Thursday, November 28, 2013

ஆமென் - குளுமையில் ஒரு படம்.

ரோடு கதிர் அவர்கள் ஃபேஸ்புக்கில் ‘ஆமென்’ என்ற மலையாளப் படத்தைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னதன் பேரில், நேற்று இரவு அப்படத்தைத் தரவிறக்கிப் பார்த்தேன். ஃபகத் பாஸில், இந்த்ரஜித், ஸ்வாதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

கதை முழுதும் நீர்வளம் நிறைந்த ஒரு கேரளக் கிராமத்தில் நடக்கின்றது. சர்ச்சைச் சேர்ந்த பேண்ட் வாத்தியக் குழுவில் இருக்கும் ஸோலோமனுக்கும் செல்வந்த காண்ட்ராக்டர் குடும்பத்தின் ஷோஸன்னாவுக்கும் சிறு பிராயத்திலிருந்து முகிழ்ந்து வரும் அன்பு பருவத்தில் காதலாய்க் கனிந்து நிற்கின்றது. இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்ற கேள்விக்கு பதிலைப் படம் பார்த்து அல்லது விக்கியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

கதைக்களனில் நீல நீர் தளும்புகின்றது. குளிர்ந்த காயல்கள் மிதக்கின்ற ஆற்றுவழிகளில் பெளர்ணமி நிலவு அலையடிக்கின்றது. மெல்லிய க்ளாரினெட்டின் இனிமை சுமக்கும் இசை திரையிலிருந்து நழுவி வந்து வருடி விட்டுப் போகின்றது. வெண்ணிறச் சட்டை, வேட்டியில் தான் பெண்களும் நடமாடுகின்றனர். துல்லிய ஒளிப்பதிவு மிக அழகாகக் குமரன்கிரியைக் காட்டுகின்றது. சின்னச் சின்னப் புன்னகையூட்டும் காட்சிகள் படம் முழுக்க வருகின்றன.

செல்போன்கள் இல்லாத இப்படத்தை ஒரு கேரளக் கிறித்துவ கிராமத்து அனுபவத்திற்காகப் பார்க்கலாம்.

Wednesday, November 27, 2013

சர்வாதிகாரம் கூடாது - தனிப்பட்ட அனுபவம்.

ள்ளியில் படிக்கும் போது கிடைத்த ஓர் கருத்தை இப்போது மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில், சர்வாதிகாரம் அல்லது தனி மனித ஆட்சி என்பது இடையில் நிற்காமல் விளைவுகளின் விளிம்புகளில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர முடிந்தது.

தற்போது இருப்பதைப் போன்று ஊர்களை விட்டு விலகிய நீண்ட தார் நெடுஞ்சாலைகள் அப்போது அமைந்திருக்கவில்லை. மக்கள் புழங்கும் இடங்களுக்கு இடையே தான் தொலைதூரப் பேருந்துகளும் சென்று வர வேண்டும் என்பதால், அவை குறைந்த வேகத்திலேயே ஓட்டப்படும். எனவே, செய்தித்தாள்களில் வரும் விபத்துகளில் மிகப் பெரும்பாலும் லாரிகளே விபத்து உற்பத்திக்காரர்களாக இருப்பார்கள்.

‘லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல்’, ‘ட்ராக்டர் மீது லாரி ஏறியது’.

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பள்ளிப் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில், கையில் கிடைக்கும் தினத்தந்தியின் மூன்றாம் நான்காம் பக்கங்கள் இப்படிப்பட்ட செய்திகளாலேயே நிறைந்திருக்கும். முதல் பக்கங்கள் அரசியல் பேசும். எனவே அவை அரசியல் பேசுபவர்கள் கைகளில் தான் எப்போதும் இருக்கும். நிறைய விபத்துச் செய்திகளைப் படித்துப் படித்து, உறுதிப்பட்ட ஒரு கருத்துக்கு வந்து சேர்ந்தேன் - ‘லாரிகள் தான் எல்லா விபத்துக்கும் காரணம். எனவே எல்லா லாரிகளையும் ஒழித்துக் கட்டினால் விபத்துகளே நேராது.’

பத்தாம் வகுப்புக் காலம். ஒரு நாள் காலை தினத்தந்தி ‘நாளை முதல் கால வரையற்ற லாரி ஸ்ட்ரைக்’ என்று முதல் பக்கத்தில் பருத்த எழுத்துகளில் அலறியது. பக்கத்திலேயே கசங்கிய கறுப்பு நிறத்தில் வரிசையாக லாரிகள் நின்றிருக்கும் ஒரு படம். அன்று சாயங்கால ட்யூஷனின் ரிலாக்ஸான நேரத்தில், இதைப் பற்றிப் பேசும் போது ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு ஏக்ஸிடெண்ட் எதுவும் இருக்காது. எப்பவுமே லாரி எதுவும் ஓடலைன்னா நல்லா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

கேட்ட ஸார் ‘அப்படி கிடையாது. ரெண்டு நால் லாரி எதுவும் ஓடலைன்னா நீ காலையில டீ குடிக்க முடியாது. ஒரு வாரத்தில அரிசி கிடைக்காது. மொத்த சரக்குப் போக்குவரத்தும் லாரில தான் இருக்கு...’ என்று நிறைய சொன்னார். அப்போது தான் motel-க்கும் hotel-க்கும் வித்தியாசமும் தெரிந்தது.

அவர் சொல்லி முடிக்கையில் தான் லாரிகளின் இயக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிந்தது.

ப்போது இப்படி எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் கையில் ஒரு சமூகத்தின் , ஒரு நாட்டின் மொத்த வாழ்வையும் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கின்றது. உச்ச அதிகாரம். அவருக்கு மேலே யாரும் இல்லை.

இப்போது அவரிடம் ஒரு கருத்து இருக்கின்றது. ‘லாரிகள் தான் அனைத்து விபத்துகளுக்கும் காரணம். எனவே லாரிகளைப் போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், விபத்தே நடக்காது.’ உடனே ‘ஓடிக் கொண்டிருக்கும் எல்லா லாரிகளையும் அப்படியே அங்கேயே ஓரம் கட்டுங்கள்’ என்று ஓர் ஆணை பிறப்பிக்கிறார். இப்படி ஓர் முடிவை அவர் சுயநலமாக எடுக்கவில்லை. மாறாக அவரைக் கேட்டால், ‘மக்கள் விபத்துகளிலிருந்து தப்பிக்கவே இப்படி ஓர் உத்தரவு’ என்பார். அவருக்கு அது ஒரு பொது நலம் சார்ந்த முடிவாகவே தென்படும்.

ஆனால் அம்முடிவால் ஏற்படும் விளைவுகள் எதிர்பாராத இடங்களில் எல்லாம், எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் வரும்.

இங்கே தவறு எங்கே நிகழ்கிறது? அவரிடம் இருக்கும் புரிதல் போதாமை.

அவரே உச்ச அதிகாரி. அவருக்கு அறிவுரை சொல்ல எவரும் இல்லை; சொன்னாலும் இவர் கேட்கக் கூடியவர் இல்லை, சொல்பவரை காலி செய்து விடுவார் என்றால் என்ன ஆகும்?

ஸ்டாலினின் சீர்திருத்தங்களையும், மாவோவின் கலாச்சாரப் புரட்சியையும், போல்பாட்டின் ‘விவசாயத்திற்குத் திரும்புவோம்’ படிக்கும் போதெல்லாம், லாரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

Tuesday, November 12, 2013

வெண்பாவின் ஈற்றுச் சீராகத் தனி எழுத்து வரலாமா? - ஒரு ஃபேஸ்புக் விவாதம்

Naga Chokkanathan
2 hours ago near Bangalore, Karnataka ·

Hari Krishnan அண்ணா, ஒரு சந்தேகம் (எப்போதும்போல்

இன்று நண்பர் Vasantha Kumar Raju Angappan ஒரு கேள்வி கேட்டார், வெண்பாவின் ஈற்றுச் சீர் ஒற்றை எழுத்தாக வரலாமா?

ஒற்றை எழுத்து என்பது (குறில் அல்லது நெடில்) நாள் என்ற வாய்பாட்டில் அடங்கும்தானே?

’இதில் என்ன சந்தேகம்?’ என்று சிரிக்கவேண்டாம். திருக்குறளை அதிவேகமாகப் புரட்டினேன், முழுமையாக அல்ல, ஆனால் நான் பார்த்தவரை ஒரு பாடலில்கூட ஒற்றை எழுத்து ஈற்றுச் சீர் இல்லை. ஆகவே, ‘நாள்’ என்பது குறில் அல்லது நெடில் + ஒற்று என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்று ஒரு சந்தேகம்.

ஆனால் ‘மலர்’ என்பதற்கு இணையாக இரண்டு குறில்களைக் கொண்டு பல திருக்குறள்கள் வருகின்றன. அவற்றில் ஒற்றெழுத்து இல்லை. காசு, பிறப்பு ஆகியவற்றில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் கட்டாயம் இருக்கும் என்பதால் அதிலும் பிரச்னையில்லை.

ஆக, என் சுருக்கமான கேள்வி (விஷயத்துக்கு வந்துட்டேன்) வெண்பா ஈற்றுச் சீரில் 2 எழுத்துகள் குறைந்தபட்சம் இருந்தாகவேண்டுமோ? ஒரே எழுத்தில் நிறையும் பழந்தமிழ் வெண்பா ஏதும் உண்டா?
Unlike · · Unfollow Post · Share · Hide from Timeline
You, Natarajan Srinivasan and 4 others like this.

