Wednesday, September 17, 2008

அக்காவுக்கு...!

ன்பு அக்கா,

நான் தான். உன்னை அக்கா என்று கூப்பிடும் தகுதி பெற்ற ஒரே ஒரு நான்.

எனக்கு எதுக்கு கல்யாணம் நடந்துச்சு? காலேஜ் முடிச்சிட்டு, ஒரு வேலைக்குப் போய்ட்டு, டைப்பிஸ்ட்டோ, ஸ்டெனோவோ, செக்ரட்டரியோ, அப்பாக்கு இருக்கற சிரமத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்னு ரெண்டு மாசம் சம்பளம் வாங்கறதுக்குள்ள, கல்யாணம். நல்ல வரன். போனா வராது அப்டினு லாட்டரி சீட்டு மாதிரி வாங்கிப் போட்டாரு. ஊர்ல நாலு ஏக்கரா இருந்துச்சு, உனக்குத் தெரியுமா? ஆமா, இப்ப அது 'இருந்துச்சு'. வித்தாச்சு. எனக்கான செலவுகள்ல அடுத்த டெர்ம் இது.

இந்தக் குடும்பத்தைப் பத்தி கேக்கறியா? சொல்லட்டுமா?

ரொம்ப புதுசா இருக்கு. பயமாவும் இருக்கு. இந்த இறுக்கம்... நெருக்கம்... வேகம்... அணைப்பு... ஈர்ப்பு... பொங்கற வேர்வை... வலி... காது எரியற வெப்ப மூச்சு... களைப்பு... எல்லாமே! எனக்கும் ஒரு மாதிரியா.. சரியா சொல்லத் தெரியல.. இருந்தாலும், ஏதோ என் சுயத்தை இழக்கறது போல் உணர்றேன்.

பதினைஞ்சே நாளல வாழ்க்கையில நிறைய பார்த்துட்ட மாதிரி இருக்கேன். போதும்.. போதும்னு ஒரு பூரணம். என்னன்னு தெரியல.

நைட்டெல்லாம் முழிச்சுட்டு, பகல்ல எல்லாம் தூங்கித் தூங்கி விழறேன். கிச்சன் புதுசு. பெட்ரூம் புதுசு. பாத்ரூம், பூஜை ரூம், மொட்டை மாடி எல்லாம் புதுசு.

இவருக்கு ஒரு மாதிரி சமையல். அவர் அம்மாவுக்கு வேற மாதிரி. மாமனாருக்கு ஷுகர் கம்ப்ளையண்ட். பூசணிக்கா கூடாது. தம்பி ஒருத்தன் இருக்கான். அவனுக்கு எல்லாம் சூடா வேணும். ஐஸ் க்ரீம் கூட சூடா தான் சாப்பிடுவானாம். சிரிக்காத, ஜோக்கில்ல!

இங்க என்ன மாதிரி நடந்துக்கணும்னு இன்னும் புரியல. வீட்டுல இருக்கற மாதிரி சாதாரணமா இருக்கணுமா? காலேஜ் முடிச்சிட்டு வந்தவுடனே புக்ஸை தூக்கி எறிஞ்சிட்டு..(அப்பா :: ஏழு கழுத வயசாச்சு.. இன்னும் பொறுப்பு வந்துச்சா பாரு...? எப்படி புக்கைத் தூக்கி எறியறா..!)அம்மா மடியில கொஞ்ச நேரம் படுத்துக்குவேனே, அது மாதிரி இங்க இருக்கக் கூடாதா? சாயந்திரம் ஆனா ஃப்ரெஷ்ஷா மாறி, வீட்டை சுத்தம் பண்ணி, விளக்கேத்தி வெச்சு.. ஒரு நாடகம் போல தான் நடந்துக்கணுமா..? இன்னும் சரியா யாரும் பழகாததால கஷ்டமா இருக்கு.

இவர் அம்மா நல்லா தான் பேசறாங்க. ஆனா முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி! அவ்ளோ கோபம் வருது! எப்ப அந்த கோபம் நான் ட்ரை பண்ற சாம்பார் மேல பாயுமோ?

பக்கத்து வீட்டுல ஒரு மலையாளக் குடும்பம் இருக்கு. ஆஷான்னு ஒரு பொண்ணு. நல்லாப் பழகறா. இப்ப தான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கறா. நிறைய கதைகள் சொல்லுவா. அவளோட காலேஜ் ஸ்டோரீஸ், பஸ் ஸ்டாப் நிகழ்ச்சிகள்னு..! அவ சொல்லும் போதும் எனக்கும் பழைய ஞாபகங்கள் எல்லாம் வரும்.

