Friday, May 22, 2009

மொக்ஸ் - 23.MAY.2K9.






னந்தபுரத்தில் இது என்ன வானிலை என்றே புரியவில்லை.

மே மாதம் உச்ச வெயில் இருக்கும் நேரங்களில் மழை கொட்டுகிறது. ஹனிமூன் படுக்கைகளில் போர்வைகள் போல் எப்போதும் மேகங்கள் கலைந்தே இருக்கின்றன. ஆளுயர வாழை இலைகள் எப்போதும் ஜில் பச்சையாக அசைகின்றன. நான்காவது கையாக குடையும் உடலோடு ஒட்டியிருக்கின்றது. குறுக்கும் முறுக்குமான கேபிள் வயர்களிலும், புணர்கின்ற சாரைப் பாம்புகளாய், ஆடையற்ற மின் லைன்களிலும் துளித்துளியாக ஓடிக் கொண்டேயிருக்கின்றது சாரல்கள். இருள் களையாத ஐந்து மணிக்கே மூட்டப்படும் ச்சாயாக் கடைகளில் கூட்டம் எப்போதும் இருக்கின்றது. மொட்டை மாடியில் சென்று பார்த்தால் தூரத்து மலைகளில் புகை சுழன்று சுழன்று எழுகின்றது. சாலைக் குழிகளையெல்லம் சமனப்படுத்தி பழுப்பு நீர் சேகரமாகிறது. ஜன்னல்களை இறுக்க மூடும் கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்களில் கூரைகளின் பொத்தல்கள் வழி நீர்க்கோடுகள் உள் பாய்கின்றன. அவ்வப்போதைய மின்னல் இசைகளுக்கு வைப்பர்கள் ஓயாது தலையாட்டிக் கொண்டேயிருக்கின்றன. ரெயின் கோட்க்ளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. பூ போட்ட குடைகளின் கீழ் யூனிஃபார்ம் போடாத பூக்கள், ஜூன் அதற்குள் வந்து விட்டதை நினைத்து 'உச்' கொட்டுகிறார்கள். காற்றில் ஈர வாசம் அடிக்கின்றது. விடியற்காலையிலேயே மின் காற்றாடிகள் நிறுத்தப்படுகின்றன. கொஞ்சம் விட்டதும் 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்று ரீங்காரமிட்டு, பொட்டுப் பூச்சிகள் அறைக்குள் விர்ரடிக்கின்றன. யாரும் பறிக்காத மரங்களில் மாங்காய்கள் மேல் மழைத்துளி சறுக்குகிறது. வானை அளக்கும் பறவைகளின் கீச்கீச்சுவென்ற சிங்கிள் சைன் ஓசைகள் குட்டி ஹார்மானிக்ஸ்களுடன் எழும்புகின்றன. நாட்களில் லேசான சோம்பல் மிதக்கின்றது. மஞ்சள் கொன்றை பூக்கள் விஷுவோடு பொலிவிழந்து, இயல்புக்கு திரும்ப, பலாப் பழங்கள் உடலெங்கும் ஈரமாய் சரிந்திருக்கின்றன. வளைந்து வளைந்து மேலேறும் சாலைகளின் பக்கவாட்டுச் சரிவு வீடுகளின் சிம்னிகளிலிருந்து மெதுவாக புகை வந்து கொண்டிருக்கின்றது. ஏர்போர்ட் அருகே சின்னதாய் ஏதோ முஸ்லீம்கள் பிரச்னை என்று சடாரென இந்த செவ்வாய் ஹர்த்தால் நடத்தினார்கள். அது வேறு பேட்டை என, இந்தப்பக்கம் ஹாரனடித்து பஸ்கள் ஓட, கடைகள் மட்டும் அடைந்திருந்தன. ஈரக் கூந்தல் பறபறக்கும் மங்கைகள் பளிச்சென்றிருக்கிறார்கள். எது பேசினாலும் வாய் பொத்தி சிரிக்கும் பெண்கள் கண்களில் இயல்பாக ஒரு மை தேய்ந்திருக்கின்றது. வேகச் சக்கரங்கள் தெறிக்கும் சகதிக்கு ஒதுங்கிப் பாவாடை கொஞ்சம் தூக்கும் அந்த குட்டிப் பெண்ணின் பாதங்களில் கொலுசின் கீழ் பிங்க் செருப்பில் மிக்கி முகம் சிரித்திருக்கின்றது.

