Monday, September 15, 2008

தொலை தூர இரவுப் பயணம்.



குளிர் மினுக்கும் இரவில் நெடுந்தொலைவு பேருந்துப் பயணம் தரும் அனுபவங்கள் அலாதியானவை.

சிலுசிலுவென ஈரக்காற்று கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சிலிர்ப்பூட்டும். நெடுஞ்சாலையில் கடக்கின்ற குற்றூர்களின் சில மஞ்சள் சோடியம் விளக்குகளின் அடியில் டீக்கடைகள் மட்டும் விழித்திருக்கும். கிராமத்தின் டூரிங் டாக்கீஸைக் கடக்கையில், புரட்சித் தலைவரின் 'நாடோடி மன்னன் - புத்தம் புதிய காப்பி' போஸ்டரின் மீது இருக்கும் கிடைமட்ட ட்யூப் லைட்டின் அடியில் உறைந்த கவர்ச்சி சிரிப்பு எம்.ஜி.ஆரை மறைத்திருக்கும் ஈசல்கள். பேருந்தில் எரிவிளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டவுடன், கூடவே பயணித்து வரும் மெலோடி பாடல்கள் அந்த இரவை இரு நாட்களுக்கு நினைவில் இருத்தி வைக்கும். நகரின் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கண்டிராத, வெண்ணிலா தன் முழுப் பிரம்மாண்டத்தையும் ஒரு வட்டமாக விசிறி அடித்து பாதையின் இருள் பயணத்தை பாலென நனைக்கும். சட்டென ஒரு புள்ளியில் நிலவு பின் நின்று விடும். மறைத்திருக்கும் கரு மேகங்கள் ஒட்டிக் கொண்டு வந்து ஒரு வளைவில், சிதறிக் காணாமல் போகும். பனி மூட்டப் புகைக் கிரீடங்கள் அணிந்த தூர மலை முகடுகள் கன்வின் மிச்சம் போல் தோற்றமளிக்கும். ரிலேட்டிவிடிப்படி மீவேகத்துடன் கடக்கும் எதிர் வண்டிகள் காற்றை வீசி விட்டுப் போகும். ஆட்டுக்குட்டியை முழுங்கி அமைதியாய்ப் படுத்திருக்கும் பாம்பாய், நீளக் கண்டெய்னர்கள் ரகசியங்களை விழுங்கி நெடுஞ்சாலையின் ஓரங்களில் நின்றிருக்க, மனிதர்கள் தாபாவில் அடைக்கலமாகி இருப்பர். கருஞ்சாக்கு போட்டுப் போர்த்திய லாரிகள், தலைகீழ் சிவப்புக் குடத்தின் உள்ளே ஒளி திகழும் பல்பு சுரக்கும் ஒளி சிவப்பாய் ஜொலிக்கும், செக் போஸ்ட் க்ளியரன்ஸுக்காக காத்திருக்கும். அவ்வப்போது எதிர்த்திசையில் கடக்கும் குடிசைகளின் ட்யூப்லைட்கள். வயலின் கிணற்றில் பம்ப் செட் மோட்டார் மேல் சரிந்து எரியும் குண்டு பல்ப். அந்தரத்தில் தொங்கும் டவர்களின் சிவப்புப் புள்ளிகள். கரங்கள் கோர்த்த பெரும் இராட்சதர்களாக எலெக்ட்ரிக் ட்ரான்ஸ்பார்மர்கள். மெல்லத் துவங்கி, உச்சியாக கேட்டு, மீண்டும் நம்மைத் தொலைத்து தேய்ந்து போகும், வழியில் சடாரென கடக்கும் ஒரு கிராமத்தின் அம்மன் கோயில் பண்டிகையின் சாட்சியான கோன் ஸ்ப்பீக்கரில் இருந்து கசிந்து கொண்டிருக்கும்,'ஆயி மகமாயி...'. புளிய மரங்களின் இலைகள் வழியாக குளிர் இறக்குமதியாகும். ரெயில்வே க்ராஸிங்குக்காக நிற்கையில், சில பீடிகள், சிகரெட்டுகள் யுயிர் பெறும். 'தடக்..தடக்..' என கடக்கும் இரயில் வண்டி வெளிச்சப் புள்ளிகளைச் சுமந்து அதி வேகத்தில் செல்லும். சில எல்லைச் சாமிகளின் உக்கிரப் பார்வைகள் குளிரில் காணாமல் போயிருக்கும். சில மாடுகள் சாவகாசமாக சாலை விளிம்புகளில் படுத்து அசை போட்டுக் கொண்டிருக்கும். ஒரு நாய், சரியாக பேருந்து வரும் போது தான் சாலையைக் கடக்க முயன்று, க்றீச்சீட்டு, வாலைச் சுருட்டிக் கொண்டு வந்த திசைக்கே பாயும். 'இவர் மட்டும் எப்படி இரவு முழுதும் தூங்காமல் வண்டி ஓட்டுகிறார்?' என்று ஒருவருக்காவது தூக்கக் கலக்கத்தில் ஒரு சந்தேகம் வரும். எப்போதாவது ஒரு குழந்தையின் தொடர் அழுகை கேட்கும். மெல்லிய குறட்டைச் சப்தம் யாராவது ஒருவரை 'ப்ச்' சொல்ல வைக்கும். ஏதோ ஒரு ஜன்னல் மட்டும் சரியாக மூட முடியாமல், அந்த குட்டி இடைவெளி, ஜன்னலை ஒட்டியவரின் முணுமுணுப்பாலும், அவஸ்தையாலும் நிரம்பப்பெறும். தூக்கத்தில் யார் தோள் மீதாவது சாய்வோம். இல்லை நம் தோளில் யாராவது! 'தட்'டென விழுந்து, யாராவது கண்களைத் தேய்த்துக் கொள்வர். இருளின் கறுப்பு படிந்த கண்ணாடி ஜன்னலில் பேருந்தின் நீல ஒளி படர்ந்த நம் முகம் கொஞ்சம் அழகாகவும், கொஞ்சம் கோரமாகவும் தெரியும். எதிர்ப்படும் வயற்காடுகள் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கும். வரப்பின் நடுவில் இருந்து யாராவது ஒருவர் சைக்கிளில் வருவார். எப்போதாவது தூறும். வைப்பர் கை வைப்பதற்குள் ஓயும். எதிர் சீட்டின் மல்லிகைச் சர வாசம் காற்றோடு கரைந்து நம்மைத் தாக்கலாம். அவ்வப்போது நிற்கின்ற ஸ்டாப்புகளில் சிலர் இறங்க, ஏறும் சிலர் தூங்கி வழியும் முகங்களுக்கிடையே ஏதேனும் சீட் இருக்கிறதா என்று தேடுவார். மினுக் மினுக்கென்று மேலும், கீழும் ஏறியும், இறங்கியும் கொண்டிருக்கும் திரி நெருப்பு வடிவ பேட்டரி விளக்கின் முன் பிள்ளையாரும், இயேசுவும், மெக்காவும் போட்டோவாய்!

