Wednesday, July 30, 2008

இயந்திர எழுத்து!

"குமார் போய்க்கிட்டு இருக்கான். அப்ப வந்து ஒரு கார்.. ப்ளைமவுத்... வேணாம் அம்பாஸிடர், மாருதி.. இல்லை ப்ளைமவுத்தே இருக்கட்டும். நல்ல வெள்ளை கலர். அவன் இல்லை. கார். அந்த கார் வந்து ரோடு கார்னர்ல திரும்புது. குமார் கைல சர்ட்டிபிகேட்சோட, வேற ஏதோ நெனப்புல... வேலை நெனப்புலனு போட்டுக்கோ. ரோட்டை க்ராஸ் பண்றான். காரை கவனிக்கல அவன். நல்ல ஸ்பீட்ல வந்த கார், ப்ரேக் போட்டும் அவன் மேல மோதிருச்சு. குமார் கொஞ்ச தூரம் போய் விழுந்திடறான். அவசரமா கார்ல இருந்து இறங்குற மிஸ்டர் விநாயகம்... இல்லை, மிஸ்.மாலினி அதிர்ச்சியா அவசரமா இறங்குறப்ப அவ போட்டிருக்கற மெல்லிய பாலீஸ்டர் ஸாரி கார் டோர்... இது நல்லா இருக்குல்ல, கார் டோர்... அதுல மாட்டிக்குது. அவ இன்னும் ஷாக்காகறா..! எங்க சொல்லு!" என்றேன்.

"குமார் போய்க் கொண்டு இருக்கிறான். அவனது நினைவுகள் அவனிடம் இல்லை. கிடைக்க வேண்டிய வேலையைப் பற்றிய கவலைகளுடன் கையில் சர்ட்டிபிகேட்ஸ்களுடன் சாலையைக் கடக்கிறான். சாலையின் ஒரு முனையில் இருந்து ஒரு ப்ளைமவுத் கார் திரும்புகிறது. அதன் வெள்ளை நிறத்திற்கு சற்றும் குறையாத வெண்ணிறத்தில் இருக்கும் மிஸ்.மாலினி காரை ஓட்டி வந்தாள். நல்ல வேகத்தில் வந்ததால், சாலையைக் கடக்கும் குமாரைப் பார்த்து , அபாயத்தை உணர்ந்து ப்ரேக் பிடித்தும் கார் அவனை இடித்து விடுகின்றது. குமார் சற்று தள்ளிப் போய் விழுகிறான். அதிர்ச்சியுற்ற மிஸ்.மாலினி அவசரமாக காரை விட்டு இறங்க முயல்கையில், அவள் அணிந்திருந்த மென் பாலீஸ்டர் ஸாரி கார்க் கதவில் சிக்கிக் கொள்கிறது. அவள் மேலும் அதிர்கிறாள்." சொல்லி விட்டு நிறுத்தியது.

கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருந்த நான் திருப்தினேன்.

"ஓ.கே. இப்ப என்ன பண்ணணும் தெரியுமில்லையா..?"

"ஐ நோ சார். லேஸர் பீமில் ஸ்கேன் செய்து, தாமிரப் பட்டு க்வார்க் மேகஸீனின் வி.ஐ.பி. அட்ரஸ்க்கு அனுப்பி விட்டு, அக்னாலட்ஜ்மெண்ட் பெற்று, அக்.மெமரியில் பதிந்து கொள்ள வேண்டும். சரியா?"

"இருநூற்று ஐம்பது பர்செண்ட்..!"

2.8 மைக்ரோ நொடிகளில் முடித்து விட்டு, என்னிடம்,

"சார்! என்னிடம் சேர்ந்துள்ள வார்த்தைக் களஞ்சியத்தில் இருந்து பொறுக்கி, உங்கள் கதைகளின் லாஜிக்குகளை இணைத்து என்னால் கதை சொல்ல முடியும் என்று நம்புகிறேன். வார்த்தைகளை தருகிறீர்களா? இல்லை ஸ்டோரில் இருந்து அள்ளட்டுமா?" பணிவுடன் கேட்டது.

எனக்கு ஆச்சரியம்!

தோன்றும் வேகத்திற்கேற்ப கதைகளை எழுத முடியவில்லை என்று வாங்கிய மாடலை ரீப்ளேஸ் செய்ய, கருமாத்தூரில் இருக்கும் ஷாகுள் லேப்ஸில் கேட்க, இந்த இயந்திரனை டிசைன் செய்து தரும் முன்,

"சார்! பர்ப்பஸ் என்ன? மறுபடியும் கதையா?"

