Friday, September 19, 2008

இரவின் குளிர் ராகம்.மென்மையான குளிர் ஒன்று தன் பட்டுச் சிறகுகளை விரித்து பறக்கிறது. சின்னச் சின்ன குரல்களை அடைகாத்து வைத்திருக்கும் நதிக்கரையோரம், வண்ண வண்ணப் பூக்களை வளர்த்து வைத்து, தலையசைத்துச் சிரிக்கும் மலர்த் தோப்பு, பொட்டுத் துளி ஒளி சிமிட்டும் கோயில் விளக்குத் தூண்... எல்லாப் பக்கமும் நகர்ந்து செல்கிறது.

மயில் இறகே, குயில் ஒலியே, மழைக் குளுமையே, நிழல் அருமையே என்று சதா சர்வகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் ஒரு காதலனின் மூடிய இமைகளின் வழியே ஊடுறுவுகிறது. துடித்துக் கொண்டிருக்கும் சிவந்த இதயத்தின் அருகில் சில நொடிகள் இருந்து கேட்கிறது. அவளது பெயரையே ஆயிரம் ஆயிரம் ஜென்மங்களாய் உச்சரிக்கும் ஓர் உயிரின் பெருங்காதல் அவஸ்தையை அள்ளிக் கொள்கிறது.

இவனது நிறைய நிறைய பிறவிகளின் அமுதம் வழியும் அன்பை கொள்ள வேண்டிய அவளைத் தேடிப் பறக்கின்றது.

கோடானு கோடி அண்டம் பேரண்டம் முழுதும் நிறைந்து வழிந்து ததும்புகின்ற விண்மீன்கள். விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி ஒளிப் பிரவாகத்தைத் துளித் துளியாய்ச் செலுத்துகின்றன. கரிய இருளோடை வியாபித்திருக்கும் பிரபஞ்சத்தின் அகண்ட வானவெளியெங்கும் பூத்திருக்கின்றது குளிர்.

அவள் பனிப்பாறைகளின் படுக்கைகளில் புரள்கிறாள். ஆழ ஆழிக் கரைசலின் உச்சம் போன்ற கரும்பாம்புகள் திரளும் கூந்தலின் நுனிகளில் பனித்துகள்கள் சொட்டுகின்றன. மலர்கள் பூத்திருக்கும் தோல் துளைகள் வழியாக வாசனை நிறைந்த ஒரு பாடல் வெளியேறும் போது, மெளனத்தின் மிருதுவான போர்வையைப் போர்த்திக் கொள்கிறாள். யுகம் யுகமாய் நிரம்பி அழிந்து பின் துளிர்க்கும் இரகசியம், அவளது விழிகளின் வெம்மையால் மட்டுமே வாழ்கின்றன. அவளது விரல்கள் நட்சத்திரங்களைத் தடவும் போது, நகங்களில் இருந்து நழுவுகின்ற ஏதோ ஒன்று சந்தியில் அடிவானெங்கும் விரைகின்ற ஆகாயச் சிவப்பின் நிறப் பூச்சை முலாமிடுகின்றன.

ஊழிக்காற்று அவள் மீது உரசிப் போகின்ற போது, ஆடைகள் என்னும் அநாவசிய அலங்காரம் கலைந்து, காற்றோடு கரைந்து அபூர்வமான, நிஜமான பேரெழில் ப்ரசன்னமாகின்றது. பொன் தோல் ஒளியால் ஜொலிக்கட்டும். காது மடல்களில் பூத்திருக்கும் சின்னஞ்சிறு முடிகள் சிலிர்க்கட்டும். பூக்களின் வரைதலின் பொருட்டு மட்டும் நொடிக்கு நொடி புதிதாய் பிறப்பெடுக்கும் அவளது பாத கணுக்களின் மேல் அகங்காரத்தோடு, ஆணவத்தோடு, இறுக்கமாய், கொடிகள் பின்னிக் கிடக்கட்டும்.

திரட்சியான பளிங்கு உருகி ஊற்றி கனமாகி, கடிது வார்த்து உயிர் தொட்டு உருவாகி, இமை பிறந்து, இதழ் திறந்து, சிவந்த தன் ஈர அதரங்களால் அவன் பெயரைக் கூறும் போது, தென்றலே அவன் இதயத்தில் இருந்து உருவிக் கொண்டு வந்த மெய்க் காதலை மொழி!

இருட்டின் இடை மேல் ஏறி அமர்ந்து கொண்ட இசையா? நாள் பொழுதின் நகரா நேரங்களின் நாதமா? மாலை மங்கி வரும் போதும், இரவின் மிகைக் கிரணங்கள் தன் வழி தேடி கரங்கள் வீசும் போதும், நூலெடுத்து, வானம் வரை நின்று அளக்கும் அமைதியா?

