Thursday, July 10, 2008

வானவெளியில் எண்கள்.

டிஜிட்டல் மீட்டர்கள் 360 டிகிரிகளிலும் அம்புக் குறிகள் காட்டிக் கொண்டிருந்தன. சின்ன சின்ன துளிகளாய் எல்.ஈ.டி.க்களும், செவன் ஸ்டேஜ் எல்.சி.டி.க்களும் மின்னிக் கொண்டிருந்தன. கலத்தின் சகல கண்ட்ரோல்களும் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தோம்.

"அஜய்... டைரக்ஷன் மெஸர்மெண்ட்ல ஏதோ மிஸ்டேக் காட்டிட்டு இருந்துச்சே.. சரி பண்ணியாச்சா..?"

"டன்..."

"வெதர் ரிப்போர்ர்ட் அனலிஸிஸ் முடிஞ்சு சிக்னல்ஸ் பாஸ் ஆகிடுச்சு இல்லையா..?"

"டன்.." சிரித்தான்.

இருவரும் ஹெட்பேட்களை ரிமூவினோம்.

"இன்னும் எவ்வளவு நேரத்தில் பூமியை அடைவோம்..?"

"ஜஸ்ட் தேர்ட்டி மினிட்ஸ்.." என்றான்.

மகிழ்வாய் இருந்தான். எனக்கும் மகிழ்வாய் இருந்தது. எல்லோர்க்கும்! மிதுன், கனியா, பார்ச்சர்.. எல்லோர்க்கும்! ஒரு நிறைவு. வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அச்சீவ் செய்து விட்ட திருப்தி.

கிளம்பும் முன் ராய் சொன்னது நினைவுக்கு வந்தது.

"சலீம்..! ஐ எம் ப்ரெளட் ஆஃப் யுவர் டீம் அண்ட் யூ! இந்த டீம்மில் நீங்கள் சென்று சாதிக்கப் போகும் வெற்றிகள் நினைத்தாலே எனக்கு சந்தோஷத்தை தருகின்றது. நீங்கள் செய்யப் போகும் இந்த காரியத்திற்கு வரலாறு என்றும் உங்கள் பெயர்களை நினைவில் வைத்திருக்கும்... பை தி வே உங்களது கணித ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கின்றது?"

"ஃபைன் சார்..!" நம்பர் தியரியில் சில அட்வான்ஸ்ட் கான்சப்டுகளை உறுதிப் படுத்தும் வேலையில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தேன்..!. அதற்கான எக்யுப்மெண்ட்ஸ் தயாரிப்பில் சில ஸ்டேஜ்களை அடைந்திருக்கும் போது இந்த அசைன்மெண்ட்.

அனானிமஸ் சிக்னல் ப்ராபகேஷனில் கிடைத்த எதிர் சிக்னல் தான் எங்கள் பயணத்திற்கு முக்கியமான காரணம். வான வெளியெங்கும் எல்லா திசைகளிலும் பல மொழிகளில் மனித இருப்பை விசிறி அடித்துக் கொண்டே இருந்தோம். எந்த எதிர் வினையும் இல்லை.

"ஸார்...! இது போல மெஸேஜ்களை எறிவதற்கு பதிலாக 'நான் தான் மனிதன். இந்த காலக்ஸிலேயே நான் தான் பிஸ்தா..!' அப்படின்னு எல்லாம் மெஸேஜ் குடுங்க சார். அப்ப தான் எதிர்வினை இருக்கும். ஈகோவை கிளப்பி விட்ற மாதிரி அட்டாக் பண்ணினா தான் நாம எதிர் பாக்குற ரியாக்ஷன் சாத்தியம்." என்பேன் வீக்லி மீட்டிங்குகளில். பொதுவாக காஃபி குடிப்பர், சிரித்து விட்டு விலகுவர்.

