Sunday, January 31, 2010

6.கண்ணன் நடைபழகுதல்.



றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg

4 comments:

thamizhparavai said...

கொஞ்சம் ஹைஃபையா இருக்கிறதுனால புரியல பாஸூ...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்...! விளக்கமாகப் பிறகு சொல்கிறேன். :)

உயிரோடை said...

வெண்பா வடிவில் கண்ணன் நடைபழகுதல் அழகாக இருக்கு. விளக்கங்களை எதிர்நோக்கி....

இரா. வசந்த குமார். said...

அன்பு உயிரோடை...

நன்றிகள். விளக்கங்கள் தேவைப்படும் அளவுக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கின்றனவா என்ன..? எனினும் எனக்குத் தோன்றும் அளவில் சொல்கிறேன்.

1. இந்துத் தத்துவத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டியத் தேரில் வருவதாகச் சொல்லப்படுகின்றது. அப்படி ஒரு தேரில் கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன், அதிகாலையின் நீல வானத்தைத் தீப்படுவது போல் சிவப்பாக்கி அதுவரை உறங்கிக் கொண்டிருந்த உலகைப் பரபரப்பாக்கி விடுவது போல், கண்ணன் உறக்கத்திலிருந்து எழுந்து நடை போடத் தொடங்கியதும் நந்தரின் மாளிகையே விழித்து விடுகின்றது.

2. இதில் கண்ணன் நடை பயிலும் அழகு உவமைகளுடன் குறிப்பிடப்படுகின்றது. பூங்கொத்துக்கள் போன்ற மென்மையான கண்ணன் கைகள் பதித்து, கால் முட்டிகள் பதித்துத் தத்தித் தத்தி நடந்து வருவது எது மாதிரி தெரியுமா இருக்கின்றது? குளத்தில் தேங்கிக் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் சந்திரன் பிம்பம் போல உள்ளது. மாலையிலிருந்து கொட்டும் முத்து மணிகள் சிதறிப் பாயும் திசைகள் எங்கும் அவன் தன் தொப்பூழ் தரையில் பதியுமாறு அவ்வாறு தவழ்ந்து நடக்கிறான்.

3. இது வெண்பா சுதந்திரத்தைப் பயன்படுத்தி, வார்த்தைகளை வெவ்வேறு இடங்களில் பொருத்திப் பொருத்தி எழுதப்பட்டது.

நான்காகத் தோடுகள் அசையத் தவழ்ந்து பாத விரல்களின் நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய கோடுகள் நந்தன் நிலத்தில் பாக்கியம் செய்தன.

இரண்டு கைகள், இரண்டு கால்களால அசைந்து அசைந்து கண்ணன் தவழ்ந்து வரும் போது, அவன் பாத விரல்க்ளின் நகங்கள் தரையில் பட்டுக் கோடுகள் கிழித்துக் கொண்டே வருவதால், நந்தரின் நிலமே பெரும் பேறு பெற்றது. பொதுவாகப் பார்த்தால், நம் கால் விரல்கள் தரையில் படவே படாது. தவழும் போது மட்டுமே படும் அல்லது யாராவது காலில் விழுந்து வணங்கும் போது அவர் நெற்றியில் படும். கண்ணனின் கால்களில் பிறர் விழுந்து கும்பிட்டால் அவர்கள் எத்தகைய உயர்நிலைக்குப் போவார்களோ, அந்த நிலையை கண்ணனே நந்தரின் நிலத்திற்குத் தான் தவழ்வதன் மூலம் கொடுக்கிறான். (படத்தைப் பார்த்தாலே தெரியும்.)