Tuesday, August 04, 2009

தலையெடு!

வுன் ஹால் ஏரியாவில் ஜில்லென்ற தயிர்வடைக்கு கங்கப்ரஸாத்திற்கு இரண்டாமிடம் தருகிறார்கள். ஜோனல் சந்திப்புகளுக்காக கோவை வரும் போதெல்லாம் நான் தங்கும் ஒரு டிங்ஜிங் ஹோட்டல் அது. போர்டிங் & லாட்ஜிங். அதன் காரை பெயர்ந்த கூரைகளும், மூட்டைப்பூச்சி மெத்தைகளும், பழுப்பு கரைந்த பாத்ரூம்களும் எனக்கு மனைவிமுகம் போல் பரிச்சயமாகியிருந்தன.

காலையிலேயே டயபடீஸ்காரன் போல் விட்டு விட்டு வானம் பெய்து கொண்டிருந்தது. ஒன்பது முப்பதுக்கு எனக்கு டிபார்ட்மெண்ட் மீட்டிங். முடித்து,'கணபதி'யில் ஒரு ஏஜெண்டைப் பார்த்து விட்டு, 15:50க்கு ஜங்ஷனில் மங்களூர் சென்னை எக்ஸ்ப்ரஸைப் பிடித்தால், ராத்திரி பத்து மணிக்கு திருச்சிக்குத் திரும்பி விட முடியும்.

வழக்கமான அலங்காரங்கள் அணிந்து கொண்டு, படிக்கட்டுகள் வழி இறங்கி ஹோட்டலுக்குள் செல்வதற்குள் லேசாக நனைந்து விட்டேன். சுழலும் எல்.ஈ.டி.க்களின் நடுவே ஃப்ரேமிட்ட பெருமாள். மல்லிகைக் கொத்து. சந்தனக் குப்பி. பில் சுமக்கும் சிரசாசன குத்தூசி. பாக்கெட்டுகளில் சில்லறைகளாக மைசூர்பாக், லட்டு, மிக்சர், பால்கோவா மற்றும் அருணாச்சலம்.

ஒற்றை வாரிசான மனைவியுடன் சீதனமாக வந்த ஹோட்டலுக்கு அவள் பெயரையும், பிறந்த மகன் பெயரையும் சேர்த்து வைத்து விட்டு, கல்லாவிலேயே உட்கார்ந்து விட்டான் என்பதாகப் பேச்சிருக்கிறது.

'என்ன இன்சூரன்ஸ்காரரே..! மதியானம் சாப்பாடு இங்க தான..?' கேட்டான்.

'ஆமாங்க...!' சொல்லிக் கொண்டே என் வழக்கமான சீட்டை அடைந்தேன். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் அங்கே இங்கே சிதறி உட்கார்ந்திருந்தது. வெண்ணுருண்டை இட்லிகளும், தட்டை தோசைகளும், பூரி மசால்களும், சாம்பார் தளும்பத் தளும்ப பச்சை, செந்நிற சட்னிக் கூட்டணிகள், மெதுவடையுடன் தட்டுகள் டேபிளுக்கு டேபிள் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தன. சர்வர்கள் குறுக்கும் நெடுக்கும் கோடுகள் கிழித்து நடந்தார்கள்.

வழக்கமாக அமரும் டேபிளை அடைந்தேன். நான் வருவதை முன்பே பார்த்திருந்த பாபு, சப்பாத்தியும், கேரட் ஹல்வாவும் கொண்டு வந்து வைத்து சிரித்தான். இந்த கூட்டு எனக்குப் பிடிக்கும். சப்பாத்தியைக் கிழித்து, மாவை ஊதி விட்டு, ஹல்வாவைக் கொஞ்சமாய் விள்ளி, கிழிசலுக்குள் உதறி, பீடா போல் சுருட்டி, கன்னத்திற்கும், கீழ்ப்பற்களுக்கும் இடையில் அதக்கிக் கொண்டு அழுத்தினால், கசியும் ஹல்வ இனிப்பு முகம் முழுவதும் கிளைக்கும்.

'தட்...!'

கிறங்கியிருந்த நான் விழித்துப் பார்த்தேன். பாபு பின் தலையைத் தேய்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கோபால் காலரை இழுத்து விட்டுக் கொண்டு நடந்தான். சீனியர் சர்வர். பாபுவைத் தலையில் தட்டியிருக்க வேண்டும்.

'ஏன்டா... ஆர்டர் கொண்டு வரும் போதே, தண்ணி எடுத்து வைக்க மாட்டியா..?' பாபு உள்ளே போனான். என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் கொஞ்சம் ஈரம்.

இதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். காரணம் இருக்கின்றதோ, இல்லையோ கோபால் இவனைத் தலையில் ஒரு தட்டு தட்டுவான். சில சமயங்களில் போகிற போக்கில் ஒரு தட்டு..! வயதில் பெரியவனாக இருக்கும், தனக்கு சம்பந்தமில்லாத ஒரு காரணத்திற்காக ஒரு சிறு பயலை அதிகாரம் செலுத்துவது எனக்கு வருத்தமாயிருந்தது.

