Monday, July 28, 2008

சைன்ஸ்.

"ரு வேளை சாமி வந்திருக்குமுங்களா..?"

செல்லம்மா சொன்னதக் கேட்டு கொஞ்சம் பேரு அவங்க பக்கமா திரும்பினாங்க. கூச்சப்பட்டு அவங்க புருசன் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டாங்க.

"அக்கா சொல்றதுலயும் தப்பில்லிங்க மாமா.. நம்ம கருப்பராயன் சாமி பாம்பு மேல தானுங்க வருவாரு.. அவரு வந்துட்டு போயிருக்காரு போலிருக்குதுங்க.." தனசேகர். செல்லம்மாளின் தம்பி.

சேர்வமலை மேல முருகனுக்கு ஒரு கோயில் இருக்குதுங்க. ஏதோ பாளயக்கார ராசா ஒரு காலத்துல கட்டி வெச்ச கோயிலுங்களாம். இப்ப அது கொஞ்சம் காடு மண்டிப் போன இடங்களா, அதனால உள்ளூர்க்கார பெரிய மனுசங்களே கொஞ்சம் கைக்காச போட்டு, ஊருலயும் மிச்சத்த வசூல் பண்ணி ஒரு மாதிரி ரோடு போட்டுருக்காங்க.

ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருக்கறதாலயும் டிஸ்ட்ரிக்ட் போலீசு லிமிட்ட க்ராஸ் பண்ற பார்டராவும் இருக்கறதால இந்த கள்ளச் சாராயம் காச்சறவன், செயில்ல இருந்து தப்பிச்சு வந்தவன் எல்லாரும் இந்த மலய தாண்டி தாங்க தப்பிச்சு போவாங்க.

என்ன தான் ஊருக்குள்ள உத்தமனா இருந்தாலும் சரக்குன்னு வந்திடுச்சுனா நாட்டமல இருந்து எல்லாருமே ஒண்ணு தானுங்களே! ஆனா முருகன் இருக்கற எடத்துல எப்படி சரக்கு குடிக்கறதுனு நெம்ப யோசிச்சுங்க ஒரு காரியம் பண்ணாங்க!

பாதி வழியில கருப்புசாமிக்கும் சின்னதா ஒரு கோயில கட்டிப் போட்டாங்க. கருப்புசாமிக்கு என்ன படைக்கணும்னு உங்களுக்கு தெரியுமுங்களா?

ஒரு பண்டிக, நோம்பி, ஆடிப் பெருக்கு, பொங்கலு இப்படி ஏதாவது விசேசம் வர்றப்ப எல்லாம் கெராமமே மலையேறுங்க. அட, நாஞ்சாதாரண அர்த்தத்துல தானுங்க சொன்னேன். நீங்க வேற ஏதாச்சும் தப்பா கிப்பா எடுத்துக்கப் போறீங்க.

எங்கூரு பொம்பளையாளுங்க எல்லாம் நெசமாலுமே மலையேறிப் போயி 'முருகா, நல்ல வழி காட்டுப்பா'னு வேண்டிக்கிட்டு பொங்க வெப்பாங்க.

ஆன இந்த ஆம்பளயாளுங்க இருக்காங்களே! வெவரமான கொறவனுங்க! மலயேறப்பவே 'அம்மணி! நீ போயி முருகன கும்புட்டு வா! நான் இங்க கருப்புசாமி கோயில்ல பங்காளிங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன்! பொளுதோட வந்துடு புள்ள! அப்புடியே முருகன கேட்டதா சொல்லிடு!'னு சொல்லிப்போட்டு பாதி வழியில களண்டுக்குவாங்க.

அம்மிணிகளுக்கும் தெரியாதா இவங்க சலம்பலெல்லாம்? 'சரிங்க மாமா! நீங்களும் கருப்பனை கும்புட்டு போட்டு 'கருப்பா! எங்க சாதி சனத்துக்கும், ஊரு உலகத்துக்கும் எந்த நோக்காடும் வராம காப்பாத்துப்பா'னு வேண்டிக்கோங்க. கருப்பனுக்கு படையலயும் ரொம்ப படச்சிராதீங்க. அளவா இருக்கட்டுமுங்க'னு சொல்லுவாங்க.

அவங்க சூசகமா பேசறதும், இவுங்க மறச்சு வெச்சு பேசறதும் ஒண்ணும் புதுசு இல்லீங்களே. காலங் காலமா நடக்கறது தானுங்களே!