Natarajan Srinivasan "வெற்றியின் கொற்றமே வா"ன்னு சரஸ்வதி தேவி பத்தி எங்கேயோ படிச்ச மாதிரி நினைவு
about an hour ago via mobile · Like

Shanmuga Sundar Lakshmanan இலந்தையார்(உங்களுக்கு அவரைத் தெரியும்னு நினைக்கிறேன். இருந்தாலும் - ஹரியண்ணா, அவர், பசுபதி ஐயாவெல்லாம் வழிகாட்டுவதால்தான் சந்தவசந்தம் போன்றதொரு குழுமம் நன்றியங்குகிறது) ஒரு வெண்பாவில் "கே" என்ற ஒற்றை எழுத்தில் முடித்திருந்தார்.
about an hour ago via mobile · Like

Naga Chokkanathan Shanmuga Sundar Lakshmanan சில ஆண்டுகளுக்குமுன் இலந்தையாரை நன்கு அறியும் பேறு கிட்டியது. எங்கள் தினம் ஒரு கவிதை குழுமத்துக்காக ‘விருத்தம் எழுத வருத்தம் எதற்கு’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கூட எழுதி கௌரவித்தார்!

பசுபதி ஐயா நூல்களைப் படித்துள்ளேன், ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை அனுப்பியுள்ளேன்
about an hour ago · Like

Suresh Babu சங்கத் தமிழ்மூன்றும் தா.
about an hour ago · Unlike · 5

Vasantha Kumar Raju Angappan கிளை ஐயம்.

‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்ற பாடலில் ஈற்றுச்சீர் ஓர் எழுத்தாக இருப்பினும் அது தனித்து ’தருதல்’ ஒரு பொருளைச் சொல்கிறது. எனவே இதை ஓர் எழுத்தாகக் கொள்வதை விட, ஒரு சொல்லாகக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல் கோ, நீ, போ...See More
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Vasantha Kumar Raju Angappan இருங்க, ரூல்ஸை மாத்தாதீங்க, இதுமாதிரி தனிச்சு நிற்கற ஒரு சொல்லோடயாவது திருக்குறள் (அல்லது பழந்தமிழ்ப் பாடல் வேற) முடிஞ்சிருக்கான்னு முதல்ல கன்ஃபர்ம் செய்வோம்

Suresh Babu செம உதாரணம். If no other (older) songs exist, ஔவையார் ஆசிர்வாதத்தோட இதைத் தொடரலாம்
about an hour ago · Unlike · 2

Suresh Babu வசந்தகுமாருடன் ஒத்துப்போகிறேன். கடைசி வார்த்தை தனிப்பொருள் தருமாயின் சரி. சும்மா நம்ம டெண்ட்டிங்குக்காக ஒரு வார்த்தையைப் பிரிச்சு விட்டு தளைதட்டலைன்னு சொல்றது போங்காட்டம்.
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Suresh Babu இதென்ன கூத்து? ’திண்மைஉண் டாகப் பெறின்’னு திருவள்ளுவர் ஒரே வார்த்தையைப் பிரிக்கலையா? வார்த்தையை எப்படிப் பிரித்தாலும் தளை தட்டாதவரை சரி என்றுதான் எனக்குப் பாடம்
about an hour ago · Like

Naga Chokkanathan Suresh Babu ’மழலைச்சொல் கேளா தவர்’ன்னு திருவள்ளுவர் எழுதறதும் போங்காட்டமா?
about an hour ago · Like · 1

Suresh Babu நடுவில பிரிக்கறது ஓக்கே.. கடைசி வார்த்தை (மாடிஃபைட்) - மாடல்ல மற்றையும வைன்னு வச்சா போங்கில்லையா?
about an hour ago · Unlike · 1

Naga Chokkanathan Suresh Babu அதுவும் போங்கில்லைன்னுதான் நான் நினைக்கறேன், Hari Krishnan அண்ணா தீர்ப்பு சொல்லட்டும்
about an hour ago · Unlike · 1

Vasantha Kumar Raju Angappan கிளையில் கிளைத்த மற்றொரு கிளை ஐயம்.

’மாடல்ல மற்றையும வை’ என்ற ஈற்றடியில் வை என்பது தனிச் சொல்லாகவும் கருதப்படலாம். (வைத்தல்!). ஆனால், இங்கு வை தனித்து இயங்கும் ஆற்றல் அற்றது. ’மற்றையும’ சொல்லை நிறைவு செய்ய வருவது. அதே சமயம் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ வில் தா முன் சொல்லுக்கு எவ்வகையிலும் தேவைப்படாத ஒன்று.
about an hour ago · Edited · Like · 1

Kannan Rajagopalan ஒற்றைச் சொல் வரலாம் நாகாஸ்.. நெய்யொழுகு வெண்பொங்கல் தா..
about an hour ago · Like

Naga Chokkanathan Kannan Rajagopalan அதெல்லாம் ரொம்ப மாடர்ன் வெண்பா கண்ணன்
about an hour ago · Like

Kannan Rajagopalan .http://www.tamilbrahmins.com/... இந்த லிங்க்ல சில ஒற்றைச் சொல் வருது.. ஆனா பழசு இல்லை..
கவிதையில் யாப்பு - Page 6
www.tamilbrahmins.com
4.7.4.10. எதுகை மோனை அடிநிலைக் கĬ
about an hour ago · Like

Hari Krishnan சொக்கன் சொல்வது யாப்பிலக்கண விதிப்படி மிகமிகமிகமிகமிகமிகமிகமிகச் சரி.. ஒரு சொல்லை இப்படி சீர்களுக்குத் தக பிரிப்பதற்கு வகையுளி என்று பெயர். போங்காட்டம் எல்லாம் இல்ல. எதுக்கும் கொஞ்சம் எலக்கணப் புஸ்தகத்தப் பொரட்டிப் பாத்துடுங்க.
about an hour ago · Like · 2

Sundar Lakshmanan நாள் மலர் என்பது நேர் நிரை என்ற பொதுவிலக்கணத்தில் இருந்து சிறப்பித்தது அதற்காகத்தான் என நினைக்கிறேன், சொக்கன். சான்று கிடைத்ததும் பகிர்கிறேன்.
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Hari Krishnan நன்றி அண்ணா முதல் கேள்விக்கும் இதுவே பதிலாக எடுத்துக்கொள்ளலாமா? வெண்பா ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்து இருக்கலாமா? அது ‘நாள்’ வாய்பாடு என ஏற்றுக்கொள்ளப்படுமா? திருக்குறளில் அப்படி உள்ளதா?
about an hour ago · Unlike · 1

Naga Chokkanathan திருக்குறளை வைத்துச் சில நூறு தலைப்புகளில் சொல் ஆராய்ச்சி செய்யலாம்போல!
about an hour ago · Like

Hari Krishnan நாள் மலர் காசு பிறப்பு என்பது வெண்பாவின் ஈற்றுச் சீருக்கான வகைகள். பாவுக்கு வேறிடங்களில் இருந்தால் தேமா புளிமா எட்செட்ரா. வெண்பாவின் ஈற்றுச் சீராக நான்கு வகைதான் வரமுடியும். நேர், நிரை, நேர்நேர், நிரைநேர். இதைத்தான் நாள் மலர் காசு பிறப்பு என்று சொல்கிறோம். (நாள், மலர், காசு, பிறப்பு என்ற சொற்களை அலகிட்டுப் பாருங்க. அதே நேர், நிரை, நேர்நேர், நிரைநேர் வரும்... மற்ற எல்லா வாய்பாடுகளுக்கும் இது பொருந்தும். தேமா தொடங்கி, கருவிளநறுநிழல் வரைக்கும்.)
57 minutes ago · Like · 2

Hari Krishnan சொக்கன்: தனி எழுத்தாக வெண்பாவின் ஈற்றுச் சீர் வரலாம். தனிக்குறில் வரக்கூடாது என்பார்கள். வந்திடுக வே. இது ரைட். குறில் வரக்கூடாதுங்கறது ஒரு கட்சி. ஆனா காளமேகம் வெண்பாக்கள்ள, குக்லிச்சி குங்கலைச்சிக் கு... குடத்திலே கங்கையடங் கும்... என்றெல்லாம் தனிக்குறில் ஈற்றுச்சீர்களைப் பார்க்கலாம்.
51 minutes ago · Like · 3

Sundar Lakshmanan சே, எங்க கட்டுரையிலும் மலருக்கு ஒற்று கட்டாயம் வருமாறு எழுதியிருந்தாலும் சோம்பற்பட்டு நாளுக்குப் பதில் நேரையே பயன்படுத்தியிருக்கிறோம் என இப்போதான் பார்க்கிறேன்.

http://www.persee.fr/web/revues/home/prescript/article/befeo_0336-1519_1988_num_77_1_1744
MetricalTextParser TI2010 Paper
www.scribd.com
Scribd is the world's largest social reading and publishing site.
51 minutes ago · Like

Naga Chokkanathan Sundar Lakshmanan மரபுப்பா எழுத / பிழை திருத்த உதவும் மென்பொருள் ஒன்று வந்தால் நன்றாக இருக்கும், வெண்பாவில் தொடங்கலாம்.

