Thursday, October 23, 2008

அம்மா - தீபாவளி சிறப்புச் சிறுகதை!

ட்டென வெட்டித் திரும்பும் பாறைகளாலான நிலப்பகுதியை வந்து வந்து மோதும் பெருங்கடலில் திசையென்று எதைச் சொல்வது? எது கிழக்கு? எது மேற்கு? எது தெற்கு...? எல்லாம் ஒரே நீர் நிலை. வாழும் வசதிக்கேற்ப பெயர் சொல்லி, திசை சொல்லி, பிரித்து, வகுத்து, எல்லை கட்டி....

மக்கள் கூட்டம். கறுப்பு மண்ணில் விளையாடினர். மென் அலைகள் புகுந்து புறப்படும் சிறு பாறை இடுக்குகளில் அமர்ந்து நனைந்தனர். அலை அடங்கி அமைதியாகும் எல்லைப்புறங்களில் நின்று பாதம் சிலிர்த்தனர். விரல்களின் இடையில் பின் வாங்கும் உப்புநீர் வாரிப்போகும் மணல் வெளியில் கொஞ்சமாய்ப் புதைந்தனர். செங்கல் தடுப்புகளில் அமர்ந்து கடலை சாப்பிட்டனர். ஐஸ் சைக்கிள். மசாலா சுண்டல். பாசி மாலைக் கடை. போட்டோ ஸ்டுடியோ. சுனாமி தோட்டம். கடைசி எல்லை மண்டபம். நடு வான் வெயில். குமரி.

கரையோரத்தில் இருந்து, என் வீட்டிற்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் உணவிற்காகக் காத்திருப்பார்கள். பசியோடு களைத்திருப்பார்கள். உணவை எடுத்துக் கொண்டேன். வேடிக்கை பார்த்தது போதும். கிளம்பினேன்.

என்ன... வெயில் இன்று இப்படிக் கொளுத்துகின்றது...? பிற்பகலில் மழை வருமா...?

அரபிக் கடலில் இருந்து நகர்ந்து, செவ்வகக் கடைகளின் இடையே புகுந்து, கொஞ்சம் மேடேறி என் வீட்டை அடைய முயல்கையில்...

மறுபடியும் கூட்டம்...!

அடிக்கடி இதே பிரச்னை. என் வீட்டின் அருகிலேயே இந்த காலணி பாதுகாப்பிடம் இருப்பது எத்தனை சிரமம் எனக்கு..? என் மனம் பதறத் தொடங்கியது. இவர்களை எப்படியாவது விலக்கி விட்டுப் போக வேண்டும். என்னை என் வீட்டிற்குச் செல்ல விடுவார்களா..? என் பிள்ளைகள் பசியோடு துடித்திருக்குமே..! கடவுளே..! அழுகிறேன்.

ழைய ஃபேன் ஒன்று மெதுவாக கைகள் வீசிக் கொண்டிருந்தது. கடற்காற்றின் அனல் வீச்சும், உப்புப் படிவமும் விழுந்து விழுந்து கரங்கள் அரித்து, ஏனோ கடைசி மூச்சில் முட்டிக் கொண்டிருக்கும் கிழவனைப் போல் சுற்றியது.

உட்கார்ந்திருந்த சரோஜாவுக்கு வேர்த்துக் கொண்டே இருந்தது. என்ன அனல் இது...? முகத்தில் தீக் கங்குகளை வாரி வாரிப் போடுவது போல்...! முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே இருந்தாள். வியர்வை பட்டுப் பட்டு ஒரு வித நசநச ஈரத்தோடு சாயம் இழந்து கொண்டே இருந்தது அது. துடைக்கும் போதெல்லாம் அந்த சாயம் நெற்றியையும், பழைய மக்கிய வாசனை அவள் மூக்கையும் அடைந்தது.

சதுர மர வரிசைகளில் இருக்கும் செருப்புகள் அவளுக்கான காற்றை அடைத்துக் கொண்டே இருந்தன. வித விதமான, வகை வகையான செருப்புகள்!

பிளாஸ்டிக் பூ வைத்த, கண்ணாடி பதித்த, பழுப்பு நிற, வழு வழு கவர் போட்ட, ஹை ஹீல்ஸ், ரப்பர், தோல் வகையறாக்கள், லேஸ் விலகிய ஷூக்கள், கட் ஷூக்கள், உரித்துச் செருகிய கறுப்பு சாக்ஸுகள்...!!!

