Wednesday, December 31, 2008

இராதாப்ரேமி!யர்பாடியின் பொன் அந்தி மாலை நேரம் அது.

யமுனை நதி சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதன் நீரலைகள் காற்றின் மென் தீண்டல்களின் போதெல்லாம் அசைந்தாடி, நளினமான இளம் பெண்ணின் இடை போல வளைந்து நகர்ந்து, நகர்ந்து செம்மண் கரைகளின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. அதன் கரைகளின் வளர்ந்திருந்த நாணல் செடிகள், மாலைக் கால ஊதற் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. படிக்கட்டுகளில் விரவியிருந்த ஈரம் அவ்வப்போது, வந்து மோதிய சிலுசிலுப்புத் தென்றலில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றது. வெண்மை நிற நுரைகளைக் கண்ட சிறுவர்கள் வெண்ணெய் என்று நினைத்து அள்ளி அள்ளித் தின்கிறார்கள். கண்ணன் வாழும் ஊரின் கரைகளைத் தொட்டுக் கடக்கும் நதியின் நுரைகள் அல்லவா..? அவையும் இனிக்கின்றன.

நதியின் அக்கரையில் இருந்து ஆரம்பிக்கின்றது ஒரு வனம். பலவித மரங்கள், காற்றுக்கு அடையாளம் தரும் பலவித மணம் பூக்கும் மலர்கள், பசுமையான புற்செடிகள், மூங்கில்கள், குளங்கள், மலைகள். இயற்கையின் முழுமையான அன்பான அரவணைப்பில் கட்டுண்டிருக்கும் காடு அது. மாலை ஆகி விட்டதல்லவா..? ஆநிரைகள் மேய்த்த யாதவச் சிறுவர்கள் களைப்புடன் மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பசுக்களும், மாடுகளும், ஆடுகளும் கூட தமது எஜமானர்களோடு முட்டாமல், மோதாமல் தமக்குள் இரகசியங்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ ஒரு தேமதுரக் குழலோசை கேட்கின்றது.

வேறு யாராக இருக்க முடியும்..? சூரியனைத் தவிர கதிர் ஒளி தர யாரால் முடியும்..? சிலுசிலுவென ஈரம் கலந்த குளிரைத் தர தென்றல் காற்றையன்றி வேறு யாரால் இயலும்..? உச்சி முகடுகளில் இருந்து கிளம்பி ஒவ்வொரு மலராய் முத்தமிட்டு தேன் அள்ளி சேகரித்து, சேர்த்து வைத்து இனிக்க இனிக்கச் சொட்டுச் சொட்டாய்க் கொடுக்கத் தேனீக்களால் அன்றி வேறு யார் செய்ய முடியும்..? கேட்பவர் அத்தனை பேரையும், கிறங்கச் செய்து, விழிகளில் நீர் பெருகச் செய்து, அந்த மயக்கத்தில் மனதில் மிதக்கின்ற கசடுகளையும் கவலைகளையும் கனமிழக்கச் செய்யும் அந்த கண்ணனை அன்றி யாரால் அத்தகைய குழலோசையை வழங்க முடியும்..?

வனத்தின் மரங்களின் இடுக்குகளில் எல்லாம் சின்னச் சின்னதாய்க் கூடுகள் இருக்கின்றன. அவற்றின் கையகல இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் தத்தம் குட்டிகளோடு இருக்கின்றன. அவை அத்தனையும் அந்த நாத ஓசையில் மயங்கி சிறகடிக்கவும் மறந்து பொட்டுக் கண்கள் மூடி இருக்கின்றன. நதியில் வரும் நீரோட்டத்தை எதிர்த்தும், அதன் வழியோடு சென்றும் துள்ளித் திரியும் மீன்களும் அந்த குழல் இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நீரில் இருந்து மேலே மேலே எம்பித் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. அப்போது நதியைப் பார்த்தால், அதன் மேல் மழைக் கம்பிகள் விழும் போது எப்படி துளிகள் தெறிக்குமோ, அப்படி காட்சியளிக்கின்றது. அந்த மச்சங்களுக்கெல்லாம் தரையில் வாழும் ஜீவன்களைக் கண்டு பொறாமையாய் இருக்கின்றது. பின்னே என்ன, தரை உயிர்கள் எல்லாம் நொடி அளவும் இடைவெளி இன்றி உயிர் மயக்கும் இசையைக் கேட்கின்றன அல்லவா..?