I am visualizing something like:

* Write the VeNpa
* Show wrong usages in a different color
* Click on the error
* Know why it is wrong
* Correct
* Error vanishes
* Continue until whole poem is done
49 minutes ago · Like · 1

Naga Chokkanathan Hari Krishnan நன்றி அண்ணா. பாக்களுக்கும் history timeline உண்டா? எது முதல், எது பிறகு என்று?
48 minutes ago · Like

Hari Krishnan சங்கத் தமிழ்மூன்றும் தா. ஈற்றுச் சீர் தனி நெடில். ஆட்சேபணையே இல்ல. தனிக்குறிலுக்குதான் சில பண்டிதர்கள் ஆட்சேபிப்பார்கள். அதற்கும் அடிப்படை இல்லைங்கறதுக்குதான் காளமேகத்தின் எடுத்துக் காட்டு. நளவெண்பாவைக் கொஞ்சம் பொரட்டிப் பாருங்க... ஈற்றடிகளை மட்டுமாவது கவனிச்சிட்டு வாங்க.
47 minutes ago · Like

Naga Chokkanathan Hari Krishnan //நள வெண்பா// இந்தக் கோணத்தில் வாசித்ததில்லை, திருக்குறளையே நம்பி இருந்துவிட்டேன்
46 minutes ago · Like

Sundar Lakshmanan Naga Chokkanathan, we built such a web parser and hosted it at visaineri.net for some time. Couldn't sustain it. The code is still available if someone wants to host that. CC: Ishwar, Kishore, Sanjeeth
33 minutes ago · Edited · Like

Naga Chokkanathan Sundar Lakshmanan What is the technology? We can ask around who can host it, Can I try it in my localhost?
44 minutes ago · Like

Sundar Lakshmanan http://www.persee.fr/.../befeo_0336-1519_1988_num_77_1_1744 is the authority in modern times, but that's also silent on the otru part. நான் என் தமிழம்மாவிடம் எழுதி வாங்கிய விதிமுறைகளையும் பார்க்கிறேன். பச்சை அரங்க நக்கீரன் போன்றோர் கேட்டுச் சொல்லலாம்.
Persée
legacy.persee.fr
43 minutes ago · Like

Hari Krishnan சொக்கன்: கிடைத்திருப்பதிலேயே மிகப் பழைய வெண்பாக்கள், முத்தொள்ளாயிரம்.
43 minutes ago · Like · 2

Sundar Lakshmanan Naga Chokkanathan, the latest version is Python. You can try the code at https://github.com/thamizha/visaineri Later when you publicly host, we'll share you proper attribution text to put on the site.
visaineri
github.com
visaineri - "Visaineri" is created on the basis of rules governing the tamil grammar. When a Verse is entered, it is parsed with grammar rules which we have specified in Backus-Naur format and if succeeds, the Verse will be displayed with its constituents like Character, Syllable, Word, Line, etc......
32 minutes ago · Edited · Like

Naga Chokkanathan ஆஹா, முத்தொள்ளாயிரத்தில் ஈற்றுச்சீராக தனி எழுத்து உள்ளது:

வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை
40 minutes ago · Edited · Unlike · 2

Naga Chokkanathan முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு ஈற்றுச்சீர் தனி எழுத்து உதாரணம்:

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ!
40 minutes ago · Edited · Like · 1

Sundar Lakshmanan நன்றி Hari Krishnan.
40 minutes ago · Like

Vasantha Kumar Raju Angappan அந்த ஈற்றுச் சொல் தனித்துப் பொருள் தர வேண்டிய கட்டாயம் உள்ளதா, இல்லையா..?
40 minutes ago · Like

Naga Chokkanathan இந்த இரண்டு உதாரணங்கள்தான், வேறு இல்லை. ஆக, ஒரு பிரச்னை தீர்ந்தது, மிகப் பழமையான வெண்பா நூலிலேயே ஈற்றுச் சீராக தனி எழுத்து வந்துள்ளது, நம் எழுத்திலும் வரலாம்

Hari Krishnan நன்றி அண்ணா!

இந்த இரண்டு தனி எழுத்துகளும் (கை, கோ) தனிப்பொருள் தருகின்றன. அப்படி இல்லாதபடி சொற்களை தனி எழுத்துச் சீராகப் பிரிக்கலாமா என்பது வேறு பஞ்சாயத்து. வெண்பா இலக்கணப்படி தனிப்பொருள் இல்லாமல் சொற்களைப் பிரிக்கலாம் என்பதால் அதுவும் ஓகே என எண்ணுகிறேன்.

”மடி”யாக எழுத விரும்புவோர், தனி எழுத்து தனியே பொருள் தந்தால்மட்டும் அதனை ஈற்றுச் சீராகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
36 minutes ago · Unlike · 2

Naga Chokkanathan Will check Sundar Lakshmanan
34 minutes ago · Like · 1

Naga Chokkanathan நண்பர்காள்,

யாரேனும் இந்த விவாதத்தைத் தொகுத்துத் தங்கள் Blogல் சேர்த்தால் நல்லது, நிரந்தரமாக கூகுள் சர்ச்சில் எவர்க்கும், எப்போதும் கிடைக்கும்.
31 minutes ago · Like · 2

Hari Krishnan <<அந்த ஈற்றுச் சொல் தனித்துப் பொருள் தர வேண்டிய கட்டாயம் உள்ளதா, இல்லையா..>> இல்லை என்பதுதான் பதில். குறள், நாலடியார், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் என்று எதை வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள். ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் கிடைக்கும். காளமேகப் பாடல் ஒன்றின் ஈற்றடியை மேலே கொடுத்திருந்தேன்--குக்கலிச் சிங்கலைச்சிக் கு. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: தீரம்உள்ள சூரிக்கத் தி. கு, தி.. எல்லாத்துக்கும் தனியா பொருள் இருக்கா?
25 minutes ago · Like · 1

Hari Krishnan நன்றியா? கணக்கில்ல தம்பிசொக் கா.
23 minutes ago · Like · 1

Pugazhenthi K. Saidai மிக அருமையான விவாதம், தமிழ் இனி மெல்ல வளருமோ? இல்லையில்லை வளர்கிறதோ? அனைவருக்கும் நன்றி. மொழி ஆர்வம் என்பது இதுவன்றி வேறொன்றுமில்லை.
9 minutes ago · Like

Vasantha Kumar Raju Angappan நன்றிகள் Natarajan Srinivasan Naga Chokkanathan Hari Krishnan
about a minute ago · Like

Wednesday, July 10, 2013

மொக்ஸ். - 10.July.2013

ஹைதராபாத்துக்கு வந்து இன்றோடு ஒன்பது மாதங்கள் நிறைகின்றன. தங்கியிருக்கும் ‘மாதாப்பூர்’ என்ற ப்ரதேசத்தைப் பற்றிக் கொஞ்சம்.

சோம்பி வழிந்து கொண்டிருக்கும் முகப்பை விக்ரம் ஹாஸ்பிடல்காரர்கள் மாற்றி அமைத்துள்ளார்கள். ரிசப்ஷனை உள்ளே தள்ளி வைத்து குளு குளு பண்ணி, அட்டோமேடிக் கண்ணாடி கதவு வைத்து, எதிர்ப்புறம் காலி மனையை பார்க்கிங் ஆக்கியுள்ளனர். பாலீஷ் அடித்து சுவர்களைப் பளிங்காக்கிப் புது டிசைனில் போர்ட் வைத்து விட்டார்கள். மென்மையாக விளக்கு ஒளீர்கிறது. நீலச் சீருடை செக்யூரிட்டி சுவரோரமாக அமர்ந்து டிபன் பாக்ஸை உண்கிறார். பக்கத்தில் மனைவி.

சாலை மீடியனில் கோலங்கள் தீட்டிய மட்பாண்டங்களில் சின்னச் சின்ன செடிகளும், செயற்கை புல் விரிப்புகளூம் இருந்தன; காலை ஆறு மணிக்கு லாரி வாலில் நீர்ச் சிதறல்கள் அவற்றைக் குளிப்பாட்டும். இப்போது மெட்ரோ வருவதாக, குழி தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். வளைவில் ஒரே ஒரு கேரளா ஹோட்டல் இருந்தது. கட்டுப்படியாகவில்லையோ என்னவோ அது காலி செய்யப்பட்டு ஒரு பஞ்சாபி தாபா வந்திருக்கின்றது. HITECH ஒயின்ஸில் கூட்டம் அம்முகின்றது. பின்புறச் சந்துக்குள் போனால் சிகப்பாய் ஒரு சின்ன அம்மன் கோயில்.

கீழ்த்தளத்தில் உடுப்பி உணவகத்தில் சிங்கிள் தோஸா 25ரூபாய். மேலே அகர்வால் ஸ்வீட்ஸ். அங்கே எலெக்ட்ரிக் ஈக்கொல்லியின் ’ச்சிர்க்...ச்சிர்க்...’ ஒலிகளுக்கு இடையே வறு முந்திரி கிலோ 360ரூக்கு விற்கிறார்கள். வாசலிலே பானி பூரி வகையறாக்கள். சாலையை ஒட்டிச் சின்னக் கூடாரத்திற்குள் ஃபலூடா 40ரூ. எதிரே bawarchi. நிஜமான ஹைதராபாத் பிரியாணி நாங்கள் தருகிறோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.