தேசத்தின் சகல மண்ணையும் அங்கே பார்க்கலாம். எங்கெங்கோ நடந்து வரும் கால்களின் நிழல்கள் செருப்புகளோடு காத்திருக்கும், உடையவர்களுக்காக! எத்தனை எத்தனையோ செருப்புகளை எடுத்து வைத்து அவள் விரல்கள், அவற்றின் நகங்கள் எல்லாம் பல மாநில மண் வாசனை.

மதிய உணவிற்குச் சென்ற பலராமன் இன்னும் வரவில்லை. எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறானோ..?

ஒரு வடக்கத்தி கோஷ்டி முற்றுகையிட்டது.

அவர்கள் மெளனமாக இருப்பதை அறியாத கூட்டம் போலும். அல்லது கூட்டமாய் இருப்பதாலேயே பேசிக் கொண்டே இருக்கிறார்களாய் இருக்கும். தனித்தனியாய் வந்திருந்தால் யாரிடம் என்ன பேச முடியும் அவர்கள்? அவர்கள் மட்டுமல்ல, யாரிடமும் யார்தான் என்ன பேச முடியும்..?

பல வண்ண நகைகள், இளம் ஆரஞ்சு தலைப்பாகைகள், இழுத்துக் கட்டிய வேட்டி, வெள்ளை நுரைத்த மீசைகள், புருவங்களில் காற்றில் திரியும் முடிகள், வயிறு தெரியும் இடது பக்க சேலைகள், கை நிறைய வளையல்கள். இவர்களும் இந்தியர்கள்.

ஒரு கிழவன், ஒரு கிழவி. ஒரு பெரியவன். ஓர் ஆண். ஒரு பெண். புதிதாக மணமானவர்களாக இருக்க வேண்டும். அவள் கைகளில் ஒரு பிஞ்சுக் குழந்தை. விரல்களை மூடி, விழிகளை மூடி, பொன்முடி சுருண்டு, முகம் மட்டும் வெளித் தெரிய துண்டால் மூடி...!

சரோஜா பார்க்கும் போது, அவர்களது தலைகளைத் தாண்டி ஒரு வெள்ளை மேகம் எங்கோ அவசரமாகக் கிளம்பி பறந்து கொண்டிருந்தது. பாரத தேவி சிலையின் கீழ் ஒரு நாய் சுருண்டு படுத்திருந்தது. அடிக்கும் வெயிலின் அதன் வால் கண்டிப்பாக பொசுங்கத் தொடங்கி இருக்கும். ஒரு குருவி பறந்தது. நிழல் தேடி நகர்ந்த ஒரு ஜோடி ஒரு புல்வெளிச் சேரில் அமர்ந்தனர்.

செருப்புகள் சரோஜாவின் பார்வை எல்லையைச் சுருக்கின.

அவள் ஒவ்வொன்றாக ஜோடி சேர்த்தாள். கொத்தாக எடுத்தாள். இப்போது அவள் கைகளில் நாட்டின் ஒரே பாலைவனத்தின் மென் மணல் மணம். காலியாக இருந்த இடத்தில் நிரப்பினாள்.

கூட்டம் மண்டபத்தின் உள் சென்றது.

இன்னும் பலராமன் வராதது, அவளுக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஏன்..? ஏன் இன்னும் வரவில்லை..! அவன் வீட்டுக்குப் போய்த் தூங்கி விட்டானா...? இல்லயே, எப்படியும் வந்து விடுவானே..!

கையில் இருந்த குட்டி வாட்ச்சைத் திருப்பிப் பார்த்தாள். மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவள் பரிதவிக்கத் தொடங்கினாள். அவளது குழந்தையின் முகம் கண்களில் வந்தது. அய்யோ..! குழந்தை சாப்பிடாமல் நமக்காக காத்திருப்பாளே! அவள் ஸ்கூலின் உனவு இடைவேளை முடியும் நேரம் நெருங்குகின்றது. பலராமன் வந்தால் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, சீக்கிரம் போய் குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு வரலாம். ஒயர் கூடையில் இருந்த டிபன் பாக்ஸையும், வாட்டர் பாட்டிலையும் , பாதையையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

அவளால் உட்கார முடியவில்லை. அங்குமிங்கும் அலைபாய்ந்தாள். குழந்தை பசியால் வாடி அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனக் கண்ணில் தெரிந்தது. அவளுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது.