ஓ...! ஜன்னல்களின் ஸ்பரிசங்கள் மழை பெய்யும் நேரங்களிலும், மின்னல்களின் மிரட்டல்கள் விழிகள் சந்திக்கும் போதும் நிகழக் கூடும் போது, பொன்னழகே, போதாக் குழைவே, இன்னிழலே, இணைகின்ற இருமலரே என தென்றல் கூவுகின்றது.

வெண் பட்டுத் தூரிகையின் வெள்ளி நார்கள் வர்ணச் சொட்டுகளைத் தொட்டு, பொட்டிட்டு, களைத்து, கவிழும் போது, ஓர் ஓவியம் தன் உயிர்ப்பைக் கண்டு கொள்கிறது. ஜரிகை வளைத்த ஆடைகளின் எல்லைகளில் இருந்து தேனோடும் இனிமையான பாதை நோக்கி, வரிசை கட்டிப் பாய்கிறது பாட்டொலி.

மிகைப் புன்னகை, மிளிர்கின்ற புருவச் சுழிப்புகள், இமைகளின் இடைவிடாத இதழ் முத்தங்கள், சிவந்த இரத்தம் பொங்கிப் பாயும் அதரங்கள் கசிகின்ற, ஜீவனைப் பிடித்து வைத்திருக்கும் வார்த்தைகள்.

மஞ்சள் வர்ணம் முதுகில் சுமந்த புகைக் காற்று, தன் ஊஞ்சலின் உள்ளிருந்து அவன் காதலை எடுத்துக் காட்டுகிறது. ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்து எப்போதோ விசிறிய ஒரு மயிலிறகை, மறைத்து வைத்து, இன்றோடு உன் கைகளில் திணிக்க வருகின்றது. இடை கூட ஒரு பூக்கோலம் போட்ட குறு அழகாய் குவிந்திருக்க, ஆதிக் குளிரின் அத்தியாவசிய மிச்சங்கள் இடை வழி உறிஞ்சும் இரத்தப் புள்ளிகளை!

முத்தமிட்ட ஒரு நொடியில், உறைகின்ற இறகுகள் மீண்டும் இயக்கம் பெறும் மற்றொரு நொடிகளில், இயல்புகள் கலைந்து போய் பறத்தலுமாய், மிதத்தலுமாய், கால்கள் பதியாமல், கடக்கின்றான் வெகு தூரங்கள்.தொலைவில் ஓர் உயிர்த் துடிப்போடு சுடர் விடும் விளக்கிடம் கேட்க வேண்டி சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன் அவனுக்கு!

இதழ் துடிக்க, வியர்வைப் பருக்கள் கன்னத்தின் பிம்பங்களை பதிந்து காட்ட, முகத்தில் பதித்த ஒரு கணம், சூடான திரை ஒன்று மூடிக் கொண்டது நாடகத்தின் இறுதி போல்!

அவன் இன்னும் ஜெபிக்கிறான். அவள் தன் நீளப் பொற்கரங்களால் நீவிக் கொண்டே இருக்கிறாள் தன் கைகளுக்கெட்டும் பாதரசத் துளிகளை!

தென்றல் இன்னும் பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!

***

படத்தை க்ளிக்கி இன்னும் சிறப்பாக பார்க்கலாம். ப்ளாகர் GIF ஃபைலை அதன் மாயாஜாலங்களோடு காட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.

இப்படத்தை இறக்கி வெகு நாட்களாகி விட்டதால், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலை இட முடியவில்லை. யாராயினும் நன்றிகள் உரித்தாகுக..!

6 comments:

அகரம்.அமுதா said...

அழகிய வர்ணனை. சற்றேறக்குறைய புதுக்கவிதைபோலுள்ளது. சொல்லாளுகையும் கையாண்டுள்ள உவமைகளும் அருமை.

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

மிக்க நன்றிகள். கவிதை எழுத முயலும் போது தான், மனதின் கட்டுகள் அவிழ்ந்து, அது பயணம் செய்யும் திசைகளுக்கெல்லாம் சென்று வார்த்தைகளை அள்ளிக் கொண்டு வர முடிகிறது. கட்டற்ற மென்சுதந்திரம் கவிதை எழுத முயல்கையிலேயே கிடைக்கின்றது என்பது என்னைப் பொறுத்தவரை உண்மையே!

வீரசுந்தர் said...

நல்லா இருக்கு!