நதியின் கரைகளில் படர்ந்திருக்கும் தாமரை இலைகளின் மேல் தவளைகள் தாவித் தாவி விளையாடுகின்றன. காற்றில் எம்பிக் குதிக்கும் மீன்களுக்கு அவற்றைக் காணும் போது, தம்மைக் கிண்டல் செய்கின்றனவோ என்று தோன்றியது. மீன்களின் சந்தேகத்தை உணர்ந்தது போல், தவளைகள் வேறோர் இடத்தைக் காட்டின. அங்கே பாம்புகள் மயக்கத்தில் தலை அசைத்து, தத்தம் வால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. 'கால்களே இல்லாத பாம்புகளே, உற்சாகத்தில் ஊறிக் கிடக்கும் போது, அவற்றைப் பற்றிய பயமில்லாமல், நான்கு கால்களோடு நாங்களும் மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டிருக்கிறோம்..' என்று சொல்லின போலும்..!

மரங்களின் கிளைத்திருந்த இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருகின்றன. அவையும் இசையை இரசிக்கின்றன. கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் யாவும் மொத்தமாக இசையமுதை அள்ளி அள்ளி அருந்திக் கொண்டிருக்கின்றன.

காற்றின் அணுக்களை எல்லாம் நிரப்பி, கானத்தால் கருவம் கொண்டலையச் செய்கின்ற கண்ணனது குழலிசை ஆயர்பாடியுள் மட்டும் செல்லாமல் இருக்குமா..? அப்படி செல்லாமல் இருக்கத் தென்றல் காற்று தான் விட்டு விடுமா என்ன..?

வளது வீட்டின் பின்கட்டில் தோட்டம் இருக்கின்றது. வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகளைக் கடந்தால் தோட்டம். இராதா முதலாம் படிக்கட்டின் மேல் அமர்ந்திருக்கின்றாள். அங்கிருக்கும் ஒரு நெடும் தூணின் மேல் சாய்ந்திருக்கிறாள். அவளது கைகள், ஆசையோடு வளர்க்கும் புள்ளிமானுக்குப் புற்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால அவள் கவனம் அங்கே இல்லை. அந்த மான், இந்த மானின் நிலையைப் புரிந்து கொண்டது. மேலும் அவளைத் தொல்லை பண்ணாது, தானே புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதனை அறியாத இராதா, ஒவ்வொரு புல்லாக எடுத்துப் போட்டுக் கொண்டே, மேலும் அந்த மானிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"அடியே..! எத்தனை கொடுத்தும் தின்று கொண்டே இருக்கின்றாயே..? இத்தோடு மூன்று கட்டுகள் புற்களைக் கொடுத்தாயிற்று. இன்னும் பசி அடங்கவில்லையா உனக்கு..? நீ சாதாரண மான் தானா..? இல்லை ஒரு காலத்தில் யமுனை நதியில் பெரும்பசி எடுத்து வந்தவர்களை எல்லாம் தின்ற காளிங்கனின் அவதாரமா..?" காளிங்கனை நினைத்ததும் அந்த பாம்பரசனை நடனமாடிக் கொன்ற ஒரு தீரனது நினைவு அவளுக்குள் எழுந்தது. கையில் இருந்த புற்களைக் கண்ணீர்த் துளிகள் நனைத்தன.

