Monday, June 30, 2008

270 டிகிரியில் ஒரு காதல் ப்ரபோஸல்!

வள் அத்தனை அபார அழகோடு அமைந்திருந்தாள்.

இடம் : ப்ளானிடோரியம். நாள் : சுப தினம். நேரம் : நல்ல நேரம்.

வெண்மையான நிறம். வாகான உடல். கூர்மையான நாசி. பளபளக்கின்ற கண்கள் என்று சிரித்தாள். யூரோப்பிய மங்கை போலிருந்தாள். நம் பக்கங்களில் இத்தகைய ஒரு வெண்மை சாத்தியம் இல்லை. டீ-ஷர்ட் போல் ஏதோ அணிந்து அதில் ஏதோ வாக்கியம் எழுதி இருக்க அதைப் படிக்க முயன்றேன்.

"ரொம்ப கஷ்டப்படாதீங்க..! அங்கே My world is not Flat..!" என்று விகல்பமில்லாமல் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் எதிராளியைச் சிதறடிக்கும் வாலி பலம் அரை அவுன்ஸ் இருந்தது.

கால் செகண்ட் வழிந்து விட்டு, "உங்களை இங்கே இப்போது தான் முதன்முதல் பார்க்கிறேன். நீங்கள் இங்கு வருவது இது தான் முதல் முறையா..?" என்று கேட்டேன்.

"எஸ்..! திஸ் இஸ் தி ஃபர்ஸ்ட் டைம். பை த வே, என் பெயர் ம்ருதுளா..!" கை நீட்டினாள்.

இளஞ்சூடு மிதக்க, அவள் பெயர்க்காரணம் சொல்லியது அந்த கைகுலுப்பு.

"இட்ஸ் ரியலி ஃபண்டாஸ்டிக் இல்லையா..? நம் கை அதிர்வுகளுக்கு ஏற்ப மின் விளக்குகள் கண் சிமிட்டி மின்னுதல்..!" என்றாள்.

"ஆம்..! நீங்கள் இன்னும் இந்தப் பகுதியில் நிறைய பார்க்கலாம். மிர்ரர் அதிசயங்கள், ராமானுஜம் விளக்கங்கள், விலங்குகள் அறை, போக்குவரத்து பரிமாணங்கள் இன்னும் நிறைய. ஆனால் இவற்றை விட எனக்கு அதிசயமாய் இன்று தெரிவது ஒன்று தான்..!" என்றேன்.

"என்ன அது..?" பதில் தெரிந்து கொண்டே கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அது போல்.

"நீங்கள் தான்...!"

"ஏன்..?" மின்னலாய்ச் சிரித்தாள்.

"என்ன என் பதிலுக்கு நீங்கள் அதிரவே இல்லை? பழைய தமிழ்ப் படங்களின் தாவணிக் கதாநாயகிகள் போல் 'ச்சீ..! இவ்வளவு தானா உங்கள் கண்ணியம்.." என்று கூறி ஒரு கீழ்ப்பார்வை பார்த்து விட்டு ஓடவில்லை..!"

"ஸாரி..! நீங்கள் கூறுகின்ற படங்களை நான் பார்த்ததில்லை..!"

"நினைத்தேன்..! நீங்கள் ஒரு இன்றைய யுக மங்கை..! ஷிட்னி படித்து விட்டு, செரலாக் குடித்து விட்டு, டெடி பியரோடு இரவுகளைக் கழித்து விட்டு, சனி மாலைகளில் டிஸ்கொதே சென்று ஆட்டத்தில் கலந்து விட்டு, இளைஞர்களைப் பின்னிரவில் த்ராட்டில் விட்டு விடும் நவீன யுக பெண்..? சரியா..?"

"ஆம்..! எனினும் உங்களை விட சிறு பெண் தான்..! என்னை நீ என்றே நீங்கள் சொல்லலாம்..!"

அந்தப் பெண்ணின் மேலிருந்து வீசிய ஒரு சுகந்த மணம் மாலை நேரத்தின் முதிர் வெயிலை மீறி ஈர்த்தது.

"என்ன பெளடர் உபயோகிக்கிறாய்..?ஸ்பென்ஸ்..?"

"இல்லை..! களிமண்..!" என்று மறுபடியும் ஒரு மின்னல்.

இதற்குள் கீழே வந்திருந்தோம்.

"என் பெயரை நீ கேட்கவே இல்லையே..?"

"வேண்டாம். எனக்குத் தேவையில்லை..! எனினும் நீங்கள் என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். உங்களை எனக்குப் பிடித்திருக்கின்றது..!" ஒரு மோன நிலைத் தேவதை போல் புன்னகைத்தாள்.

"சில்ட்ரன்..! எல்லாரும் வரிசையாகப் போகணும்..! சைலன்ஸ்..!"

"மிஸ்..!"

"என்ன..?"

"ஒன் பாத்ரூம் போகணும்..!"

