Monday, September 15, 2008

வெண்பா முயற்சிகள் - 2.

'ச்சமடம் நாணம் பயிர்ப்பு' என்று ஈற்று அடி வருமாறு வெண்பாக்கள் எழுத முயன்றதில்,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழின்
எச்சமீதி ஏதேனும்?" "ஏனில்லை?" சிந்தித்து
"அச்சமடம் நாணம் பயிர்ப்பு".

இது பொருள் முற்றுப் பெறாமல் இருப்பதாகக் கருதிய அகரம்.அமுதா அவர்கள் சற்று மாற்றி எழுத,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழர்
எச்சமெதும் உண்டோதான்?" "உண்"டென்று சிந்திநின்றாள்
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

மற்றொன்று ::

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

இதே போல் 'தீயிற் கொடியதோ தீ!' என்று ஈற்றடி வருமாறு வெண்பா எழுத முயன்றதில்,

மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
தீயிற் கொடியதோ தீ!

யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
தீயிற் கொடியதோ தீ!

9 comments:

தமிழ்ப்பறவை said...

முதல் வெண்பா அகரம். அமுதாவின் கைப் பட்ட பின் பொலிவாகத் தெரிகிறது.
//இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!//
சூப்பர்...
கடைசி மூன்று வெண்பாக்களுமே இன்பத்துப்பாலில் தோய்ந்திருந்தது.
'தீயிற் கொடியதோ தீ' நல்ல தேர்வு ஈற்றடிக்கு.
இதில் 'வறுமைத் தீயிற் கொடியதோ தீ' என ஒரு சமூக வெண்பா கூட எழுதலாம்.
வாழ்த்துக்கள் வசந்த்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

அகரம்.அமுதா எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்ட் வெண்பாவில்...! எனவே அவர் கை பட்டதும் முழுமை எனும் 'ஜீபூம்பா' வெளி வருதல் வியப்புக்குரியதல்லவே..? ஹுzuuர்...!

எங்கம்மாட்ட கல்யாண வெண்பாவைப் படிச்சு காட்டினேன். கேட்டுட்டு ஒரு மாதிரி பாத்திட்டு, 'இது வெண்பா இல்லை. பெண்பா' அப்டினுட்டாங்க...! ;-)

SP.VR. SUBBIAH said...

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழர்
எச்சமெதும் உண்டோதான்?" உண்டே புத்தகத்தில்
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

இரா. வசந்த குமார். said...

அன்பு சுப்பையா சார்...

மிக்க நன்றிகள் தங்களது வெண்பாவிற்கு! ஒரு சிறு திருத்தம். கொஞ்சம் தளை தட்டுகின்றார்ப் போல் தெரிகின்றது. தாங்கள் அகரம்.அமுதா வகுப்பிற்கு வந்து இன்னும் நன்றாக தெரிந்து கொள்ளலாமே...!

(வாத்தியாருக்கே வகுப்பா...?) ;-)

அகரம்.அமுதா said...

வாழ்த்துகள் வசந்தகுமார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்பத்துப்பாலைப் படியுங்கள். காமச்சாற்றை இன்னும் அழகாகவும் புனைவாகவும் வழங்கமுடியும். தமிழ்ப்பறவை அவர்கள் தங்கள் வெண்பாவைக் கண்டு இன்பத்துப்பால் தோய்ந்திருக்கிறது என்றவுடன் எனக்குத் தோன்றியது தங்களுக்கு இன்பகவி என்ற பட்டம் வழங்கலாம் என்று தோன்றிற்று. அய்யா சுப்பையா அவர்களும் ஒரே ஒரு சொல்லை மட்டுமே மாற்றி அவ்வெண்பாவில் நகைச்சுவை மிளிரும் அளவிற்குச் செய்துவிட்டார். அவருக்கென் வாழ்த்துகள். (பொருள் நயம் மிளிரும் இடங்களில் ஓரிரு இடத்தில் தளைதட்டுமானால் பொருத்துக்கொள்ளலாம். தப்பில்லை.)

அகரம்.அமுதா

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம் அமுதா...

என்னது...? இன்பகவியா...? என்னங்க இப்படி ஒரு பேரைக் கொடுக்கறீங்க..? பேரைக் கேட்டாலே ச்சும்மா கிளுகிளுங்குதுல்ல...!!!

பொருள் பொருந்தியிருப்பின் பிழை பொறுக்கலாம் என்கிறீர்கள்...! ஓ.கே. இதைக் குறித்துக் கொள்கிறேன். ;-)

அகரம்.அமுதா said...

அருமை நண்ப! வசந்த்...

பொருள் பொதிந்திருப்பின் பிழைபொறுக்கலாம் என்றது தங்களைப்போன்ற இலக்கணம் நன்கறிந்தவர்களுக்கல்ல. புதிதாக எழுதுபவர்களுக்கே! இருப்பினும் இலக்கணம் நன்கறிந்தவர்களும் சிலஇடங்களில் இதுபோல் செய்வதுண்டு. ஆயினும்அவை வெகு சிலஇடங்களிலேயே செய்வர். அதனால் எப்பொழுதாவது அதுபோல் தளைகொள்ள மறுத்தால் கண்டுகொள்ள வேண்டாம். அடிக்கடி அதுவே தொடர்கதையானால் மற்றவர் நம்மைப்பார்த்து இலக்கணம் நன்கறியாதவன் என்றெண்ணிவிடுவர்.

தமிழ்ப்பறவை said...

//எங்கம்மாட்ட கல்யாண வெண்பாவைப் படிச்சு காட்டினேன். கேட்டுட்டு ஒரு மாதிரி பாத்திட்டு, 'இது வெண்பா இல்லை. பெண்பா' அப்டினுட்டாங்க...! ;‍)//
நீங்க உங்க தேவையை எவ்வளவு 'பண்பா'க வெண்பா மூலம் சொல்லி இருக்கீங்க...
அதை விட அழகு,அதன் மூலம் உங்கள் உள்ளக்கிடக்கையை உங்கள் அம்மா புரிந்து கொண்டதுதான்...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

ஓ.கே.ங்க.

அன்பு தமிழ்ப்பறவை...

பண்பா.. வெண்பா.. பெண்பா... கலக்கறீங்க போங்க...! நீங்களும் வெண்பா கோதாவில் குதிக்கலாமே...!