Thursday, May 21, 2009

என்ன செய்யலாம்...?

ண்பர் ஒருவருடன் நடத்திய இணைய உரையாடலை ஆங்காங்கே வெட்டி நட்சத்திரங்கள் இட்டு, பதிவாய்ப் போட்டதற்கே ஒருவர் வந்து திட்டி விட்டுப் போனார். அதற்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை. அவரது மனக் குமுறல்களைத் தாங்கிக் கொள்கிறேன். நான்/நாங்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் இங்கு இருக்கிறோம்.

எனக்கு உங்கள் துயரங்கள், கலவரங்கள், கவலைகள், வலிகள் தெரியாது. உங்களது மண் பிரிந்த நிலைமையில் நான் இருந்ததில்லை. அறுபது வருட ஈழப் போராட்டத்தின் இறுதி என்று எதிரிகள் குதூகலிக்கும் போது, இது இறுதி அல்ல என்பது எனக்குப் புரிகின்றது. உங்களுக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதியில்லை. சில கருத்துக்கள் மட்டும் எழுத விரும்புகிறேன்.

1. அந்தப் பதிவில் சொன்னது போலவே எனக்கு தமிழீழத் தலைவர் கொல்லப்பட்டார் என்பதில் நம்பிக்கையில்லை. அவர்கள் காட்டிய படங்கள் போலியானவை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. அவராக வந்து தாம் உயிர்த்திருப்பதைச் சொல்லும் வரை நான் நம்பப் போவதில்லை.

2. ஒரு முக்கியமான கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேலாவது எங்களை நம்புவதை நீங்கள் விட்டு விட வேண்டும். எங்களால் உங்களைப் பற்றி, இது போன்ற மீச் சிக்கலான தருணங்களில் அஞ்சலிக் கவிதையை, வருத்தப் பதிவை, சோகப் புலம்பலைச் சொல்லி எழுதத் தான் முடியுமே ஒழிய, ஒரு துரும்பை இங்கிருந்து அங்கு நகர்த்த மாட்டோம். எங்களை தொப்புள் கொடி உறவு, ஒரே ரத்தம் என்றெல்லாம் சொல்வதில் அர்த்தம் இல்லை. எத்தனை உணர்ச்சி வசப்பட்டாலும் இது தான் இப்போதைய நிதர்சனம்; யதார்த்தம். இதை முதலில் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

எத்தியோப்பிய தேசத்தின் அருகில் இருக்கும் ஓர் ஆப்ரிக்க நாட்டினரிடமிருந்து எத்தகைய தார்மீக ஆதரவை எதிர்பார்ப்பீர்களோ அதே அளவில் மட்டும் எங்களிடமிருந்து எதிர்பாருங்கள். அதையும் கொடுப்போமா என்பது சந்தேகமே!

இது உங்கள் மண்ணுக்கான சுதந்திரப் போராட்டம். இதை நீங்கள் மட்டுமே வென்றெடுக்க முடியும். நீங்கள் மட்டுமே!

3. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஒவ்வொரு தேச மக்களாலும் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள் தனிநாடு பெற்றது எப்படி..? ஆயிரம் சர்வதேசக் காரணங்கள் அமைந்து கொடுத்தன என்றாலும், ஆதாரம், யூதர்கள் கைவிட்டிராத நம்பிக்கை தானே..?

சுற்றிலும் இருக்கும் எரி எண்ணெய் வளத்திற்காகத் தான் இஸ்ரேலுக்கு மேற்குலகம் ஆதரவு தந்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்தது. எண்ணெய் வளம் வற்றத் தொடங்கியதும், இஸ்ரேல் தேவையில்லாமல் போய் விடும் அபாயம் இருக்கிறது.

ஈழ மண்ணில் என்ன இருக்கின்றது? எண்ணெயா? எரி வாயுவா..? தங்கமா..? எதுவும் இல்லாவிட்டாலும் சிறப்பான மற்றொன்று கிடைக்கின்றது.

உலகின் எந்த இனத்திற்கும் குறையாத அறிவு வளம் கொண்ட தமிழினம். தமிழ் மனிதர்கள். தமிழ் மூளை.