ஸேவிங்ஸ் அக்கவுண்ட் ஆசாமிகளுக்கு ஆண்டுக்கு 100 ரூபாய் ப்ரீமியத்தில் விபத்து பாலிசி 4 லட்சம் வரைக்கும் என்று அறிவிக்கும் எஸ்.பி.ஐ.யின் நீல போர்டுக்குக் கீழே படர்ந்த படிக்கட்டுகளில் ஆறு மணிக்கு மேல் பையன்களும் பிள்ளைகளும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..... ஜிம் ஒன்று மூடிய திரைகளுக்குள் வேர்வையர்கள் ஏ.ஸி. குளிரில் நடக்கிறார்கள். வெளியே மைசூர் போண்டாவும், மசாலா தோசையும் ஆவி கிளம்ப ருசிக்கிறார்கள். கிராமத்தார் போல தோன்றிய ஆள் வாசமான வேர்க்கடலை 100 கிராம் 10ரூக்குத் தருகிறார்.

ஒரு தரைக்கீழ்த் தளத்தில் CHINA BAZAAR. கல்லாவில் ஒரு முஸ்லீம் தாத்தா. 10, dalhousie என்ற வங்காள ஹோட்டல் தொடரின் ஒரு கிளை முதல் தளத்தில் இருக்கின்றது. ராத்திரியிலும் சூடான வெள்ளை அரிசி மேல் மிகச் சூடான மீன் குழம்பு ஊற்றுகிறார்கள்.

ஏ.டி.எம்.கள் எந்நேரமும் ஒளிர்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் முடிந்த வரை அமர முடிந்தவரையெல்லாம் ஏற்றிக் கொண்டு பறக்கின்றன. அந்த செருப்பு தைப்பவரின் சாக்கு மூலையில் ட்ராஃபிக் காவலரைக் கண்டால் மட்டும் முன் வரிசையில் அமர்ந்திருப்பவரை இறக்கி விட்டு, தாண்டியவுடன் ஏற்றிக் கொள்கிறார்கள். சர்வீஸ் ரோடு இல்லாத குறையை வலது புறமாகவே ஓட்டித் தீர்க்கிறார்கள். சில சமயம் திக்கென்கிறது. weigh bridge-ல் லாரிகள் அர்த்த ஜாமத்தில் வந்து எடை பார்த்துச் செல்கின்றன.

மே இறுதி வரை வெளுத்துக் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் ஜூன் பிறந்ததும் காணாமல் போய், தாமரை மொட்டுக்கள் போன்ற முகில்கள் தலைக்கு மேலே தவழ்கின்றன. மைண்ட்ஸ்பேசின் பின் கதவைத் திறந்து விட்டதில், இரண்டு பெட்டிக் கடைகள் உடனே முளைத்து சிகரெட் மற்றும் ஃப்ளாஸ்க்கில் டீ கொடுக்கிறார்கள். எல்லை தெரியாத பின்புறம் சாணி ஒட்டிய இரண்டு எருமைகள் செயற்கைப் புல்வெளிகளை சுவைத்து மகிழ்வதற்குள் எஃப்.எம்.களில் ஹிந்தியும் தெலுங்கும் பாடல்களும் பேச்சுகளும் கேட்டுக் கொண்டிருக்கும் தொப்பை செக்யூரிட்டிகளால் விரட்டப்பட்டன.

கிட்டத்தட்ட 1000 கிமீ தள்ளி இருந்தாலும் ‘இதுவும் நம் ஊர் தான்’ என்று ஆசுவாசப்படுத்துபவை இரண்டு. சைபர் டவர்ஸ் அருகில் இருக்கும் பெருமாள் கோயில் மற்றும் தெருவெல்லாம் திரியும் நாய்கள். இரவு பதினோரு மணிக்கு மேல் அவற்றின் ராஜாங்கத்தில் கால் வரை முகர்ந்து பார்ப்பதன் நோக்கத்தைச் சந்தேகிக்காமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

தூக்கம் வராத நேரத்தில் ரிமோட்டை மாற்றுகையில் வர்ணக் கோலாகலமான Colors, Life Ok போன்ற சானல்களைப் பார்த்திருக்கிறீர்களா..? அவற்றில் வருகின்ற ராமாயணத்தில் ஏன் ராமன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார்? சிக்ஸ் பேக் சிவன்..? அதீத அலங்கார சீதா..?

All her life, Mrs Foster had had an almost pathological fear of missing a train, a plane, a boat, or even a theatre curtain. In other respects, she was not a particularly nervous woman, but the mere thought of being late on occasions like these would throw her into such a state of nerves that she would begin to twitch.

சமீபத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘the completed short stories collection of roald dahl' என்ற நூலிலிருந்த ஒரு சிறுகதையின் துவக்கம் இது.

ம் காதுகள் கேட்கும் ஒலியின் அதிர்வெண் அகலம் என்பது 20 ஹெர்ட்ஸிலிருந்து 20கிஹெர்ட்ஸ் வரை என்பதை எட்டாம் வகுப்பில் ஒரு மதிப்பெண் விடையாகப் படித்திருப்போம். நைகிஸ்ட் என்பவர் ஆராய்ந்து சொன்னது ஓர் ஒலி அலையை டிஜிட்டலாக மாற்றி மீண்டும் அதை (கிட்டத்தட்ட!) அதே ஒலியாகக் கேட்க வேண்டுமெனில், அந்த ஒலி அலையின் அதிகபட்சமான அதிர்வெண்ணுக்கு இரண்டு மடங்கான அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றார். அதாவது நம் பேச்சில் இருக்கும் அலைகளில் அதிகபட்ச அதிர்வெண் 4கிஹெர்ட்ஸ். எனவே அதை டிஜிட்டலாக மாற்ற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 8கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 8000 மாதிரிகள்) அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி.

நம்மால் கேட்க முடிவதே அதிகபட்சம் 20கிஹெர்ட்ஸ் தான் என்னும் போது, அதிக பட்சமாக 40கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 40000 ஒலி மாதிரிகள்) எடுத்தாலே போதும் எனும் போது, ஏன் DTS போன்ற அல்காரிதம்களில் 192கிஹெர்ட்ஸ் வரைக்கும் செல்கிறார்கள்?

ஏனெனில் அதிகமாக மாதிரிகள் எடுக்க எடுக்க ஒலித் துல்லியம் அதிகரிக்கின்றது. ஆனால் அதிகமாக எடுத்தால் அதைச் சேமிக்க நினைவக அளவு அதிகம் தேவைப்படும். குறைவாக எடுத்தால் ஒலியின் துல்லியம் பாதிக்கப்படும். என்ன செய்வது? Trade Off. நினைவக அளவும் அதிகம் தேவைப்படாமல், கேட்கும் ஒலியின் துல்லியமும் ரொம்பவும் அடிபடாமல் ஒரு சமநிலையில் தான் வேலை செய்யப்படுகின்றது.

’சமரசம் உலாவும் இடம்’ என்பது சயின்ஸிலும் கூடத் தான்!

Monday, July 01, 2013

ஏக்கர் நிலம் வேண்டும்.


க்கர் நிலம் வேண்டும் - சக்தி
ஏக்கர் நிலம் வேண்டும் - அங்கு
பாக்குத் தோட்டமும் கயல்
பாயும் குளிர்ச் சுனையும்
தேக்குத் தூண்களில் மாளிகை
தெள்ளிய நீர்க் கேணியும்
பூக்கும் ஆயிரம் பூக்களும்
பூமி மேலெலாம் பச்சையும்

ஆற்றங் கரையிலே வாயிலும்
ஆடிக் களித்திட ஓடமும்
போற்றி வாழ்த்திடப் பெண்டிரும்
போரை வென்றிட நண்பரும் - பூச்
சாற்றிக் கும்பிட சாமியும் - பால்
சாறு தந்திட ஆக்களும் - கொடும்
கூற்றம் வாரா வேலியும் - நல்
கூறல் கேட்கும் மக்களும்

மாடி மேலெழு சந்திரிகை
மாதம் முழுவதும் பறவைகள்
கூடி வாழ்ந்திடக் கூரையில்
கூவி அமைத்த அறைகளும்
ஓடி ஆடிட ஆற்றலும்
ஓய்வில் அருந்திட தென்னையும்
ஏடி உன்னைக் கேட்கிறேன்
எனக்குத் தருவ தெப்போது?

#பாரதியாருக்கு நன்றியுடன்.

(Pic Courtesy : flickr.com )

Wednesday, June 05, 2013

விளிம்பெல்லாம் வளையல்கள்.



னிக்கிழமை மதியம் மெஸ்ஸில் உண்டு கொண்டிருந்த போது சட்டென “நாளைக்கு எங்காவது வெளியே போகலாமா?” என்று அறை நண்பனைக் கேட்டேன். பருப்பில் இருந்து தலை நீட்டியவன் “நாளைக்கென்ன நாளை, இன்னிக்கே போலாமே?” என்றான். தீர்ந்தது. ஹைதைக்கு வந்து இன்னும் சார்மினார் பார்க்கவில்லை. வாழ்நாளில் ஒருதரம் கூட இங்கே வராதவர்கள் எல்லாம் சார்மினாரை பாக்கெட் பாக்கெட்டாகக் கொளுத்தும் போது அவ்வப்போதைய வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரிஜினல் சார்மினாரைப் பார்க்காதது நரகத்தில் நா வறளும் சோகத்தைக் கொடுத்தது. உடனே கை கழுவி விட்டு எழுந்தோட....முடியாமல் இரண்டு விஷயங்கள் தடுத்தன. அ. உணவு. ஆ. கிரிக்கெட்.