மழையில் நனைகின்ற எந்த ஊரும், எந்தப் பெண்ணும் அழகாய்த் தான் இருக்கிறார்கள்.

நேற்று ஒரு மாற்றமாக டெக்னோமாலில் இருக்கும் அம்ப்ரோஸியா சென்றேன், இன்னும் மூன்று நண்பர்களுடன். சர்வீஸ் செக்டார் இந்த நேரத்தில் செமத்தியாக அடிவாங்கியிருப்பது தெரிந்தது. பாஸ்கின் ராபின்ஸ் காலியாக இருந்தது. மேல் மாடி மாடர்ன் சலூனில் துணி போர்த்தியிருந்தார்கள். எப்போதும் கொஞ்சம் கூட்டம் தளும்பும் அம்ப்ரோஸியாவில் சிக்கன் வறுத்த மணம் மட்டுமே விரவியிருந்தது. கூல் டீ, ஃபிங்கர் சிப்ஸ், ஃப்ரெஞ்ச் சிக்கன் டிக்கி காம்போ 65 ரூவிலிருந்து சரேலென சரிந்து 40க்கு வந்திருந்தது. இருப்பதிலேயே விலை குறைவானது எது என்று பார்த்தால் ஃப்ரைட் எக், 10 என்றிருந்தது. கொஞ்சமாவது சாப்பிடுவோம் என்று பார்த்து 35க்கு சிக்கன் அண்ட் பட்டர் என்று ஆர்டர் செய்ய, 'கங்க்ராட்ஸ் சார்! நீங்கள் தான் இதை முதன் முதலில் ஆர்டர் செய்திருக்கிறீர்கள்' என்று திகிலூட்டினார்கள். 'செய்யத் தெரியும்ல?'. 'அதெல்லாம் கவலை நோ. கலக்கிரலாம்'.

ஏழரைக்கு மேல் கொத்துக் கொத்தாய் கேர்ள்ஸ் மட்டும் டேபிள்களை ஆக்ரமித்தனர். நாங்கள் மட்டும் தான் பசங்க! என்னென்னவோ ஆர்டர் செய்தார்கள். பர்கர் கடிக்கையில் சீஸ் துளிர்த்த உதட்டுக்காரி தனியாக வந்திருந்தாள். ப்ளூ ஜீன்ஸ், வொய்ட் டாப்ஸ் இளள், அநியாயத்திற்கு ஒல்லிக்குச்சியாக இருந்தாள். துப்பட்டா மறந்திருந்த குள்ளமான ஒருத்தி சிக்கிய ஒருவனிடம் சிரித்துப் பேசியே பிட்ஸா மேல் சாஸ் பிழிய, பர்ஸ் வேகமாக கரைவதை உணராத அவன், அவ்வப்போது எட்டிப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். ஐஸ்க்ரீம்கள் குப்பிகளை அவசர அவசரமாக காலியாக்கினார்கள். தங்களுக்குள் மெல்லிய குரலில் கிசுகிசுத்துக் கொண்டு பெரிய குரல்களில் வெவ்வேறு ஃப்ரீக்வன்ஸிகளில் சிரித்தார்கள். காதுகள் விடைத்த கைப்பைகளை பக்கத்து சேர்களில் கிடத்தியிருந்தார்கள். ஆர்.ஜி.பி. காம்பினேஷனே சொல்ல முடியாத வர்ணத்தில் வைத்திருந்த கர்ச்சீப்பில் வட்டமாய்க் கண்ணாடிகள் காட்டினார்கள். கேக், க்ரீம், சிக்கன் வகையறாக்களின் போட்டோக்கள் ஒட்டிய சுவர்களில் இருந்து கசியும் பீட் துடிக்கும் இசையின் வால்யூம் மட்டும் வழக்கத்தை விட குறைவாய் இருந்தது.

ரிஸஷன் காரணமோ..?

