Monday, June 30, 2008

விதி எனலாம்!

"...எனவே குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமி குற்றவாளி என சாட்சிகள் மூலம் உறுதிப்பட்டு விட்டதால் அவருக்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிடுகிறேன்..!" பேனா நுனியை உடைத்தார்.

"அடுத்தது என்னப்பா..? காஞ்சனா ரேப் கேஸா..?"

கிருஷ்ணசாமி இரு காவலர்கள் துணையுடன் கூண்டில் இருந்து இறங்கி நடந்தார். வக்கீலைப் பார்த்தார்.

"ஹை கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணுங்க..!" விலகி நடந்தார்.

சிறையில் இருவரும் சந்தித்தனர்.

"என்ன அழகு..? கேஸ் ஹை கோர்ட்டுக்கு போனா நிக்குமா..?"

"கஷ்டம் தான் ஸார்...! விட்னஸ் எல்லாம் நமக்கு எதிராகவே இருக்காங்க. பணத்தால் வாங்கறதும் ரொம்ப கஷ்டம். சுப்ரீம் கோர்ட் வக்கீல் யாராவது இறங்கினா தான் உண்டு..! அப்படியும்..."

"புரியுது..! நீங்க ஒண்ணு பண்ணுங்க! நம்ம இன்ஸ்டிட்யூட்ல விநாயக்ராம்னு ஒரு ரிஸர்ச் அனலிஸ்ட் இருப்பாரு..! அவரை நாளைக்கு ஜி.ஹெச்.க்கு வரச் சொல்லிடுங்க...!"

"சார்..! ஜி.ஹெச்.ல...?"

"இன்னும் கொஞ்ச நேரத்துல நெஞ்சு வலிக்குதுனு படுத்திடுவேன். அங்க தான் அட்மிட் பண்ணுவாங்க. இன்ஃப்ளூயன்ஸ் யூஸ் பண்ணி நம்ம ஹாஸ்பிடல்க்கு மாறிக்கலாம். அப்புறம் நான் ஒரு ப்ளான் வெச்சிருக்கேன்...!"

"ஓ.கே.சார்..!"

"விநாயக் வாங்க..! உங்க கிட்ட சில இரகசியங்கள் சொல்லணும்..! கேக்கணும்..!"

"சொல்லுங்க சார்..!"

"நான் பண்ணினது பெரிய தப்பா..? இல்ல. துரோகம் பண்ணின மனைவியைக் கொல்றது சரி. மிகச் சரியான செயல். என்ன சார் குறை வெச்சேன்? பணம். பணம். எத்தனை பணம்..! எத்தனை நகை? வீட்டுல, பீரோல, பேங்க் லாக்கார்ல எத்தனை பவுன்..! எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு அந்த சுகுமாரோட ஓடிப் போனா சார்..! பொறுக்கல! போட்டுத் தள்ளிட்டேன் ரெண்டு பேரையும். இது தப்பா..?"

"சார்! நம்ம நியாயங்கள் வேற. சட்ட திட்டங்கள் சொல்ற நியாயங்கள் வேற..!"

"நமக்காகத் தான் சட்டங்கள் இல்லையா..?"

"இது கொஞ்சம் குழப்பமான கேள்வி சார்..!"

"சரி! நான் உங்க கூட இந்த தேசத்தோட, இல்லை.. இந்த உலகத்தோட சட்ட திட்டங்களைப் பற்றி பேச விரும்பல. வக்கீல் சொல்லிட்டாரு, ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது. எனக்கு இந்த உலகத்துல வாழ பிடிக்கல. துரோகம் நிறைந்த உலகம். போட்டியாளரை அடியோடு ஒழிச்சுக் கட்ட என்ன வேணா செய்யும் இந்த உலகம். இல்லாட்டி பதினஞ்சு வருஷமா வேலை பார்த்த தோட்டக்காரர்ல இருந்து எல்லாரும் எனக்கு எதிரா விட்னஸ் பண்ண என்ன காரணம் இருக்க முடியும்..? பிற பிஸினஸ் புலிகள். நான் கறுப்பு முகமூடி போட்டு கயித்துல தொங்கி சாக விரும்பல. ஏதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க என்னை..! ப்ளீஸ்..!"