தெருவில் ஒரு கிழவியின் குரல் கேட்டது."தயிர்...பால்...வெண்ணை...வெண்ணை..." வெண்ணைக் குரல் இந்தப் பெண்ணைத் தீண்டியவுடன் அவள் எண்ணத்தை நிரப்பியது ஒரு கள்ளனின் குழந்தை முகம். அதில் எப்போதும் ததும்பும் குறும்புப் புன்னகை.

இராதைக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது அவள் இதே தோட்டத்தில் மான்களோடும், மயில்களோடும், புறாக்களோடும், குயில்களோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். குயில்கள் ஒரு சமயம் 'கூ...கூ..'வெனக் கூவும். இராதை அகமகிழ்ந்து அவற்றைத் தடவிக் கொடுப்பாள். அதனைக் கண்டு, மயில்களும் தாமும் தடவல் பெற வேண்டும் என்பதற்காக, அவற்றால் இயன்ற அளவிற்கு கோரமாக அகவும். விழுந்து விழுந்து சிரிக்கும் இராதை, அவற்றையும் ஓடிப் போய்த் தடவுவாள். மகிழ்ந்து போகும் மயில்கள் தேகம் சிலிர்த்து, தோகை ஒன்றைக் கொடுக்கும். அப்படி கிடைத்த தோகைகளை இராதை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுவாள், ஒரு மாயவனுக்கு கொடுப்பதற்காக! தாம் கொடுக்கத் தோகை ஏதும் இல்லையே என்று சோகத்தில் குயில்கள் மேலும் கூவும். இப்போது இராதை இங்கும் ஓடி வருவாள்.

இந்த விளையாட்டை அவளது தோளின் மேல் அமர்ந்து வெண்புறாக்கள் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். இது போன்ற சிறுபிள்ளைத்தனக்களில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்ற இறுமாப்போடு புள்ளிமான்கள் அவை பாட்டுக்குத் தத்தம் புல் மேய்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அப்போது, அவளது படுக்கையறையில் சத்தம் கேட்டது. யாரோ புகுவது போல! சிறிது நேரத்தில் அந்த சத்தம் அடங்கி அமைதியாகி விட்டது. யாரோ புகுந்து மறைந்திருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது. 'யாராயிருக்கும்..?' என்ற சந்தேகத்தோடு இராதா தோட்டத்தில் இருந்து நீங்கி, அவளது அறையை நோக்கிச் செல்லும் போது, எதிரே பக்கத்து வீட்டுக்காரி வந்தாள். பின்புற வாசல் வழியாக உள்நுழைந்தாள் போலும்!

"இராதா..! இராதா..! கண்ணன் இங்கு வந்தானா..?" என்று கேட்டாள்.

புரிந்து விட்டது. அவளது அறைக்குள் நுழைந்தவன் அவனே தான்.

"ஏனக்கா..?" என்று கேட்டாள் இராதா.

"என்னவென்று சொல்வதம்மா..! இந்தப் பயலின் குறும்புகள் வர வர அதிகமாகிக் கொண்டே வருகின்றது. வளர வளர பொறுப்பு வரும். நந்தகோபரின் இல்லப் பெயர் சொல்லுமாறு வளர்வான் என்று பார்த்தால் இவன் இன்னும் சிறுவனாகிக் கொண்டே போகின்றான். போன வாரம் இவன் எங்கள் வீட்டுச் சமையலறையில் தரையில் வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரங்களை உருட்டி, உடைத்து, தின்று விட்டுப் போயிருக்கிறான். இவனுக்குப் பயந்து, அதற்கப்பால் தரையிலேயே பாத்திரங்களை வைப்பதில்லை. எல்லாவற்றையும் இறுக்க மூடி பரண் மேல் வைத்து விட்டு வெளியே சென்று விடுவேன். இன்று வந்து பார்த்தால், அந்த கள்ளன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா..? பரணின் மீதேறி எல்லாவற்றையும் தின்று விட்டு, ஒரு பூனையை வேறு அங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறான். இவன் தின்றது போக மிச்சம் மீதி இருந்தவற்றையாவது நாங்கள் பயன்படுத்துவோம். இப்போது அவன் கொண்டு வந்த பூனை, மிச்சம் மீதியையும் வழித்து தின்று விட்டிருக்கின்றது. இந்த முறை இவனைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பிடித்து நேராக நந்தகோபரிடமே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறேன். அவனை மட்டுமல்ல, அந்த திருட்டுப் பூனையையும் பிடித்துக் கொடுக்கப் போகிறேன். யசோதையிடம் சொல்லி ஒரு பயனுமில்லை..! நான் துரத்திக் கொண்டு வரும் போது, அவன் இங்கே வந்தது போல் இருந்தது. வந்தானா..?" என்று பெருமூச்சு விட்டாள்.

இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட்டன.

இராதை யோசித்து, "இல்லையக்கா..! அவன் இங்கே வரவில்லை..! நான் இங்கே தானே இருக்கிறேன். அவன் வரவில்லை..!" என்றாள்.

"கவனமாய் இரம்மா..! அந்தக் கள்ளன் பொல்லாதவன். இங்கே வந்து உன்னிடமிருந்தும் ஏதேனும் திருடிக் கொண்டு போய் விடுவான்..!" என்று சொல்லி விட்டுப் போனாள் அவள்.

'இன்னும் என்னிடமிருந்து எதைத் தான் திருட வேண்டியிருக்கின்றது அவன்..? என் பரிமள இதயத்தையும், உறக்கத்தையும் ஏற்கனவே களவாடிக் கொண்டு விட்டான். மிச்சமிருப்பது என் உயிர் மட்டும் தானே..!' பெருமூச்செறிந்தாள் இராதா.

பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, இராதா அவளது அறைக்குச் சென்றாள். அதன் வாசலில் நின்று கொண்டு, உள்ளே பார்த்து கூவினாள்.

"யாரது என் அறைக்குள்ளே..? வெளியே வந்து விட்டால், அவர்கள் விரும்பிய பொருள் தரப்படும். நினைவிருக்கட்டும். எங்கள் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து பெற்ற வெண்ணெய் எங்கள் வீட்டில் நான்கைந்து உறிகள் நிறைய இருக்கின்றன. உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண்டுமெனில் அவர்களே வெளியே வர வேண்டும்.." என்றாள்.

"அவள் போய் விட்டாளா..?" என்று உள்ளே இருந்து குரல் கேட்டது. கூடவே, "மியாவ்..."

அவனே தான்.

"போயாயிற்று..! போயாயிற்று..!" என்றாள் இராதா.

கண்ணன் வெளியே வந்தான்.

ஆஹா..! அவன் வந்த கோலம் தான் என்ன அழகு..? நள்ளிரவில் வானம் முழுதும் கரியதாக இருளென இருக்கும். ஒரே ஒரு வெண்ணிலா மட்டும் பளீரென வெண்மையாய்க் காட்சியளிக்கும். ஆங்காங்கே புள்ளிப் புள்ளியாய் நட்சத்திரங்கள் மினுக்கும். அது போல கண்ணனது திரு கருமுகத்தில் உதடுகள் மட்டும் இப்போது தான் உண்ட வெண்ணெயின் வெண்மை நிறத்திலும், கன்னங்களில் எல்லாம் வெண்ணெய்த் தெறிப்புகளும் இருந்தன.

வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சிறு பொட்டுத் துளிகளாய் இருக்கும். அந்த முகில்கள் போல, ஆடைகள் கலைந்திருந்தன. அவற்றின் மேல் வியர்வைத் துளிகள் பொட்டுப் பொட்டாய் துளிர்த்திருந்தன.