எதிர்பாராத ஒரு நாளில் ரிஸீவரில் ஒரு சிக்னல் க்ராஸ் ஆகியது. அதிசயம். அனலைஸ் பண்ணி பார்த்ததில் ஆன்ட்ரமீடா காலக்ஸிக்கு அப்பால் ஒரு சிறு புள்ளி மாதிரி தெரிந்தது. அங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

எனவே தகுந்த கால்குலேஷன்களுக்கு பிறகு ஒரு டீம் சென்று பார்த்து வருவது என்று முடிவாகி, நாங்கள் பயணித்தோம். பயணத்தில் அந்த கிரகத்தில் அப்படி எந்த ஒரு ஜீவராசியும் இல்லை என்பதும், எந்த உயிரும் சிக்னலை அனுப்பி இருக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாகினோம். களைத்தோம். திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

"னியா எங்கே..?" என்று கேட்டேன்.

குறும்பாக புன்னகைத்த மிதுன் செக்டார் பி.எக்ஸில் பார்க்க சொன்னான். அவன் தலையில் மெதுவாக குட்டினேன், சிரித்துக் கொண்டே. கீழ்க்குரலில் விசிலடித்தான்.

கனியா என் காதலி. அப்பழுக்கில்லாத ஒரு காதலி. ட்ரெய்னிங் சென்டரில் சந்தித்து, மீட்டிங்குகளில் வளர்ந்து, டெக்னிக்கல் ப்ராஜக்டுகளில் கிளைத்து, இப்போது பூமிக்கு மேலே க்ராவிட்டி ஃபோர்ஸ் துளியும் எட்டாத ஒரு லாங் பங்கி ஜம்ப் ப்ரதேசத்தில் என்னோடு பயணம் செய்யும் அழகி.

மேதமேடிக்ஸ் டிவைசஸ் லேப் ஒன்றை செட் செய்திருந்தேன். அங்கு எனது டிவைசஸ் இருந்தன. பார்த்துக் கொண்டிருந்த்தாள்.

வெற்றிடத்தில் மிதக்கும் வகை ஆடைகள் அணிந்திருந்து புஸ் புஸ் என மிதந்து கொண்டிருந்தாலும் அந்த காதோரம் சுருண்டிருந்த பொன் முடியும், கழுத்தோரம் படர்ந்திருந்த பூனை நிறங்களும் ஒரு பெண்ணுக்கே உரிய மயக்கத்தை அடையாளம் காட்டின.

அருகில் சென்று தொட்டேன். திரும்பி சிரித்தாள்.

"சலீம்...! சிக்னல்ஸ் கரெக்டா ட்ராவல் ஆகிட்டு இருக்கா..?"

"ம்...!"

"சீக்கிரம் பூமிக்கு போகணும்..! போனவுடனே வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சர்ச்ல மேரேஜ். 'பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே...' சொல்லி.."

எந்த பரமமண்டலம்..? எந்த காலக்ஸி தாண்டி? என்ற ஒரு அறிவியலுனுக்கேயான குழப்பங்கள் துளிர்த்தாலும், இது போன்ற அழகான பெண் சொல்லும் போது நரகம் கூட நாலு எட்டு தள்ளி என்றால நம்பி போய் விழலாமே..!

பதிலே சொல்லாமல் அவளை தூக்கினேன். எடையே இல்லை. மிதந்தோம்.

புன்சிரித்துக் கொண்டே, "சலீம்..! இதெல்லாம் என்ன மேதமேடிக்ஸ் டிவைசஸ்! கொஞ்சம் சொல்றியா..?"

"ம்! சொல்லலாம். அதுக்கு முன்னாடி நான் பூமில இருந்தப்போ என்ன ரிஸர்ச் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்றேன். நாம பாக்கற எல்லாமே ஒரு குறிப்பிட்ட மேக்ஸ் ஃபார்முலாக்குள்ள அடங்கிடுது இல்லையா..? ஒரு பாலை பாக்கறோம். அது ஒரு ஸ்பியர். அதுக்கு ஒரு வால்யூம். அதோட வெயிட் இவ்ளோ. அதோட டைமென்ஷன்ஸ் இதெல்லாம். அதுல இவ்ளோ அணுக்கள் இருக்கு. சோ, இத்தனை அட்டாமிக் மாஸ். அதோட கலர் இது. அது இந்த பெய்ண்ட். அந்த பெய்ண்ட் இந்த கெமிக்கல். அதோட அட்டாமிக் ப்ராபர்டீஸ் இதெல்லாம். இப்படி ஒரு பாலை இத்தனை நம்பர்ஸ் கவர்ன் பண்ணிட்டு வருது.