"ங்க அக்டோபர் ரெண்டில் சூரிய ஒளி நேராக காந்தி அஸ்தி மேலயே விழும். தொட்டுக் கும்பிட்டுக்குங்க. வாங்க. இப்படி வாங்க. இது காந்தி போட்டோ. இது கஸ்தூரிபாய் கூட எடுத்தது. போட்டோ எடுத்துக்குங்க. எல்லாரும் நில்லுங்க. நான் எடுக்கறேன். மாடிக்குப் போகலாம் வாங்க.."

கைடு வழிகாட்டிச் சொல்லிச் செல்ல வடக்குக் கூட்டம் அவரைத் தொடர்ந்து சென்றது. உடைந்த இந்தியில் அவர் பேசுவதை இவர்கள் புரிந்து கொண்டு, தமக்குள் உணர்ந்து கொண்டனர்.

குழந்தை அழத் தொடங்கியது.

வெளியே அலைகளின் பேரிரைச்சல். உப்புக்காற்று அனலை அள்ளி அள்ளி வீசியது. கட்டிடத்தின் மஞ்சள் சுவர்களில் பட்டு, கண்ணாடி ஜன்னல்களில் அசைந்து வழிந்தது. அனைத்தையும் தாண்டி அந்த அஹிம்ஸை மண்டபத்தில் அழுகை எதிரொலித்துப் படர்ந்தது.

அவளுக்குப் புரிந்து போயிற்று. குழந்தை பசிக்கு அழுகின்றது. பால் கொடுக்க வேண்டும். இந்த மண்டபத்தை கண்டு விட்டு, வெளியே போய் மதிய உணவு தேடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அதை மூன்று மாதக் குழந்தைக்கு சொல்ல வேண்டாமா? அது பசியில் அழத் தொடங்கி விட்டது.

வளைவான படிக்கட்டுகளில் இதர அனைவரும் சென்று விட அவள் மட்டும் குழந்தையோடு ஓர் இடத்தில் அமர்ந்தாள். பின் கொக்கிகளைப் பிரிப்பதற்கு முன், இயல்பான கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கச் சலிப்புற்றாள்.

பெண்ணாய்ப் பிறந்ததன் காரணத்தை அறிந்த தினத்தில் இருந்து அவள் இந்தப் பார்வையை சந்தித்து வருகிறாள். ரயில் பயணத்தில், சந்தைக்குச் செல்கையில், தியேட்டருக்குச் செல்கையில் எங்கு சென்றாலும் தண்ணீர் எடுக்க வேண்டி, பாலைவனத்தில் நெடுந்தொலைவு குடத்துடன் நடக்கையில் வழியில் காணும் பிணந்தின்னி கழுகுகளின் பார்வையை நினைவுறுத்தும் பார்வைகளை அவள் தினமும் எதிர் நோக்குகிறாள்.

குழந்தையின் அழுதல் அதிகரித்தது. இவளுக்கும் அழுகை வரப் பார்த்தது.

சட்டென ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் எழுந்தாள்.

லுங்கியை பாதி மடித்துக் கட்டி, ஒரு திட்டின் மேல் ஒற்றைக் காலால் சாய்ந்து, ஒற்றை பீடியை மாறி மாறி வலித்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் வெறித்துக் கொண்டிருந்த அவன்களின் அருகில் சென்று, "பைய்யா...!" என்று நீட்டினாள். திடுக்கென்று ஆனார்கள். பீடியை நழுவ விட்டார்கள். லுங்கி தானாக ஒழுங்கிற்கு வந்தது. கைகள் அவைகளாக நீட்டி வாங்கிக் கொண்டன.

புது ஸ்பரிசத்தில் தாயின் வாசம் இல்லாததை உணர்ந்த குழந்தை அழுகையை நிறுத்தி, 'யார் இது..?' என்பது போல் பார்த்தது. அதற்கு, இவர்கள் முகங்கள் எங்கோ அடிபட்ட குரங்குகள் போல் தோன்றி இருக்க வேண்டும். பொக்கை வாயால் சிரித்தது.

அவள் கொஞ்சம் தள்ளி நின்று பின்களை நீக்கத் தொடங்கினாள். அவன்கள் இவள் பக்கம் பார்க்கவேயில்லை. குழந்தையின் முகம் பார்த்து செயலிழந்து நின்றனர். நெருப்பாய் அவர்கள் முகம் சுட்டது.

மேலே புடவையை இழுத்துப் போட்டு மறைத்துக் கொண்டு அவள் கை நீட்டி, "பைய்யா...மேரா கிரிதர்நாத்...!" எனக் கேட்க, அவள் பக்கம் திரும்பாமலேயே அவர்கள் குழந்தையை கொடுத்து விட்டு, அவசர அவசரமாக நீங்கினார்கள்.

