Wednesday, January 13, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...



ச்சை ஃப்ராக்கில் கன்னல் விழி கஜோல் கனிந்து அழைத்த வெண்ணிலவு, விண்ணைத் தாண்டி வந்தே விட்டது...!


அ. ஓமணப் பெண்ணே...

புத்திஸக் கோயில் மணிகள் கொஞ்சமாய் ஒலிக்கத் துவங்கும் பாடல், 'ஜல்...ஜல்...' ஜரிகை ஓரத்தில் அசைய, 'பீட்' சாலையில் மெல்ல அடியெடுத்து வைத்து, பென்னி தியோலின் மென் குரலில் 'ஆஹா...அடடா...' என்று ஆரம்பித்துக் குளிரான மல்லிகைப் புகைகையாய் மணக்கிறது. 'ஓமணப் பெண்ணை' பல விதங்களாகப் பிரித்துக் கெஞ்சும் பென்னியின் வார்த்தைகளுக்கு இணையாக, நாற்பதாம் விநாடியிலிருந்து குட்டியாய் நாதஸ்வரத் துளிகள் சொட்டிக் கொண்டே வந்து, இறுதி நெருங்குகையில் 'தனி'யாக எழும்பிப் பின் கடைசி வரை தொடர்ந்து ஓர் இளம் காதலை வாசிக்கின்றன.

கல்யாணி மேனனின் ஸ்லாங்கில், கண்ணனைப் பாடும் வரிகள் மேக போதையில் இன்னும் மழை சேர்க்கின்றன.

மரகத தொட்டிலில்
மலயாளிகள் தாராட்டும் நின்னழகே!!!

மாதங்ங தோப்புகளில்
பூங்குயில்கள் இன்னு சேர்ந
புல்லாங்குழல் ஊதுகையான...
நின்னழகே... நின்னழகே...

லியோ காஃபிக் கால ரஹ்மானை இப்பாடலில் மீண்டும் உணர்கிறேன்.


ஆ. அன்பில் அவன்...

ஒரு பெப்பி பாடல். துள்ளிக் குதித்து நடனமிடச் செய்யும் அதிரடி இல்லை. எளிமையாக ரிப்பீட் அசைவுகளை ஆடிக் கொண்டே (கிட்டத்தட்ட சல்ஸா வகை) அவள் இடையை வலது கையால வளைத்து, இடது கைகளைக் கோர்த்துக் கொண்டு, நெருங்கி, முத்தமிட்டு, 'டெக்கி சுப்ரபாதத்தில்' துவங்கும் இப்பாடல் முழுவதையும் முடித்து விடலாம்.

உயிரே, உன்னை...உன்னை எந்தன் வாழ்க்கைத் துணையாக ஏற்கின்றேன்...ஏற்கின்றேன்.
இனிமேல் புயல் வெயில் மழை, பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே..!


பால் குடத்தில் மிதக்கும் ஈக்களாய், ஆரம்ப வரிகள் கவித்துவமே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் உழைப்பை வரிகளுக்குக் கொடுத்திருக்கலாம்.


இ. விண்ணைத் தாண்டி வருவாயா...

கார்த்திக் நடுக்கம் மிதக்கப் பாடும் இது, டைட்டில் பாடலாக இருக்கலாம். ரஹ்மானையும் கிடாருக்கு மாற்றி விட்டார் கெளதம். ஆரம்பமே அழுத்தமாக அதிர்கின்றன கம்பிகள். கஞ்சத்தன இசை, இப்பாடலில் பெளர்ணமி வெள்ளத்தின் கீழ் வெண்பட்டுத் துணியாய் மினுக்குகின்றது.


ஈ. ஹோஸன்னா...