பாஸ்கர்..! ஸாரி பாஸ்கர்.

இந்த லெட்டரை உனக்கு அனுப்பறதா, வேண்டாமான்னு இன்னும் யோசிக்கல.

சரஸ்வதி.

பி.கு: இல்லை.. இதை உனக்கு அனுப்பப் போறது இல்ல. ஸாரி.

***

அக்கா...

இன்னைக்கு சாந்தினி செளக் போனோம். எத்தனை கடைகள்? பட்டுத்துணி, கொலுசு, நெக்லஸ், மருந்து ஷாப், ஹோட்டல், ரெட் ஃபோர்ட் எல்லாம் போனோம். அத்தை வரலை. நானும் இவரும் மட்டும் தான்.

எவ்ளோ பெரிய சிட்டி இது! எத்தனை கார்கள்! எத்தனை ஹாஸ்பிட்டல்கள்! பார்லிமெண்ட்டுக்கு போகும் ரோடு ஒண்ணு போதுமே! ஆடி மாசப் பண்டிகைக்கு, தஞ்சாவூர் மாமா வீட்டு வயலோரமா பொங்கிப் பொங்கி ஓடுமே காவேரி... அது மாதிரி அவ்ளோ பெருசா, அகண்டு இருக்கு.

இவர் நல்லா அன்பாவே இருக்கார். அடிக்கடி வெளிய கூட்டிட்டுப் போறார். ஒரு இந்திப்படத்துக்கு கூட கூட்டிட்டுப் போனார். எனக்கு ஒண்ணும் புரியாதுன்னாலும் கேட்கலை. 'இந்தி தெரியாம தில்லியில எப்படி குடித்தனம் நடத்துவே'னு கேட்டார். அதுவும் சரிதான். அந்தப் படத்துல பொண்ணுங்க கூட கால்சராய் போட்டுட்டு தான் பாட்டெல்லாம் பாடறாங்க. எனக்கு ஆச்சரியமா போயிடுச்சு. படம் பேரு என்னவோ 'பாபி'யாம். நம்ம ஊருக்கு எப்ப வருமோ?

அப்பாக்கு லெட்டர் எழுதினேன். என்னைப் பிரிஞ்ச வருத்தத்தில இருக்காங்க. நான் மட்டும் இங்க ரொம்ப சந்தோஷமாவா இருக்கேன்? ஊர்ல எல்லாரையும் பிரிஞ்சு, இப்படி பாஷை தெரியாத ஊர்ல, புது மனுஷங்களோட ஒரு வாழ்க்கை! இப்ப கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டு இருக்கேன். எல்லாம் சரியாப் போய்டும்னு தோணுது.

அடுத்த வாரம் ஆக்ரா போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். ஆக்ரா! சரித்திரப் புத்தகத்துல படிச்சது. காதலோட ஒரே நிரந்தர தழும்பு! புதையலைப் பாத்துக்கற பூதம் போல, ஒரு செத்த காதலிக்கு ஒரு சக்ரவர்த்தி கட்டிய சாகாக் காதலின் கல்லறையை பாதுகாக்கற நான்கு தூண்கள்! நேரில பாக்கப் போறோம்னு நெனச்சாலே சந்தோஷமா இருக்கு!

போய்ட்டு வந்து உனக்கு நிறைய சொல்றேன். இவர் பஜாரில இருந்து புது காமிரா வாங்கிட்டு வந்திருக்கார்! போலராய்டு. அதில நிறைய போட்டோஸ் எடுத்திட்டு வர்றேன்.

சரஸ்வதி.

***

அக்கா...

போன லெட்டர்ல தாஜ்மஹால் போறதைப் பத்தி சொல்லி இருந்தேன் இல்லையா? அந்த ப்ரோக்ராம் கான்சல் ஆயிடுச்சு. நீ எதுவும் பயப்படாத. எதுவும் தப்பா நடந்திடல.

சொல்லவே கூச்சமா இருக்கு. ஆமா.. நான் உண்டாயிருக்கேன்.

இதை உடனே அப்பாக்கும், அம்மாக்கும் சொல்லணும்னு வாத்தியார் வீட்டு ட்ரங்கால் போட்டு சொல்ல சொல்லி இருக்கேன் அவரை! நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சவுடனே நீ பாக்கணுமே..! இவர் எவ்ளோ சந்தோஷப்பட்டார் தெரியுமா? இவர் மட்டுமா? அத்தை, மாமா, தம்பி எல்லாரும் தான்!