அவன் கைகளில் ஒரு பூனை. வெளியே வந்தவுடன், வெளிச்சம் கண்டு மிரண்ட அது, அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து, 'தப்பித்தோம்; பிழைத்தோம். அப்பா கண்ணா..! நீ கூப்பிட்டாய் என்று வந்து, நான்கு சொட்டு வெண்ணெய் தின்பதற்குள் உயிருக்குப் பயந்து ஓட வேண்டியதாகி விட்டது. இன்றோடு நீ இருக்கும் திசைக்கே ஒரு வணக்கம்!' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்தது.

"இராதா..! நல்லவேளை நீ காப்பாற்றினாய். இவளிடம் சிக்கி இருந்தேன் என்றால், என் நிலைமை என்ன ஆகி இருக்கும். அப்பாவிடம் கூட்டிப் போயிருப்பாள். நான் ஆநிரை மேய்க்கப் போகாமல், வெண்ணெய் திருடுகிறேன் என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். போகட்டும். வெளியே வந்தால் ஏதோ தருவதாகச் சொன்னாயே..? என்ன அது காட்டு..?" என்று கேட்டான் கண்ணன்.

அதுவரை கைகளில் மறைத்து வைத்திருந்த மயில் தோகைகளை நீட்டினாள், இராதா. தோட்டத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக வீசிய காற்றுக்கு அந்த பசிய தோகைகள் அசைந்தாடின.

"ஆஹா..! இராதா..! எத்தனை அழகு..! எத்தனை அருமை..! கொடு..! எனக்கு மிகப் பிடித்தமானதையே நீ கொடுக்கிறாய்..! அருகே வா..! என்னை அவளிடமிருந்து காப்பாற்றியதற்கும், பரிசு கொடுப்பதற்கும் உனக்கு ஒன்று தருகிறேன். வா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான், அந்த மாயன்.

மிக அருகில் சென்று நின்றவுடன், கண்ணன் அவளது செழுமையான பொன்னிறக் கன்னத்தில், தன் இதழ்களைப் பதித்தான்.

சடாரென அவளை விட்டு, ஓடி வெளியே மறைந்தான்.

கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறாள்? " வெண் சங்கே..? அந்த மாதவனின் செவ்விதழ்ச்சுவையும், நறுமணமும் எது போல் இருக்கும்..? பச்சைக் கருப்பூரத்தின் வாசம் போலவா..? சிவந்த தாமரைப்பூவின் மணம் போலவா..? அவனது இதழ் ஸ்பரிசம் தித்திப்பாய் இருக்குமா..?" என்று!

அப்படி ஒரு இனிய சுந்தரனது திருவாய்ச் சுவையோடு இப்போது உண்ட வெண்ணெய் மணமும், சுவையும், இராதையின் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது.

இராதையின் கன்னத்தில் கண்ணன் பதித்த வெண்ணெய்ச் சுவடு எது போல் இருக்கின்றது தெரியுமா? வழக்கமாக அழகான குழந்தைகளின் மேல் திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக கருப்புப் பொட்டு வைப்பார்கள். ஆனால இராதையின் கன்னத்தில் இருந்த வெண் வெண்ணெய் உதட்டுச் சுவடானது, அவளது அழகுக்குத் திருஷ்டி போல் அமைந்தது எனில், அவளது திருவடிவழகைத் தான் எவ்விதம் இயம்ப..?

அன்றிலிருந்து இராதைக்கு வெண்ணெய் பற்றி நினைத்தாலோ, யாரேனும் சொல்வதைக் கேட்டாலோ, இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும். கண்ணீர்ப் பெருக்குவாள்.

ஆயர்பாடியுள் கண்ணனது கான நாதத்தைச் சுமந்து நுழைந்த காற்று, இராதையின் தோட்டத்திலும் புகுந்து மயக்கியது. இராதையின் செவிகளிலும் குழைந்து இனித்தது.

இராதை அகமகிழ்ந்தாள். இது யாருடைய குரல் என்பது தெரியாதா..? குழலே அவனது குரல் அல்லவா..? அப்படியே ஓடினாள்.