ட்டியே இருக்கும் டி.ஸி.புக்ஸ் சென்று ஏதாவது புது வரவாக இருக்கின்றதா என்று ஒரு நோட்டம் விட்டதில், சில பட்டன. ஆனால் விலை தான் 295 ரேஞ்சில் இருந்தன. அதெப்படி 295 என்று ஃபிக்ஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 100 ரூபாய்க்கு மிகாமல் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிச் சுற்றித் தேடியதில், ஏற்கனவே வாங்கித் தீர்த்து விட்ட சேட்டன் நூல்கள் மட்டும் இருந்தன. இன்சார்ஜ் வந்து, 'சார்.. கடையைக் கல்லா கட்டணும்' என்று சொன்னார். பட்ஜெட்டை விட அதிகமாக வேண்டாம் என்று முடிவு செய்து, ஒரே ஒரு புத்தகம் வாங்கி விட்டு படித்துக் கொண்டே கழக்குட்டம் வந்து பஸ் ஏறி, எதிர்பாரா மழை விசிட்டில் நனைந்து, வீடு வந்து சேர்ந்தேன்.

வேர்ட்ஸ்வொர்த் எடிஷன்ஸ்காரர்கள் 'வேர்ட்ஸ்வொர்த் க்ளாஸிக்ஸ்' வரிசையில் அருமையான, படிக்க வேண்டிய புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிடுகிறார்கள். நான் பார்த்த போது கடையில் இருந்தன, டி.எஸ்.எலியட், ஜாய்ஸ், டிக்கின்ஸ், ஷேக்ஸ்பியர் (கம்ப்ளீட் வொர்க்ஸ்). 105 ரூபாய் போட்டிருந்தார்கள். எடுத்துக் கொண்டேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸ்'.

எழுதும் எல்லோர்க்கும் சொந்த ஊரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்திருக்கின்றது. ஒன்றுமே பதியாத பளிச் ஸ்லேட் மனதில், வளரும் போது சந்திக்கின்ற முதல் ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், துக்கங்கள், மயக்கங்கள், தயக்கங்கள், பிம்பங்கள், அனுபவங்கள் சொந்த ஊரில் தான் படிகின்றன. கடைசி வரை அவை மறந்து போவதில்லை. மீண்டும் மீண்டும் வாழ்வில் இவைகளையே சந்திக்க நேரும் போதும், முத்தம் முதல் அனுபவ உணர்வுகளைத் தான் மறுபடியும் எழுப்பிக் கொள்கிறோம். பழகிப் போகத் துவங்குகின்றன. வாத்தியாரின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகளும்', ஆர்.கே.நாராயணனின் மால்குடி மனிதர்களும் அதைத் தானே சொல்கிறார்கள்! ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸும்' அவரது டுப்ளின் மக்களைப் பற்றிய கதைகளாக இருக்கின்றன என்பது சின்ன இண்ட்ரொடக்ஷனில் புரிந்தது. நேற்றிரவு தூறிய மழைக்கிடையில் 'தி சிஸ்டர்ஸ்' என்ற ஒரே ஒரு கதை தான் படித்தேன். முழுதும் படித்து விட்டு பிறகு எழுதுகிறேன். 'டுப்ளினர்ஸும்', ஏறத்தாழ சுயசரிதமான 'A Portrait of the Artist as a Young Man ' படித்து வைத்துக் கொண்டு தயாராவது, ஜாய்ஸின் மேக்னம் ஓபஸான 'உலிஸஸை' எதிர் கொள்கையில் கொஞ்சமேனும் உதவும் என்பதை சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.

கரம் அமுதாவின் வெண்பா பதிவில் இட்ட ஒரு வெண்பாவை இங்கே ஒரு பதிவுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன். 'உய்வதும் வாழ்வா உணர்.' என்று முடியுமாறு வெண்பா கேட்டிருந்தார்.

ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி
'ஊட்டுலசொல் லிக்கினியா?' பஸ்காரர் - கேட்டாரு.
மெய்மறந்து நிற்கின்ற முன்சாமி, இப்படி
உய்வதும் வாழ்வா உணர்.