இப்படி எதையும் ரசிக்க விடாமல் செய்து விடும், 'பஸ் ஒரு பத்து நிமிஷம் நிற்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்' என்று மெட்டல் பாடியின் மீது தட்டி விட்டுச் செல்பவர் பிழைக்கும், வரிசை கட்டி பஸ்கள் நிற்கும், நடு இரவில் சம்பந்தமே இல்லாத கானா பாடல் கதறியடிக்கும் மோட்டல் எப்போது வரும் என்று பதற்றத்தின் உச்சியிலேயே உட்கார வைத்திருக்கும், அடி வயிற்றில் முட்டிக் கொண்டிருக்கும் சிறுநீர்!

நேற்று கோவையை நெருங்கும் போது பார்த்த ஒரு போர்டு கவனத்தைக் கவர்ந்தது. 'ஆர்த்தி கம்பரசர் (Aarthi Compressor) '. மெஷினரி இண்டஸ்ட்ரியில் கவிச்சக்ரவர்த்தி கம்பரை நினைவூட்டும் இதன் ஓனரை ஒரு பேட்டி காண எனக்கு ஆசை வந்தது!

இரயில் குதிரை!

ராயிரம் குதிரைகளின்
ஒற்றுமைப் பெட்டிகள் ரயில்!
ஒற்றை ரயிலின்
ஒற்றைப் பெட்டியாய்க் குதிரை!

இரத்தப் போர்க்களத்தின்
புரவிகள்
வீரம் தரும்!
தடக் தடக் தாலாட்டில்
தாய்மடியின் சாரம் தரும்
ரயில்கள்!

தடம் விட்டுத்
தடுமாறாதிருக்கத்
தண்டவாளம் போல்
கண்களுக்கருகில்
கட்டுகள்!

தடவியதும்
சிலிர்க்கும் ஒன்று!
மற்றொன்றோ
சிலிர்ப்பாக்கும்!

நீளப் பிளிறல்களில்
பயணம் துவக்கும்
இரண்டும்!

இன்று...

ஜட்கா வண்டிகளின்
சாட்டையில்
சரண் புகுந்தன
ஜாதிக் குதிரைகள்!

குட்காச் சாற்றின்
குவியல்களில்
குளித்தவாறு
குமுறிச் செல்லும்
ரயில்கள்!

இக்கவிதையை(?) எப்போது எழுதினேன் என்று தேதி எழுதி வைக்காததால் தெரியவில்லை. ஆனால் எழுதியுள்ள பேப்பரை வைத்துப் பார்க்கும் போது, '97 - '98 ஆண்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு பதிவுக்காக இங்கே!