"ஆம். என் கதைகளைத் திருத்தி, மேற்பணிகள் செய்ய!"

"தமிழ்க் கதை தானே?"

"ஆம். ஏன்?"

"நோக்கம் பொறுத்து லோட் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளின் பண்டலை செலக்ட் செய்ய!"

சுவாரஸ்யம்.

"சரி! எனக்கு என்ன தொகுப்பு?"

சன்னமாக நாரிழையைக் காட்டினான். அதன் மேல் மென் துகள்களில் தமிழ் சிறுகதை நானோஸ்கோப்பில் ஜொலித்தது.

"இதில் தமிழ்க்கதைகளுக்கு தேவையான அத்தனை வார்த்தைகளும் உள்ளன. ஒரு, அவன், இவன், தாலி, அம்மா, கண்ணீர், நிலா, பூ, படுக்கை, அதிர்ந்தான், சிரித்தாள், காதல், பஸ், ரயில், மேகம், மோகம், போகம், வயல், நீர், மலை, பேய், புளியமரம், விபத்து, இழப்பு, அரசாங்கம், நேர்மை, ஊழல், லஞ்சம், தமிழ்...!"

எனக்கு கோபம் வந்து விட்டது.

"நான் எழுதும் கதைகளில் வேறு மாதிரி கொடுப்பேன். அம்ப்ரெல்லா அணில்கள். இது இந்த தொகுப்பில் உண்டா..?"

திகைத்தான்.

"சார்! நீங்க சயின்ஸ் பிக்ஷன் எழுதற ஆளா..?"

"கொஞ்சம்..!"

"அப்ப நீங்க இந்த இழையை எடுத்துக்குங்களேன். கி.மு., கி.பி., டைம் மெஷின், உலகம், கிரகம், ஏலியன், அழிந்தது, கடைசி, இருள், 2543, 4751, குழப்பம், பூமி, விண்கலம், ஒளி, சூரியன், அணு, குண்டு, நெருப்பாறு, பூச்சி, மழை, அமிலம்..."

"எனக்கு எல்லாம் கலந்து வேணும்..!"

"ஓ.கே.சார்."என்றவன் சில பண்டல்களைப் பிரித்து இணைத்து நெடுந்தொடர் கண்ணிகள் கொண்ட இழை அமைத்து இந்த இயந்திரனில் பதித்தான்.

C45XE7 மாடல்.

இதற்கு முன்பு A59c மாடல் வைத்திருந்தேன்.

போன தலைமுறையான அதில் மொழி வெர்ஷன் - V15D இன்ஸ்டால் செய்யும் போது, எங்கோ ஒரு புள்ளியில் குளறுபடி ஆகி, ஆடோமெடிக் ரெகவரி சிஸ்டத்தினாலும் சரி செய்ய முடியாமல் போய்...

எனகு இந்த குழப்பம் தெரிய வரும் போது...

கேளுங்கள்.

"பாலு படுக்கையில் இருந்து எழுந்து, நண்டு நுழைந்து பார்கவி மார்பில் நத்தை மழை இரத்தக் கோட்டில் சிதறியது. பாவம் வெடித்து நாயகன் குண்டு அலுத்து இலை சிதறி கிஸ் கொடுத்த எறும்பு திகைத்தான். மமதி நனைந்த சூடு கனிந்து மிஸ்டர் பதறி பின்புறமாய் தேடி இறுக்கம்...!"

ஒரே நாளில் அதை ரீப்ளேஸ் செய்து விட்டு, ('என்ன சார் கதை சொன்னீர்கள்? மெமரி இப்படி குழம்பி போய் இருக்கிறதே?') இதை வாங்கி வந்தேன்.

இப்போது இது சொந்தமாய் கதை சொல்வதற்கான உணர்வு எப்படி வந்திருக்க முடியும்? இந்த திறனுக்கான ஃபைபர் மெமரி ஃபோட்டான்கள் இந்த மாடலிலேயே நிறுவப்பட்டு விட்டதா? கிளைத்த கேள்விகளை விட கிளர்ந்த ஆர்வம் அதிகம்.

"சரி! சில அடிப்படை வார்த்தைகள் தருகிறேன்! முயல்! வடை, நரி, காகம், பாட்டி, அடுப்பு, மரம், பாட்டு! எங்கே கதை சொல், பார்க்கலாம்!"