சாம்பியன்ஸ் ட்ராபியின் முதல் சூடுபடுத்திக் கொள்ளும் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அன்று மதியம். சஞ்சய் ‘வானம் வெளுப்பாக இருக்கிறது; நேற்று மழை வந்தது; இன்று வெயில். sunny climate..' என்றெல்லாம் மைக்கை நனைத்துக் கொண்டிருந்தார். டாம் மூடி தன் பலமான ஆகிருதியுடன் காமிரா முன் வந்து மற்றுமொரு பலமான ஆகிருதியில் சிரித்தார். மைதானத்தில் பச்சை. வரிசைகளில் ரிலாக்ஸான வெள்ளையர்கள். மூவர்ணக் கொடியை முண்டாசாக்கி நம்மாட்கள் சிலரும் கையசைத்தனர். சிங்வாலாக்கள். டாஸ் வென்ற தோனி பவுலிங் என்றார், மெனக்கெட்டுப் போட்டுக் கொண்டு வந்த கோட்டைக் கழற்றி அம்பயரிடம் கொடுத்து விட்டு இர்பான் முதல் ஓவரைத் துவக்கினார். அண்டை நாட்டவர்களைத் தொலை தூரத் தேசத்தில் அம்போவென்று விட்டு விட்டுத் தொலைக்காட்சியை அணைத்தேன்.

மூன்றரை மணிக்கு மாதாப்பூர் பெட்ரோல் பங்க் பேருந்து நிறுத்தத்தில் நின்றோம். வழக்கமாக மே விடை பெற்றுப் போகும் போது அடம் பிடிக்கும் குழந்தையைத் தாய் போல் வெயிலையும் தரதரவென இழுத்துச் சென்று விடும். இங்கு இன்னும் சரிவரப் போகவில்லை. வெயில் காயவில்லை ஆனாலும் ஓயவில்லை, இங்கிருந்து சார்மினாருக்கு நேர்ப் பேருந்துகள் இல்லை. இருக்கும் மாற்று வழிகளில் இலகுவான வழி செகந்திராபாத் சென்று அங்கு பஸ் மாறுவது. மூர் விதிப்படி கோட்டிக்குச் செல்லும் பேருந்துகளே (127K) வந்தன. கால் மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் ’இன்னும் மூன்று பஸ்கள் பார்ப்பது; செக்.குக்கு வராவிட்டால் இங்கிலாந்துக்குப் போய் விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்ய, மூன்றாவது பேருந்து 10H.

ஒரு நாள் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டேன். 60ரூ. ஸெகந்திராபாத் இங்கிருந்து ஒன்றேகால் முதல் ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது. பெத்தம்மா கோயில், பஞ்சாரா ஹில்ஸ் செக் போஸ்ட், அமீர்பேட் வந்தது. அமீர்பேட்டை என்பது இன்று முழுக்க முழுக்க கணிணித் தொழில்நுட்ப கோர்ஸ்களுக்கான கற்பித்தல் மையங்களால் நிரம்பியுள்ளது. சுவர்களில் கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தரைகளில் பிட் நோட்டீஸ்கள். விதவிதமான ஆங்கில எழுத்துக்களின் கூட்டுகளில் பலவர்ண போர்டுகள். விலகி சர்தார் படேல் சாலையில் மேம்பாலங்கள் அரை ஸைன் அலை போல் எழும்பி அடங்கி எழும்பி அடங்கிய போது ஸெக் வந்திருந்தது.

செகந்திராபாத் இரயில்வே நிலையத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். ஓரமாய் வெட்கப்பட்டு நிற்பது போன்று ஒரு சுவரோரம் 8A காலியாகக் காத்திருந்தது. அஃப்ஸல் கஞ்ச் செல்லும் பேருந்து. ஏறி அமர்ந்து கொண்டோம். வெயிலில் ஒரு சதுரக் கண்ணாடிக் குவளையைப் போல் மினுங்கியது. சுமாராய்க் கூட்டம் சேர்ந்த பின் எங்கிருந்தோ முளைத்த ஓட்டு மற்றும் நடத்துனர்கள் 8A -வை நெரிசலிலிருந்து இன்னும் அதிக நெரிசலுக்கு நகர்த்தினர். பெயர் அறியாத நிறுத்தங்கள் ரஸ்தாக்கள் வழியாகச் சென்று கொண்டேயிருந்தோம். ஹுஸைன் சாகர் ஏரிக் கரை வந்தது. செய்த மேனிக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் புத்தர் நடு ஏரியில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் படகுகள் விர் விர்ரென்று கரைக்கும் புத்தர் காலுக்கும் இடையே விரைந்தன. கொஞ்சம் கிடைத்த இடத்தில் பையன்கள் நீரில் மறையும் கதிரின் தங்கக் கரைசலில் மூழ்கி எழுந்தனர். சுற்றிக் கொண்டு ஒரே சமயத்தில் சந்துகள் போலவும் சாலைகள் போலவும் தோற்றமளிக்கும் பாதைகள் வழியாகச் சென்றோம். நிறைய வேகத் தடைகள். முழுக்கவே இஸ்லாமியர் ஏரியா. கறிக்கடைகள். மோட்டார் சரி பார்ப்பிக் கடைகள். மரச் சாமான்கள். மசூதி. அசைந்து கொண்டிருக்கும் கண்ணாடிச் சரங்கள். பர்தா பெண்கள்.

அஃப்ஸல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். இடது பக்கம் சார்மினார். சார் என்றால் இந்தியில் நான்கு, மினார் என்றால் தூண். (குதுப்மினார்? குதுப்ஷா மன்னர்களால் கட்டப்பட்ட தூண்) நான்கு தூண்களைக் கட்டி இணைத்து மேலே தொழுகை செய்யும் இடமும் உள்ளது. அருகே போன போது தான் தெரிந்தது. மேலே ஏறிச் சென்று பார்க்க நேரம் கடந்து விட்டது. மாலை ஐந்து மணி வரை தானாம். நாங்கள் வந்து சேர்ந்தது ஐந்தரைக்கு. ‘பரவாயில்லை’ (வேறு என்ன சொல்வது?) என்று சுற்றி வந்து செல்லில் படங்கள் சேர்த்துக் கொண்டேன். தூணை ஒட்டியே ஒரு அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காவலுக்கு நாலு காக்கியர். குண்டு பரிசோதனைக்குக் கருவி. சமீபத்திய குண்டு வெடிப்பிற்குப் பின் இன்னும் பலமான ரோந்து.

நீர்த்தாரை வழிந்து ஓடு வழியின் கரைகளில் ஓதம் படர்ந்திருப்பது போல, சாலையின் விளிம்புகளில் தள்ளு வண்டிகளில் வளையல்கள் சரம் சரமாய்த் தொங்கின. ப்ளாஸ்டிக் குறும்பெட்டிகளில் கவரிங் நகைகள். பின்னலுக்கு வைக்கும் பின்னிலிருந்து நங்கையருக்குத் தேவையான அனைத்தும் இங்கே சல்லிய விலையில் கிடைக்கின்றன, பேரம் பேசத் தெரிந்தால். எடுத்த எடுப்பிலேயே இமயத்தில் சென்று அமர்கின்ற கடைக்காரர்களை இழுத்துக் கொண்டே வந்து தரையில் அமுக்கத் தெரிந்தால், இந்த சாலையில் மட்டும் அல்ல எந்த சாலையிலும் நீங்கள் பணம் மிச்சப்படுத்தலாம்.

உள்ளே பிரிந்து செல்லும் சந்துகளில் அதே நகைகளைக் குண்டு பல்பின் மஞ்சள் பூச்சின் கீழ் வைத்து முலாமடித்து நிலவுக்குச் சென்று அமர்ந்து விற்கிறார்கள். சேலைக் கடைகளில் மீப் பெரும்பாலும் ஜிலுஜிலு புடவைகளே உள்ளன. எம்ப்ராய்டரி செய்தவை, ஜரிகை நெய்தவை, கல் வைத்தவை, கண்ணாடி தைத்தவை போன்ற கோஷ்டிகளுக்கு நடுவே ’ப்ளைன் ஸாரி’ என்று கேட்டால் ’நோ’ என்கிறார்கள். வாசனைச் சாம்பிராணிகள், நாவற்பழ சைஸ் பாட்டில்களில் அத்தர், மல்லிகை மற்றும் செயற்கை மணங்கள் சிற்சில கடைகளில் விற்க உள்ளன. வகைக்கு ஒன்றாக எடுத்து கைகளில் தடவிக் கொண்டு நகர்ந்தேன்.

இரவு கவிழத் தொடங்க, ஜெனரேட்டர் பல்புகளில் விற்பனை ஜொலித்தது. ஹோட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள் எல்லாம் தயாராயின. மீண்டு அஃப்சல் கஞ்ச் பேருந்து நிலையத்திலேயே 8A பிடித்து ஸெகந்திராபாத் வந்தோம். அங்கேயே ஒரு குட்டி ஹோட்டலில் இட்லிகளை எடுத்துக் கொண்டு மாதாப்பூருக்குத் திரும்பும் போது ராத்திரி பத்தரை. வந்தது நித்திரை.

Friday, May 24, 2013

தமிழ் - இனமா, மொழியா?

மீபத்தில் தமிழ் மாநிலமெங்கும் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு கேட்டார். தமிழ் என்பது மொழியா, இனமா? அப்போதைக்கு ‘தமிழ் என்பது ஓர் இனத்தின் மொழி’ என்று பதில் கூறினேன். பின்பு சிந்தித்துப் பார்க்கையில் இவ்வாறு எளிமையாக முடிக்கக் கூடிய கேள்வியாக அது தோன்றவில்லை.

