ஆளுக்கொரு
திசையில்,
நேரத்தில்
நின்ற
மின் காற்றாடிகள்,
இயங்கிய போது
ஒரே வேகத்தில்
சுற்றியதாகத்
தோன்றியிருந்தன.
***
ஓடையில்
தென்னம் பாளை
ஒரு கரப்பான்
போல்
கால் விரித்து
மிதந்தது.
கூரை கரைந்து
வீட்டு நிலை
மேல்
ஒண்டியது
சின்னக் குருவி.
துளை விழுந்த
மூங்கிலில்
கிளம்பியது
ஈரமாய்
ராகம்.
நிலவைக் கரைத்து
நேற்று இரவு
பெய்த மழை
இன்னும்
என்னென்ன
அடையாளங்கள்
விட்டுச் சென்றதோ,
என்னையும் கவிஞனாக்கி..!
***
கொடுத்த
நான்கு சீட்டுகளில்
முதல் சீட்டைப்
பிரித்த
கிளிக்கு ஆச்சரியம்.
அதில் என் முகம்.
தள்ளி விட்டு
எடுத்த அடுத்த சீட்டிலும்
என் முகம்.
மூன்றாவதில்...
என் முகம்.
கடைசியில் பார்த்தால்,
அதிலும் என் முகம்.
'ஏன் இப்படி..?
என்ன பலன்..?'
கேட்ட கிளிக்கு
பதில் சொன்னார்
கிளிகளின் கடவுள்.
'எனக்குத் தெரியாது.
இது
அவன் கவிதை!'
4 comments:
எனக்கு கவிதை பற்றி அதிகம் தெரியாது என்றாலும், அட்டகாசம்! :)
lovely.
கவர்கிறது மூன்றாம் கவிதை!!
Post a Comment