"சார்..! இது என்ன பேச்சு..! இன்னும் ஹை கோர்ட் இருக்கு! சுப்ரீம் கோர்ட் இருக்கு..! வி வில் ட்ரை அவர் பெஸ்ட்..!"

"இல்லை விநாயக்! நான் தப்பிச்சு வந்தாலும் என்னோட மாரல்ஸ் என்னை தினமும் கொல்லும். ரெண்டு பேரைக் கொன்னுட்டமேனு தினம் துப்பும். ப்ளீஸ்..!"

"ஸார்..! இப்ப உங்களுக்கு என்ன..? இந்த உலகத்தை விட்டுப் போகணும்! இந்த ஜனங்களைப் பார்க்கக் கூடாது. அவ்ளோ தான..? நீங்க சாகாம, இந்த உலகத்தை விட்டுப் போக என்னால ஹெல்ப் பண்ண முடியும்..! உங்க நினைவுகள் மட்டும் கொஞ்சம் நிரடும் அப்பப்போ! சமாளிச்சுக்கலாம்."

"என்ன ஒளர்றீங்க..? திரிசங்கு மாதிரி எங்கயாவது நடுவில தொங்க விடப் போறீங்களா..?"

"இல்லை அது புராணம். நான் சொல்லப் போறது சயின்ஸ்..! விளக்கமாவே சொல்றேன். கேக்கறீங்களா..?"

"ஓ.கே. சொல்லுங்க..!"

"ஷ்ரோடிங்கர்ஸ் கேட்னு ஒரு ஃபேமஸான எல்ஸ்பிரிமெண்ட் இருக்கு. ஒரு பெட்டிக்குள்ள ஒரு பூனையை விட்டாச்சு. அது அங்க இங்க அசையாம அடைச்சுட்டோம். அதை குறி பார்த்து ஒரு தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கி. அதோட ட்ரிக்கரை கண்ட்ரோல் பண்றது சில ரேடியோ ஆக்டிவ் அணுக்கள். அந்த அணுக்கள் சிதையும். ஆனா எப்போ சிதையும்னு ஒரு குறிப்பிட்ட டைம் குடுக்க முடியாது. random decay time. ஒரே ஓர் அணு சிதைஞ்சாலும் ட்ரிக்கர் சுண்டப்படும். துப்பாக்கி வெடிக்கும். பூனை காலி. பெட்டியை மூடி வெச்சிட்டோம். கொஞ்ச நேரம், ஒரு அரை மணி நேரம்னு வெச்சிக்கலாம். இப்போ அந்த பூனை உயிரோடு இருக்குமா, இல்ல செத்துப் போயிருக்குமா..?"

"பெட்டியைத் திறந்து பார்த்தா தெரிஞ்சிடப் போகுது..!"

"எக்ஸாக்ட்லி! பட் பெட்டியை மூடி வெச்சதுக்கும் பெட்டியைத் திறந்து பாக்கறதுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பூனையோட கதி என்ன..? தெரியாது தானே..? பிஃப்டி பிஃப்டி பாசிபிளிடி இருக்கு இல்லையா..? அதுக்குத் தான் ஃபிசிஸிஸ்ட்ஸ் என்ன சொல்றாங்கன்னா, அந்த நேர இடைவெளில பூனை பாதி உயிரோடயும், பாதி இறந்தும் இருக்கும். நாம திறந்து பாக்கும் போது அந்த ரெண்டு வாய்ப்புகள்ல ஏதோ ஒண்ணை நூறு சதம் அடைஞ்சிருக்கும்.."

"பாதி செத்தும், பாதி உயிரோடவுமா..? நல்ல கதையா இருக்கு..!"