ஒவ்வொருத்தரும் என்னைத் தலைக்கு மேல வெச்சுத் தாங்கறாங்க. இவர் என்னன்னா, ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடறார். அத்தை சமையல் எல்லாம் நானே பண்றேன் அப்டின்னு இறங்கிட்டாங்க! மாமா, சாயந்திரம் இண்டியா கேட் வரைக்கும் வாக் போவார். அதை நிறுத்திட்டு, எனக்கு என்ன வேணும்னு கேட்டுக் கேட்டுப் பண்றார்.

ஆளாளுக்கு ஒரு ஆசை வெச்சிருக்காங்க.

மாமாக்கு வந்து அவர் தாத்தா ஜமீன் சண்முகநாதப் பிள்ளை மாதிரி பிள்ளை வேணுமாம. இப்பவே பேரனுக்காக சாமான்கள் எல்லாம் தேடித் தேடி வாங்கறார். அவர் பரம்பரையிலேயே, இந்த ஜமீன் தாத்தா தான் பேரு, புகழ் எல்லாம் நிறைஞ்சு வாழ்ந்தவராம். ப்ரிட்டிஷ்க்கு குமாஸ்தா அளவுக்கு உயர்ந்தவராம். இந்த தில்லியில நம்ம ஊர் விளையாட்டுச் சாமான எல்லாம் கிடைக்கறது கஷ்டமா இருக்கு. மரப்பாச்சி பொம்மை, குட்டிக் குட்டி சமையல் செட், குதிரை பொம்மை...! எதுவும் இங்க கிடைக்கல. இங்க கிடைக்கறதெல்லாம் அவருக்குப் பிடிக்கல. அடுத்த தடவை குத்தகை வசூலிக்க உறையூர் போகறப்ப வாங்கிட்டு வரன்னு ஒரு லிஸ்ட்டே போட்டு வெச்சிருக்கார்.

அத்தைக்கு அவங்க அப்பா மாதிரி பிள்ளை வேணுமாம். மிஸ்டர் வேதாசலப் பிள்ளை. குடந்தை பக்கத்துல ஒரு திவானா இருந்தவராம். ஐநூறு, அறுநூறு ஏக்காரா நஞ்சை பூமி வெச்சு, யானை வெச்சு போரடிச்சவராம். அவங்க வீட்டிலயே யானைத் தந்த தொட்டில் ஒண்ணு இருக்குன்னு சொல்றாங்க. பிள்ளை பிறந்தவுடனே முதல்ல அந்தத் தொட்டில்ல தான் தாலாட்டணும்னு அவங்க ஆசை!

இவருக்கு எப்படிப்பட்ட பிள்ளைனாலும் பரவாயில்லையாம். பெண்ணோ, பிள்ளையோ எப்படியோ நல்லபடியா பிறந்தா போதும்னு சொல்றார். தம்பி - லா காலேஜ் கேடலயே எப்பயும் நின்னு சைட் அடிச்சுக்கிட்டு இருக்கற பிள்ள - எனக்காக கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிருக்கான்.

ஆனா, எனக்கு என்ன குழந்தை பிறக்கணும்னு ஆசை தெரியுமா?

மூணு மாசத்துலயே நம்ம அம்மா வயித்தில இருந்து கரைஞ்சு காணாம போன அக்கா, நீ தான் என் மகளா பிறக்க வேணும். உனக்கு இதுவரைக்கும் நான் எழுதி வெச்சிருக்கற லெட்டர் எல்லாத்தையும் படிச்சுக் காட்டணும்.

அக்கா, நீ வருவியா...?

சரஸ்வதி.

12 comments:

ஆயில்யன் said...

மனம் கனத்து போய்விட்டது!

சொல்ல தெரியவில்லை எப்படி என்று!

:(

thamizhparavai said...