நெடுங்காலம் பிரிந்திருந்த கடலை நோக்கி நதி அப்படி ஓடுவதில்லை; இரவெல்லாம் தனித்துக் கவலையோடிருந்த பனித்துளி காலைக் கதிரை நோக்கி அப்படி பாய்வதில்லை; பள்ளத்தில் பாயும் பேரருவி அவ்வளவு ஆக்ரோஷத்துடன் விழுவதில்லை; பலகாலம் காணாத காதலனைக் காண காதலி அப்படி துடிப்பதில்லை;

இராதை அப்படி ஓடினாள்.

முனா நதிக்கரையின் இக்கரையில் ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு நந்தவனம் அமைந்திருக்கின்றது. பெயரிலேயே தெரிகின்றது அல்லவா..? அது நந்தனது வனம். நந்தன் மகனது வனம். எத்தனை பூக்கள்; எத்தனை பழங்கள்; எத்தனை ரீங்காரமிடுகின்ற வண்டுகள்; தாமரையும், அல்லியும் மாறி மாறிப் பூத்துக் குதூகலிக்கின்ற பொய்கை ஒன்று மத்தியில் உள்ளது. ஆங்காங்கே மர மேடைகள். வேலிகளை எல்லாம் வளைத்து பூக்கொடிகள்! மரங்களை எல்லாம் கட்டி அணைத்து காய் காய்க்கும் கொடிகள். பறவைகள் எல்லாம் பேடைகளோடு கூடிக் கலந்து, நீலவானில் ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் பெருவனம் அது..!

அங்கே கண்ணன் வீற்றிருக்கிறான். கண்களை மூடி அவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருகிலேயே ஒருத்தி தம்புரா வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி மிருதங்கத்தால் காற்றை அதிரச் செய்து கொண்டிருக்கிறாள். ஒருத்தி தாமரைத் தண்டுகளை அள்ளி அள்ளி அவனது காலடியில் அமர்ந்திருக்கிறாள். மற்றுமொருத்தியோ, பறித்த மலர்களில் திருப்தியுறாமல், மேலும் மரங்களில் இருந்தும் பல வர்ணப் பூக்களை அள்ளிக் கொண்டிருக்கிறாள்.

இராதை ஓடி வந்து கண்ணன் அருகில் அமர்ந்து தலை குனிந்து அமர்கிறாள்.

தாமரை சூரியன் வரும் வரை எங்கே அவன் என்று தேடிக் கொண்டேயிருக்கும். அவன் வந்து விட்டாலோ, வெட்கம் வந்து தலை கவிழ்ந்து கொள்ளும்; கதிரவன் அவனது பொன் கிரணங்களால் மெல்ல மெல்ல அவளைத் தட்டி எழுப்பி இதழ் திறக்க வைப்பான்.

அல்லி மாலை வரும் வரை எங்கே சந்திரன் இன்னும் காணவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்; மாலையில் அந்த குளிர் அழகன் வந்து தனது வெண்ணொளியால் அல்லியை மடல் அவிழ்ப்பான்.

அது போல் இராதையும் இப்போது கண்ணனின் அருகிலே வெட்கத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

கண்ணன் தனது புல்லாங்குழலை ஒருபுறம் வைத்து விட்டு, தனது ஒரு கையால் அவளது தோளைத் தடவிக் கொடுக்கிறான். மறுகையால் அவளது திருமுகத்தைத் தாங்கி எடுக்கிறான். இராதை இன்னும் வெட்கப்படுகிறாள்.