குழந்தையை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, மாரோடு ஒட்டி, கண்கள் மூடினாள்.

கொஞ்ச நேரம் கழித்து, அவள் கண்கள் திறந்து, வெட்ட வெளிக் காற்றின் வழியே கீழே பார்த்த போது, ஒரு பெண் வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். அதில் இருந்த அவசரம் இவளுக்குள் ஒரு ஒற்றுமைத்தன்மையைச் சொல்லியது.

டன்காரன்..! அடுத்த தடவை இன்ஸ்பெக்ஷன் வரும் போது, ரிப்போர்ட் செஞ்சிடணும். சாப்பிட போறேன்னுட்டு யாராவது ஒரு மணி நேரம் கழிச்சு வருவாங்களா..? ஒரு மணி நேரம் முள்ளு மேல இருக்கற மாதிரி இல்ல இருந்தேன்...? செருப்பு குடுக்க வர்றவங்க கிட்ட சரியா வாங்காம, கேட்கறவங்க கிட்ட சரியானத குடுக்காம... எல்லாம் இவனால!

கேட்டதுக்கு என்ன சொல்றான், 'பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்ல, ஆஸ்பத்திரி போய்ட்டு வந்தேன்'னு சொல்றான். பொய். அத்தனையும் பொய்.

இல்ல. உண்மையாவும் இருக்கலாம். ரெண்டு நாளுக்கு முன்னாடி பார்த்தப்ப கூட பொன்னம்மா இருமிக் கிட்டு தானே இருந்தா. பலராமனுக்கு பொண்டாட்டி மேல பிரியம் ரொம்பத் தான். அதுக்கு என் புள்ள சாப்பாடு நேரம் தான் கெடச்சுதா..?

ஐயோ.! மணி ஒண்ணு இருவது ஆகப் போகுது. என் புள்ள பசியோட இருக்குமே! பகவதி தாயே!

சரோஜா அடிக்கின்ற அனல் வெயிலுக்கு முந்தானையை முகத்திற்கு மூடிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினாள். உடலெங்கும் பொங்கிப் பொங்கிப் பெருகியது வியர்வை. டிபன் பாக்ஸும், வாட்டர் கேனும் குலுங்கக் குலுங்க விரைவான எட்டுகள் போட்டாள்.

"நிறுத்துங்க.. நிறுத்துங்க...!" சற்று உரக்கவே கூவிக் கொண்டு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த கேட்டை அடைந்தாள்.

நாற்காலியில் அப்போது தான் அமர்ந்திருந்த வாட்ச்மேன், "என்னம்மா...? இப்ப வர்றீங்க..? லஞ்ச் டைம் முடிஞ்சிருச்சேம்மா..!" என்றார்.

"ஐயா..! வேலையை முடிச்சிட்டு வர நேரமாகிடுச்சுங்க..! பாருங்க, என் புள்ள பசியோட இருப்பா. பத்து நிமிசம் விடுங்க. சாப்பாடு ஊட்டி விட்டுட்டு போயிடறேன்..!"

அவர் இண்டர்காம் வழியாக செய்தி அனுப்பி, II - பி செக்ஷனில் இருந்து வள்ளியை வரச் செய்தார்கள்.

அம்மாவைக் கண்டதும் அவள் முகம் முழுதும் சிரிப்பு. பாய்ந்து வந்தாள்.

"வள்ளிக் கண்ணூ...!" பாய்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தங்கள் கொடுத்தாள்.

"வள்ளிம்மா..! ஐயோ..! என் புள்ள அம்மா சாப்பாடு கொண்டு வரலைன்னு முகமெல்லாம் வாடிப் போயிருக்கே..!"

"இல்லம்மா..! நான் சாப்புத்தேன்..!"

"அப்படியா..?யாரு குடுத்தா..?"

"அகஸ்தின் மம்மி, பாபு மம்மி, மீனா மம்மி.. அப்புதம்... அப்புதம்... லீலா மிஸ்.. எல்லாரும் லஞ்ச் குடுத்தாங்க..! மம்மிவர்லையானு கேத்தாங்க...இல்லனு சொன்னன்... அவங்களே ஊத்தி வித்தாங்க...!"