கதை பரவாயில்லை வசந்த். முடிவு ஒரு சிறு திருப்பத்தில் முடிந்ததை எதிர்பார்க்கவில்லை. நல்ல முடிவுதான்.
கதை நிகழும் காலம் 70,80 கள் போல் தெரிகிறதே...(அதனால்தான் கதைஓட்டத்திலும் ஒரு பழையவாடை அடிக்கிறதோ..?) ஏன் இக்கதைக்கு தற்போதைய சூழலும் பொருந்துமே...?! ஏதேனும் சிறப்புக் காரணங்கள்..?
(பாஸ்கர்.. யாரது ரகசிய ஸ்னேகிதனா...?)
புதுப் பெண்ணின் தவிப்பு, அப்போதும் ,இப்போதும் ஒன்றுதான் போலும்.ஆணின் தவிப்பு எப்படி இருக்கும் புது மணப்பெண்ணிடம்..?
பெண்ணியத்தைப் பற்றி ஏகப்பட்ட பேரு எழுதிட்டாங்க...ஆண்கள்தான் பாவம்...சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

thamizhparavai said...

ஏதோ கதையைப்படித்தவுடன் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

நந்து f/o நிலா said...

சோ டச்சிங் வசந்தகுமார். மனசு கனத்துபோச்சு. நீங்க இப்படில்லாம் கூட கதை எழுதுவீங்கன்னு தெரியாமயே போச்சு...

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

மனம் கனத்துப் போயிருக்க... சாரி!

***

அன்பு தமிழ்ப்பறவை...

'ப்' போட்டு இணைத்துக் கொண்டீர்களா..? நன்று. நன்றி.

/*கதை பரவாயில்லை வசந்த். முடிவு ஒரு சிறு திருப்பத்தில் முடிந்ததை எதிர்பார்க்கவில்லை. நல்ல முடிவுதான்.

ஏதோ கதையைப்படித்தவுடன் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
*/

உங்களது கருத்துக்கள் மட்டுமே கதை எழுதுபவர்களுக்கு ஊட்டம். மனதில் என்ன தோன்றுகின்றதோ, அதை அப்படியே சொல்லி விமர்சிப்பதை தான் படைப்பாளிகள் விரும்புவர். வெறும் 'நன்றாக இருக்கின்றது' வகையிலான பதில்களில் இருந்து அறிந்து கொள்ளுவது ஏதும் இல்லை அல்லவா? உங்களுக்குச் சரியென்று தோன்றுகின்ற விமர்சனத்தையே நானும் விரும்புகிறேன். எனவே வருந்த வேண்டா.

/*கதை நிகழும் காலம் 70,80 கள் போல் தெரிகிறதே...(அதனால்தான் கதைஓட்டத்திலும் ஒரு பழையவாடை அடிக்கிறதோ..?) ஏன் இக்கதைக்கு தற்போதைய சூழலும் பொருந்துமே...?! ஏதேனும் சிறப்புக் காரணங்கள்..?
*/

கதையோட்டத்தில் பழைய வாடை அடிக்கின்றதா..? ஹப்பாடா. அப்படி ஒரு பழைய கதை போல் தோன்ற வேண்டும் என்று முயற்சி செய்தது தவறிடவில்லை. இக்காலத்தில் எழுதாதற்கு சிறப்புக் காரணங்கள் ஏதுமில்லை. கதை அப்படியே வந்து விட்டது, அவ்வளவு தான்.

/*(பாஸ்கர்.. யாரது ரகசிய ஸ்னேகிதனா...?)*/

'கல்லூரிக் கதை சொல்கிறாள்' என்று சொல்லும் போது, சரஸ்வதி பாஸ்கரை நினைத்துக் கொள்கிறாள் எனில், அவன் அவளது கல்லூரிக் காதலன் என்பதாக இருக்க வேண்டும் அல்லவா? தங்களது கேள்வி, நான் இன்னும் இது போன்ற இணைப்பு Story Flow-வில் இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

/*புதுப் பெண்ணின் தவிப்பு, அப்போதும் ,இப்போதும் ஒன்றுதான் போலும்.ஆணின் தவிப்பு எப்படி இருக்கும் புது மணப்பெண்ணிடம்..?
பெண்ணியத்தைப் பற்றி ஏகப்பட்ட பேரு எழுதிட்டாங்க...ஆண்கள்தான் பாவம்...சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம இருக்காங்கன்னு நினைக்கிறேன்.*/

ஆணின் தவிப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு இன்னும் அனுபவம் இல்லை. பின் எப்படி புதுப்பெண்ணின் அனுபவம் மட்டும்? என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. படைப்பின் இரகசியம் என்று சொல்ல வேண்டியது தான்.

***

அன்பு நிலா அப்பா...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு..!