7 comments:

MSATHIA said...

அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ஒரு இனிமையான பிராயணத்தை. நான் பலமுறை பிராயணம் செய்யும்போது நினைவுபடுத்துவது மாதிரி இருந்தது.
நல்ல எழுத்து நடை.

இரா. வசந்த குமார். said...

அன்பு

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!

இந்த நிகழ்வுகள் எல்லாம் நாம் எல்லோரும் அனுபவித்திருப்பது தானே!

thamizhparavai said...

//ஆட்டுக்குட்டியை முழுங்கி அமைதியாய்ப் படுத்திருக்கும் பாம்பாய், நீளக் கண்டெய்னர்கள் ரகசியங்களை விழுங்கி நெடுஞ்சாலையின் ஓரங்களில் நின்றிருக்க//
பலமுறை நானும் யோசித்திருக்கிறேன் உள்ளே என்ன இருக்கும் என. ரகசியம்தான்.
//சில எல்லைச் சாமிகளின் உக்கிரப் பார்வைகள் குளிரில் காணாமல் போயிருக்கும். //
ஒரு வரியில் பல அர்த்தங்கள்.. பலே..
//எதிர் சீட்டின் மல்லிகைச் சர வாசம் காற்றோடு கரைந்து நம்மைத் தாக்கலாம். // பல சமயம் ஆளை அப்படியே தூக்கும்.
//இப்படி எதையும் ரசிக்க விடாமல் செய்து விடும், 'பஸ் ஒரு பத்து நிமிஷம் நிற்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்' என்று மெட்டல் பாடியின் மீது தட்டி விட்டுச் செல்பவர் பிழைக்கும், வரிசை கட்டி பஸ்கள் நிற்கும், நடு இரவில் சம்பந்தமே இல்லாத கானா பாடல் கதறியடிக்கும் மோட்டல் எப்போது வரும் என்று பதற்றத்தின் உச்சியிலேயே உட்கார வைத்திருக்கும், அடி வயிற்றில் முட்டிக் கொண்டிருக்கும் சிறுநீர்!

//
இதுதாங்க உண்மையிலேயே பெரிய அவஸ்தை. பலரின் புரியாத உள்மனக் குமுறல்களுக்கு நீங்கள் எழுதிய உரைதான் இக்கட்டுரை.
'ரயில் குதிரை' ஒப்பீட்டுக் கவிதை அழகு.
//தடவியதும்
சிலிர்க்கும் ஒன்று!
மற்றொன்றோ
சிலிர்ப்பாக்கும்!
// ப‌டிக்கும் போதே ர‌யிலைத் தொடும் சில்லிப்பை உண‌ர்ந்தேன்.
(எப்போதோ ப‌டித்த‌ காள‌மேக‌ப் புல‌வ‌ர் த‌லை காட்டிப்போனார்)

Anonymous said...

நான் சென்னைக்கு ஒருமுறை பேருந்தில் போக நேரிட்டது. இதே போல் தான் உணர்ந்தேன். கடைசி வரிகள் உட்பட. நன்றாக இருக்கிறது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

எழுதினதில நீங்க நிறைய அனுபவிச்சிருக்கீங்க போல...! முக்கியமா அந்த கடைசி வரி... எல்லோரும் ஒரு முறையாவது அவஸ்தைப்பட்டிருப்போம். பஸ் பயணத்தில் அது ஒரு பெரும் ப்ராப்ளம்....!

இரயில் கவிதையை பாராட்டியதற்கு நன்றிகள்....! காளமேகப் புலவர் என்ன சொன்னார்னு சொன்னீங்கனா தெரிஞ்சுக்கலாம் இல்லையா...?

***

அன்பு சின்ன அம்மிணி...

நெம்ப நன்றிங்க.. நீங்க வந்து பாத்து, உங்க கருத்தை சொன்னதுக்கு..! இன்னொருக்கா சொல்லிக்கறேங்க, நெம்ப நன்றிங்க...!

thamizhparavai said...

'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி 'அகரம்' அமுதா)...
பள்ளியில் படித்த காளமேகப்புலவரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தன..
'நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்' என பாம்பையும், வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு இரு பொருள் பட அவர் பாடிய பாடல் அது...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

//'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி 'அகரம்' அமுதா)...

ஆஹா... கிளம்பிட்டாய்ங்களா....

/*பள்ளியில் படித்த காளமேகப்புலவரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தன..
'நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்' என பாம்பையும், வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு இரு பொருள் பட அவர் பாடிய பாடல் அது...
*/

அட, ஆமாங்க.. நீங்க சொன்னதுக்கப்புறம் தான் ஞாபகத்துக்கு வருது.. நல்ல பாட்டு அது... வாழ்க காளமேகப் புலவரின் புகழ்...!