முதலில் இவ்விரு சொற்களின் வரையறையைப் பார்ப்போம்.

Race is a classification system used to categorize humans into large and distinct populations or groups by anatomical, cultural, ethnic, genetic, geographical, historical, linguistic, religious, or social affiliation. (wikipedia)

உடற்கூறு, கலாச்சார, மரபு, புவியியல், வரலாற்றியல், மொழி, மதம் மற்றும் சமூக வாழ்வியல் ஆகிய கூறுகளின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் ஒரு அமைப்பு முறையே இனம் எனப்படுகிறது. (ethnic என்றால் இனம் தானே?)

Language is the human capacity for acquiring and using complex systems of communication, and a language is any specific example of such a system. (wikipedia).

பொதுவாக மனிதர்கள் தமக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று மொழி எனலாம். (ஓரளவான மொழிபெயர்ப்பு)

நாம் தற்போது ‘தமிழினம்’ என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது சரியாக எதை அல்லது எவரைக் குறிக்கின்றது?

1. தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றவர் (பேச மற்றும் எழுத மற்றும் படிக்க) தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. மேற்கண்ட பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்று செய்ய இயலாதவர் தமிழர் அல்லரா? உதாரணமாகப் பேச மற்றும் படிக்கத் தெரிந்து ஆனால் எழுதத் தெரியாதவர்.

ஆ. ஒருவர் மேற்கண்ட பயன்பாடுகளைச் செய்யத் தெரிந்தவர் என்று எந்த அளவுகோலைக் கொண்டு முடிவு செய்வது? உதாரணமாக ஆயிரம் சொற்கள் பேசத் தெரிந்தால் போதும் போன்று.

இ. தமிழ் மொழியில் பல வட்டார மொழிகள் உள்ளன. நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், ஆற்காட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், எழுத்து நடைத் தமிழ் போன்றன. இவற்றுள் எந்த மொழியைப் பேசுபவர் எல்லாம் தமிழர்? வட்டார மொழிகள் மட்டும் பேசத் தெரிந்த எழுத்து நடைத் தமிழ் தெரியாத மக்கள் தமிழர் ஆவரா, மாட்டாரா?

ஈ. தாம் பிறந்த சாதி மற்றும் செய்கின்ற தொழிலைப் பொறுத்துத் தமக்குள் தனிப்பட்ட தமிழ் மொழியைப் பல தலைமுறைகளாகப் புழங்கிக் கொண்டு வரும் மக்களை எவ்வாறு வகைப்படுத்துவது? உதாரணமாக பிராமணர் மற்றும் மீனவர்கள்.

உ. தமிழே இல்லாத மொழிகளைப் பேசுகின்ற பழங்குடியினர், நரிக்குறவர்கள் என்ன ஆவார்கள்?


2. தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பு 1956-ல் ஏற்படுத்தப்பட்டது. அப்பகுப்பின் காரணமாக வேறு மாநில எல்லைக்குள் சென்று விட்ட, தமிழ் பேசுகின்றவர் தமிழர் ஆக மாட்டாரா?

ஆ. வரலாற்றின் வழியே பல காலகட்டங்களில் இன்றைய தமிழ்நாட்டின் பல நிலங்கள் வேறு மொழி பேசுபவரின் ஆளுகையின் கீழ் இருந்து வந்துள்ளன. எனவே தற்போதைய அரசியல் நில எல்லைகளைக் கொண்டு அவற்றின் கீழ் வருபவர் மட்டும் தமிழர் என்று சொல்லலாமா? உதாரணமாகக் குமரி மாவட்டம், முதலில் கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டுப் பின் பல போராட்டங்களின் பின் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அம்மாவட்டம் கேரளத்துடன் இருந்த காலத்தில் ‘தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் மட்டுமே தமிழர்’ என்று வரையருக்கப்பட்டிருந்தால், குமரி மக்கள் தமிழர் ஆகியிருக்க மட்டார்கள் அல்லவா? இக்கோணத்தை இன்னும் நீட்டித்தால், ஒருவேளை இன்றைய தமிழ்நாட்டு அரசியல் எல்லை மாற்றி அமைக்கப்பட்டு, சில பகுதிகள் வேறு மாநிலம் என்று ஆனால், அவர்கள் தமிழினத்தார் என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்களா?

இ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பில் பிறந்து தற்போது உலகமெங்கும் பறந்து பரந்து வாழ்பவர் தமிழினத்தார் ஆவாரா மாட்டாரா?

ஈ. தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வெளிநாட்டுக் குழந்தை, தமிழ்நாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தமிழினத்தில் சேர்த்து கொள்ளப்படுமா?

உ. தமிழ்நாட்டில் வாழ்க்கை நடத்தும் வேறு மொழி பேசுபவர் தமிழினத்தார் ஆவாரா, மாட்டாரா?



3. தாய் மொழியாகத் தமிழைக் கொண்டவர் தமிழர், அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. ஒருவருடைய பெற்றோர் பேசும் மொழி தமிழ் என்றால் அவருடைய தாய்மொழி தமிழ் ஆகும். அதனாலேயே அவர் தமிழினம் ஆவாரா?

ஆ. பெற்றோர் தமிழ் மற்றும் வேறொரு மொழியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் எனில், குழந்தை தமிழினம் ஆகுமா?


4. பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்பவர் தமிழினத்தார்.

அ. பல தலைமுறை என்றால் எத்தனை?

ஆ. ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ஐந்து தலைமுறைக்கு முந்தைய முன்னோர் வரை வேறு மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள். காலப் போக்கில் தமிழ்நிலத்தில் வந்து பொருந்திக் கொண்டு தமிழ் பேசி வாழ்கிறார்கள். இவருக்கு இப்போது தமிழ் மட்டும் தான் தெரியும். இப்போது இவர் தமிழினம் ஆவாரா? நாளை இவருடைய முன்னோர் வாழ்ந்த பகுதிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் மோதல் வந்தால், இவர் யாருக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க வேண்டும்? (சமீபத்தில், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் வழங்கக் கூடாது என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தார் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்ப் பற்றே கிடையாதா என்று இவர்களைக் கடிந்து கொண்டார்கள் சிலர். தமிழ்நாட்டில் பிறந்து, வேறு மொழி பேசும் பகுதியில் வாழ்பவர்கள் எப்பகுதிக்குச் சாதகமாக நிற்க வேண்டும் என்பதை மாற்றுக் கோணத்தில் யோசிப்பது நல்லது.)

5. மொழி தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ’தமிழினம்’ என்று வரையறுக்கத் தேவை/ தேவையில்லை?

***

இது ஓர் அர்த்தமற்ற விவாதம் அல்ல. இன்றைய காலத்திற்குத் தேவையான ஒன்று. ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்ற கோட்பாடு உறுதி பெற்று வருகின்ற நேரத்தில் அக்கோட்பாட்டை முன்னிறுத்துவோர், யாரெல்லாம் தமிழர் என்ற வகைப்பாட்டில் வருவார் என்பதை வரையறுத்தாக வேண்டும்.

மேலும் விடுபட்ட பகுதிகளை நிரப்பி, குறைகளைக் களைந்து இவ்விவாதம் நீள்வது, தெளிவைக் கொடுக்கும்.

Tuesday, May 14, 2013

பக்கத்தில் சேராத உந்தன் வெட்கத்தை என் செய்வது?

லையாளத்தில் ‘ஓலங்ஙள்’ என்ற படத்தில் ‘தும்பி வா’ என்ற பாடல், தாய் குழந்தைகளை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கும். இசை இளையராஜா. அவர் அதே மெட்டில் ‘ஆட்டோ ராஜா’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு காதல் இணைப் பாடலை இசைத்திருப்பார். தமிழ்ப் பாடலைக் கேட்கும் போது, தாளத்திற்கும் சந்தத்திற்கும் இசைந்தாற் போல் சொற்களைப் பின்னியிருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதே மெட்டிற்கு மாற்று வரிகளை அமைத்துப் பார்ப்பது நெடுநாள் கனவாக இருந்தது. நேற்றிரவு நிறைந்தது.




பல்லவி:

பக்கத்தில் சேராத உந்தன்
வெட்கத்தை என் செய்வது?
வித்தைகள் கூறாத மொழியொடு
முத்தத்தை யார் எய்வது? - இதழ்ப்


சரணம் 1:

பெண்மைக்குள் பூக்கின்ற இளமை
கண்மைக்குள் கூர் தீட்டுதோ?
வான்மைக்குள் ஆகாய நிலவென
ஆணமைக்குள் சேர்ந் தாடவருதோ?

என்னுள்ளும்
உன்னுள்ளும்
வெள்ளைப்பூ மீதூறும் இரவில்
முல்லைப்பூ போலான ஈரிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 2:

முந்தைநாள் போய்விட்ட பழமை
இன்றேதான் நம் நர்த்தனம்
முந்திப்பாய் கொண்டாடும் உறவில்
முந்திப்பாய் கொண்டாடும் அழகை

அந்திப் போம் வரை
சந்திப் போம்

முன்னிற்கும் மெய்யென்ற மெய்யை
உன்வெப்பம் தீய்க்காத பூவிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 3:

நேரம் ஏன் வெண்மேக நதிபோல்
நேராக செல்கின்றது?