ரெண்டு கெடா, கொடலு பொறியலு, ரத்த வறுவலு, அப்புறம் கோளிக் கொளம்பு, ஆட்டுக் காலு சூப்பு, அவிச்ச முட்டைங்க, எக்கச்சக்கமா சோறு, தயிறுனு அது ஒரு பக்கம் சைவமா (இதெல்லாம் சைவமானு கேட்டுறாதீங்க! எங்கூருல இதெல்லாம் சைவந்தான்!) இருக்கும். இதெல்லாம் தவுர சரக்கு மட்டும் வெதம் வெதமா படைப்பாங்க!

கவர்ன்மெண்டு கடயில வாங்குனது, கோயமுத்தூரு தாண்டி பாலக்காடு போயி கேரளா சரக்கு, அப்புறம் கள்ளு, பாரின் ஸ்காட்சு இப்புடி எல்லாத்தயும் கருப்புசாமிக்கு படப்பாங்க! ஆளாளுக்கு வேண்டிக்கிட்டு அப்புறம் கச்சேரிய ஆரம்பிப்பாங்க பாருங்க!

உங்க ஊட்டு நாயம் இல்ல, எங்க ஊட்டு நாயம் இல்ல, ஊரு நாயம் உலக நாயம் தான். சார்சு புஸ்ஸுல இருந்து உள்ளூரு டவுன் கவுன்சிலரு வரைக்கும் இவங்க சரக்குல சிக்காத ஆளுங்களே கெடயாதுனா பாத்துக்கோங்க!

மல வந்து ஆதி காலத்து மலைங்க. ஒரு காலத்துல எல்லாம் வெவசாயம் பண்ணி பச்சயா பளிச்சுனு தான் இருந்துச்சாம். இப்ப மலயச் சுத்தி தரிசாப் போட்டு காஞ்சு போயிருக்குங்க.

ஊருலயும் கொஞ்சம் எல்லார் கையிலயும் காசுக்கு டைட்டாவும் நோம்பி எல்லாம் கொஞ்சம் நிறுத்தி வெச்சாங்க. ரெண்டு வருசமா எந்த விசேசத்துக்கும் மலையேறாம உட்டதால, இன்னும் காடு மண்டிப் போயி ஒரு மாதிரி பயங்கரமான எடமா ஆகிப் போயிடுச்சுங்க.

"ஏண்டா நாச்சிமுத்து! நாட்டாமக்கு சொல்லி வுட்டிருக்காப்லயா..?" இது குந்திட்டு பல்லு குத்திட்டு இருக்கற பெரியசாமிக் கவுண்டருங்க.

"சொல்லி வுட்டிருக்குதுங்க மாமா! ப்ரெசிடெண்டயும் ஆர்.ஐ.யையும் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இருக்காராம்.." ஸ்டாண்டு போட்டு சைக்கிள்ல ஒரு மாதிரியா சாஞ்சுக்கிட்டு பூங்கோதய ஓரக்கண்ணுல பாத்துக்கிட்டு இருக்கான் பாருங்க , இவன் தான் நாச்சிமுத்து.

கெராமத்து சனமெல்லாம் இன்னிக்கு எல்லா வேலயும் வுட்டுப்போட்டு மலைக்கு கெளக்கு பக்கமா நிக்கறாங்கனா அதுக்கு ஒரு காரணம் இருக்குதுங்க.

சேர்வ மல இருக்குதுங்களே இது வந்து தனி மல கெடயாதுங்க. பம்பாயில இருந்து கெளம்பி, கருநாடகா வழியா பாஸாகி, கேரளால முடிஞ்சு ஊட்டில முட்டிட்டு நிக்குதுங்களே , மேக்கால போற மலை அதோட ஒரு கனெக்ஷன் இங்க இருக்குதுங்க. கெளக்கு பக்கம் மட்டும் ஊரப் பாத்து இருக்குதுங்க. மத்த தெச எல்லாம் அந்த மலைத் தொடச்சியோட லிங்க். புரியுதுங்களா?

வளக்கமா மலைக்குப் பக்கத்துல காடு மண்டிப் போன எடத்துல தான் எங்க ஊரு சனங்க வெளிக்கு போக வருவாங்க. அப்படியே காத்தாட போயி, அங்கயும் கூட்டம் சேத்துக்கிட்டு, காலங்காத்தாலயே ஊரு நாயம் பேசிக்கிட்டு போனா தாங்க எங்க ஊருக்காரங்களுக்கு போன மாதிரி இருக்கும்.

