Friday, July 04, 2008

ஆத்மா, நித்யா மற்றும் அவர்.

"ப்படி ஸார் இருக்கீங்க...?"

"அடடே..! ஆத்மா நீயா..? நித்யாவும் வந்திருக்காளா..? ஜில்லு கூடவா..? ஜில்லு வா..! மடியில உட்கார்ந்துக்கோ..!"

"சார்..! நல்லா இருக்கீங்களா..?"

"எனக்கென்னப்பா குறைச்சல்..! நீ தான் பாக்கறியே! இந்தப் பக்கம் வைகுண்டம். பெருமாள் பார் எவ்ளோ ஆனந்தமா சயனத்தில் இருக்கார்.

'பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'னு அன்னிக்கு தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னா மாதிரியே படுத்திருக்கார் பார்த்தியா..? அன்னிக்கு சொன்ன மட்டுக்கு இன்னும் அதே போல் இருக்கார். ஐன்ஸ்டீன் சொன்ன ரிலேட்டிவிட்டி தியரிபடி அரங்கனுக்கு மட்டும் டைம் ஸ்கேல் மூவ் ஆகறதே இல்லை போல இருக்கு..! நித்யா நீயும் சேவிச்சுக்கோ! திமலால பார்த்தது. அங்க ஜருகண்டி, ஜருகண்டினு வெரட்டிடே இருந்தான் இல்லியா..? இங்க அப்படி எல்லாம் யாரும் கிடையாது. கண் குளிர சேவிச்சுக்கோ! ஜில்லு நீயும் பாரு..! உம்மாச்சி. எங்க, திருப்பாவை ஒண்ணு சொல்லு!"

"மாய்கயித் திங்கள் மயி நியைந்த..."

"போறும்! போறும்..! குழந்தைக்கு மூச்சு முட்டறது..!"

"ஆத்மா..! இந்தப் பக்கம் பாரு..! நரகம்னு நம்ம ஊர்ல சொல்றா இல்லியா, அது! மார்க் ட்வைன் சொன்னாப்ல, Go to Heaven for the climate, Hell for the company. ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இங்க தான் இருக்காங்க. அப்பப்போ போய் பேசிட்டு வர்றதுல நேரம் போறதே தெரியலப்பா. அங்க இருக்கும் போது அடிச்சிக்கட்டவா எல்லாரும் இங்க தான் இருக்காங்க...! பல பேர் கூட பேசும் போது சுவாரஸ்யமான தகவல்களா கொட்றது...! இதெல்லாம் அங்க இருக்கும் போதே தெரிஞ்சிருந்தா இன்னும் நிறைய 'கற்றதும் பெற்றதும்' எழுதி இருக்கலாம்னு இப்ப தோணுது..!"

"ஸார்..! இங்க எப்படி நீங்க டைம் பாஸ் பண்றீங்க..!"

"சுத்திப் பார்...! எல்லாம் புக்ஸ்! சி.டி.ஸ்..! டி.வி.டி.ஸ்..! படிக்க வேண்டிய புகஸ் நிறைய இருக்குப்பா இங்க..! யாழ்ப்பாணத்தில் கொளுத்தினாங்களே, 'ஒரு லட்சம் புத்தகங்கள்' - எல்லாம் இங்க தான் இருக்கு..! எல்லாத்தையும் எடுத்து வெச்சுப் படிச்சுட்டு இருக்கேன். எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா..? யாழ்த் தமிழ்ல ஸ்க்ரீன்ப்ளே தான் எழுதி இருக்கேன். ஞாபகம் இருக்கா..? கன்னத்தில் முத்தமிட்டால். ஒரு கதை கூட எழுதி இருக்கலாம்...."

"ஸார்..! நீங்க வந்திடுங்களேன் அங்க..! எங்களுக்கெல்லாம் தனியா இருக்க பயமா இருக்கு..! நீங்க இல்லாம..!"

"நான் எப்படி இல்லாம போவேன்..? என்னோட புக்ஸ் எல்லாத்திலயும் நான் எப்பவும் இருந்துக்கிட்டே தானே இருப்பேன். Anais Nin என்ன சொல்லி இருக்கா..? People living deeply have no fear of death. என் எழுத்துக்கள்ல நான் ஆழந்து இருப்பதால் எனக்கு மரணம் இல்லை, அப்படினு இதை நான் ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கறேன். என்ன சொல்ற நித்யா..?"

"இப்போ சயின்ஸ் பிக்ஷன் ஸ்டோரிஸ் எல்லாரும் எழுதறாங்க..! நீங்க இருந்தா நல்லா இருந்திருக்குமே சார்...!"

"பாரு நித்யா..! இது ஒரு தொடர்..! நான் இல்லாட்டி என்ன இப்போ..? நாற்பது வருஷமா நான் ரெண்டு தலைமுறைகளை வளர்த்திருக்கேன். அந்த குழந்தைகள் எல்லாரும் என்னை விட சிறப்பா வர்றாங்க. வருவாங்க. வளர்வாங்க. நான் ஒரு தகப்பன் மாதிரி இங்க இருந்து அதை எல்லாம் படிச்சிட்டு தான் இருக்கேன். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு எனக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் குடுத்திருக்கேன். இனிமேல் அவங்க சாமர்த்தியம். 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை'. யாரு சொன்னா தெரியுமா..?