"இராதா..! இராதா..! இங்கே பாரேன்..! என் உள்ளங்கையைப் பார். அது சிவந்திருக்கின்றது. அது எதனால் தெரியுமா? உன் முகத்தில் இருந்து நான் வழித்துக் கொண்ட வெட்கத்தால் தான். ஆனாலும் என்ன ஆச்சரியம்? எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித்தெடுத்தாலும், வெட்கம் உன் திருமுகத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்றது. பிற்காலத்தில் பாஞ்சாலிக்கு கொடுக்க வேண்டிய அட்சய பாத்திரத்திற்கு உன் முகமே நல்ல உதாரணம். இராதா..! என் உதடுகளும் சிவந்திருக்கின்றன, பார்த்தாயா? அது எதனால் தெரியுமா..?

உன் வெட்கம் நிறைந்த என் கைகளை முத்தமிட்டேன். அதனால் தான்.

இங்கே எத்தனை தாமரை மலர்கள் இருக்கின்றன, பார்த்தாயா..? அவை எல்லாம் நீ அணிந்துள்ள இந்த மென் நிற உடைக்குத் துளியும் சமானமாகவில்லையே..? மலையின் மஞ்சள் கிரணங்கள் எங்கிருந்து அவற்றின் பொன்னிறத்தைப் பெறுகின்றன என்ற என் ஐயமும் இப்போது நீங்கி விட்டது. உன் அழகில் பட்டு எதிரொலிக்கும் பொன்னிற ஒளி தானே அது..?

நான் ஆயர்பாடியை நீங்கி, துவாரகையில் நிலைபெற்று விட்டேன் என்று நினைத்துக் கலங்கினாயா கண்ணே..? உயிர் இங்கே இருக்கும் போது வெறும் உடல் அங்கே என்ன செய்ய முடியும்..? மழை இங்கே பெய்து கொண்டிருக்கும் போது வர்ண வானவில் மட்டும் அங்கே தோன்றுவது எங்ஙனம்..? பொருள் இங்கே ஆயர்பாடியுள் இருக்கும் போது வார்த்தை அங்கே சென்று ஆவதென்ன..?

இங்கே பார்..! உன் தோட்டத்து மயில் தோகைகள் தான் என் சிகையை அலங்கரிக்கின்றன. உன் வனத்து மலர்மாலைகள் தான் என் மேனியோடு தழுவி இருக்கின்றன.

இனியும் நீ பேசாதிருந்தால், நான் குழலிசைப்பேன்..."

கண்ணன் அவனது புல்லாங்குழல் எடுத்து இனிமையாக வாசிக்கத் துவங்குகிறான். அதைக் கேட்டதும் இராதை கண்களில் ஆனந்தம் பெருக, கண்ணனது திருமார்பில் சாய்கிறாள்.

இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்ன வேலை..?

வாருங்கள் போகலாம்..!

***

I Wish You All A Very Happy New Year A.D.2K9..!

5 comments:

Karthik said...

wish you happy new year!
:)

vraa said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிநயா said...

Excellent! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. அனுபவிச்சு! ஒவ்வொரு வரியாக எடுத்து சொல்லி பாராட்ட நேரம் இல்லாததால் இத்துடன் நிறுத்திக்கிறேன் :) மிக்க நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு கவிநயா மேடம்...

மிக்க நன்றிகள். உங்கள் கமெண்ட்டிற்குப் பின்பு, 'இராதாப்ரேமி'யை மீண்டும் ஒருமுறை படித்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. எவ்வளவு அழகாக வந்திருக்கின்றது என்று..!! எல்லாம் கண்ணனின் விளையாட்டு தான்..!!

நிலாரசிகன் said...

//அவற்றின் கையகல இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் தத்தம் குட்டிகளோடு இருக்கின்றன. //

குட்டிகளோடு இருப்பது கிருஷ்ணர்தானே அப்படீன்னு வாத்தியார் இருந்திருந்தா கேட்டிருப்பார் :)

குஞ்சுகள் என்பதே சரி என்றெண்ணுகிறேன் நண்ப!

உங்கள் மொழிநடை வெகுவாக கவர்கிறது.வாழ்த்துகள்.