இந்த நம்பர்ஸ் எல்லாம் ஒரு கூட்டா இருந்தா தான் அது பால். எல்லா நம்பர்ஸும் தனித்தனியா பிரிஞ்சு போக ஆரம்பிச்சுதுன்னா அப்புறம் அது பாலா இருக்காது. அப்படியே காணாம போயிரும். நாம அந்த பாலை நெருப்புல காட்டினா என்ன ஆகுது? இது தான். அந்த பாலை கன்ஸ்ட்ரக்ட் பண்ணி வெச்சிருக்கற நம்பர்ஸ் கிட்ட இருக்கற ஒற்றுமை கலைஞ்சு போய் பிரியுது. பேஸிக்கலா அணுக்கள் பிரியறது தான்.

மை ஐடியா இஸ், இந்த நம்பர்களுக்கெல்லாம் தன்னோட இந்த பலம் தெரியுமா..? அதாவது நாம இந்த மாதிரி ஒரு கூட்டணியில இருக்கறதுனால தான் பால்னு ஒரு வஸ்து இருக்கு. இல்லாட்டி கிடையாது. இந்த சீக்ரெட் அந்த நம்பர்ஸுக்கு எல்லாம் தெரிஞ்சா என்ன ஆகும்..? அப்படினு திங் பண்ணினேன்.."

"என்ன உளறிட்டு இருக்க..? நம்பர்ஸுக்கு தெரியறதாவது. நம்பர்ஸுங்கறது ஒரு மெஸர்மெண்ட். அவ்வளவு தான். நம்ம இஷ்டத்துக்கு மெஸர் பண்றதுக்கு ஒரு சிஸ்டம் இந்த எண்கள். அதுக்கெல்லாம் மூளைனு தனியா ஒண்ணு இருக்கா என்ன..? யூ ஆர் வெரி க்ரேஸி...!"

"இல்லை..! என்னோட ஆராய்ச்சில நான் சில நம்பர்ஸை விழிப்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி பண்ணினேன். அதில் சம் பெர்சண்டேஜுக்கு சக்ஸஸ் கிடைச்சிருக்கு. அதை இப்போது சொல்ல முடியாது. பட், இதோட விளைவுகளை எதிர்பார்த்து நான் சில டிவைசஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதெல்லாம் தான் இதெல்லாம்..!" காட்டினேன்.

"என்ன இதெல்லாம்..? லேஸர் பீம் எமிட்டர்...?"

"ம்ம்ம்..! ஒரு விதத்துல அப்படியும் சொல்லலாம். பட் இது எமிட் பண்றது லேஸர்ஸ் கிடையாது. இதுக்கு பேர் என்ன வெச்சிருக்கேன் தெரியுமா..? மல்டிப்ளை ஸீரோ எமிட்டர்..!"

"என்ன..? கம் எகெய்ன்..? இது என்ன எமிட் பண்ணும்..?"

"ஸீ..! நீ என்னோட மேக்ஸ் தியரியைவே நம்ப மாட்டேங்கற. உனக்கு இதைப் பத்தி சொன்னாலும் புரியாது. உனக்கு வேறு ஒன்று சொல்லித் தருகிறேன். எளிதாகப் புரியும். அதற்கு முதல் ஸ்டெப்.., உனது இந்த ஈர சிவ உதடுகளை நான் ஒற்றி எடுக்கட்டுமா? இந்த க்ளாஸை கொஞ்சம் நீக்கு...! பாலொடு தேன் கலந்தற்றே - பனிமொழி வாயில் எயிறு ஊறிய நீர்.. 1122-வது குறள்ல சொல்லி இருக்கு பார்."

கொஞ்சம் வெட்கப்பட்டது போல் இருந்தாள்.