சில மைக்ரோ செகண்டுகளில் L1, L2 ஸெகண்ட்ரி மெமரிகளில் சேர்த்து வைத்திருந்த எனது கதைகளின் லாஜிக்குகளையும், தன் சொந்த வார்த்தைகளையும் சேர்த்து கோர்த்து சொன்னது.

"நரியின் அடுப்பை மரம் சுட்டுக் கொண்டிருந்தது. காகத்தை தூக்கிப் போன பாட்டிடம் இருந்து, பாட்டியை கேட்டது வடை!"

"ஏ முட்டாள் இயந்திரமே! நீ சொன்ன கதையில் எல்லாம் இருந்தன. ஆனால் அடிப்படையாக அர்த்தம் என்று ஒன்று வேண்டும். அது இல்லை! நீ வார்த்தைகளை வைத்து கதை எழுதலாம். பொருள் இருக்க வேண்டும். நீ ஒரு முட்டாள்!" சிரித்தபடி.

"மன்னியுங்கள். என்னை முட்டாள் எனாதீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு epic-ஐ நான் கொஞ்சம் படித்து புரிந்து கொண்டேன்!"

"epic-ஆ? என்ன?"

"ஜெயமோகன் என்ற ஆதிகால படைப்பாளியின் விஷ்ணுபுரம்!"

நான் வாய் பிளந்தேன்.

"என்ன விஷ்ணுபுரத்தை முழுதும் படித்து புரிந்து கொண்டாயா? எங்கிருந்து?"

"எனது ரீடிங் செல்ஃபில் போட்டு வைத்திருந்தீர்கள் அல்லவா? அங்கிருந்து. முழுதும் படிக்கவில்லை. நாற்பது பக்கங்கள் வரை தான். அடுத்த பக்கம் போவதற்குள் 7th CPU-க்கு செல்லும் ப்ரைமரி ஒயர்கள் எல்லாம் தெறித்து, பிய்ந்து ஆங்காங்கே கரண்ட் கன்னாபின்னாவென்று பீச்சியடித்து, வோல்டேஜ் தாறுமாறாகி, ஜீனர் டயோடு நான்கைந்து புகைந்து போய், இண்டக்டரில் மேக்னடிக் ஃபீல்டு மாறி மாறி துருவம் காட்டி... யப்பா! ஏ.ஆர். சிஸ்டம் பூட் அப் ஆகி என்னைக் காப்பாற்றியது. இல்லாவிடில் என்னவாகி இருப்பேன்? என் சிந்தனை பைட்டுகள் பூஜ்யம் ஆகின்றன...!"

"தேவையா உனக்கு? பேசாமல் நான் சொல்கின்ற கதைகளை மட்டும் எழுதிக் கொண்டிரு!"

"சரி தான்!" என்றது.

"ப்படி இருக்கின்றது என் முதல் கதை?" அதன் முகத்தில் பெருமிதமோ, மகிழ்வோ, ஆர்வமோ தெரியவில்லை. மழை விழுந்த எருமை முகம்.

"உன் சுயசரிதையா, என்னை கவிழ்க்கிறாயா இல்லை உன்னையே கலாய்க்கிறாயா என்றே தெரியவில்லை. போகட்டும். கதைக்குப் பேர் என்ன?" கேட்டேன்.

"இயந்திர எழுத்து..!" என்றது உணர்ச்சியே இல்லாமல்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

2 comments:

மாதங்கி said...

Iyanthiram ippadithan puttukuma
perumbalana ungal kathaigal veveru pinaniyil irukindrana vaazthukal

இரா. வசந்த குமார். said...

அன்பு மாதங்கி மேடம்...

//Iyanthiram ippadithan puttukuma

இயந்திரம் இப்படித் தான் புட்டுக்குமானு எனக்குத் தெரியல. இதை விட மோசமாவும் ஆகலாம். இல்லை, நம்மள விட ஜீனியஸா(?) ஆகி, இலக்கிய உலகில் பெரும் புரட்சியே செய்யலாம். நம்ம கைல என்ன இருக்கு. எல்லாம் மூர்ஸ்லாவும், நானோ டெக்னாலஜியும் பண்ற வேலை..!!

//perumbalana ungal kathaigal veveru pinaniyil irukindrana vaazthukal

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...! இன்னும் நிறைய மாறுபட்ட தளங்களில் எழுதணும்னு தான் எனக்கும் ஆசை..!