இன்னிக்கு அப்படி ஒரு க்ரூப்பா கெளம்பி போனவங்க தான் மொதல்ல அத பாத்துருக்காங்க.

மலயோட கெளக்குப் பக்கத்துல காடுங்க காணாம போயிருக்கு. அதுவும் சாதாரணமா இல்லீங்க. பாம்பு ஊந்து போகறப்ப எப்படி போகும் பாத்திருக்கீங்களா? அட, நேருல இல்லாட்டியும் நம்ம பேபி சாம்லி படத்துல எல்லாம் போகுமேங்க..? நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி வளஞ்சு வளஞ்சு காடு காணாம போயிருக்குங்க.

காடு காடுன்னா நீங்க நெசமாலும் காடுன்னு நெனச்சுடக் கூடாது. எங்க ஊருல எல்லாம் வயலக் கூட காடுன்னு தான் சொல்லுவோம். மல மேல இருந்ததும் அந்த மாதிரி சின்னச் சின்னச் செடிங்க தான். நீங்க வேற உங்க காட்டுல சிங்கம், புலி எல்லாம் இருக்குதானு கேட்டுறப் போறீங்க!

இது வந்து ஒரு அதிசயமா போயி ஊருல தூங்கிட்டு இருந்தவனெல்லாம் முளிச்சுக்கிட்டு ஓடி வந்து பாத்து அப்படியே ஊரு சனம் மொத்தமும் இங்க வந்து குவிஞ்சு போச்சுங்க!

எங்க ஊருலயும் கொஞ்சம் எளந்தாரிப் பசங்க இருக்காங்க. அவனுங்க டவுனுக்கெல்லாம் போய் படிச்சிருக்காங்க. அரசூரு, அன்னூரு, அவினாசி எல்லாம் போயி படிச்சவனும் இருக்காங்க. இன்னும் கொஞ்சம் கைல காசு இருக்கறவன் கோயமுத்தூருக்கு கூட போயி படிப்பாங்க.

அந்த பசங்களும் இங்க வந்து நின்னுட்டு வேடிக்க பாத்த்க்கிட்டு இருக்காங்க. வாங்க அவங்க என்ன பேசறாங்கனு பாத்துடுவோம். என்ன இருந்தாலும் படிச்சவன் பேச்சுக்கு ஒரு மருவாதி இருக்குதுங்குளே?

"தன்சு..! எப்படி பாம்பு மாதிரியே வளஞ்சு வளஞ்சு இருக்குல்ல...?" இது ஆறுமுகங்க. தன்சு யாருன்னு கேக்கறீங்களா..? சரியாப் போச்சு! 'வெத்தல பாக்கு போட்டவன் இதுல வெங்காயம் இல்லையேனு கேட்டானாம்'. அந்தக் கதயாவுல்ல இருக்கு. மொத வரிலயே சொன்னேனேங்க தனசேகரன். அவன் தான். அவஞ்சோட்டுப் பசங்களுக்கு தன்சு.

"ஆமாண்டா! நல்லா எண்ணெ தடவி வளத்துருக்கா போல..! பாம்பு மாதிரி பின்னி இருக்கு..!"

"அடப்பாவி! நான் மல மேல வந்துருக்கற அடயாளத்த சொன்னன்டா..!"

"ஓ! நீ அத சொன்னியா? நான் என்னவோ வேணியோட சடய சொன்னியோனு நெனச்சேன்..!"

"இல்ல நாம கீதாஞ்சலில ஒரு படம் பாத்தமே, 'Signs'னு அதுல வர்ற மாதிரி நம்ம சேர்வமலைக்கும் வெளிக் கிரக மக்கள் ஏதாச்சும் வந்திருக்குமோ..?"

"நான் எங்கடா கீதாஞ்சலில எல்லாம் படம் பாத்தேன்? நம்ம ரேஞ்சு அப்சரா தான்..!"

"ஹூம்..! நீயெல்லாம் திருந்தவே மாட்டடா..!"

"நீ சொன்ன மாதிரி நம்ம ஊருக்கு வெளிக் கிரக மக்கள் வந்தா இருக்கற போட்டி எக்ஸ்ட்ரா தான் ஆகும்..!"