மெல்ல நெருங்கி...நெருங்ங்ங்கி.. ஒரு ஜெர்க் அடித்தது.

"பார்த்தாயா..? க்ராவிட்டி ஃபோர்ஸே இல்லாத இந்த வானவெளியிலும் முத்தமிட நெருங்கினால் ஜெர்க் அடிக்கின்றது..!" என்றேன்.

"முட்டாளே....! ஜெர்க் மொத்த கலத்திலும் அடிக்கின்றது.." ஓடி வந்து பதற்றத்தில் சொன்னான் பார்ச்சர்.

அவசரமாக எல்லோரும் கலத்தின் முன் ஓடினோம். புள்ளி புள்ளிகளாய் தெரிந்த பிரபஞ்சத்தின் கரும் வெளியில் இருந்து உற்பத்தியாகி கொண்டிருந்தன...

எண்கள்... வெறும் எண்கள்...

9999999999
.
.
.
22222
11111

செட்.. சப் செட் என..! தொடர்ச்சியாக எண்கள். விக்கித்துப் போய் என்ன வென்றே புரியாத குழப்ப நிலையில் ஸ்தம்பித்துப் போய் இருந்தார்கள், அனைவரும்.

எனக்குப் புரிந்து விட்டது.

எண்கள். சுய அறிவு பெற்ற எண்கள். தாம் கட்டமைத்தது தான் இந்த பிரபஞ்சமும், அத்தனையும் என்ற தெளிவு பெற்று விட்ட எண்கள். எனக்கு சகலமும் விளங்கியது.

என் ஆராய்ச்சியில் கொஞ்சம் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸை கொடுத்து உருவாக்கிய எண்கள் தமக்குள் பல்கிப் பெருகி, பைஃபர்கேட் செய்து, தம்மை வளர்த்து, இதை புரிந்து கொண்ட ஒரே ஒருவனான என்னை மற்றவர்களிடம் இருந்து பிரிப்பதற்காக சிக்னல் ரிஸீவரில் வோல்டேஜ் மெஸர்மெண்டாக பதிந்து, ஏமாற்றி என்னை வெகு தொலைவு அனுப்பி விட்டு, பூமியை ஆக்ரமிப்பு செய்து, இப்போது என்னையும் ஆக்ரமிக்க....

ஓ... மை காட்...!

"ஓடுங்கள்... விலகி ஓடுங்கள்...! செக்டார் பி.எக்ஸில் எனது மல்டிபிள் ஸீரோ எமிட்டரை எடுத்துக் கொள்ளுங்கள்..."

ஓடினோம். A.I. புகட்டப்பட்ட எண்களை அழிக்க ஒரே வழி, இது தான். பாயும் நம்பர்ஸ் மீது ட்ரிக்கரை சுண்ட மல்டிப்ளை வித் ஸீரோ அப்ரேஷனுக்கு அவை உள்ளாகும். காலி. அதன் பவர் இறந்து, அழிந்து போகும்.

கலத்தின் ஃபுல் செக்யூரிட்டி கவரை எனேபில் செய்து பாதுகாப்பித்தோம். இருந்தும் எண்கள் எங்களை சூழ்ந்து கொண்டன. ட்ரிக்கரினோம்.

ஸீரோ நம்பர்ஸ் துள்ளி வந்தன. சுற்றி சுற்றி செலுத்தினோம். சூழ வந்த எண்கள் சுருண்டு விழுந்தன. காற்றில் எங்கும் ப்ளக், ப்ளக் ஓசைகள். காலடியில் பல எண்கள். அவற்றின் ஆயுதங்கள். டிஃப்ரண்ஷியேஷன். இண்டக்ரேஷன். ஸம்மேஷன்.

மிதித்து தள்ளினோம். சட்டைகளின் மேல் சில எண்கள் இறந்து தொங்கின. உதறினோம். நெடு நேரம் போராடி களைத்து போனோம். ஸீரோ எமிட்டர் என்பதால் பவர் தனியாக தேவையில்லை. எனினும் கூட மல்டிபிள் ஆபரேஷனும் இணைக்கப்படுவதால், கொஞ்சம் போல் நானோ ஆம்பியரில் செலவாகிக் கொண்டிருந்தது.