"இல்ல. இதுக்கு என்ன அர்த்தம் சொல்றாங்கன்னா... பூனையை அடைச்சு வெச்சதுக்கப்புறம் ரெண்டு பாதைகள்ல முடிவு போகுது. ஒண்ணுல பூனை உயிரோட இருக்கலாம். இன்னொண்ணுல செத்துப் போயிருக்கலாம். ரெண்டு ப்ராஞ்ச் பிரியுது. ஓர் உலகத்துல பூனை உயிரோடயும், மற்றோர் உலகத்துல செத்தும் போயிருக்கும். ரெண்டு உலகம் இருக்கு. நாம ஓர் உலகத்துல இருக்கோம். அடுத்தது. ரேஸுக்குப் போறீங்க. ஏழாவது குதிர கால்ல பணத்தைக் கட்றீங்க. நாலாவது குதிரை ஜெயிக்குது இங்க. வேறோரு உலகத்துல அஞ்சாவது ஜெயிக்கும். இப்படியே பத்து குதிரைங்க ஓடிச்சுனா, பத்து உலகங்கள்ல பத்து குதிரைகளும் ஜெயிக்கும். இப்ப பத்து உலகம் ஆச்சு. இப்படியே நாம செய்கின்ற ஒவ்வொரு சின்னச் சின்ன செயலுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கின்ற பல கோடிக்கணக்கான ரிசல்ட்ஸ் பார்த்தோம்னா எண்ணவே முடியாத அளவுக்கு - இன்பினிட்டி - யூனிவர்ஸஸ் இருக்கு.

நாம அதுல ஒரு உலகத்துல சுத்திட்டு இருக்கோம்.

ஒரு மரம் இருக்கு. அதில இருந்து ஒரு கிளை பிரியுது. அதில இருந்து இன்னொரு சின்ன கிளை. அதிலிருந்து ஒரு காம்பு. ஒரு நரம்பு. இப்படி ஒவ்வொரு புள்ளியில இருந்து ஒரு ப்ராஞ்ச் பிரிஞ்சு போய்க்கிட்டே இருக்கு.

இந்த உலகம் அப்படி ஒரு ப்ராஞ்ச் மாதிரி போய்ட்டு இருக்கு.

இந்த தியரியைத் தான் பல்லுலக புரிதல் தியரினு (Many Worlds Interpretation - MWI) சொல்றாங்க.

இப்ப நம்ம கதைக்கு வருவோம். நிலைமை என்ன? நீங்க ரெண்டு கொலைகள் பண்ணியாச்சு. கோர்ட்ல கேஸ் நடந்து தூக்குனு சொல்லியாச்சு. உங்களுக்கும் வாழப் பிடிக்கல. இதெல்லாமே இந்த உலகத்தோட நிலைமைகள். நீங்க சொஸைட்டில ஒரு பெரிய புள்ளி. இது ஸ்டேஜ் அ. இப்ப தூக்குத் தண்டனை கைதி. இது ஒரு ஸ்டேஜ் எ. அ-ல இருந்து எ- வரைக்கும் ஒரு லைன்ல உலகம் வந்திருக்கு.

என்னோட ஐடியா என்னன்னா, இருக்கிற உலகங்களை அனலைஸ் பண்ணி எந்த உலகத்துல ஸ்டேஜ் அ இருக்கோ அங்க உங்களை அனுப்பி வைக்கிறேன். முடியும். அங்க இருந்து நீங்க மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கையைத் தொடர முடியும்."

கிருஷ்ணசாமி பிரமிப்பாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

"நீங்க சொல்றதெல்லாம் ஏதோ சயின்ஸ் பிக்ஷன் மாதிரி இருக்கு..!"

"இல்லை நிஜம்..! இந்த 22ன்ட் செஞ்சுரில நான் இந்த மெஷினை உருவாக்கியாச்சு...!"

"எப்படி அனுப்புவீங்க..?"

"கேளுங்க..! நம்ம உடல்ங்கறது என்ன? மூணு மெடீரியல்ஸ். உடல். இது மெஷின். உயிர். இது தான் கோர். சக்தி. மூணாவது நம்ம எண்ணங்கள். அந்த நினைவுகள் தான் உங்களையும், என்னையும், ஒவ்வொருத்தரையும் தனித்தனியா பிரிக்கறது. இது இல்லாம பார்த்தோம்னா உடலும், உயிரும் ஒண்ணு தான் எல்லார்க்கும். பஞ்ச பூதங்களால் ஆனது உடல். பிராண ஷக்தி தான் உயிர்.