"பகவதி தாயே..! என் செல்லம்...! என் பட்டுக்குட்டி...! சரி, இந்தா அம்மா உனக்குப் பிடிச்ச பருப்பு சாதம், மீன் கறி எல்லாம் ஒண்டு வந்திருக்கேன். சாப்டுவியாம். சரியா..?" பாக்ஸைத் திறந்து ஊட்டி விடத் தொடங்கினாள்.

வாலைச் சுருக்கியபடி ஒரு மஞ்சள் நிற நாய், அந்த வேப்ப மரத்தடியில் வந்து நின்றது. அதன் காலைச் சுற்றி நான்கு குட்டிகள்.

"மம்மி...! டாமிக்கும் கொஞ்சம் லஞ்ச் குது...! பாவம், யாருமே டாமிக்கு லஞ்ச் தரவே இல்ல..! நாம கொஞ்சம் லஞ்ச் குதுப்பமா..?" கேட்டாள் வள்ளி.

கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது சரோஜாவிற்கு..! ரெண்டு கைப்பிடி சோறு பிடித்து கீழே வைத்தாள். அந்த நாய் அவசர அவசரமாகத் தின்றது. அதன் குட்டிகள் அதன் மடியைக் கவ்வின.

அவற்றின் வால்கள் ஆடிக் கொண்டே இருந்தன.

நான் இப்போது மறுபடியும் என் வீட்டை நெருங்கினேன். கூட்டம் கம்மி தான். என்னை யாரும் கவனிக்கவில்லை. படபடப்பாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

என் குழந்தைகள் சட்டென என் வருகையைக் கண்டறிந்து கொண்டன. இன்னும் கண்கள் கூட சரியாகத் திறக்கவில்லை. என் ரத்தம் அல்லவா..? தாய் வாசம் என்று ஒன்று பிறகு எதற்காக இருக்கின்றது...?

கடவுளே...! பசியோடு வாய் திறந்து....!

முதலில் இந்த வீட்டை மாற்ற வேண்டும். வேறு எங்கு போவது..? கடற்கரையைச் சுத்தம் செய்கிறோம் என்று, எல்லா மரங்களையும் வெட்டி விட, கொளுத்தும் முக்கடற்கரைக்கு இந்த காந்தி மண்டபச் செங்கல் சுவர்க் கூடு தான் பாதுகாப்பு..!

வாழ்க நீ எம்மான்..! நீர் இறந்தும், எமக்கு ஒரு வகையில் காப்பு..!

வாயோடு கவ்விக் கொண்டு வந்திருந்த புழுத் துண்டை வெட்டி வெட்டி என் பிள்ளைகளுக்குத் தரத் துவங்கினேன்.

***

ஆசிரியர் குறிப்பு ::

இந்தக் கதை என் அருமைத் தம்பிக்கு பரிசு.

சென்ற முறை கன்னியாகுமரிக்குச் சென்றிருந்த போது, காந்தி மண்டப என்ட்ரன்ஸில், காலணிகள் விடும் இடத்தில், சுவற்றின் உள்ளே பார்க்கச் சொன்னான். பார்த்ததில், நான்கைந்து குருவிக் குஞ்சுகள் வாய் திறந்திருந்தன. 'ஐயோ..! உணவிற்காகக் காத்திருக்கின்றனவே! நாம் இப்படி இவ்விடத்தில் கூட்டமாய் நிற்பதால், இதன் தாய் உணவோடு சுற்றிச் சுற்றி வருகிறாரோ..?' என்ற எண்ணமும், காலணி பாதுகாப்பு அம்மணியும், மண்டபத்தின் உள்ளே கண்ட பால் கொடுக்கும் வடக்கத்துப் பெண்ணையும் இவ்வளவு நாட்கள் மனதிற்குள் அசை போட்டு, தாய்மை என்னும் ஒரே புள்ளியில் கொண்டு வர முயன்று எழுதப்பட்டது இக் கதை.

கதையில் எத்தனை தாய்மைகள் இருக்கின்றன என்று கமெண்டிப்போர்க்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு ஆர்டினரி வாழ்த்துக்கள் தான்..!! ;-))

4 comments:

வெண்பூ said...

அருமையான கதை.. அதற்கு நீங்கள் கருவை பிடித்த இடமும் சூப்பர். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு.....
நெகிழ வச்சிட்டீங்க...ரொம்ப நல்லா இருந்தது.

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு.....
கதையின் நடையும்,வார்த்தைகளும் அருமை.மிக,மிக ரசித்துப் படித்தேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ & தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்களுக்கு...!!

இனிய ஸ்பெஷல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!