"துரைசாமி..! இவனைக் கூட்டிட்டு போங்க..! அருண்..! சிப்ஸ் பாக்கெட் எல்லாம் எடுக்கக் கூடாது..! அங்கயே வெச்சிடு..!"

"குழந்தைகள் என்றாலே அழகு.. இல்லையா..?"

"ம்..!"

"என்ன ஆயிற்று..?"

"இல்லை..! ரொம்ப வெயிலா இருக்கு...!"

"சம்மர்..! கொஞ்சம் அப்படித் தான் இருக்கும்..!"

"ப்ளீஸ்..! நாம் அந்த ப்ளானிடோரியத்துக்கு உள்ள போயிடலாமா..? என்னால இந்த வெயில் தாங்க முடியல..! அப்படியே உருகிப் போயிடுவேன் போல் இருக்கு..!"

உண்மை தான். அந்த வெண் கைகள் ரத்தம் பொங்கி சிவப்பாக இருந்தன.

டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். எங்களோடு குழாமாக சின்னஞ்சிறு குழந்தைகளும் நுழைந்தனர்.

கம்மென்ற ஏ.ஸி.யின் குளிர் வீசியது. அமைதியான ஒரு சூழலில், அலுமினியம் டோமின் கீழே 270 டிகிரியில் சாய்ந்து அமர்ந்திருக்க, GMII ப்ரொஜக்டர் ஒரு பிரம்மாண்ட ராட்சஸன் போல் மல்டி பல்புகளில் ஒளியை விசிறி அடித்து அபார ஆங்கிலத்தில் பொழிந்து கொண்டிருந்த ஒரு நேரத்தில், "ஐ லவ் யூ..!" என்றாள்.

சுற்றிலும் மேலான குளிரில் குழந்தைகள் அனைத்தும் உறங்கி இருக்க, ஆசிரியைகள் அசமந்தமாய்க் கழுத்தைத் தடவிக் கொண்டிருக்கையில் நாங்கள் இருவர் மட்டும் இருநூறு சதம் முழு விழிப்புணர்வில் இருந்தார்ப் போல் தோன்றியது.

"பார் பெண்ணே..! நீ யார் என்று தெரியாது..! உன் ஊர் எது? எனக்குத் தெரியாது. உன் குடும்பம் என்ன..? அறியேன்..? அரை நாள் பழக்கத்தில் காதல் வரும் அளவிற்கு நான் ஒன்று அழகன் அல்லவே..?" என்றேன்.

"அழகாய்ப் பேசுகிறீர்கள். எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களைத் தேடித் தானே இங்கே வந்தேன். பெருங் குளிரில் ஆண்கள் எல்லாம் அழிந்து போய் விட நாங்கள் கொஞ்சம் பேர் மட்டும் மிஞ்சி இருக்கிறோம். உங்களைத் தேடி நான் வந்ததைப் போல் வெவ்வேறு இடங்களுக்கு என் தோழிகளும் சென்றிருப்பார்கள். அவர்கள் காரியத்தில் வெற்றி பெற்று விட்டதை என் உள்ளுணர்வில் அறிகிறேன். நானும் வென்றாக வேண்டும். என் வீடு எது என்று கேட்டீர்கள் அல்லவா..? அதோ பாருங்கள்..!"

Viewers..! Now you are seeing the Neptune...! The Eighth planet in the solar galaxy...! It has...

வெண் பொரிகளாய் நட்சத்திரங்கள் சுற்றியும் விழுந்து கொண்டிருக்க ஒரு நீல உருண்டையாய் நெப்டியூன் கிரகம் பிரம்மாண்டமாய் மேலிருந்து விரிந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

என் இடது தோளை ஒரு கையால் பிடித்து, மறு கையின் நீள விரலால் நெப்டியூனைச் சுட்டிக் காட்டினாள்.

அவள் கை மகா ஜில் என்று இருந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

2 comments:

யோசிப்பவர் said...

வார்த்தைகளிலும், நடையிலும் அப்படியே சுஜாதா. முடிவை முதலிலேயே ஊகித்து விட்டேன். இருந்தாலும் நடை அருமை!!!;-)

பி.கு : போட்டிக்கு எத்தனை கதைகள் எழுதுவதாக உத்தேசம்?;-)

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர் ஐயா...

/*
வார்த்தைகளிலும், நடையிலும் அப்படியே சுஜாதா.
*/

இதுக்கு என்ன எக்ஸ்ப்ரஷன் குடுக்கறதுன்னே தெரியல...

/*
முடிவை முதலிலேயே ஊகித்து விட்டேன்.
*/

நீங்க தான் யோசிப்பவர் ஆயிற்றே..! சொல்லணுமா...? ;-))

/*
இருந்தாலும் நடை அருமை!!!;-)
*/

அப்பாடா...! ரொம்ப நன்றிங்க...!

/*
பி.கு : போட்டிக்கு எத்தனை கதைகள் எழுதுவதாக உத்தேசம்?;-)
*/

ஹி..! ஹி..!