ஸ்டேஜ் அல இருந்து ஸ்டேஜ் எ வரைக்கும் இருக்கற உங்க லைஃப் லைன்ல இப்போ இந்த மர்டர்ஸ், கோர்ட், கேஸ் ஜட்ஜ்மெண்ட் எல்லாம் ஏட் ஆகி இருக்கும். சோ, இப்போ நான் அனலைஸ் பண்ணப் போற உலகம் என்னென்ன கண்டிஷன்ல இருக்கணும்?

நீங்க மர்டர்ஸ் பண்ற வரைக்கும் இந்த உலகம் இருந்த ஸ்டேஜ்ல அந்த உலகம் இருக்கணும். நெக்ஸ்ட் உங்க மனைவி துரோகம் பண்ணாத பெண்ணாய் இருக்கணும். அவ்ளோ தான். நீங்க கவலைப்பட தேவையில்லை. அதுக்கெல்லாம் பக்காவா அல்காரிதம் எழுதி வெச்சிருக்கேன்.

இன்னொரு முக்கிய கண்டிஷன் இருக்கு. நான் சொன்னதில் இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும். நான் அனுப்பப் போறது..."

"எண்ணங்கள். என் நினைவு அடையாளங்கள் மட்டுமே..!"

"எக்ஸலெண்ட்! ஸோ நம்ம கண்டிஷன்ல இன்னொண்ணும் ஏட் பண்ன வேண்டியது இருக்கு. அந்த லோகத்துல நீங்க உங்க இந்த நினைவுகளை ரிஸீவ் பண்ற நிலைமைல இருக்கணும். ஸோ, நீங்க கோமால இருக்கணும். மூணு கண்டிஷன்ஸ். உலகம் ஸ்டேஜ் அ வரைக்கும். கற்பு தவறாத மனைவி. உங்கள் உடல் இந்த எண்ணங்களை ரிஸீவ் பண்ணும் கோமா நிலைமை. டோண்ட் வொர்ரி. இருக்கற இன்ஃபினிட்டி பாசிபிளிட்டி உலகங்கள்ல கண்டிப்பா இந்த கண்டிஷன்ஸ்ல மேட்ச் ஆகிற உலகம் இருந்தே ஆகணும். இல்லாட்டி மேக்ஸ் ஃபெயில்.

உங்க நினைவுகளை அப்படியே எக்ஸ்ட்ராக்ட் பண்ணி, இந்த மர்டர் சிந்தனைகளை மட்டும் சுத்தமா ஃபில்டர் பண்ற ப்ரோக்ராம்ஸ் எல்லாம் நான் எழுதி வெச்சாச்சு. இதுல நான் இன்னும் கண்டுபிடிக்காத ஒண்ணு இருக்கு. உங்க எண்ணங்களை ஸேவ் பண்ண முடியாது. அப்படியே ட்ரான்ஸ்மிட் ஆகிட்டே இருக்கும் கண்டின்யுஸா..!

நீங்க அந்த உலகத்துக்கு போய் மறுபடியும் உங்க இயல்பான வாழ்க்கையை வாழலாம். 1000% காரண்டி நான்..."

"இஃப் இட்ஸ் பாஸிபிள் , தென் ஐ வில் பி ரெடி..!"

ருவரும் அந்த பிரம்மாண்ட மல்டி வேர்ல்ட் சியர்ச்சர் முன் அமர்ந்தனர். விநாயக் சில கமாண்ட்களைக் கொடுத்தார். கண்டிஷன்கள். பரபரவென கண்களெனத் தகும் எண்களும் எழுத்துக்களும் ஓடிக் கொண்டே இருந்தன.

"MATCH FOUND" ப்ளிங்கியது.

"வி காட் இட். வேர்ல்ட் ஐ.டி.0x3எfKஜ்@#*. ஐ வில் ட்யூன் தி ட்ரான்ஸ்மீட்டர் டு தட் ஃபேஸ்." பட்டன்களைத் தடவினார்.

"இப்ப இந்த மல்டி வேர்ல்ட் வாட்சர்ல பாருங்க. உங்க பாடி ரீஜனை ஃபீட் பண்றேன். என்ன நடந்துட்டு இருக்குனு பாருங்க..!"