இணையத்தில் முன்பே வெளியாகி ஷ்யூர் ஹிட் ஆகி விட்ட பாடல். ஃப்ளூட் போன்ற மயக்கத்தில் ஆரம்பிப்பதை 1/3 நிமிடத்தில் 'பீட்' தன்வயப்படுத்திக் கொள்கிறது. Suzanne-வின் ஜில்லான குரல், கனவில் பஞ்சு மேகத்திலிருந்து கை நீட்டும் ஏஞ்சல்களின் தடவலாய் ருசிக்கின்றது. வயலின்கள் கோரஸாக இசைத்து, விஜய்ப்ரகாஷ் முடிக்கும் போது, ப்ளேஸி உள் நுழைந்து விரல் சுழற்றிச் செல்கிறார். காதலிகளுக்கு ரிங் டோனாக விரைவில் ரெக்கார்ட் செட் செய்யும் என்று எதிர்பார்க்க வைக்கின்றன, இடையே இடையே வருகின்ற 'ஹலோ...ஹலோ..'க்கள். ரொமான்ஸுக்கென்றே அவதரித்த பாடல்.

ஆரம்பத்தில் அலைபாயும் ஃப்ளூட் இசையைக் கேட்டதும் எனக்கு என்னவோ, Indian Dreams Sacred Music-ன் இசை நினைவுக்கு வந்தது.


உ. கண்ணுக்குள் கண்ணை...

ஒரே ஒரு நடனப் பாடல். வேறென்ன சொல்ல...!!!


ஊ. மன்னிப்பாயா...

ஷ்ரேயா கோஷல் 'முன்பே வந்தது போல்' மீண்டும் கத்திக் குரலால் ரத்தத் துளிகளைப் பூக்க விடுகிறார். ரஹ்மான் களம் அமைத்துக் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டாற்போல் தெரிந்தாலும், 'சந்தோஷக் கண்ணீரே...' குரலில் கரைந்து உருகும் இடம் மஸ்லின் போர்வையாய் வருடுகின்றது. மன்னிப்பு கேட்கும் வரிகளுக்கிடையே சட்டென்று 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று குறள் கசிகின்றது. காய்ந்து போன பொக்கேகளையும், கீ செயின்களையும், பழுப்பாகிய ஒற்றை மல்லிகைச் சருகையும் கண்ணீரில் நனைக்கும் போது, செவி வழி இறங்கிச் சமனப்படுத்தும் பாடலின் இறுதியில் கீபோர்ட் கறுப்பும் வெள்ளையுமாக ஒலித்து மெல்ல அடங்குகின்றது.


எ. ஆரோமலே...

கிடார் ஸ்ட்ரிங்குகளில் பாதரச நயாகரா தெறிப்பதில், ஏறக்குறைய அடிமையாகி விட்டேன். வெஸ்டர்ன் விளையாடும் போது, கிடார் நரம்புகள் ஊடுறுவித் துடிக்க சோகத்தின் முழு பிம்பமும் நடுங்குகின்றது. மலையாள வரிகளும், ரிதம் படர்ந்த தளத்தில் 'ஆரோமலே....' என்று அலறும் அல்போன்ஸின் அடிவயிற்றுக் குரலும், லேசாகத் தெளிக்கப்பட்ட கர்நாட்டிக்கும், எங்கோ தொலைவில் கதறும் ஷெனாய் பாஷையும்.... மிக மிகப் புத்தம் புதிய கண்ணீர் தேசத்தில் என்னை எறிகின்றன. ரகசிய நிலா நேரங்களில் கேட்க வேண்டியது இது.

அத்தனை பாடல்களும் ஜன்னல் மேல் நகரும் மழைத்துளிகள் போல் குளுமையாய் இறங்குகின்றன.

4 comments:

தமிழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இன்னும் பாடல்களைக் கேட்கவில்லை.
பொங்கல் நல்வாழ்த்துகள்.

thamizhparavai said...

முதன் முறையாக ரஹ்மானின் பாடல்களை எனக்குக் கேட்கத் தூண்டுகிறது....

இரா. வசந்த குமார். said...

அன்பு திகழ்...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

***

அன்பு ஸ்ரீ...

தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

***

அன்பு தமிழ்ப்பறவை...

இந்த வகையில், உங்களுக்கு ரஹ்மானை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.! :)