இப்போது துவங்கியிருக்கும் நூற்றாண்டு, தகவல் நூற்றாண்டு. கட்டற்ற அறிவின் காலம். இத்தனை காலமாக சாதி, சமயம், பொருளாதார அடுக்குகள், அடிமைத் தொழில் என்று அத்தனை பிரிவுகளாலும் பிரிந்து கிடந்த அறிவுப் பரவல் இன்று எல்லோர்க்கும் கிடைக்கின்ற காலம்.

படிக்க வையுங்கள். நீங்கள் எந்த தேசத்தில் சென்று சேர்ந்தாலும், எந்த பிழைப்பு பிழைத்தாலும் படிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளை; உங்களுடனே அந்த நாட்டில் வந்து சேர்ந்த மற்றொரு ஈழத் தமிழனின் குழந்தைக்குப் படிப்புத் தாருங்கள். உங்கள் பிள்ளையை மருத்துவத்திற்கு படிக்க வைத்தால், அவனை வெல்டருக்காவது படிக்க வையுங்கள்.

இலக்கை அடையும் வரை பிழைத்திருக்க வேண்டும்; அதற்கு உழைக்க வேண்டும்; அதற்கு படித்திருக்க வேண்டும்.

எந்த ஜாதியோ, எந்த மதமோ, என்ன நிறமோ, தமிழன் என்ற கூட்டுக்குள் அணைத்துக் கொள்ளுங்கள். இத்தனை நாளில் என்னென்ன வேறுபாடுகள் கண்டீர்களோ, அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைத்துக் கொண்டு ஒன்று சேருங்கள்.

எங்கெங்கு சிதறிப் போயிருந்தாலும், எப்படியெப்படியோ சீவித்திருந்தாலும், அந்த கனவைக் கைவிட்டு விடாதீர்கள்.

அந்த கனவு...! நெருப்பில் எரிகின்ற கனவு..! உங்கள் தூக்கத்தில் வந்து திடுக்கிடச் செய்யும் அந்த கனவு. அதை அணைத்து விடாதீர்கள். நீங்களே அதை விட்டு விட்டால், அந்த கனவு எங்கே செல்லும்?

தமிழைக் கற்பியுங்கள். எங்கள் 'பண்ணி'த் தமிழை அல்ல; உங்கள் தமிழை! சிங்களம் கற்கச் செய்யுங்கள். என்றைக்கிருந்தாலும் அண்டை நாடாக வாழப் போகிறவர்கள் அல்லவா? அதற்காகக் கற்கச் செய்யுங்கள்.

நீங்கள் இன்று இருக்கும் நிலையை விட, உங்கள் பிள்ளை இன்னும் உயர்வான்; அவன் பிள்ளை இன்னும் உயர்வான். அவன் பிள்ளை இன்னும்...!!

ஒரு நாள் வரும். உங்கள் தலைமுறைகள் அதிகாரத்திற்கு நெருக்கமாகவோ, ஏன்.. அதிகாரத்திலோ இருக்கும் நாள் வரும். வந்தே தீரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் யூதர்களுக்கு வரவில்லை..? அப்போது உங்கள் மனதில் அணையாத கனவை நிறைவேற்றுங்கள்.

ஜெருசலம் காக்கப் போரிட்ட யூதர்களுக்குத் தெரியுமா இஸ்ரேல் கிடைக்கும் என்று..? ஆனாலும் அவர்கள் நம்பினார்கள்.

உங்கள் காலத்தில் கிடைக்காமல் போகலாம். உங்கள் பிள்ளை காலத்தில்... அவனுக்கு அடுத்து...உங்களது ஏதோ ஒரு கொள்ளுப் பேரன் காலத்தில் உங்கள் பூமி, உங்கள் மண் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

அப்போது நீங்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் விதை நீங்கள் போட்டது.

நீங்கள் ஒவ்வொருவரும் போராளி ஆகுங்கள். நிலம், போர்க்களம் ஆக வேண்டாம். உங்கள் மனம், களம் ஆகட்டும்; உங்கள் வாழ்க்கை நிலை, சமர் ஆகட்டும்; உங்கள் இப்போதைய பொருளாதார நிலை, உங்கள் எதிரி ஆகட்டும்; கல்வி, அறிவு கொண்டு உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.

பணத்தால் அடியுங்கள்; இன்று உங்களைக் கண்டும் காணாமல் போன நாடுகளை அறிவால் வெல்லுங்கள்; துரோகம் செய்த நாடுகளைத் தூசியாக எண்ணித் தாண்டிப் போங்கள்.

என்றாவது உங்கள் மண்ணை அடைந்து வெற்றிக் கொடி ஏற்றி வாழ்ந்து காட்டும் போது, இக்கரையில் இருந்து எட்டிப் பார்க்கும் எங்களைப் பார்த்துப் புன்னகையுங்கள்; கையாலாகாதவர்கள் சந்தோஷப்படுவோம்.

4. தமிழகத் தமிழர்களாக நாம் சில செய்யலாம். நாடு பெயர்ந்தவர்களில் தமிழகத்திற்கு வந்தவர்கள் நிலை தான் மிகவும் கடினமாக இருப்பதாக அறிகிறோம். அவர்களுக்குப் படிப்பறிவும், குறைந்த பட்சத் தொழில் நடத்தும் அறிவும் இந்திய அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு கற்பிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அகதிகள் (மன்னிக்க!) சட்டத்தில் என்ன சொல்லி இருக்கின்றது என்று பார்த்து, அதற்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். தனி ஆளாகச் செய்வதை விட, ஒரு என்.ஜி.ஓ. என்ற வகையில் ஈடுபடுவது குறைந்த பட்சமாகவாவது முன் நகர உதவும் என்று நினைக்கிறேன்.

5. இலங்கைப் பிரச்னை தான் தீர்ந்து விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்களே, இனியாவது சிங்கள் ராணுவம் நமது ராமேஸ்வர, நாகை மீனவர்களைக் கண்டதும் சுடாமல் இருக்கின்றதா என்று பார்ப்போம். சர்வதேச மீன்பிடி எல்லையைத் தெளிவாக வகுக்கிறார்களா என்று பார்ப்போம். இந்தியாவும், இலங்கையும் தான் இப்போது நேச நாடுகளாகி இருக்கிறார்களே!

6. ஈழத்திலேயே இருக்கின்ற புலம் பெயராத மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், அவர்களது இடங்களுக்கே திரும்பச் சென்று வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்திய அரசு என்ன செய்ய முடியும், எந்த வகையில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

7. மிகச் சிறிய அளவாயினும் செய்யக் கூடியவற்றைச் செய்யாமல், 'காலம் வரும்', 'இறைவனை வேண்டுகிறேன்', 'கண்ணீர் வருகின்றது' என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரு புல்லைக் கூடப் பிடுங்கிப் போடாமல் இருப்பதற்குப் பொத்திக் கொண்டு போகலாம். காலமும் வராது; இறைவனும் வர மாட்டான். நாம் தான் செயல்பட வேண்டும்.

***

இதுவரை எழுதிய அத்தனையும் சுத்த பேத்தல்களாக உங்களுக்குத் தெரியலாம். மனதில் தோன்றியவற்றை எழுதி வைக்கிறேன். சொல்லத் தோன்றியது; சொல்கிறேன். அவ்வளவு தான்.

நன்றிகள்.

5 comments:

ஆயில்யன் said...

எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களினை ஒன்று திரட்டியதை போல உள்ளது ஒவ்வொன்றும் !

அருமை!

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் என்னால் முடிந்த அளவிற்கு சில பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள முயல்கிறேன்!

நன்றிகளுடன்....

ILA (a) இளா said...

என் கருத்த ஒத்துப் போகுது உங்கப்பதிவு. சரி ஒரே ஊர்க்காரங்க எப்படிச் சிந்திப்பாங்க.

Thamiz Priyan said...

அப்படியே ஒத்துப் போகின்றது எனது எண்ணங்களுடன்... நன்றி இரா. வசந்த குமார். புரிய வேண்டிய மக்களுக்கு புரிய வேண்டும் என்பது தான் என் வேண்டுதல்.

Unknown said...

//எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களினை ஒன்று திரட்டியதை போல உள்ளது ஒவ்வொன்றும் !//

வழிமொழிகிறேன். தமிழ் ஈழம் சம்பந்தப்பட்ட பதிவுகளில், மிக அருமையான பதிவு இது.

என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம். தமிழர்கள் ஒன்று சேரும் காலமிது. ஒன்று படுவோம். வெல்வோம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன், இளா, தமிழ் பிரியன், தஞ்சாவூரான்...

நன்றிகள். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெர்ல...