"செரி வா! நாட்டாம வந்துட்டாரு! நாமளும் போய் அங்க என்ன நடக்குதுனு பாப்போம்..!"

கெரகம் புடிச்சவனுங்க! இருக்கற எளவெடுத்த எடுவட்ட பசங்களாலயே ஊரு உருப்பட்ட மாதிரி தெரியல. இதுல இன்னோரு கெரகத்துல இருந்து மனுசங்க வந்து... ம்ஹூம்.. ஊரு வெளங்கனாப்ல தான்...!

இருந்தாலும் வாங்க! நாமளும் போய் நாட்டம அப்படி என்னதான் பேசறாருன்னு பாப்பம்.

நாட்டாம, ப்ரெசிடெண்டு, ஊரு பள்ளிக்கூட தலைமை வாத்தியாரு எல்லாம் ஒண்ணு கூடிப் பேசிக்கிட்டு இருக்காங்க. பாமர ஊரு சனமெல்லாம் கொஞ்சம் தள்ளியே எட்டி நிக்கறாங்க. ஆனா நம்மள எல்லாம் இந்த கண்டிசனால கண்ட்ரோல் பண்ண முடியாதுங்க. நல்லவேள, அவுங்க எல்லாரும் ஆலமரத்துக்கு அடில நின்னு தான் பேசிக்கிட்டு இருக்காங்க. ஆலமரத்த அண்டா சோடு பெருசா படச்ச அந்த சேர்வமல முருகனுக்கு ஒரு நன்னி சொல்லிட்டு வாங்க, நாமளும் இந்தப்பக்கமா நின்னு ஒட்டுக் கேப்போம்.

"ன்னங்க வாத்தியார் ஐயா..! சொன்ன மாதிரி துப்புரவா துடச்சு எடுத்திருக்கீங்க போல..!" இது நாட்டாம கொரலு தான்.

"நான் எதுவும் பண்ணலீங்க! நம்ம ஊருப் பசங்க தான்!" இது வாத்தியார்.

"என்ன பண்ணியிருக்கீங்க ரங்கசாமி? கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க. ஆனா சீக்கிரமா சொல்லுங்க. ஒரு மணிக்கு நம்ம எம்மெல்லே ஆபீஸுக்கு வர்றேன்னு சொல்லி இருக்காரு..!" இது யாருடா புதுசா இருக்குது? ப்ரெசிடெண்டா இருக்கும். அவர அவ்வளவா நாங்க பாக்கறது இல்லீங்க. எப்பவுமே டவுன்லயே இருப்பாரு. எப்பவாவது வாளத்தாரு, வாள எல, கரும்பு, மஞ்ச, இப்படி வேணும்னா மட்டும் வந்துட்டுப் போவாரு.

"நம்ம சேர்வமல இருக்குது இல்லீங்களா... இது வந்து ரெண்டு டிஸ்ட்ரிக்ட் பார்டர்ல இருக்கறதால, போலீசு கிட்ட இருந்து தப்பிச்சு வர்றவன் எல்லாம் மலய பயன்படுத்திக்கறாங்க. சன நடமாட்டம் இல்லாதது அவனுங்க வேலக்கு சுளுவா போய்டுச்சு. அது மட்டுமில்லாம பூமிய தருசா வுடக் கூடாதுங்க. அது பாவம். அதனால மலய ஆராய்ச்சி பண்ணுனப்ப மலைக்கு கீழ நல்ல சத்தான மண்ணு இருக்கறதா கோயமுத்தூரு வெவசாயக் கல்லூரில இருந்து ரிப்போர்ட் வந்துச்சு. நம்ம மக்கள்கிட்ட 'போய் வெவசாயம் பண்ணுங்க'ன்னு சொல்ல முடியுங்களா? அது சாமி மல. அதுல கடப்பாற படக் கூடாதுனுட்றுவாங்க. அதனால ஒரு ஐடியா பண்ணுனோங்க. நாம சொல்லிக் கேக்காத சனம் சாமி சொன்னா தான் கேக்கும். அதனால நம்ம கருப்புசாமி பாம்பு மேல ஏறிப் போனாருங்கற மாதிரி பாதையப் போட்டோம். அதுக்காக அக்ரில இருக்கற என்னோட பளய மாணவர்கள தொணயோட சத்தமே வராத சைலன்சர் போட்ட ட்ராக்டர் வெச்சு நேத்து ராவு உழுதாச்சு. இப்ப மக்கள் கிட்ட நம்ம ஊரு பசங்கள வெச்சு இது கருப்புசாமி வந்து போன பாதைனு நம்ப வெச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல திட்டத்தோட அடுத்த பகுதிய பாருங்க..!" இது வாத்தியாரு தான்.