கிருஷ்ணசாமியின் மாளிகை. படுக்கையறை. படுக்கை. நாராய்ப் படுத்திருக்கிறார் கிருஷ்ணசாமி. பக்கத்தில் தேவி. பக்கத்தில் சில நர்ஸுகள். ஓர் ஆஸ்பத்திரி வாசம்.

"வாசம் கூட வருது விநாயக்..!"

"அல்காரிதம் சார்..!"

"தேவி...! எப்ப சரியாகும்னு டாக்டர் ஏதாவது சொன்னாராம்மா..?"

"இல்லம்மா..! வெய்ட் பண்ணிப் பார்க்கலாம்னு தான் சொல்றாங்க..!"

"இதையே எவ்ளோ நாள் தான் சொல்லுவாங்களோ..? அதுவரைக்கும் நீ சாப்பிடாம பட்டினி கிடக்கப் போறியாமா..?"

"அவர் இப்படி நினைவில்லாம கிடக்கிறதைப் பார்க்க பார்க்க என்னால தாங்க முடியலம்மா..! எனக்கு சாப்பாடு அவசியமாம்மா..?"

"நீயும் உன் உடம்பை கொஞ்சம் கவனிச்சுக்கம்மா..!"

"ஆஹா..! தேவி..! என் வைஃபா..? என் மேல இவ்ளோ அக்கறையா இருக்கா..?"

"அது தான் மேதமேடிக்ஸ்...!"

"அப்ப இந்த உலகத்துக்கே என்னை அனுப்பிடுங்க.. நான் இங்க நடந்த எல்லாத்தையும் மறந்திடறேன். அங்க போய் ப்யூரா, அமைதியா வாழறேன்.."

கிருஷ்ணசாமி தலையில் மெமரி எக்ஸ்ட்ராக்டரை இணைத்தார் விநாயக். சரியான இ.எக்ஸி. ஃபைலை எக்ஸிக்யூட் செய்ய, மெமரி பைட்கள் சிஸ்டம் மெமரிக்கு மூவ் ஆகின. கிருஷ்ணசாமி கோமா நிலைக்கு போனார். ஃபில்டர் சப் ரொட்டீனில் பராமீட்டர்ஸை செட் செய்து எண்டர் அடிக்க, சில மெண்டல் ஃப்ரீக்வன்ஸிகள் காணாமல் போயின.

சரியான சேனலைப் பிடித்து ட்யூன் செய்ய கிருஷ்ணசாமியின் நினைவுகள் வேர்ல்ட் ஐ.டி.0x3எfKஜ்@#*க்கு ட்ரான்ஸ்மிட் ஆகின. சிஸ்டம் மெமரி காலியாகிக் கொண்டே வந்தது. அங்கே கோமா நிலையில் இருந்த அவரின் வேகண்ட் மெமரி லொகேஷன்களில் நிரம்பின.

தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழுந்தார் கி.சாமி. சோர்வாய் அமர்ந்து வாரப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த நர்ஸு திடுக்கிட்டு எழுந்து, "இட்ஸ் எ மெடிக்கில் மிராக்கிள்..!" என்று கண்ணாடியைக் கழட்டிச் சொன்னார்.

சோகையாய் அமர்ந்திருந்த தேவி, நிமிர்ந்து பார்த்தாள்.

"என்னங்க.. நீங்க எழுந்துட்டீங்களா..? தேங்க் காட்.."

அவருக்கு ஒரே கலங்கலாய் இருந்தது. நீண்ட தொலைவில் ட்ராவல் பண்ணி வந்த களைப்பு கண்களில் தேங்கி இருந்தது. மனைவியைக் கண்ட மாத்திரத்தில் நினைவுகள் திரும்பின.

"தேவி...! எப்படிம்மா இருக்க..? சாப்பிடக் கூட இல்லையா..? எனக்கு ஒண்ணும் இல்லைமா. கொஞ்சம் டயர்டா இருக்கு. அவ்ளோ தான்..!"

"இருங்க..! நீங்க இப்படி திடீர்னு கண் முழிச்சா, இம்மீடியட் எனர்ஜிக்கு ஆரஞ்சு ஜூஸ் குடுக்கச் சொல்லி இருக்கார் டாக்டர்...!" என்று டேபிளை நோக்கிப் போனாள்.