கண்டிப்பாக அடுத்த அட்டாக் இருக்கும் என்றே தோன்றியது. ஏனெனில் நான் ஊட்டிய A.I. அப்படிப்பட்டது. க்ரைஸிஸ் மேனேஜ்மெண்ட் செய்யும் புள்ளிகளை எல்லாம் இணைத்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு வித்தியாசமான ஒலி கேட்டது. ஏதோ ஒன்று ஊடுறுவுவது போல், சர சரவென பாம்புகள் தேயும் ஒலி. நெருங்கி நின்று கொண்டோம். கூர்ந்து கவனிக்க நடந்த நிகழ்வு எங்களை தூக்கி வாரிப் போட்டது.

கலம் மெல்ல மெல்ல எண்களாகிக் கொண்டிருந்தது. அதன் வெயிட், ஹைட், விட்த், மாஸ், டெம்ப்ரேச்சர், ஹ்யூமிடிட்டி கண்டிஷன், டைரக்ஷனல் அனலிஸிஸ் ... எல்லாம்.. எல்லாம் எண்களாகிக் கொண்டிருந்தன்.

வெருண்டு போனேன். இனி எதையும் எதிர்க்க முடியாது. எண்களைப் பணிந்து போவதே புத்திசாலித்தனம்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கனியாவின் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

புதிய எண்கள் நெருங்கிக் கொண்டு வந்தன. ஸ்கொயர் ரூட், க்யூப் ரூட், சைன் ஃபங்ஷன், ஆர்க்டேன், பை எல்லாம் வந்தன.

கண்களை இறுக்கி மூடிக் கொண்டோம். தோல் துளைகள் வழி மொத்தமாக புகுந்து, ஒரு முறை என் உடல் சிலிர்க்க, என் நினைவுகளில், என் சிந்தனைகளில்...

7&%34/2 + {0,1,...2^34)...

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

7 comments:

யோசிப்பவர் said...

அதீத கற்பனை!!!;-)

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

//அதீத கற்பனை!!!;-)

ஹி... ஹி...

கொஞ்சம் ஓவர் டோஸாகி விட்டதா என்ன...? பொறுத்துக் கொள்ளுங்கள்.

PPattian said...

தாரே ஜமீன் பர் படத்தில் நம்பர்களும், எழுத்துகளும் அந்த சிறுவனை பயமுறுத்துவது ஞாபகம் வந்தது.

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

சொன்னால் நம்புவீர்களோ மாட்டீர்களோ தெரியவில்லை. சத்தியமாக இது முழுக்க முழுக்க நான் கற்பனையில் எழுதியது. நீங்கள் இப்போது சொல்லித் தான் TZP படத்தில் அப்படி ஒரு காட்சி வருவதாக அறிகிறேன்.

எண்கள் தொடர்பாக வேறொரு ரிஸர்ச் கான்செப்ட் இரு மாதங்களுக்கு முன் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

தற்செயலாக இந்தப் போட்டியும் அறிவிக்கப்பட, அதை இங்கே கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கிறேன். அந்த கான்செப்ட் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றது.

மிக்க நன்றி தாங்கள் வாழ்த்துக்கு...!

Mani - மணிமொழியன் said...

you could have used "differentiation" attack against the invading numbers - because differentiating a constant number will make it zero :P

இரா. வசந்த குமார். said...

மணிமொழியன் sir...

Your "Applying Differentiation" against constant numbers to destroy them is correct.

But in my storical point of view, not only numbers but the tools Summation, Differentiation and Integration also came to attack the humans (why not humen..?). So only using differentiation wont sufficient.

And also in Space the power usage must be reduced as smaller as possible. Since multiplication itself take nano ampere level of current usage ( i mentioned this!), please imagine how much current it will take using differentiation with limits..?

Ok now...? ;-))

Mani - மணிமொழியன் said...

Good Imagination - both the story as well as your reply :)