Thursday, August 06, 2009

அவசியம் காண வேண்டிய இரு தளங்கள்.

லை ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் காண வேண்டிய இரு இணையத் தளங்களைப் பார்ப்போம்.

இணைய கலைக் கூடம்.

ஹங்கேரியைச் சேர்ந்த இரு தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கி.பி.1996-ல் ஆரம்பித்து தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் தளம் இது. பல வகையான காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள். 'மாய உலா' எனும் வகையில் நாம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்களையும் காணலாம். மட்டுமல்லாது கலையின் மற்ற வடிவங்களான மர வேலைப்பாட்டு அற்புதங்கள், கண்ணாடியில் கண்கவர் சாதனைகள், துணியில் நெய்த நிகழ்ச்சிகள், மட்பாண்ட மற்றும் பீங்கான் செதுக்கல்கள் என்று ஒரு தனி துறை உள்ளது.

ஓவியர்களின் அகர வரிசையிலோ, தேடுபொறி மூலமாகவோ, காலகட்ட வகை வழியாகவோ, இரட்டை சாளரம் முறையிலோ எந்த வகையிலும் நாம் ஓவியங்களையும், ஓவியர்களையும் அலசிக் கண்டு களிக்கலாம். ஏற்கனவே சில உலா வரிசைகளை வைத்துள்ளார்கள். அதன்படியும் சென்று வரலாம்.

Gothic, Renaissance, Baroque, Neoclassicism, Romanticism and Realism கலைக் கால கட்டங்களைச் சேர்ந்த (1100 - 1850 A.D.) கிட்டத்தட்ட 22600 படைப்புகளை சேர்த்துள்ளார்கள். ஓவியங்கள் மேதோ, மேற்குறிப்பிட்ட கலை வகைகளின் மேலோ ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் ரசித்து ருசித்துப் பார்த்து மகிழுங்கள்.

வரலாறு

முதலில், வரும் சுதந்திர தினத்தோடு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கின்ற வரலாறு குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.

தமிழர்களின் கலை, கலாச்சாரத்தின் மிச்சம் இருக்கின்ற ஒரே கூறான கோயில்கள், அவற்றில் செதுக்கியிருக்கும் கல்வெட்டுகள், வாழ்வைக் காட்டும் சிற்பங்கள், இலக்கிய ரசனை என்று தேடித் தேடிப் பயணம் செய்வதைப் பதிவு செய்யும் தளம் இது. மாதம் ஒருமுறை மலரும் வரலாறு, மேலும் பல தொடர்களையும் சொல்லி கடந்த கால பெருமைகளை நமக்கு கட்டும் மிக உயர்ந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றது.

61 இதழ்கள்...910 கட்டுரைகள்..! அத்தனையும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவுச் சொத்துக்கள். நியாயமாக தமிழ் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது. இந்தப் பணியின் அவசியத்தை தமிழ்ச் சமூகம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து தொலைத்தவற்றைத் தேடும் போது அறிந்து கொள்ளும்.

ஆகஸ்ட் 15, 2009ல் 'பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் வரலாற்றுப் பெருவிழா 2009', தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற இருக்கின்றது. அடுத்த நாள் ஞாயிறில், சென்னையைச் சுற்றி இருக்கும் முக்கியமான சோழர் காலச் சரித்திர இடங்களுக்கு கூட்டிப் போகிறார்கள். ஆர்வமிருக்கும் பதிவர்களும் கலந்து கொண்டு படப் பதிவுகள் போட்டால், அயலூர்க்காரர்கள் மகிழ்வோம்.

1 comment:

ஆயில்யன் said...

முதன் முதலில் இணையத்தில் பார்த்த தளம் வரலாறு - மிகுந்த சிரமங்களுக்கிடையில்,ஈடுபாட்டுடன் சேகரித்து அளிக்கும் செய்திகளினை கண்டிப்பாக நாட்டின் பெருமைகளை,ஊர் பெருமைகளை தெரிந்துக்கொள்ளும் பொருட்டு நம் வரலாற்றினை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி அடிக்கடி உலா சென்று வருவது மிக அவசியம் !
நன்றி :)