நர்ஸ் டெலிபோனை நோக்கிப் போனாள்.

டேபிளை கட்டிலின் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள். கி.சாமி ஓரளவு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

ஆரஞ்சுப் பழத்தைக் கத்தியால் கீறினாள். புதுப் பழம். தோல் கடினமாய் இருந்தது. இழுத்த இழுப்பில் கத்தி விலகியது. தேவி பிடியை விட்டு நழுவி, தோலைச் சீவிய வேகத்தில் காற்றைக் கிழித்துப் பறந்தது கத்தி. நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்து பழைய நினைவுகளை கோர்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் நடு இதயப் பிரதேசத்தில் மிகச் சரியாகப் பாய்ந்தது; பதிந்தது.

"என்னங்க...!" கூக்குரலில் கூவினாள் தேவி.

சடுதியில் பொழிந்து போர்த்தி இருந்த பெட்ஷீட்டை நனைத்தது, சிவப்பு இரத்தம். சரிந்து விழுந்தார். கண்கள் வழி உயிரும், நினைவுகளும் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தன.

துடித்து பக்கவாட்டில் விழுந்தார்.

அடங்கினார்.

ல்டி வேர்ல்ட் வாட்சரில் பார்த்துக் கொண்டிருந்த விநாயக் அதிர்ந்து போனார்.

"இதனை விதி எனலாம்..!" என்று முனகினார்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

10 comments:

PPattian said...

ரெண்டு பேரை கொலை செஞ்ச ஒரு பிஸினஸ்மேனுக்கு, ஸ்காடிஞ்சர் லெக்சர் கொடுக்கறதே ஒரு பெரிய தண்டனைதான்..
:))

ஆனாலும் கதை நல்லாருக்கு.. கண்டினியூ..

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் சார்.... மிக்க நன்றிகள் கதை பாதில போயிட்டு இருக்கப்பவே ஊட்டம் கொடுக்கறீங்க... ரொம்ப டாங்ஸுப்பா..!

வெண்பூ said...

தல. இதெல்லாம் எப்படி???? போட்டிக்கான என்னோட அடுத்தக் கதைக்கான கருவை யோசிச்சிட்டு அதை டைப் பண்ண ஆரம்பிக்கறதுகுள்ள அதே தீம்ல உங்க பக்கத்துல இருந்து ஒரு கதை. (என்னோட தீம் கொஞ்சம் வேறு. மரணதண்டனைக் கைதி டைம் மிஷின் மூலம் தப்பிக்க நினைப்பது மாதிரி, வழக்கமான கடைசி வரி 'திடுக்'குடன்... வந்துட்டேன்...ரெடியா இருங்க)

சிறில் சொன்ன மாதிரி போட்டி கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கு...

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

நீங்க தாராளமாகவே உங்க கதையைத் தொடரலாம். நான் தான் இங்க டைம் மெஷினையே கொண்டு வரலையே...!

உங்க 'திடுக்'காக காத்திருக்கிறேன்.... ;-)

போட்டி கடுமையா இருந்தாத் தானே சுவாரஸ்யமா இருக்கும்...

கமான் Guyz and Galz....!!!!

G.Ragavan said...

நல்லாருக்குங்க கதை...பிடிச்சிருக்கு முடிவு. நடுவுல விளக்கங்கள் நெறைய இருக்குற மாதிரி இருந்தாலும்.. நல்ல கரு. நல்ல கதை. என்னுடைய வாழ்த்துகள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஜி.ரா...

மிக்கா நன்றிகள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...!

நந்து f/o நிலா said...

ஹையோ கலக்கல்ங்க. எவ்ளோ மேட்டர உள்ள கொண்டு வரீங்க. அருமை

இரா. வசந்த குமார். said...

நிலா அப்பா சார்...

மிக்க நன்றிங்க தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உன் மற்ற எல்லா போட்டிக் கதைகளை விடவும் இது நல்லா இருக்கு.

இரா. வசந்த குமார். said...

ரவி...

ரொம்ப தேங்க்ஸ்டா...