுக்கு கால் அமுக்கி விட்டு, காபி கலந்து கொடுத்து, இரவுகளில் இயல்பிழந்து, தலை நரைத்து வெகு காலங்களுக்குப் பிறகு, சென்ற கோடானு கோடி ஜீவன்களில் நீயும் ஒரு புகையாகிச் செல்லலாம். அதற்கு முன் ஒரு முறை சந்திக்கலாம், வா!

வருகிறாள். இன்று. இப்போது.

நீங்களும் வரலாம் சார். தவறு இல்லை.

அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாள் பாருங்கள். தெரிகிறது. உங்கள் கண்களில் அந்த ஆச்சரியம், பிரமிப்பு. எவ்வளவு அழகி அல்லவா? எனக்கும் அப்படித் தான் இருந்தது. கழிந்த
இனிப்புப் பொழுதுகளில்! கவிதை போல் சொல்கிறேன் அல்லவா? எச்சம்.

பாவி. அதே ட்ரெஸ் அணிந்திருக்கிறாள். அதைச் சொன்ன அதே நாளில் அணிந்திருந்த ஆடை.

"சொல்லு வைஜூ! எதுக்கு என்னை அவசரமா வரச் சொன்ன?"

"அருண்! எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறதா முடிவு பண்ணிட்டாங்க!"

"என்ன சொல்ற? இன்னும் படிப்பே முடியல? அதுக்குள்ள எப்படி..?"

"தெரியல. நம்ம விஷயத்தை யாரோ சொல்லி இருக்காங்க. அதான் அவசரப்படறாங்க..."

"சரி..! நான் வந்து வீட்டுல பேசட்டுமா?"

"அய்யய்யோ! வேற வினையே வேணாம்..!"

"பின்ன என்ன தான் பண்றது?"

"எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. சிங்கப்பூர்ல இருக்கார். அடுத்த மாசம் மேரேஜ். நீங்க என்னை மறந்திடுங்க.."

"வாட் இஸ் திஸ்...? சின்ன சின்ன ஸ்டேட்மெண்ட்ல உன் வாழ்க்கையையே சொல்லிட்டா, எல்லாம் முடிஞ்சுதா? அப்ப நம்ம காதல்? சாந்தி தியேட்டர் இருட்டு மூலைகளில்..."

"ஸ்டாப் திஸ் அருண்! எல்லாம் ஓவர். எங்க வீட்டுல நம்ம காதலைச் சொன்னா உடனே எங்கப்பா, அம்மாவை உயிரோடயே பார்க்க முடியாது..! நீங்களும் என்னை மறந்திடுங்க.. ப்ளீஸ்...!"

"வாட் பிஸ்னெஸ் இஸ் திஸ்...? சிங்கப்பூர் மாப்பிள்ளைனு சொன்னதும் மயங்கிட்டயா..?"

"திஸ் இஸ் த லிமிட் அருண். நீங்க வரம்பு மீறிப் பேசறீங்க. அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன்..."

"என்னடி புரிஞ்சுக்கறது..? காதல், காதல்னு சுத்தறது. அப்புறம் டாட்டா காட்டிட்டு போறது.."

"ஓ.கே. அருண். நீங்களும் ஆவரேஜ் ஆம்பளைனு காட்டிட்டீங்க. ஃபேமிலி ப்ரெஸ்டீஜ் தான் முக்கியம்னு நான் முடிவு பண்ணிட்டேன். குட்பை..!"

ஸ்கூட்டியின் வலது புறத்தில் இவளும், இவளின் இடது புறத்தில் ஸ்கூட்டியுமாக நகர 'இரண்டையும் உதைத்தால் என?' என்ற எண்ணம் முளைத்தது. ஏறி 'FREE LEFT' போர்டின் கீழ் வலது கை காட்டி, வளைத்து மறைந்தாள்.

வளை என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

அப்படியே கடித்துத் தின்றால், என்ன? வெனிலா மேல் செர்ரி க்ரீம் உருகி ஊற்றுகிறது அல்லவா, அது போல் ஒரு இரத்தாக் கோடு வழிந்தாக வேண்டும் என்று கை பரபரக்கிறது. பொறு. கூட்டம் குறையட்டும்.

அவளுடன் பேசுகிறேன். ஏதேதோ. வழக்கமான டயலாக்குகள். நீங்களும், நானும், அவளும் ஸினிமாக்களில் கேட்டுக் கேட்டுச் சலித்த வசனங்கள்.

'ஏன் இப்படி?',' வேற வழியே இல்லையா?','வீட்டில வந்து பேசட்டுமா?',' ஓடிப் போயிடலாம், வா!'..

எல்லாம் வெறும் விளையாட்டு என்று எனக்குத் தெரிகிறது. பெல்ட் இடுக்குகளில் மறைத்த கத்தி லேசாக குத்துகிறது.'எப்போது வேலை கொடுக்கப் போகிறாய்?'. பொறு. என் ஆசைக் கத்தியே. உனக்கு வெண்ணை போன்ற ஒரு கழுத்தைத் தருகிறேன். ஆசை தீர எடுத்துக் கொள்...