மேலாடை மூள்கின்ற பெரும்போர்
மேலாடும் காலத்தின் கரங்கள்

என் மேலும்
உன் மேலும்

தீண்டாமல் நீங்காத பொழுது
தீயாகும் நீர்மேனிச் சிவப்பிதழ்ப் (பக்கத்தில்)

Sunday, April 21, 2013

12 கோபக்காரர்கள்.

மீபத்தில் இணையத்தில் இருந்து தரவிறக்கிப் பார்த்த படங்களில் ஒன்று 12 angry men. சர்வதேசத் திரைப்படத் தரவுத்தளத்தில் (IMDB) பார்க்க வேண்டிய 250 படங்களில் ஒன்றாக இப்படம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1957-ல் வெளியிடப்பட்டது.

கதை, நீதிமன்றத்தில் ஜூரிகள் என்ற அமைப்பு இருந்த காலகட்டத்தில் நடக்கின்றது. ஒரு வழக்கின் தீர்ப்பில் தீர்ப்பை முடிவு செய்வதற்கு முன்பாக, ஜூரிகள் என்ற மேலும் சில தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளப்பட்ட காலம்.

தன் தந்தையைக் கொன்றதாக மகன் மேல் ஒரு வழக்கு. வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்பு, ஜூரிகள் 12 பேர் தம் விவாதத்திற்கு என ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று பேசி, ஒரு முடிவுக்கு வருவது தான் படம்.

படம் யூட்யூபில் முழுதாகக் காணக் கிடைக்கின்றது. :: http://www.youtube.com/watch?v=PNuSoK6g6VQ

முழுக் கதையும் விக்கியில். :: http://en.wikipedia.org/wiki/12_Angry_Men_(1957_film)

முதல் தளம்::

ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்க ஒரே ஓர் அறை இருந்தால் கூட போதும் என்பதை இப்படம் காணும் போது உணர்ந்தேன். ஜூரிகளின் அறை மட்டுமே தான் படம் முழுதும். வேறு எந்த வகையான ஜிகினா வேலைகளும் தேவையில்லை, கதை கேட்காத பட்சத்தில்.

இரண்டாம் தளம் ::

ஒரு சாதாரண கொலை வழக்கு விசாரணையை ஒரு செவ்வியல் திரைப்படமாக மாற்றியது இந்தத் தளம் தான் என்று நினைக்கிறேன்.

ஒரு முடிவை நாம் எப்படி, எதன் மேல் எடுக்கின்றோம்? ஒரு தீர்ப்பை எதைக் கொண்டு அல்லது எவற்றைக் கொண்டு முடிவு செய்கின்றோம்?

ஒரு லட்சிய மனிதன் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் எவ்வாறு செயல்படுவான்? முடிவெடுக்க வேண்டிய விஷயம் பற்றிய முழுமையான தகவல்களை வைத்தும், அவற்றுக்கான முழுமையான ஆதாரங்களை வைத்தும், கிடைத்த தகவல்களையும் ஆதாரங்களையும் முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு தம் பகுப்பைத் தொகுத்து ஒரு முடிவுக்கு வந்து சேர்வான்.

ஆனால், நடைமுறை வாழ்வில் நாம் இவ்வாறு ஒரு வழக்கில் அல்லது விவாதத்தில், முழுமையாகத் தன்னை விலக்கிக் கொண்டு வெறும் தகவல்களை மட்டும் வைத்தா ஒரு தீர்மானத்திற்கு வருகின்றோம்? இல்லை. பற்பல புற மற்றும் அகக் காரணிகள் தரும் நேர் மற்றும் எதிர் அழுத்தங்களும் நம் முடிவை பாதிக்கின்றன. இத்தகைய உளக் கோண அலசலே இப்படத்தில் நிகழ்கின்றது.

இந்த 12 ஜூரிகளும் ஆட்கள் அல்ல. ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குத் தகவல்களைத் தாண்டியும் நம் மனம் மற்றும் உடல் கொள்கின்ற காரணிகளே தான்.

ஒருவருக்கு நாளின் வெயில் தரும் எரிச்சல். மாலை செல்ல வேண்டிய ஒரு நிகழ்வுக்கு அவசரம். சீக்கிரம் இந்தக் கூட்டம் முடிந்தால் தேவலை.  - சொந்த வேலை காரணம்.

ஒருவருக்கு சேரிப் பையன்கள் என்றாலே குற்றவாளிகள் தான் என்ற கருத்து வலுவாக இருக்கின்றது. - முன் தீர்மானம்.

ஒருவருக்கு சளி பிடித்து இருமல் வந்து கொண்டே இருக்கின்றது. அந்த
எரிச்சலில் இருக்கின்றார். - உடல் தொந்தரவு எண்ணத்தைப் பாதித்தல்.

ஒருவருக்கு எல்லோரும் சொல்கிறார்களே, அப்படியானால் அது தான் சரியாக இருக்கும்.  - மந்தையில் ஓர் ஆடு. சிந்திப்பதற்கு சோம்பேறித்தனம்.

கொலை செய்யப்பட்டவரின் அருகில் இருந்த கத்தியைப் போல் வேறு எங்கும் தான் பார்த்ததில்லை. எனவே பையன் தொலைந்து விட்டது என்று சொன்ன கத்தி இது தான். அவன் பொய் சொல்கிறான். - தன் மைய சிந்தனை.

’நான் இத்தனை வருடங்களாக ஜூரியாக இருக்கின்றேன். நான் சொல்வது தவறாகுமா?’ - மிகை தன்னம்பிக்கை.

‘எல்லோரும் குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன். நான் சொன்னது, சொன்னது தான்.’ - அடம். ஈகோ.

’அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிகின்றதே’ - முன் தீர்மானம்.

தற்செயல்களுக்கும் வாழ்வில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளாத மனோபாவம்.

ஒரு சாதாரண வழக்குப் படத்தை இத்தகைய மனித உளப் பகுப்பாய்வுக் கோணத்தில் கொண்டு போய் பார்க்கின்ற முறையே இதனை செவ்வியல் வரிசையில் சென்று வைக்கின்றது.

சில தடவைகள் பார்த்த பின்பு மனதில் தோன்றிய மற்றும் ஓர் எண்ணம் : முதல் காட்சியில் மட்டும் தான் குற்றம் சாட்டப்பட்ட பையனைக் காட்டுவார்கள். அந்த பரிதாப முகமா குற்றவாளி என்று யோசிக்க வைத்தது. பிறகு சிந்திக்கும் போது தான் தெரிந்தது, அதுவும் ஒரு முன் தீர்மானம் தான் என்று! பால் வடியும் முகங்களும் குற்றவாளியாக இருக்கலாம். எனில், எப்படி உறுதி செய்வது? வெறும் தகவல்களை மட்டும் வைத்துத் தான் நாம் முடிவுக்கு வர வேண்டும். வேறு எத்தகைய காரணிகளும் நம் முடிவை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வதே, சிறந்த மற்றும் ஒரே வழி.

Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

Monday, March 04, 2013

ஹைதைக்கு வந்தேன்.

க்டோபர் ஏழாம் தேதி காலை. விரைந்த குளிர் ஏர்பஸ்ஸில் திரையை விலக்கி வெளியே பார்த்தேன். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்திலிருந்து பகலை அடைய, தூரத்து வீடுகள் துலங்கின. எதிர் வாகனங்கள் வேகமாய்க் கடந்தன. “சம்ஷாபாத்...சம்ஷாபாத்...” என்று முன்னிருக்கையிலிருந்து கூவினர். ஹைதராபாத் எல்லையை அடைந்தேன்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு பெங்களூருவில் வேலை இல்லை, ஹைதை செல் என்று அலுவலகம் சொல்லி விட்ட பிறகு வீட்டைக் காலி செய்து விட்டு, மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, அக் ஆறு சனிக்கிழமை இரவு மடிவாலாவில் ஏர்பஸ்ஸில் ஏறினேன்.

சம்ஷாபாத் என்பது ஹைதராபாத்தின் ஒரு நுழைவாயில். தெற்கிலிருந்து வருபவர்களுக்கான வாசல். இங்கே தான் நகரின் தற்போதைய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பன்னாட்டு நிலையம். பரந்து கிடக்கும் பொட்டல் வெளியில் வெயில் தாண்டவம் ஆடும்.

அங்கிருந்து கிளம்பி சற்று தொலைவிலேயே பி.வி.நரசிம்மராவ் மேம்பாலம் துவங்குகின்றது. நாட்டின் நீளமான மேம்பாலங்களில் இதுவும் ஒன்று. கீழே ஓவ்வொரு பகுதியாக விழித்துக் கொண்டே வர அவற்றை ஒரு பாலப் பார்வை பார்க்கலாம். பாலம் மேதிப்பட்டினம் என்ற பகுதியில் முடிவடைகின்றது. அங்கே இறக்கி விட்டார்கள். நகரங்கள் சில கண்டதனால், குழுமிய ஆட்டோவாலாக்களிடமிருந்து விலகிக் காத்திருந்தேன். அலுவலகமே ஆரம்பச் செலவுகளைத் தந்து விடும் என்பதால், மேரு கேப்ஸை அழைத்து டாக்ஸி பிடித்தேன்.