டம்ளர் கொண்டு வைத்து விட்டு, பாபு என் முகம் பார்க்காமலேயே வேறொரு டேபிளுக்குப் போய் விட்டான். ஒரு நாள் இந்த கோபால் வசமாக மாட்டும் போது, பாபு அவனை இதற்கெல்லாம் பழி வாங்குவான் என்று மட்டும் தோன்றியது. டிஃபன் முடித்து விட்டு கிளம்பினேன்.

மீட்டிங் மசாலா டீயோடு நிறைந்தது. ஏஜெண்ட்டைப் பார்த்து விட்டு, கமிஷன் விஷயமாகப் பேசி விட்டு, லாட்ஜுக்குத் திரும்பி, அறையைக் காலி செய்து, சாவியைக் கொடுப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அருணாச்சலம் கத்திக் கொண்டிருந்தான்.

'எங்கடா போனான் கோபாலு..?'

எனக்கு முன்னால் ஒரு குடும்பம் நின்றிருந்தது. தலைவர் ரோஸ் சீட்டுக்கும், இளம்பச்சை சீட்டுக்கும் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்க, தலைவி மார் மேல் கிடந்த குழந்தையை எழுப்பி விட முயற்சிக்க, பெண் குழந்தை சமர்த்தாய்ப் போய் குமிழ் அமுக்கி கை கழுவிக் கொண்டு, சுமாராய் ஃபேன் ஓடும் ஸ்தலத்தில் சென்று அமர்ந்து கொண்டு, டேபிள் மேல் தாளம் போட்டது. குடும்பஸ்தர் தயிரில்லாத இளம்பச்சை சீட்டுகள் இரண்டு வாங்கிக் கொண்டு, பெண்ணுக்காக மட்டும் ஒரு ரோஸ் சீட்.

'பால் இன்னும் வரலைங்க. சொசைட்டி வரைக்கும் போயிருக்காரு..! உங்ககிட்ட சொல்லலீங்களா..?' சமையற்காரர் பனியனில் செருகிய துண்டில் கைகளைத் துடைத்து வந்தார்.

'வரட்டும் அவன்...! ஒரு வார்த்தை சொல்லாம அவன் இஷ்டத்துக்கு போறான்..வர்றான்..! இன்னியோட கணக்க தீத்து முடிச்சர்றேன்..' என்னைப் பார்த்தும் அவனது வழக்கமான சிரிப்பு முகமூடியை மாட்டிக் கொள்ள முடியாமல் நெளிந்தான்.

'என்ன அதுக்குள்ள காலி பண்றீங்களா...? மறுபடியும் எப்ப வருவீங்க..?' என் வழக்கமான பிங்க் சீட்டைக் கிழித்துக் கொடுத்தான்.

'தெரியலீங்க. மீட்டிங் போட்டா வர வேண்டியது தான்..' நான் எப்போதும் அமரும் டேபிளை அந்தக் குடும்பம் ஆக்ரமித்திருந்தது. பாபு தட்டுக்களை எடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு சிரிப்பு பரவியிருந்தது. குழாய்க் குமிழைத் திருகியபடி ஒரு டேபிளில் அமர்ந்தேன். பாபுவின் சிரிப்புக்கு என்ன காரணம் இருக்க முடியும்..? கோபால் இல்லாததாகத் தான் இருக்க முடியும். இப்போது என் முன்னால் அவனை அடிக்க ஆள் இல்லை அல்லவா..?

'சார் மீல்ஸா..?' ஒரு குட்டிப் பையன் என் கையில் இருந்த சீட்டை வாங்கிப் போனான். இன்று தான் சேர்ந்திருப்பான் போல. புதிதாய் இருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காலி தட்டைக் கொண்டு வந்து வைத்தான். சாதக் குண்டாவைக் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து என் தட்டில் எடுத்து வைத்தான். கனம் தாங்காமல் 'பொத்'தென்று வைத்து விட, ஒரு கட்டி உருண்டு வெளியே போய் விழுந்தது.

பக்கத்து டேபிளில் இருந்து பாபு வந்தான். வலது கை விரல்களை ஒன்றாக்கி, குட்டிப் பையனின் தலை மேல் ஒரு வீசு வீசினான். பையன் கண்களில் பூச்சி பறந்தது. பாபு என்னைப் பார்த்தவாறே காலரை இழுத்து விட்டுக் கொண்டான்.

4 comments:

பாலகுமார் said...

என் நண்பரோட ஹோட்டலில் இந்த மாதிரி 'தலையெடு' பழக்கத்தை நான் நோட் பண்ணினது உண்டு. ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...படிக்கும் போது அப்படியே காட்சிகள் கண் முன்னால் நடப்பது மாத்ரி இருக்கு. நன்றி.

Karthik said...

S.U.P.E.R.B.

இரா. வசந்த குமார். said...

அன்பு பாலகுமார்...

நன்றிகள் சார்.

***

அன்பு கார்த்திக்...

நன்றிகள்.

PPattian said...

இது உணவகங்களில் மட்டுமல்ல.. சமூகத்தின் எல்லா இடங்களிலும், தளங்களிலும் நடைபெறுவது.. நம் வீட்டிலும் கூட.. ஏன் இந்த தமிழ் பதிவுலகிலும் கூட.. ஹி..ஹி..

நல்ல கதை வசந்த்