ஜில்லு
நீ
சொல்லு..?"

"வல்லுவல் லாலா...."

"கரெக்ட்..."

"இனிமேல் நாங்க எல்லாரும் அவ்ளோ தானா..? எங்களுக்கு இயக்கங்கள் கிடையாதா..?"

"பாருப்பா..! உங்களுக்கு அழிவு இல்லை. என்னைப் பாரு..? மல்டி ஆர்கன் ஃபெயிலியர் அது இதுனு வந்து இப்போ ரங்கனடி அடைஞ்சிருக்கேன். உனக்கு, நித்யாவுக்கு, ஜில்லுக்கு, கணேஷ், வசந்த் எல்லாரும் சாஸ்வதம். இண்டர்நெட் மாதிரி..! என்றைக்கும் இருப்பீங்க..! பெருமாள் மாதிரி..! கவலைப்படாதீங்க..! நான் கூடிய சீக்கிரம் வருவேன். இங்க படிக்க வேண்டிய புக்ஸ் எல்லத்தையும் படிச்சுட்டு நான் இங்க சும்மா உட்கார்ந்து பல் குத்திட்டு இருப்பேன்னு நினைக்கிறயா..? நெவர். அது என்னால முடியாது. நான் கத்துக்கிட்டதை எல்லாம் என் குழந்தைகளுக்கு சொல்லித் தராம என்னால இருக்க முடியுமா..?

இந்த அரங்கன் தான் ஆழ்வார்கள் பழைய மெதட்லயே பாசுரம் சொல்லிட்டு இருக்காங்க. போர் அடிக்குது. நீ கொஞ்சம் எளிமையா சொல்லு..? ஆல்ரெடி கல்கில சொன்னவன் தானே நீ..? அப்டினு வரச் சொல்லி இருக்கான். அவனுக்கு தினம் பாசுரம் சொல்றேன்.

அப்புறம் பாட்டியை தினம் போய்ப் பாக்கறேன். பாட்டிக்கு நான் இன்னும் 'பூனை பிரசவித்த மாதிரி சத்தம் எழுப்பும் புல்புல்தாரா' பேரன் தான். நான் புல்புல்தாரா தாண்டி, நயன் தாரா வரைக்கும் வந்தாச்சுனு சொன்னா இன்னும் மிரள்றா. அவளை அப்பப்ப நான் தான் போய் பார்த்துக்கறேன்.

இன்னும் ரங்கத்துல பார்த்த சீனு, கோவிந்த், மாஞ்சு, ரங்கு எல்லாரையும் பார்த்து பேசிட்டு தான் இருக்கேன்.

அப்பாவையும் கவனிச்சுக்கறேன். வரும் போது ஏதாவது புக்ஸ் கொண்டு வந்தியானு கேட்டார். புக்ஸ் எல்லாம் தரலைப்பனு சொன்னேன். பெங்களூர்ல இருக்கும் போது குரான் படிச்ச பழைய ஞாபகம்.

சரி..! நீங்க கிளம்புங்க. சுந்தர ராமசாமி கூட ஒரு டிஸ்கஷன் பண்ணிட்டு புதுமைப்பித்தனோடு டிபன் இருக்கு. அப்புறம் மைக்கல்சன் - மார்லே எக்ஸ்ப்ரிமெண்ட்ல எனக்கென்னவோ நம்ம கேனோபநிஷத்துல சொன்ன 'யார் காரணம்' அப்படிங்கற கேள்விக்கு பதில் இருக்கற மாதிரி தோண்றது. அதைப் பத்தி மை.மா.க்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன். போகணும். நீங்க கிளம்பறீங்களா..?

"சார்..! நாங்க போகணுமா..? நாங்களும் இங்கயே இருந்திடறோமே..?"

"நோ..! நோ..! நீங்க கண்டிப்பா போய்த் தான் ஆகணும். டோண்ட் வொரி. உங்களுக்கு எப்ப என்னைப் பார்க்கணும்னு தோணுதோ, அப்பெல்லாம் வாங்க..! பேசுவோம். நிறைய பேசலாம்..!"

"போய்ட்டு வர்றோம் சார்..!"

"பை..! பை..! ஸீ..யூ..!"

"ஜில்லி சாருக்கு டாடா சொல்லு..!"

"தாத்தா தா தா..!"

"டாடா...!"

"பெருமாளே..! இத்தனை புக்ஸையும் படிச்சப்புறம் என்னை மறுபடியும் ஒரு தடவை அனுப்பி வை..! நிறைய சொல்ல வேண்டி இருக்கு என் குழந்தைகளுக்கு...!"

பெருமாள் அரைக்கண்ணால் புன்னகைத்தார்.

2 comments:

Ramya Ramani said...

வசந்தகுமார் மிக நன்றாக திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளீர்கள். அவர் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் நம் மனதில் இருக்கும் :))

இரா. வசந்த குமார். said...

ரம்யா ... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு... சுஜாதா சாரின் நினைவுகள் மறக்கக் கூடிய ஒன்றா என்ன..?