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்துக்கு....
இக்கவிதை(அ) உரைநடை பற்றி வரிக்கு வரி விமர்சிக்க இயலாது. ஏனெனில் இதைப் படிப்பது ஒரு இனிய,போதை அனுபவம். நான் இப்பதிவை அலுவலகத்தில் எனது ஜி மெயிலில் ஃபீட்ஃப்லிட்ஸ் மூலம் படித்தேன். அப்போது படம் வரவில்லை.வார்த்தைகளை வாசிக்க வாசிக்க எனக்குள் ஒரு கற்பனா உலகத்திற்குச் சென்று வந்தேன். இப்போதுதான் படத்தைப் பார்க்கிறேன்.படம் ந்ன்றாக உள்ளதெனினும், படம் இல்லாமல் நான் படித்த உணர்வும், என் மனத்திரையில் ஓடிய படமும் இதனை விடப் பன்மடங்கு நன்றாக இருந்தது.
//யுகம் யுகமாய் நிரம்பி அழிந்து பின் துளிர்க்கும் இரகசியம், அவளது விழிகளின் வெம்மையால் மட்டுமே வாழ்கின்றன. அவளது விரல்கள் நட்சத்திரங்களைத் தடவும் போது, நகங்களில் இருந்து நழுவுகின்ற ஏதோ ஒன்று சந்தியில் அடிவானெங்கும் விரைகின்ற ஆகாயச் சிவப்பின் நிறப் பூச்சை முலாமிடுகின்றன.//
நல்ல கற்பனை...எனக்கு சில விஷயங்கள் தெரியாது. இது போன்ற புதுக்கவிதைகளுக்கு என்ன பெயர் அல்லது இது போன்ற கவிதைகள் என்ன வகை..?(ஏதேதோ சொல்வார்களே.. ரியலிசம், மேஜிகல் ரியலிசம்.. எனக்கு அதெல்லாம் மண்டையிலே ஏறவே இல்லை)

தமிழ்ப்பறவை said...

its for mail follow up

இரா. வசந்த குமார். said...

அன்பு வீரசுந்தர்,

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு!

***

அன்பு தமிழ்ப்பறவை,
நன்றிகள்.

ஒவ்வொருவரின் கற்பனைக்கும் தனித் தனி வாசல்களைத் திறந்து விடுவதன் மூலம் அவரவர் அனுபவங்களில் திளைக்க வைப்பதே கவிதையின் அழகு.

கதைகளுக்காகச் சிந்திக்கும் போது, அதற்கான சட்டதிட்டங்களுக்குள் சிந்திக்க வேண்டும். லாஜிக் பார்க்க வேண்டும். நம்பத்தக்க செயல்களாக இருக்க வேண்டும். இலக்கணம் பார்க்க வேண்டும். எடிட் செய்ய வேண்டும். தாறுமாறான குதித்தல்களை சூத்திரங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடனம் என்பதாக ரசிப்பது போன்றது. அது ஒரு வகை அழகு.

சிந்தித்தலில் இருந்து மனம் விடுபட்டு, அதன் போக்கில் எங்கெங்கோ சென்று அங்கிருந்தெல்லாம் வார்த்தைகளை அள்ளி, அவற்றை எந்த வித வரிசையிலும் இல்லாமல், எவ்வித ஒழுங்குபடுத்தலும் செய்யாமல், அப்படியே எழுதி வைப்பது என்பது மற்றொன்று. கூடை நிறைய உதிரி மல்லிகைகளை எடுத்து அப்படியே தரையில் விசிறினால், அவை அமைக்கும் உருவம் என்னவாக இருக்கும்? என்ன ஃபார்முலாக்குள் அடங்கும்? அது வேறு வகை அழகு. பார்ப்பவரின் மன அமைப்புக்குத் தக்கவாறு அது ஒவ்வொரு உருவமாகத் தோன்றும் அல்லவா? அல்லது ஒன்றுமே தோன்றாமலும் போகலாம். தவறில்லை.

கதைகளுக்காக யோசிக்கும் மனம் களைப்புறும் போது, 'சென்று வா மனமே' என்று கட்டவிழ்த்து விட்டால் அதுவே கொண்டு வரும். கவிதையையோ, கவிதை போன்ற ஒன்றையோ!

இந்த வகையில் நான் எழுதுபவற்றை கவிதையா என்று கேட்டால், எனக்குத் தெரியாது.

மனம் என்பது மாயக் கிணறு. நாம் எத்தனை ஆழம் சென்று பார்த்திருக்கிறோம்? டி.வி. எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்தா, நாம் அதை இயக்குகிறோம்? மனத்தைப் பற்றி முழுதும் அறிந்து கொண்ட பின் தான் சிந்திப்பேன் என்பது சரியா?

பெயர் வைப்பது எல்லாம் பெரியவர்களின் வேலை. நம் வேலை எழுதிச் செல்வது தான். நானும் மகிழ வேண்டும். படிக்கும் நீங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும், எதையாவது. அது போதும்.

நீங்கள் சொன்ன டெஃபனிஷன்கள் எனக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளுவது நல்லது தான்.