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு சர்வதேசிய கூட்டரங்கம் நடந்து கொண்டிருந்த நாட்கள் என்பதால், வழி முழுதும் காக்கிகள். மாதாப்பூரில் ஓர் ஏரிக்கரை ஓரமாக ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தது. அங்கும் சில அறைகளில் வெளிதேசத்தார். வாசலில் போலீஸ் பரவியிருந்தனர். அடையாள அட்டையைக் காண்பித்து அறைக்குச் சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அறை. இரண்டாள் மெத்தை. சுவர் தாங்கும் தொலைக்காட்சி. டாடாஸ்கை. குளியலறையில் கர்டைன். கண்ணாடிச் சுவர். ஜன்னல் திரைகளை விலக்கினால் மலையும் ஏரியும். அங்கே மெல்ல படகு ஒன்று அசைந்து கொண்டிருந்தது.

மாலையில் குளித்து விட்டு ஒரு நடை செல்லலாம் என்று வெலீயே வந்தேன். ஒரு கூரைக் கடையில் வறுத்த சோறு தின்று விட்டு மேடேரி முக்கிய சாலைக்கு வந்தேன். அது மாதாப்பூர் போக்குவரத்து சமிக்ஞைப் பகுதி. அங்கே தான் இப்பகுதிக்கான காவல் நிலையம் உள்ளது. பக்கத்திலேயே ஓர் அனுமார் கோயில். ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய பேர் வருகிறார்கள். நான் ஒரு முறை சென்றிருந்த போது புது காருக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. செருப்பு விடும் இடத்தில் சில பிச்சைக்காரர்கள்.

மாதாப்பூர் என்பது நகரின் தொழில்நுட்பப் பகுதி. இங்கே பல கணிணி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் அலுவலகங்கள். மர்றும் தேசிய நவநாகரீகத் தொழில்நுட்ப நிறுவனமும், சில்பராமம் எனும் அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையகமும் அமைந்துள்ளன.

2003-ல் கல்லூரி வழியாக சுற்றுலா வந்த போது இப்பகுதி ஒரு வெறும் மலை. சைபர் டவர்ஸ் என்ற ஒரேஒரு கட்டிடம் மட்டும் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும். மொட்டை வெயில் உக்கிரமாய்க் காய்ந்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் நுழைந்து சில நிறுவனங்களைப் பார்த்து விட்டு, கீழே உணவகத்தில் வாங்கிய உணவைக் கண்ணில் நீர் வழியத் தின்றோம்.

இப்போது டவர்ஸின் அருகிலேயே ஒரு மேம்பாலம் போகின்றது. கணிணியர்களை நம்பி இயங்கும் பேக்கரிகள், அவசர உணவகங்கள், ஹோட்டல்கள், ட்ராவல்ஸ்கள், நகைக் கடைகள், ஆஸ்பத்திரி, மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள், பூக்கடைகள், செருப்பு தைப்பவர்கள், டி.வி. விற்பவர்கள், பானிபூரி கூடையர்கள், பூமியைக் கொத்திக் கொண்டு எழும் அசுர கட்டிடங்கள், மால்கள், கேக் ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள். இவற்றின் நடுவே சாலையோர அரசு வெட்டி நிறுத்தி வைத்த ஓர் அரசு மரத்தின் அருகே, களைப்பான மாட்டின் பின்னே கவர் போட்ட கையை விட்டுப் பார்க்கும் ஒரு மாட்டாஸ்பத்திரி. அதன் ஓரங்களில் எப்போதும் ஒழுகியோடும் நகரவாசிகளின் சிறுநீர்த் தாரைகள்.

NIFT இருப்பதால் சில நூல், பேப்பர் கடைகள் உள்ளன. அழகான பையன்களும் அழகான பெண்களும் அங்கே வந்து ப்ராஜெக்டுக்கான இடுபொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊசி, பாசி, கண்ணாடி, கலர் காகிதங்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் சிறு மூட்டை சுமந்த இளமைகள் ட்ராவல்ஸ் வாசல்களில் காத்திருக்க, வேன்கள் வந்து அவர்களைக் கொத்திச் சென்று நகருக்கு வெளியே காத்திருக்கும் ஏர்பஸ்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

நிறைய ஹாஸ்டல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக. காலை வேளைகளில் அலையலையாக வந்து பேருந்து நிறுத்தத்தில் கம்பெனி வண்டிகளைப் பிடித்து கலைந்த பின், சாலை சாதாரணமாக, போக்குவரத்துக் காவலர் நிதானமாக நிழலில் ஒதுங்குகிறார்.

ஷேர் ஆட்டோ என்ற ஒரு கருத்து இன்னும் இங்கு வலுப்பெறவில்லை. ஏனெனில் சாதாரண ஆட்டோவே இங்கே ஷேர் ஆட்டோ அவதாரம் எடுக்கின்றது. பின்புறம் மூன்று முடிந்தால், எளியோரை வலியார் வாட்டினால் நான்கு பேர். முன்னே ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் பறவைகள் போல் இறக்கைகளைப் பொருத்திக் கொண்டு, துவாரபாலகர்கள் போல் அங்கும் இருவரை அடைத்துக் கொண்டு ஆட்டோ மொத்தம் ஏழு பேரோடு ஓடுகின்றது.

வியாழக்கிழமைகளில் ஒரு சாய்பாபா வண்டி நான் அலுவலகம் செல்லும் வழியில் வந்து விடுகின்றது. தெலுங்கா, மராட்டியா, இந்தியா என்று தெரியாத மொழியில் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். ஒரு பையன் தட்டேந்தி வருவான். கவனிக்காதது போல் தாண்டிச் சென்றால், ஸ்ரீசாய் பாலாஜி ஓட்டல் அருகே கிழிந்த ஆடையோடு பெண்ணும் அவள் மடியில் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையுமாக நம்மிடம் கையேந்துவார்கள்.

ஆதார் அட்டைக்காக எப்போதும் கூட்டம் நின்று கொண்டிருக்கின்றது. டவர்ஸ் அருகிலேயே ஒரு வெங்கடாஜலபதி கோயில். ஒருதடவை போன போது சுண்டல் கொடுத்தார்கள்.

ஒரு கேரள ஓட்டல் இருக்கின்றது. விலையெல்லாம் தென்னை உயரம். அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.

சமீப குண்டுவெடிப்பிற்குப் பிறகு இணையக் கடைகளில் இன்னும் கொஞ்சம் கண்டிப்பு. புகைப்படம், அடையாள அட்டை கண்டிப்பாக வேண்டும். 10H பேருந்து நிறைய ஓடுகின்றது. கொண்டாப்பூரிலிருந்து செகந்திராபாத் செல்கின்றது. இருமுறை செகந்திராபாத்தில் இருக்கும் ஸ்கந்தகிரிக்குச் சென்றேன். குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்கும் குமரக் கோயில். சுற்றி வர பிற சாமிகளும் இருக்கின்றார்கள். காஞ்சி காம்கோடி பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் கோயில் இது. சென்ற போது செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். மயிலாப்பூரிலிருந்து ஒரு கோஷ்டி வந்து ராம நாமம் சொன்னார்கள். மலைக்கு அடிவாரத்தில் கிரி புத்தக நிலையம்.

(தொடரும்)

Wednesday, February 06, 2013

ஆகாயப் பொன்னே...

ரு மெலோடியான ராகபாட்டையில் தாலாட்டுப் பாடல் ஒன்றை முயற்சித்தேன். மெல்லப் பாடியதைக் கேட்டுத் தூங்கித் தன் ஆதரவைத் தெரிவித்தாள்.

ராகம் கீழே.

***

ஆகாயப் பொன்னே...
ஆனந்த ஊற்றே...
பூங்காற்று தீண்ட
நீ தூங்கு...

ஏகாந்த வேளை...
எல்லோரும் தூங்க...
பேசாது கண்ணே
நீ தூங்கு....

பூ...மடல்
நீ
கேட்கும் கர்ணமாய்...

தேன்....சுழல்
நீ
பேசும் சொற்களாய்..

முகில்கள் நீந்தும் வானம்
மாலை நேரம்
கொண்டு வந்து...

சுடரென ஒளிரும் மீன்கள்
ராவின் ராகம்
பாடும் போது... (ஆகாயப் பொன்னே)

பாலூறும்
நெஞ்சோடு
அணைத்திடும் போதும்

தோளோடு
மேல் சாய்த்து
தடவிடும் போதும்

விழிகளில்
மொழிகளில்
நீ ஒரு தோட்டமே...

அழுவதில்
சிரிப்பதில்
உன்னுடன் நானும்
சேர்ந்தேனே...

அழகே...அழகே...அழகே.... (ஆகாயப் பொன்னே)

எண்ணாத
முத்தங்கள்
உன் கன்னம் தாங்கும்

எழுதாத
பாடல்கள்
உன் முகம் காட்டும்

நாளிலும்
பொழுதிலும்
உன்னுடன் நானுமாய்

மண்ணிலே
விண்ணிலே
ஊர்வலம் போகும்
கதையெல்லாம்
சொல்வேன்
நாளை
இன்று...(ஆகாயப் பொன்னே)

***

Friday, February 01, 2013

பேரன்புடையவன்

பிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே?

மல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா?

மோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை?

ரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன!

பன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா?

துயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா?

அந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்? கிடையாது.

கடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.

இந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்?

இங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்?

பகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே ! இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே!

கரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.

அன்புள்ள மரணத்திற்கு

ன்புள்ள மரணத்திற்கு,

நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.

பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.

உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.

நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?

உன் வயது என்ன?

நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!

உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.

ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.

உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?

***

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.