அடங்கொக்க மக்கா!! இதுல இவ்ளோ சங்கதி இருக்கா..! எப்படியோ ஊருக்கு நல்லது நடந்தா சரிதான்! இப்ப எங்க ஊரு பசங்களப் பாக்க எவ்ளோ பெருமையா இருக்குது தெரியுங்களா..? என்னவோ இவரு சொல்ல வந்துட்டாரு இல்லாததும், பொல்லாததுமா.. போய்யா வேலயப் பாத்துக்கிட்டு...!

இருந்தாலும் வாங்க.. அது என்ன அடுத்த பகுதினு பாத்திருவோம்.

குடுகுடுகுடுகுடுகுடு... உடுக்க சத்தம் கேக்குது. இந்த மாதிரி உடுக்க சத்தம் கேட்டா யாருக்கோ சாமி வந்திருக்குனு அர்த்தம். வாங்க யாருக்குனு பாப்போம்.

அட, நம்ம தேமொளிக்கு..! பள்ளிக்கோடத்துல பன்னெண்டாவது படிக்குதுங்க.

"ஆத்தா... ஆத்தா... என்ன செய்யணும் ஆத்தா..! திடீர்னு வந்திருக்கயே ஆத்தா..! ஏதாவது கொற வெச்சிட்டமா ஆத்தா..? பொங்க சரியா பொங்கலியோ? தங்கம் சரியா தங்கலியோ? அங்கம் சரியா வெக்கலியோ? ஆத்தா நீ சொல்லு...!" இது பூசாரியே தான்.

"டேய்..! நான் தான்டா மகமாயி வந்திருக்கேன்! உங்க மேல பாசம் வெச்சு கருப்புசாமியே உங்க ஊருக்கு வந்திருக்கான்டா..! அவனோட பாம்பு மேல ஏறி வந்திருக்கான்டா..! பாத்தியா... அவன் வந்த வழியப் பாத்தியா..?"

"ஆமா தாயி! பாம்பு மாதிரியே இருக்கு!"

"அதான்டா..! அவன் வந்த எடத்த மறுபடியும் புல்லு பூண்டு வெளய வுட்டுறாதீங்க. அவனுக்கு கோவம் வந்திரும்டா! எனக்கு கோவம் வந்தாக் கூட நீங்க தாங்கிக்குவீங்க..!"

"ஆமா தாயி! நீ ஊரு உலகத்துக்கெல்லாம் அம்மா இல்லியா? உன்ற கோபத்த உன்ற புள்ளங்க மேலயே காட்டுவியா? மாட்டியே! புள்ளைங்க நாங்க தாங்குவமா! வேணாம் தாயி..!"

"ஆனா கருப்பனுக்கு போவம் வந்தா இந்த ஊரு தாங்காதுடா! மழத் தண்ணி கெடைக்காது. பஞ்சம் வரும். பட்டினி தொரத்தும். மாரி வரும். வேணுமாடா உங்களுக்கு..?"

"வேணாம் தாயி! நீ என்ன சொல்றியோ அதுபடி செய்யறோம் தாயி! உத்தரவிடு ஆத்தா! கட்டளையிடு காளியாத்தா! ஆணையிடு அங்காள பரமேஸ்வரி!"

"சொல்றேண்டா! கருப்பன் வந்து போன பாதயயே வெச்சு நெலத்த தோண்டுங்கடா. நல்லா வெவசாயம் பண்ணுங்கடா. அது கருப்பன் பூமி. காஞ்சு போக விடாதீங்கடா. அதுல தண்ணி பாச்சுங்க. மஞ்ச, கரும்பு எது வேணாலும் வெதைங்க. பூமித் தாயி பொன்னாத் திருப்பித் தருவாடா..!"

"என்ன எல்லாருக்கும் கேட்டுதா? அம்மா வந்து சொல்றபடி கேப்பீங்களா..?" பூசாரி நல்ல ஒரக்கவே கேட்கறாரு.

"கேக்கறோம்...! ஆத்தா சொன்ன மாதிரியே செய்யறோம்..!" யப்பா! காதே கிளிஞ்சிடும் போல இருக்கு!