எப்போதும் கமர்ஷியல் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கிறோமே, கொஞ்சம் வேறு வகையில் எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று பார்த்ததில் வந்த கதை இது. அவ்வப்போது இது போன்ற முயற்சிகள் தொடரும் என்று எச்சரிக்கிறேன். ;-)

thamizhparavai said...

//*(பாஸ்கர்.. யாரது ரகசிய ஸ்னேகிதனா...?)*/

'கல்லூரிக் கதை சொல்கிறாள்' என்று சொல்லும் போது, சரஸ்வதி பாஸ்கரை நினைத்துக் கொள்கிறாள் எனில், அவன் அவளது கல்லூரிக் காதலன் என்பதாக இருக்க வேண்டும் அல்லவா? தங்களது கேள்வி, நான் இன்னும் இது போன்ற இணைப்பு Story Flow-வில் இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
//
அது அவளது காதலன் என்பது எனக்கு உடனே விளங்கி விட்டாலும், நான் தங்களது பழைய கதைகளுடன் முடிச்சிட்டுக் கொண்டு,(இது தாங்கள் பழைய பாணியில் விரும்பி எழுதியது தெரியாமல்) அதெப்படி இவ்வளவு நேரிடையாகவா சொல்லி இருப்பார்... ஏதேனும் உள்கூற்று இருக்குமோ எனத் தேவையில்லாமல் குழம்பி, உங்களிடமே கேட்டு விடலாமெனக் கேட்டு விட்டேன்.மற்றபடி உங்களின் கதையோட்டத்தில் இவ்வளவு இணைப்பே போதுமானதாகும் பாஸ்கரைப் பற்றி.(அச்சமயங்களில் பல படங்களில் கதாநாயகன் பெயரே பாஸ்கர், மோகன்,ராமு என்றுதானிருக்கும்.
//ஆணின் தவிப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு இன்னும் அனுபவம் இல்லை. பின் எப்படி புதுப்பெண்ணின் அனுபவம் மட்டும்? என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. படைப்பின் இரகசியம் என்று சொல்ல வேண்டியது தான்.
//
தெலுங்கில் 'பெல்லான கொத்தலு' என்றொரு படம் வந்தது.. 'கல்யாணமான புதுசுல' என்னும் அர்த்தம். அதில் புது மணத்தம்பதிகளின் ஈகோ மோதலை நகைச்சுவையாகச் சொல்லி இருப்பர். இன்னும் நன்றாக எடுத்திருக்க வேண்டிய படம். ஆனால் பிரியாமணியின் கால்ஷீட்டை வீணடிக்கக்கூடாது என்று நினைத்து கவர்ச்சி மழையில் படத்தை நனையவிட்டிருப்பார்கள்...

வெண்பூ said...

நல்ல கதை வசந்த்... நீங்கள் கடித வடிவில் எழுதும் முதல் கதை என்று நினைக்கிறேன். நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நானும் கல்லூரிக் காதலன் பேர் வேறு ஒன்றைத் தான் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் பழைய வாடை அடிக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப யோசித்து 'பாஸ்கர்' என்று வைத்து விட்டேன். நன்றி கவனித்ததற்கு!

/*தெலுங்கில் 'பெல்லான கொத்தலு' என்றொரு படம் வந்தது.. 'கல்யாணமான புதுசுல' என்னும் அர்த்தம். அதில் புது மணத்தம்பதிகளின் ஈகோ மோதலை நகைச்சுவையாகச் சொல்லி இருப்பர். இன்னும் நன்றாக எடுத்திருக்க வேண்டிய படம். ஆனால் பிரியாமணியின் கால்ஷீட்டை வீணடிக்கக்கூடாது என்று நினைத்து கவர்ச்சி மழையில் படத்தை நனையவிட்டிருப்பார்கள்...
*/

நீங்க சொன்ன மற்ற காரணங்களை விட, 'கவர்ச்சி மழை', டக்குனு என் கண்களைத் திறந்திடுச்சு. 'ஒரு டி.வி.டி. பார்சல்....!'

Anonymous said...

Nice post.. Don know wat to type...

இரா. வசந்த குமார். said...

Dear Karthi...

Thanks for your visit and wishes..!!

You are welcome often! (இங்க்லீஷ் சொதப்பிடுச்சே!)

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்! கடித வடிவில் எழுதும் முதல் கதை இது தான் என்று நானும் நினைக்கிறேன்.

நன்றிகள்.

யோசிப்பவர் said...

I have some strong comments on this. Lets talk some time