ணில்மாமா, கண்ணன், எழிலோவியம், அல்வா, கங்கணம், சித்திரக்குள்ளன், சோலைவனம், நங்கை, பேரொலி, லண்டன் முரசு, புள்ளி துளிப்பாவிதழ், டமாரம், சிவாஜி போன்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பத் தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டுமா..? பொள்ளாச்சி நசன் 'தமிழம்.நெட்' தளத்தில் இவற்றோடு இன்னும் பல பழைய நூல்களை மின்னூல் வடிவில் சேகரித்து வைக்கிறார்.

தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.

தமிழில் வெளி வந்த அனைத்து நூல்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வகையில் உதவும் அனைவரையும் நான் அன்போடு வணங்குகிறேன்.


என்கிறார். இவரை நான் மரியாதையோடு வணங்குகிறேன்.

நாள்-ஒரு-நூல்.

ரொம்ப நாளாகத் தேடித் தேடி ஒரு நல்ல தளம் கண்டுபிடித்தேன். பார்க்கின்ற, யதேச்சையாக கேட்கின்ற ஆங்கிலப் பாடல்களை இலவசமாக இறக்கிக் கொள்ள! எங்கெங்கோ தேடியும் கிடைக்காத 'சினிமா பாரடைஸோ' தீம் இசை இங்கு தான் கிடைத்தது.

Akon - Lonely ::

- - akon - lonely
Found at bee mp3 search engine


இங்கே :: தேனீ கேட்கும் இசை.

ங்கள் அலுவலகம் இருக்கும் பில்டிங் வாசலில் ஒரு பெண் இப்படி நின்று கொண்டிருந்தால், எழுத்துக்கள் ஏன் இவ்வளவு கிளுகிளுப்பாய் வராது...?

6 comments:

மேவி... said...

பழைய பத்திரிக்கை பற்றிய தகவலுக்கு ரொம்ப நன்றிங்க .......

உங்க பதிவுக்கு இப்ப தான் முதல் முறையாக வருகிறேன் ....
நல்ல எழுதிரிங்க

Veera said...

எடுத்துட்டீங்களா !?? அந்த சிலைய போட்டோ எடுத்தீட்டங்களா !!! :-)))))))))

thamizhparavai said...

கலக்கல் வசந்த்...
மழை உன் வார்த்தைகளினூடே வழியத் தவம் செய்திருக்கும்போல.மழையைப் பற்றிய உனது விவரிப்புகளில் ,மழையில் நனைந்ததாய் புல்லரிப்புகள் எனக்கு.
//நான்காவது கையாக குடையும்//
அதென்ன நான்காவது கை...?!
//பூ போட்ட குடைகளின் கீழ் யூனிஃபார்ம் போடாத பூக்கள்//
//ஹனிமூன் படுக்கைகளில் போர்வைகள் போல் எப்போதும் மேகங்கள் கலைந்தே இருக்கின்றன//
ரசிக்கவைத்த வரிகள்...


//கடிக்கையில் சீஸ் துளிர்த்த உதட்டுக்காரி தனியாக வந்திருந்தாள்//
//ஐஸ்க்ரீம்கள் குப்பிகளை அவசர அவசரமாக காலியாக்கினார்கள்//
கடைசி ஃபோட்டோ(சிலை) அல்ட்டிமேட்...

இரா. வசந்த குமார். said...

அன்பு MayVee...

ரொம்ப நன்றிங்க... அடிக்கடி வாருங்கள். வாழ்த்துக்கு நன்றிகள்.

***

அன்பு சுந்தர்...

க்ராஸ் செய்யும் போது (ரோட்டை), நீங்களும் திருட்டுத்தனமாய் இந்த சிலையைப் பார்த்து விட்டுத் தானே செல்வீர்கள். நான் கவனித்திருக்கிறேன். :)

***

அன்பு தமிழ்ப்பறவை...

மழை மிகவும் பிடித்தமானது. நிலவிற்குப் பின் மழையே கவிமனதிற்கு கள். நன்றிகள்.

//அதென்ன நான்காவது கை...?!

நீங்க இன்னும் வளரணும் தம்பி..!! :)

கடைசி சிலையைக் கலைக் கண்ணோடு பார்ப்பீராக..!

rkvelu said...

Hi vasanth,
it is very nice...but i have one doubt...how do u link the first part with your concept...

I liked very much...

keep on rocking...

friendly,velu.

இரா. வசந்த குமார். said...

thanks velu.