"அம்மா ! தாயே...! நீ சொல்றத கேட்டுத் தாம்மா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். ஒன்ன வுட்டா எங்களுக்கு வேற நாதி ஏது? பராசக்தி உன்ன வுட்டா எங்களுக்கு வேற போக்கடம் ஏது..?" நாட்டாம தான்.

ஆத்தா வாயத் தெறந்து அப்படியே கெறக்கமா சரிய, பூசாரி எரியுற கப்பூரத்தை ஆத்தா வாயுல போட்டு மூடி, துன்னூரு தெளிக்கறாரு.

"என்ன எல்லா சனமும் கேட்டீங்க இல்ல? ஆத்தா சொன்ன மாதிரி செஞ்சுரலாம் இல்ல..?" நாட்டாம கேட்டதும் எல்லா சனமும் "ஆமாங்கய்யா...!".

"இது தாங்க உண்மையான Science! ஊருக்கு பயன்படுற எல்லாமே Science தான்! இல்லீங்களா?"னு வாத்தியார் கேட்க,

"ஆமாம்! ஆமாம்! இல்லியா பின்ன? ஆத்தாவே சொல்லிடுச்சு இல்ல?"னு சிரிச்சவாட்டி நாட்டாம சொல்றாரு.

நல்லா கத கேட்டீங்களா? அவினாசிக்கு சாயங்காலம் அஞ்சரைக்கு தான் அடுத்த வண்டி.

வீட்டுக்கு வாங்க. எங்க ஊரு சாப்பாடு சாப்பிட்டதில்லையே நீங்க..?

பருப்பு சாதமும், பருப்பு ரசமும், கெட்டித்தயிரும், அப்பளமும், கொத்தவரங்கா பொறியலும், பூசணிக்கா கூட்டும், ஜவ்வரிசி பாயசமும் சாப்புடலாம் வாங்க.

அப்புறமா தோட்டத்துப்பக்கமா போயி கயித்துக்கட்டல்ல அக்கடானு ஒக்கந்து ஒங்க ஊரு நாயத்த பேசுவோம், என்ன சரிங்களா..?

தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

8 comments:

வெண்பூ said...

ஆச்சரியம்... எதிர்காலம், ஏலியன், டைம் மெஷின் இல்லாமல் ஒரு அறிவியல் கதை ... அதுவும் வசந்தகுமாரிடம் இருந்து. நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.

...

போட்டிக்கு நானும் அடுத்த கதையை வெளியிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வரவும். நன்றி.

வேளராசி said...

க.சி.சிவக்குமார்,எழில்வரதன் கதைகளை வாசித்ததுண்டா?

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றி!

உங்களது ரிகர்ஸிவ் லூப் கதையில் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறேன். கவனியுங்கள்.

***

அன்பு வேளராசி...

க.சீ.சிவகுமார் கதைகள் வாசித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். குங்குமத்தில் வந்திருக்கின்றது தானே? எழில்வரதன்... இல்லை.

ஏன்...?

Anonymous said...

ஓரு அழகான கிராமத்து அறிவியல் கதை..

எல்லா கதைகளையும் வாசித்த எனக்கு இந்த கதை ரொம்ப பிடித்துள்ளது..

வாழ்த்துகள்.

ராம்ஜி

இரா. வசந்த குமார். said...

அன்பு இராம்ஜி...

மிக்க நன்றிகள் தாங்கள் அனைத்து கதைகளையும் படித்ததற்கு..!

சொந்த ஊர் மொழி என்றால் அதை எழுத நாம் மெனக்கெட தேவையில்லை அல்லவா? அது தான் மொழி சரளமாக வந்திருக்கிறது.

தொடர்ந்து வாருங்கள்.

Anonymous said...

வாழ்த்துகள்.

Nice to read the language dialect I grew up with.

- Divya

இரா. வசந்த குமார். said...

Hai Divya...

Thanks for your wishes...!

Karthik said...

சூப்பர்பா இருக்குங்க..!

//'அம்மணி! நீ போயி முருகன கும்புட்டு வா! நான் இங்க கருப்புசாமி கோயில்ல பங்காளிங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன்!

சரிங்க மாமா! கருப்பனுக்கு படையலயும் ரொம்ப படச்சிராதீங்க. அளவா இருக்கட்டுமுங்க'//

அட்டகாசம்..! :)))