ருவரும் வாஷ் பேஸினுக்குப் போகிறோம். இரண்டு பேஸின்கள். ஒன்று எனக்கு. மற்றொன்று அவளுக்கு.. இல்லையில்லை அவளது சூடான இரத்தத்திற்கு... ப்ளாஸ்டிக், எலாஸ்டிக் பூ போட்ட நீலப் படுதாக்களால் எங்களை மறைத்துக் கொள்ளும் முன் எட்டிப் பார்க்கிறேன். அந்த ஃபேமிலி ருமில் வேறு யாருமில்லை. நானும், என் இனிய,அழகிய எதிரியும் மட்டும்.

குனிந்து, கண்ணாடி பார்த்து, துப்பட்டாவை இழுத்து மறைத்துக் கொண்டாள்.கள்ளி..!

மெதுவாக அருகில் நெருங்கினேன். பெல்ட் இடைவெளியில் பொதிந்த கத்தியை மெல்ல, மெல்ல எடுத்தேன். அவள் கவனிக்கவில்லை. முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

'சரேல்...'

வலது தோள் பட்டையில் ஒரு சின்ன மச்சம் அவளுக்கு உண்டு. அதன் அருகு வரை ஒரு சிவப்புக் கோடு வழிந்தது.

னது வலது கை அவளது சிவந்த உதடுகளைச் சேர்த்து இறுக்கப் பிடித்திருக்க, அவளது வலது தோள் பட்டையில் ஒரு இழு, இழுத்தேன். இடது கையில் இருந்த கத்தியின் நுனி 'சுடச் சுட நனைந்தது'.

எப்படி பூ மாதிரி சரிகிறாள், பாருங்கள்.

திரடியான பாடல்கள் காற்றை நிரப்பிக் கொண்டிருந்ததால், அவளது சிறு முனகலும் கேட்க முடியாமல் ஆனது. அப்படியே சரித்து, ஒரு திட்டின் மேல் அமர வைத்தேன். சரிந்து விழுந்தாள்.

ஒழிந்தாள் த்ரோகி!

கத்தியைக் கழுவினேன். நிமிர்ந்து பார்த்தேன்.

வன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அச்சமில்லாத பார்வை. எதற்கும் கலங்காத, அதற்கும் தயாராய் வந்திருப்பவன் போல் நின்றிருந்தான். அவனது சிவந்த டீ-ஷர்ட்டில் ஒரு மென் சிவப்புத் தீற்றல். இடப்பக்கம் முழுதும் ஒரு இறகு போல் சிதறி இருந்தது.

என்ன செய்கிறான்...? குனிந்து அதைக் கழுவிக் கொள்ளத் துவங்குகிறான்.

முதலில் இந்தக் கறை போக கழுவ வேண்டும். வாரி, வாரி தண்ணீரை இறைத்துக் கொண்டேன். ஓரளவு போனதும், அங்கிருந்த ஒரு கல்லை எடுத்தேன். சோப்பு நுரைகளால் நிரம்பி வழுவழுவென இருந்தது.

ரே அடி...!

ண்ணாடி சுக்குநூறாய், இல்லை சுக்கு ஐநூறாய் நொறுங்கியது. அவன் சிதறினான். கூரான முக்கோணங்களாய், ஒழுங்கற்ற சதுரங்களாய் அவன் சிதறினான். அவன் முகம் நொறுங்கியது. அவன் உடல் நொறுங்கியது. அவன் கையில் இருந்த கல் நொறுங்கியது. அவன் முன் நீர் பாய்ந்து கொண்டிருந்த வாஷ் பேஸின் சிதறியது. அவன் அருகில் நின்று கதை கேட்டுக் கொண்டிருந்தவன் சிதறினான். அவனது வலப்புறமாய்ச் சரிந்து, சத்தியமாய்ச் செத்திருந்த இடப்புறத் தோள் பட்டையில் கடுகு மச்சத்தில் இரத்தம் தேங்கி இருந்த அவள், சிதறினாள்.

ந்தோஷம். மகிழ்ச்சி. நான் செய்த கொலையைப் பார்த்த ஒருவனும் இல்லை. அவனை உடைத்து விட்டேன். நீங்கள் பயப்படாதீர்கள் சார். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். வாருங்கள் போகலாம். யாரேனும் வந்து விடப் போகிறார்கள்.

"என்ன சார்.. உங்க ஷர்ட் ரைட் சைடு ஃபுல்லா ஈரமா இருக்கு..?" ரெஸ்டாரண்ட் ஓனரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், விரைகிறோம்.

"சார்... மீதி வேணாமா...?" காற்றில் உலர்ந்து உறைகிறது அவர் குரல்.

ஹேப்பி...! இனிமேல் நிம்மதியாய் உறங்கலாம். ஒரு த்ரோகி இல்லை இப்போது. கண்ணாடி வழி பார்த்த சாட்சியும் இல்லை..! உடைத்து நொறுக்கியாயிற்று...!

கன்னத்தில் காலை வெட்டுப் பட்ட காயம் அரித்தது.

தேய்த்து விட்டுக் கொண்டு கண்ணாடி பார்த்தேன்.

வன் அங்கு நின்று கொண்டிருந்தான், என்னைப் பார்த்துக் கொண்டு.

திர்ச்சியாய்...

...இருந்தது....!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

No comments: