Saturday, June 20, 2009

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.2.

At five in the Afternoon (panj e asr)
Iran-France/105'

Samira MAKHMALBAF - Director
Samira MAKHMALBAF - Screenplay
Mohsen MAKHMALBAF - Screenplay
Ebrahim GHAFORI - Cinematography
Mohammed Reza DAR VISHI - Music
Mohsen MAKHMALBAF - Film Editor

Actors
Agheleh REZAÏE - Noqreh
Abdolgani YOUSEFRAZI - The Father
Razi MOHEBI - The poet
Marzieh AMIRI - The Sister-in-law



'வண்டிக்காரன் மகள்' என்ற தலைப்பு இந்தப்படத்திற்கு பொருத்தம். தாலிபான் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேடோ படைகள் புகுந்த பின் காபூலில் எடுக்கப்பட்ட முதல் ஆப்கன் படம் இது என்கிறார்கள்.

கதை மிகச் சிறியது.

ஒரு கோச் வண்டிக்காரர். அவர் மகள். அவர் மகன். ஒரு குழந்தை. மருமகள். வண்டி. குதிரை.

மகளுக்கு ஒரு நாள் ஆப்கானிஸ்தான் அதிபராக வர வேண்டும் என்று ஆசை. மகனோ பாகிஸ்தானில் மாட்டிக் கொண்டிருக்கிறான். போர் இப்போது தான் முடிவுக்கு வந்திருப்பதால், எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே அவன் உள்ளே வர முடியாது. மருமகள் கைக்குழந்தையோடு அவதிப்படுகிறாள். ஷெல்டர்களில் தங்குகிறார்கள். எத்தனையோ கஷ்டப்பட்டும், பாகிஸ்தானிலிருந்து ஒரு செய்தி வருகின்றது. மொத்தமாக உடைந்து போன குடும்பம் அகதியாக வாழ்வதற்கு நல்ல ஒரு இடம் தேடி நடக்கிறார்கள். கொடும் வெயில் பாலைவனத்தைக் கடக்கும் போது, குழந்தை தாங்காமல் விக்கி விக்கித் துடிக்கின்றது. கொண்டு வந்திருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து விட்டதால், அவர்கள் ஒரு முடிவெடுத்து...

படம் பாருங்கள்.

மேலே வர விரும்பும் ஒரு ஆப்கன் பெண்ணின் ஆசைகள், அவை பழமைவாதிகளால் முறித்துப் போடப்படும் வலி, ஒரு சமமற்ற போரின் பின் விளைவுகள், அனலடிக்கும் ஆப்கன் மணல் வெயில்...நம்மையும் அங்கேயே இழுத்துச் சென்றிருக்கின்றது.

முழு படமும் யுட்யூபில் கிடைக்கின்றது. படம் கிடைக்காவிட்டால் முழுக் கதையையும் சொல்லி விமர்சிக்கலாம். படமே இருப்பதால், இனி அனுபவமும், விமர்சனமும் உங்கள் கைகளில்!



Postales de Leningrado (Postcards from Leningrad)
Venezuela/90'/Spanish



'60களில் வெனிசூலாவில் நடந்த இடதுசாரி எழுச்சியை ஒட்டிய படம். கதையை விக்கியிலேயே படிக்கலாம்.

அதீத ரத்தம் தெளிக்கும் காட்சிகள் சில்லறை அனிமேஷன்களாக காட்டப்படுகின்றது. பன்றிக்கறி பிய்த்து பிய்த்து வெட்டப்படுவதும், 1966 புத்தாண்டு நடனங்களும் ஒரு வித கேமிர நுட்பங்களால் தெரிகின்றது. காட்டுக்குள் கொரில்லா குழு நகர்வதும், நகரத்திற்குள் சூப்பர் மார்க்கெட்டில் மகளிர் அணி கொள்ளையடிப்பதும், Teo சைக்கிளில் பறப்பதுமாக இது ஒரு வித்தியாச அனுபவத்தைக் கொடுத்த படம்.

டோரன்ட்டில் இறக்கி வைத்திருக்கிறேன். சனிக்கிழமை இரவுகளில், அடுத்த நாளைப் பற்றிய ஓர் அலட்சியத்துடன், கொட்டமடிக்கும் நண்பர்கள் கூட்டத்துடன் கொண்டாடி பார்ப்பதற்காக!

http://www.postalesdeleningrado.com/ (தளத்தின் பின் இசையைக் கேட்பதை தவற விடாதீர்கள்.)



Persepolis
France-USA/95'

டெஹ்ரான், '78. எட்டு வயது சிறுமி மர்ஜேன் எதிர்கால தேவதூதனாக கனவு கண்டு கொண்டிருக்கிறாள். அவளது முற்போக்கு தந்தையும், தாயும் அவளுக்கு ஊக்கமளிக்கிறார்கள். புரட்சி வருகின்றது. ஷா மன்னராட்சி முடிந்து இஸ்லாமியக் குடியரசாக ஈரான் மாறுகின்றது. பெண்களின் மீதான பழமைவாத அடக்குமுறை மர்ஜேனை வருத்துகிறது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். பள்ளியில் கட்டுப்பெட்டித்தனம் தொடர்கிறது. ஈரான் - ஈராக் போர் தொடங்கி, குண்டுகள் எப்பொழுதும் விழுகின்றன. அவளது துணிச்சல், அவளுக்கு பிரச்னை ஏற்படுத்தி தந்து விடும் என பயந்த பெற்றொர், அவளை ஆஸ்த்ரியாவுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.

டீனேஜ் மர்ஜேன் இந்த திடீர் சுதந்திரத்தில் திணறுகிறாள். க்ளப்புகளில் பாடுகிறாள்; ஆடுகிறாள்; நீச்சல் கற்கிறாள்; இரவுகளில் நெடு நேரம் ஊர் சுற்றுகிறாள்; அலட்சிய கல்லூரி மாணவர்களை எதிர்கொள்கிறாள்; பாய் ஃப்ரெண்ட் பிடிக்கிறாள்; அவனோடு கலக்கிறாள்; படிக்கிறாள். முடித்து ஈரான் திரும்புகிறாள்.

ஹோம்சிக்கில் ஈரான் திரும்பினாலும், அவளால் ஈரானில் மனமொத்து வாழ குடியவில்லை. 24 வயதில் அவள் மனதளவில் ஈரான் பெண்ணாக இருந்தாலும், தனது எதிர்கால நன்மையைக் கருதி மனதை கல்லாக்கிக் கொண்டு ப்ரான்ஸுக்கு விமானம் பிடிக்கிறாள்.

இனி அவள் ஈரான் திரும்பப் போவதில்லை.

படம் முழுக்க லைன் ட்ராயிங் வகை அனிமேஷன் மூவியாக உள்ளது. சில செலவு பிடிக்கும் காட்சிகள் அனிமேஷனில் இன்னும் உணர்ச்சிகரமாக சொல்வது வசதி. தியேட்டரில் நிறைய பேர் ரசிக்க முடியாமல் நெளிந்தார்கள். ஆரம்பிக்கும் போது முழுதும் நிரம்பியிருந்த அரங்கம், கொஞ்சம் கொஞ்சமாக நெரிசலிலிருந்து விடுபட்டு, முடிந்து கைதட்டும் போது சில்லறைக் குலுக்கல் போல் கேட்டது.

1 comment:

thamizhparavai said...

ஒரு முடிவோடதான் சிங்கம் களமிறங்கிடுச்சு போல... பதிவை வந்து படிச்சுக்கிறேன்...
‘வண்டிக்காரன் மகள்’ ந்ல்ல தலைப்பு.. இதே போல எல்லாப் படத்துக்கும் தமிழ்ல தலைப்பு கொடுத்தா நல்லா தமாஷா இருக்கும்...