Friday, May 02, 2008
இன்று ஹர்த்தால்.
'ஸோ வாட்?' என்கிறார்கள் கேரளாக்காரர்கள்.
இது ஒரு மாதம் இருமுறை சடங்காகவோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் விழாவாகவோ இங்கு நடத்தப்படுகின்றது. ஒரு மாதிரி இதை எல்லாம் எதிர்பார்த்திருப்பது போலவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள். வின்சென்ட் வான்கா எவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனக்கு ஏற்படும் மனப்பிறழ்வுக்கு தயாரானாரோ, அதுபோல் இம்மக்களும் ஹர்த்தாலுக்கு தயாராகவே செய்கிறார்கள். முந்தின நாள் மாலையே அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் எல்லாம் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மறு நாள் போலிஸ் பேட்ரல் அவ்வப்போது நகர்வலம் வர, கொட்டாவி விட்டுக் கொண்டு சூர்யா டி.வி.யிலோ, ஏஷியாநெட்டிலோ ஆழ்ந்து நாளைக் கழிக்கிறார்கள்.
ப்ளெய்ன் ஷ்ரட், டார்க் பேண்ட், பூப் போட்ட டை, பாலிஷ்ட் ப்ளாக் ஷூ என்று ஒப்பனைகளோடு கம்பெனிக்கு செல்ல நடந்து போகையில் அடைந்த கதவுகளோடு ஷாப்புகளையும், இறுக்க மூடிய பலகைகளோடு பெட்டிக் கடைகளையும் பார்க்க கொஞ்சம் பயம் வருகிறது. வழியில் யாராவது செங்கொடித் தோழர்களோ, காவிக் கொடி அன்பர்களோ கேட்டால், கொளுத்து வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால், போக விட்டு பொடனியில் அடிப்பதற்கான சாத்தியங்கள் இருநூறு சதம் இருப்பதால், பயத்துடனே நடக்க வேண்டியதாக இருக்கிறது.
நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்து டெக்னோபார்க் வரை வருபவர்களின் பாதுகாப்பிற்காக ஆஃபிஸ் பேருந்துகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவலரோடு வர, ஒரு மாதிரியான ஸேஃப்டியோடு வருகிறார்கள். ஐ.டி. பார்க் வாசலிலும் காக்கித் தொப்பைகள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.
வெளியில் உள்ள ஹோட்டல்கள் மூடி இருப்பதால், டெக்னோபார்க்கின் உள்ளே இயங்கும் கஃபே மோஜோ, நிலா, பவானி உணவகங்களில் கூட்டம் அப்புகிறது. ஒரு மசால் தோசை, கொஞ்சம் கெட்டிச் சட்னிக்காக காலையில் ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்கையில், எதற்காக இந்த பந்த் என்று யோசித்தேன்.
விலைவாசி உயர்விற்காக பா.ஜ.க. நடத்தும் பந்த் என்கிறார்கள். இது போன்ற போராட்டங்களினால் எத்தனை கோடி நஷ்டம், எத்தனை பேருடைய தினப்படி வாழ்க்கை அவதிக்குள்ளாகிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தகைய போராட்டங்கள் வலுவிழந்து வருகின்றன என்பது இவர்களுக்கு இது ஒன்றும் எறும்பு கடித்த அளவுக்கு உணர்வை கூட ஏற்படுத்தவில்லை என்பதில் இருந்து புரிகிறது. ஆறு மணிக்கு வெளியே வந்து வேஷ்டியை மடித்து விட்டு, சாயா குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தம்மபதம் பாகம் - 5ல் புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை 'நிகழ்ச்சி' என்கிறார் ஓஷோ. அது 'செயல்' அல்ல, 'நிகழ்வு' என்கிறார். ஹர்த்தால் ஒரு செயலாக இங்கு உருப்பெற்று விட்டது என்பதும், கேரளம் ஏன் இத்தனை வளங்கள் பெற்றும், ஒரு மோசமான நிலையில் (ஒப்பீட்டில்!) உள்ளது என்பதும் உ.நெ.யாக விளங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment