Friday, April 10, 2009

அப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை.



ப்பா சின்ன வயதில் குண்டம்மா பள்ளியில் படித்த போது எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் வாங்குவார். எட்டாவது படிக்கும் போது, அவரது அப்பா இறந்து விட, பள்ளிப் படிப்புக்கு விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி. அதற்குப் பின் அப்பா அவரது அக்கா வீட்டுக்காரர் கடையிலேயே வேலைக்குச் சேர்ந்தார். ஜமக்காளம் எடுத்து வைப்பவராகவும், தபால் நிலையத்திற்கு கொண்டு சென்று போஸ்டல் அனுப்புபவராகவும், பார்சல் கட்டுபவராகவும் இருந்தார்.

அப்பா நன்றாக கவிதை எழுதுவார். தாத்தா இறந்த போது இருந்த குடும்ப நிலைமையைப் பற்றி அழகாக ஒரு எண்பது பக்க நோட் முழுக்க எழுதி இருந்தார். அது எப்படியோ தொலைந்து போய் விட்டது.

அப்பா ஒருமுறை ஆற்றுக்கு குளிக்க எங்களை கூட்டிப் போனார். நதிப்பெருக்கில் நான் அடித்துச் செல்லப்பட்ட போது, யாரோ ஒருவர் முடி பற்றி இழுத்து காப்பாற்றினார். அதிலிருந்து ஆற்றுப்பக்கம் அம்மா எங்களை அனுமதித்ததேயில்லை. இரண்டு பக்கம் ஆறுகள் பாய்ந்தும், ஆற்று நீச்சல் தெரியாதவானாகவே வளர்ந்தேன்.

அப்பாவுடைய சைக்கிள் அவரைப் போலவே அருமையாக இருக்கும். ஓட்டுவதற்கு மென்மையாகவும், ஒரு வித ஃப்ளெக்ஸ்ப்ளிட்டியுடனும் இருக்கும். பத்தாவது லீவில் தான் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அதற்குப் பின் மழை தீபாவளிக் காலம் ஒன்றில் குமாரபாளையத்தில் இருந்து வந்த போது, பழைய பாலத்தில் பவானிக்குத் திரும்பும் போது, சறுக்கிட்டு அரை மீட்டர் தள்ளி விழுந்தேன். சைக்கிளை ஒரு தேய் தேய்த்திருந்தேன். அப்பா மன்னித்து விட்டார்.

பின்னால் என்னையும், முன்னால் தம்பியையும் உட்கார வைத்து செய்ண்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு கூடிப் போவார். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் போதெல்லாம் கையெழுத்து போடும் போது மகிழ்ந்து மகிழ்ந்து, பின் அதுவே இயல்பாக சைன் பண்ணுவார்.

பவானி, காமாட்சியம்மன் கோயில் தெருவில் 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம்' துவங்கி அதில் செயலாளராக இருந்தார். அப்பா கொஞ்சம் பார்க்க சிவாஜி போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவரைப் போலவே அலை அலையாக தலை சீவுவார். திருச்சியில் ஒருமுறை ரசிகர் மன்ற மாநாடு நடந்த போது, சிவாஜிக்கு மாலை போடும் போது எடுத்த போட்டோவில் அப்பாவின் சந்தோஷப் பரவச மகிழ்ச்சி அழகாகப் பதிவாகி இருக்கின்றது. பக்கத்தில் சின்ன அண்ணாமலை நின்று கொண்டிருந்தார்.ஒருமுறை வீட்டுக்கு நடந்து வரும் போது, 'ரஜினி' பற்றி ஏதோ குறை சொல்லிக் கொண்டே வர (அவன் ஒரு கிறுக்கன், etc..) எனக்கு கோபம் வந்து சொன்னேன். 'நான் ரஜினி ரசிகன் தான். ஆனால் ரசிகர் மன்றம் எல்லாம் வைக்கவில்லை' என்று. அப்பா கப்சிப்.

காமாட்சியம்மன் கோயில் சின்னதாக இருந்த போது நாங்கள் மூன்று பேரும் சொம்புகளில் தண்ணீர் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டுக் கிணற்றில் இருந்தே நாங்களே சேந்தி எடுத்து, சொம்புகளில் ஊற்றி, கோயிலுக்கு கொண்டு செல்வோம். அய்யர் பிள்ளையார் சிலைக்கும், முருகன், அம்மன் சிலைக்கும் ஊற்றி விட்டுத் தருவார்.

சில சமயம் குளிக்கும் போது அப்பா என்னைக் கூப்பிடுவார். நான் தான் அப்பாவுக்கு முதுகு தேய்த்து விடுவேன். தோளில் இருந்து முதுகு முழுவதும் கைகளை கரடி போல் வைத்துக் கொண்டு நகங்களால் நன்றாக அழுத்தி தேய்ப்பேன். 'அழுக்கு போயிடுச்சா?' என்று அவ்வப்போது கேட்பார்.

அப்போது வீட்டில் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் தான் இருந்தது. அதைக் கவிழ்த்துப் போட்டு, செவ்வகக் கட்டிலின் நீள இரண்டு கால்களிலும் கயிறு கட்டி, இருபக்கமும் ஜமக்காளங்கள் இறுக்க வைத்து, ஒரு பக்கம் அம்மாவும், மறு பக்கம் அப்பாவும் உட்கார்ந்து எழுத்து தைப்பார்கள். நான் நடுவில் கட்டிலுக்குள் அமர்ந்து கொண்டு, பாடங்களை ஒப்பிப்பேன். மிஸ்டேக் விட்டால் தோசைக்கரண்டி தான்... மத்து தான். கை விரல்கள் ஒடிந்து விடும். அம்மா தான் அடிப்பார். அப்பா அந்தளவு அடிக்க மாட்டார்.

ஒருமுறை ஐம்பது ரூபாய்க்கு சில்லறை மாற்றி விட்டு வர சொல்ல, அதை கிறுக்குத் தனமாய் டீ-ஷர்ட்டின் இரு பட்டன்களுக்கு இடையில் செருகி விட்டு மேரி ஸ்டோர்ஸுக்கு ஓடினேன். அங்கு சென்று பார்த்தால், ரூபாயைக் காணோம். திக்கென்று ஆகி வேர்த்து விட்டது. வழியெல்லாம் தேடிப் பார்த்து விட்டு வந்து சொல்ல, செம திட்டு. அப்போது அப்பாவுக்கு வாரச் சம்பளம் இருநூறு ரூபாய்.

சனிக்கிழமை இரவு அப்பா சம்பளம் வாங்கி வருவார். சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அருகில் இருக்கும் பேக்கரியில் ஜாம்பன் வாங்கி வருவார். ஒரு வட்ட பன்னை நான்காக கீறி, உள்ளே ஒரு பக்கம் வெண்ணையும், மறுபக்கம் ஜாமும் வைத்து தருவார்கள். வீட்டில் சரியாக ஜெய் ஹனுமான் ஆரம்பிக்கும் போது வந்து விடுவார். அனுமார் ஜாம்பன்னோடு எங்களுக்குள் கலந்து போனார். தம்பி அப்பாவுக்கும், நான் அம்மாவுக்கும் பங்கு தர வேண்டும். அம்மா வழக்கம் போல், 'எனக்குத் தந்தது தானே. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று தம்பியை சமாளித்து விட்டு, அவர் பங்கையும் எனக்கே தந்து விடுவார். அப்பா பங்கிலும் ஒரு பாதி எனக்கு வந்து விடும். அப்போது நினைத்துக் கொள்வேன், 'அப்பா பங்கை வாங்கி சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை. பிற்காலத்தில் அப்பாவுக்கு நான் தானே முதலில் சம்பாதித்து சாப்பாடு போடுவேன்' என்று!

டி.வி.யில் எம்.ஜி.ஆர் படம் போட்டால் படம் முடியும் வரை பொறுமை காக்கும் அப்பாவிடம் இருந்து, முடிந்தவுடன் சிவாஜி ரசிகன் வெளியே வந்து சொல்லுவார். 'ஆமா.. இவரு அசோகன்ட்ட இருந்து சரோஜா தேவியைக் காப்பாத்திட்டு, அப்புறம் இவரும் கெடுக்கத் தான் போறாரு'. அம்மா அதட்டுவார். அப்பாவின் அந்த ஓபன் விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப வருஷங்களாய் வீட்டில் ஒரே ஒரு சைக்கிள் தான் இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டுக்காக ஒரு குட்டி சைக்கிள் 1500ரூ-ல் வாங்கினார். என்னை ஓட்டவே விடவில்லை. கோயில் தெருவில் அவரே முதல் சில ரவுண்டுகள் ஓட்டினார். அப்பாவின் அந்த என்றும் மாறாமல் இருந்த குழந்தைத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்பாவின் சுற்றுலா என்பதுஒன்றே ஒன்று தான். வருடம் தவறாமல் ஒவ்வொரு முறையும் குற்றாலம் டூர் போய் வருவார். அதற்கென்று ஒரு ஜமா இருந்தது. ஏதோ ஒரு.... சங்கம் என்று பெயர். ஒரு வாரம் சென்று வருவார்கள். வரும் போது நெல்லை அல்வாவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவும் வாங்கி வருவார்கள். காலையில் விழித்துப் பார்க்கும் போது, லேட் நைட் அப்பா வந்திருந்தார் என்றால், சமையற்கட்டில் அல்வாவும், பால்கோவாவும் இருக்கும் என்பது உறுதி. ஒரு வாரத்திற்கு பள்ளியில் இருந்து வந்தவுடனே ரெண்டு ஸ்பூன் உள்ளே இறங்கும்.

குற்றாலம் குழுவில் அப்பா ஒருவர் தான் தண்ணியடிக்காமலும், புகை பிடிக்காமலும் இருப்பார். எப்படியோ அப்பாவிற்கு இந்தப் பழக்கங்கள் வரவே இல்லை. எனக்கு அந்த ஆச்சரியம் விலகவேயில்லை. இன்றும் புத்தாணு பார்ட்டிகளுக்கு செல்லும் போதோ, ஆபீஸ் டூர் போகும் போதோ, என்னால் வெறும் கோக்கையும், வறுத்த பட்டாணி, கடலைகளையும், சிப்ஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற பழுப்புத் திராவகங்களையும், வெளுப்பு குச்சிகளையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தோன்றாமல் இருப்பது அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். இன்று எனது முகமும், தமிழும் கூட அப்பா தந்தது தான்.

கவுன்சிலிங் முடிந்து வீட்டுக்கு வந்த போது, எல்லோரும் சி.எஸ். விட்டு விட்டு ஈ.சி.ஈ. எடுத்திருக்கிறாயே என்று அங்கலாய்த்த போது, அப்பா மட்டும் தான், 'உனக்கு பிடித்த ஈ.சி.ஈ.யே கிடைத்து விட்டது தானே?' என்று கேட்டார்.

+2 முடித்து கவுன்சிலிங்குக்காக காத்திருந்த காலங்களில் தான் அப்பாவுடன் நான் இன்னும் நெருக்கமானேன். ஒரு நாள் மதியம் அப்பா கடையில் இருந்து லஞ்சுக்காக வந்து, சாப்பிட்டு விட்டு, 'எத்தனை மனிதர்கள்' பார்த்துக் கொண்டிருந்தார். ஐஸ் போகும் சைக்கிள் சத்தம் கேட்டது. 'அப்பா ஐஸ் வாங்கலாமா..?' என்று கேட்டேன். 'சரி.. எடுத்துக் கொள்' என்றார். 'அட, ஆச்சர்யமாக இருக்கிறதே..' என்றேன். அப்பா ஒரு கவிழ்ந்த பார்வை பார்த்தார். அந்தப் பார்வை இன்னும் என் மனதை அவ்வப்போது அறுக்கின்றது.

இன்று அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன். என் கவிதைகளையும், கதைகளையும் அப்பா படித்தால் என்ன சொல்லுவார்? என் 'களிப்பேறுவகை' படித்தால், 'பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்' என்று நினைப்பாரா..? அப்பாவை வேலைக்கெல்லாம் இனி போக வேண்டாம் என்று சொல்லி விட்டு, 'அப்பா... உங்களுக்கு பிடித்த புக்கெல்லாம் சொல்லுங்கப்பா. வாங்கித் தர்றேன். நிறைய கவிதை எழுதுங்கப்பா... நல்லா ரெஸ்ட் எடுங்க' என்று சொல்லியிருப்பேனா? அப்பாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் பேசியிருப்பேனா? எம்.ஜி.ஆர் ரேப் செய்வதைப் பற்றியெல்லாம் எட்டாவது படிக்கும் பையனிடம் பேசியவரிடம் ஒரு நல்ல நண்பனாக இப்போது இருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேரளா பெண்கள் பற்றி, படித்த புத்தகங்கள் பற்றி, பார்த்த சினிமாக்கள் பற்றி, வாக்கிங் பற்றி, ஹாக்கிங் பற்றி, கம்ப்யூட்டர் பற்றி, டி.எஸ்.பி. பற்றி... அப்பாவை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

சேலத்தில் பிடித்த கடைசி பஸ்ஸில் பின்னிரவு பதினொன்றரை மணிக்கு பவானியில் வந்து இறங்கி, கரண்ட்டும் செத்துப் போயிருந்த அந்த நடுநிசியில், சுடுகாட்டுக் குழியில் புதைக்கப்படக் காத்திருந்த அப்பாவின் கால்களைப் பிடித்து கதறி, பின்னால் திரும்பிப் பார்க்காமல் என்னை நடக்க வைத்து, தோள்களில் சாய்த்துக் கொண்டு வந்த கார்த்தியிடம், 'இனி எனக்கு ஜாம்பன் யார் கார்த்தி வாங்கித் தருவாங்க..?' என்று கேட்டு, இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஆகின்றன.

Wednesday, April 01, 2009

சில பதிவுகள்.

. சாரு நிவேதிதாவின் வலைமனையில், மலாவியில் இருந்து ஆனந்த் என்பவர் எழுதி இருக்கிறார். அழகான நடை. நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து, கடைசி பத்தியில் அவரது சொந்த அனுபவத்தையும் பளிச்சென்று சொல்லி விடுகிறார். ஜில்லென்றது. கவிதைகள் இரண்டும் எழுதி வைத்துக் காட்டுகிறார். நன்றாகவெ இருந்தன.

சாரு புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நான் சிபாரிசு செய்வது, 'மலாவி மன்னன்' (அ) 'மலாவி மைந்தன்'.

கண்ணி.

ஆ. எஸ்.ராமகிருஷ்ணனின் வலைமனையில் இன்று படித்த 'ரயிலோடும் தூரம்' பதிவைப் படித்த போது சிலிர்த்துப் போனேன்.

இரவு ரயிலில் கூட அத்தனை பேருடன் பயணிக்கும் போது, குறிப்பாக ரிசர்வேஷன் பெட்டியில் நாம் தனிமையாகவே பயணிப்போம். கூட நமக்குத் துணையாக வருவது ஒற்றையாய்க் காயும் நிலாவே! இருள் தின்னும் பெட்டிக்குள் ஜன்னல் கம்பிகளோடு கன்ன்ம் ஒட்டி, ஏதோ ஒரு வளைவில் அந்தரத்தில் தொங்கும் நிலா சட்டென்று பின் தங்கி விடுவதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, கைகளால் இரு பக்கக் கம்பிகளைப் பிடித்து, முழு உடலையும் வெளியே எறிந்து மோதும் பேய்க் காற்றில் மிதப்பதை எத்தனை முறை செய்திருக்கிறேன்!

சேலத்தில் இருந்து முதன் முறையாக பெங்களூர் ரயில் பயணத்தில் நடு இரவில் சென்ற போது, பெளர்ணமி இரவு அது! அப்படியே பனிப்புகையின் உள்ளெல்லாம் பாவு நூலாக வெண்ணொளி அமுதத் துளிகள் கரைந்து நிறைந்திருந்தன.

கவிஞனுக்கு மழையும், ரயிலும், நிலவும், காற்றும் வாரி இறைக்க இறைக்க வற்றாத ஜீவ சுரப்பிகள். அவனது அடி மனதில் ஊறிக் கிடக்கும் வரிகளை அவையே திரட்டி மேலெழுப்புகின்றன.

நன்கு மழை பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவுப் பெளர்ணமி நேரத்தில் வேகமாக கிராமத்தில் காடுகளுக்குள் செல்லும் ரயிலின் இருள் கவ்விய பெட்டியொன்றின் பக்கவாட்டுப் படுக்கையில் சாய்ந்து படுத்து, அந்த தடதடப்பு ரிதத்தில் மெளனமாக இயற்கையோடு கரைவது என்பது எத்தனை சுகமானது....!!!!

PS: தினமும் பார்க்கும் ஓவியத் தளத்தில் இன்று பார்த்த போது டேவிட் காக்ஸ்ஸின் படம் பட்டது..! என்ன ஓர் ஆச்சர்ய ஒற்றுமை!

படத்தின் பெயர் : இரவு ரயில்.



இ. தி.க.சிவசங்கரன் அவர்கள் பற்றிய ஜெயமோகன் பதிவு அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் படிக்கத் துவங்கிய போதிலிருந்து இருந்தது. அவ்வளவு நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். வழக்கமாக அவர் 'நகைச்சுவை' என்று லேபிள் குத்தும் பதிவுகளில் சொல்லி விட்டாரே என்பதற்காக ' நகைச்சு வை'க்க முயலலாம். இப்பதிவில் இயல்பான நடைப் புன்னகை இருக்கின்றது.

பொங்கல் & வடை - தூக்க மருந்து.

முதலில் பொங்கல் அறிமுகமானது பொங்கல் திருநாளில் மட்டும். கருப்பான கரும்பு கணுக்களில் விரல்கள் கிழிபடும். அரிவாளால் ஆங்காங்கே வெட்டி, பற்களால் இழுத்து, உரித்து கடித்துக் கசக்கி உறியும் போது எத்தனை இனிப்பாய் சாறு உள்ளிறங்கும்! அந்த இயற்கை இனிப்புக்கு கொஞ்சம் மாற்று கம்மியாக பொங்கல் செய்யப்படும்.

சர்க்கரைப் பொங்கல் தனி ஜாதி.

வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொள்வோம். பழைய நாளிதழ் பேப்பரை எடுத்து, அதன் மேல் வைத்து, பேப்பரால் வெல்லத்தை மறைத்து, ஊதுகுழாயோ, பூட்டோ, கல்லோ எடுத்து, 'மடார்.. மடார்' என போட்டு அடித்து உடைத்து, நொறுக்கி, பொங்கும் அரிசிச் சாதத்தில் போட்டுக் கிளறுவோம். அதுவரை சும்மா இருக்காமல், செமத்தியாக அடி வாங்கிய பேப்பரில் ஒட்டியிருக்கும் வெல்லத் துணுக்குகளைச் சுரண்டி நக்கிப் பார்க்க, சுர்ரென்று இனிப்பு மொட்டுகள் சிலிர்க்கும்.

நெய்யூற்றி அதில் வெண் முந்திரி, திராட்சை போட்டுக் கொஞ்சம் சூடாகக் கிளறி, பொங்கலில் அத்தனையையும் சேர்த்து, கிளறினால்.... இனிப்புப் பொங்கல் தயார்.

சூடு கொஞ்சம் ஆறியவுடன், தேங்காய்ச் சட்னியுடன் கரண்டியால் கொட்டப்பட்ட பொங்கலில் கை வைத்து, ஒரு விள்ளல் எடுத்து, விழுங்கினால்... தொண்டையில் இருந்து, நெஞ்சு வழியாக சூடாக 'கபகப'வென புகையுடன், இனிப்பும், நெய் வாசமும் உடல் முழுதும் பரவுமே... கண் செருகி திளைக்கும் சுவை அது...!

வெண் பொங்கல் வேறு வர்க்கம்.

தினமும் கிடைக்கும். ஹோட்டல் சென்று 'பொங்கல்' கேட்டால் கிடைக்கும் வஸ்து. கீழ்த் 'தட்டு' உணவுப் பண்டம்.

போரூர் செல்லும் வழியில், எல் & டி அருகே , எம்.ஜி.ஆர். தோட்டத்தின் எதிரில் ராமாவரத்தில் பசங்களோடு தங்கி இருந்த போது, நான் கொஞ்ச நாள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கற்றுக் கொண்ட வித்தை வெண் பொங்கல் வைக்கக் கற்றுக் கொண்டது.

அரிசியைக் கழுவி குக்கரில் கொதிக்க வைக்க வேண்டும். அரிசி அளவுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு அங்கே வெந்து கொண்டிருக்கும் போது, நாம் சும்மா நின்று கொண்டிருக்கக் கூடாது. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன.

வாணலியில் மிளகு, நெய், (மாதக் கடைசியில் நல்லெண்ணெய்!) ஊற்றி அடியில் பற்ற வைக்க வேண்டும். ஓரிடத்தில் சும்மா இருந்த மிளகு, சூடு ஏற ஏற அங்கே இங்கே 'டபார்...டிபீர்' என்று குதிக்கும் போது, நெய் வாசம் கிளம்பும். முடிந்தால் இங்கேயும் முந்திரி, திராட்சை சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி நன்றாக வெந்தவுடன் எடுத்து, அதில் நெய் கூட்டணியை ஊற்றி/போட்டு நன்றாக கிளறினால், அந்த வெப்பத்தின் மென் புகையுடன் கலந்து நெய் மணம் சேர்ந்து வரும் பாருங்கள், முகர்ந்தாலே சொர்க்கம் நிச்சயம். மறக்காமல் வேண்டும் எனில் உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.

அலுவலகம் செல்லும் நண்பர்கள் தட்டில் எடுத்துப் போட்டு உண்டவுடன், நன்றாக இல்லையென்றாலும் அந்த நெய் வாசம் இழுத்து சொல்ல வைத்து விடும்."சூப்பர் டா...!"

இதைத் தவிர ஹோட்டல்களில் கிடைக்கும் வெண் பொங்கல் வேறு வகையாக இருக்கும்.

காலை எட்டு, எட்டரை மணிக்கு சட்னி, சாம்பாரோடு, உளுந்த வடை சேர்த்து மென்று தின்று அலுவலகம் சென்று.....உணவு செரித்து, சக்தி எல்லாம் சதை, எலும்புகள், நரம்புகள் வழியாக ஊடுறுவிப் பரவும் பதினொரு மணி சுமாருக்கு விளைவு தெரிய ஆரம்பிக்கும்.

மூளையின் உச்சியில் ஒரு கிளுகிளு மெல்ல உருவாகும். அப்படியே அருவி போல் அங்கிருந்து வழிந்து சரிந்து தலையெங்கும் கரையும். காதுகள் மென்மையாகும்; கண்கள் தான் முக்கிய டார்கெட்.

இமைகள் மெல்ல ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும்; பிறகு இரண்டு முறை; மூன்று முறை; நான்கு... ஐந்து.. ஆறு...

படபட...படபட.....

தலையைச் சட்டென்று ஒரு உதறு உதற வேண்டும். தூக்கப் போர்வை சற்று விலகும். கொஞ்ச நேரம்...

மீண்டும் மேலிமை சரியும்...!

எழுந்து போய் முகம் கழுவி விட்டு வந்தாலே தெரிந்து விடும், பையன் தூக்க மருந்து ஒரு ப்ளேட் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பது!

அந்த சுக போதைத் தூக்கத்தில் இன்புற்று கிறங்கிக் கிடந்தால் போச்சு! தலை சில ஆட்டம் போட்டு, தடாரென டெஸ்க்டாப்பில் மோதும். 'சடாரென' அந்த நிலை போய் விடும். கொஞ்ச நேரம் சுற்று முற்றும் பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்ற அற்ப சந்தோஷத்தை அடைந்து, நாளின் நார்மல் வேலைகளில் கவனம் சென்று விடும்.

இனிமேல் ஆபீஸுக்குப் போகும் போது பொங்கல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பலகீன உறுதி எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் ஹோட்டலுக்குப் போனால்...

இட்லியைப் போல் ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், தோசையைப் போல் ஒல்லிக்குச்சி ஃப்ளாட் உடைசலாக இல்லாமல், எண்ணெயில் மூழ்கி முத்தெடுத்த பூரி, வறட்டியை நினைவூட்டும் சப்பாத்தி போன்ற சங்கதிகள் போல் இல்லாமல்,

அந்தக் குழைவும், கை வைத்தாலே புதையும் மென்மையும், அசைந்தாடிக் கொண்டே புகையும் புகையும், பழுப்பு சாம்பார், வெள்ளை சட்னி, மென் பழுப்பு உளுந்து வடையுடன், ஒரு அல்வா போல் வாய்க்குள் இட்டவுடனே கரைந்து, கலந்து, நாவின் சுவை அரும்புகளுக்கு செழுமையாகப் புரிந்து, லேசாக அவ்வப்போது இடறும் மிளகு கிளப்பும் கார நெடியும்....

"மூனாம் நம்பர் டேபிளுக்கு பொங்கல் ஒரு செட்டேய்....!!"

Tuesday, March 31, 2009

தலைவர் விளையாடல்கள் - 2.

லைவர் ஒரு முறை பஸ்ஸில் பயணம் செய்தார். பஸ் சென்ற பாதை வளைந்து வளைந்து, மேடேறி இறங்கிச் சென்று கொண்டிருந்தது.

ரோடு வலது புறமாக திரும்பும் போது, எல்லோரும் இடது புறம் சரிந்தனர். நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் இடது புறமாக சாய்ந்து தம் கைகளை பஸ்ஸின் சைடுவாக்கில் அழுத்தி, தம் உடல் பேலன்ஸ் செய்து நின்றனர். தலைவருக்கு அன்று அதிர்ஷ்டவசமாக சீட் கிடைக்கவில்லை.

பின்னொரு நாள் இதைப் பற்றிப் பேசும் போது தலைவர் சொன்னார்.

"நான் நின்னுட்டு தான் வந்தேன். நானும் பஸ் வளையும் போதெல்லாம் அதே பக்கமா சாஞ்சு பேலன்ஸ் பண்ணினேன். அதில ஒரு ஆச்சரியம்..."

"என்ன, சொல்லுங்க தலைவரே...!!!"

"பஸ் ரைட்ல திரும்பும் போது, எல்லோரும் லெப்ட் சைட் சாயறாங்க. நிக்கறவங்க எல்லாம் லெப்ட் சைட்லயே சாஞ்சு கையை ஊன்றி அந்த ஃபோர்ஸ்ல அவங்க உடம்பை ரைட் சைடுக்குத் தள்ளி பேலன்ஸ் பண்ணிக்கறாங்க. அப்போ நியூட்டன் தேர்ட் லாபடி அவங்க கைல இருந்து சமமான ஃபோர்ஸ் போய் பஸ்ஸை இன்னும் லெப்ட் சைடுக்குத் தள்ளும். அப்போ பஸ் இன்னும் லெப்ட் சைட்ல சாயும். நிக்கறவங்க இன்னும் பேலன்ஸ் பண்றதுக்காக கைக்கு இன்னும் ஃபோர்ஸ் கொடுப்பாங்க...! இந்த சைக்ளிக் ஏக்ஷன்ஸோட முடிவு தான் என்ன...?"

யாரும் ஒன்றும் பேசவில்லை.

ட்ரான்ஸ்மிஷன் லைன்ஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (TLN) என்ற தியரி பேப்பர். அதில் ஓர் அசைன்மெண்ட்டுக்குப் பதிலாக ஒன் மார்க் கேள்விகள் கொண்ட தேர்வு வைக்கப்பட்டது. எல்லோரும் ரோல் நம்பர் படி அமர்ந்தோம். தலைவருக்கு மிக்க மகிழ்ச்சி. காரணம் அவருக்குப் பின் அமர்ந்திருந்தது ஒரு டாப்பர். (யோகா..?)

ஆனால் மேடம் அடுத்தடுத்த மாணவர்களுக்கு கேள்விகளை ஜம்பிள் செய்து கொஸ்டீன் பேப்பர் தயார் செய்திருந்தது தலைவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

சில கேள்விகளுக்குத் தலைவர் தானாகவே பதில் எழுதினார். ஒரு கேள்விக்கு (இந்த சர்க்யூட்டில் யூஸ் செய்ய வேண்டியது சீரிஸ் கனெக்ஷனா இல்லை ஷண்ட் கனெக்ஷனா?) என்ன பதிலென்று தெரியாமல் பின்னால் கேட்க, அவன் "(2n + 1) / lamda" என்று சொல்ல, அதை எழுதி விட்டு வந்தார்.

தலைவர் நினைத்துக் கொண்டார் : 'சீரிஸா இல்லை ஷண்ட்டா என்று கேட்டு என்னை ஃபூல் செய்யப் பார்க்கிறார்களா..? அது தான் முடியாது. என்னையா எமாற்ற முடியும்..? (2n + 1) / lamda தான் சரி'.

Monday, March 30, 2009

தலைவர் விளையாடல்கள்.

லைவர் ஒருமுறை ஒரு கடைக்குப் போனார். அங்கே ஆறு ரூபாய் எம்.ஆர்.பி. உள்ள ஒரு சாக்லேட் பட்டையை வாங்க முயற்சித்தார். கடைக்கார அம்மாவிடம் பத்து நிமிடம் பேரம் பேசினார். அவருக்கு தலைவரைப் பற்றி நான்கு வருடங்களாக நன்றாகத் தெரிந்திருந்ததால், அமைதியாக நின்றார். களைத்துப் போன தலைவர், 'சந்தர்ப்பம் கிடைக்கட்டும், பழி வாங்குகிறேன்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு, பத்து ரூபாய் நோட்டை நீட்டி அந்தப் பட்டையை வாங்கிக் கொண்டார்.

அந்த அம்மா சில்லரைப் பெட்டியைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து விட்டு, 'ஏப்பா, ஒரு ருபா இருந்தாக் குடு' என்று கேட்டார். தலைவர் பாக்கெட்டில் இருபது பைசாவில் இருந்து ஐநூறு ரூபாய் வரை எப்போதும் இருக்கும். ஆனால் வேண்டுமென்றே, 'ஒரு ருபா இல்லையே..' என்று சோகமாகச் சொன்னார்.

அந்த அம்மா பிறகு சில்லறைப் பெட்டியைத் திரட்டி, நான்கு ஒரு ரூபா காயின்களைக் கொடுத்தார். வந்ததே கோபம் தலைவருக்கு..!

'ஏங்க...! அதான் உங்ககிட்டயே இவ்ளோ ஒரு ரூபா காயின் இருக்கே..! என்கிட்ட ஏன் கேட்டீங்க..!' என்று கோபமாகச் சொல்லி விட்டு திரும்பி நடந்தார்.

அந்த அம்மா திகைத்துப் போய் நின்றார்.

Welcome to Thalaivar's Comedy Ground - EZoo...!!!!

லைவர் எங்களுடன் நான்காண்டுகள் கல்லூரியில் படித்தார். அல்லது அவருடன் நாங்கள் நான்காண்டுகள் இருந்தோம். தலைவரின் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது, திணறிப் போயிருக்கிறோம். தலைவர் செய்யும் பல% காரியங்கள் மெகா காமெடியாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை வெகு சீரியஸாகச் செய்வார்.

தலைவருக்கு நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்; நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் எப்போதும் இருந்தது. நாங்களும் தலைவரை கலாய்க்கவே கூடாது என்று முடிவு செய்து ஒரு நாளைத் துவக்கினால், தலைவர் அன்றைக்கு நான்கு பேரிடமாவது வாய் விட்டு மாட்டிக் கொள்வார்.

தலைவரைக் கலாய்த்தலை நாங்களே செய்ததை விட, ஒரு ப்ரொஃபஸர் செய்ததைச் சொல்லி, தலைவரின் திருவிளையாடல்களை அவ்வப்போது பார்ப்போம்.

லைவர் காலேஜ் முடித்து விட்டு, கனடாவிற்குச் சென்று எம்.எஸ். எம்.பி.ஏ., (updated) செய்வது என்ற சீரிய முடிவிற்கு வந்தார். கனடா பல்கலைகழகங்கள் மட்டுமே அந்தத் தகுதியைப் பெற்றுள்ளன என்பது தலைவரின் உறுதியான, இறுதியான அபிப்ராயம். நன்றாகப் படித்து, மிக அதிக சி.ஜி.பி.ஏ., எடுத்து ஜி.ஆர்.இ., டோஃபல் போன்ற கொடுமைகளை எல்லாம் சந்தித்து, பின் ப்ரொஃபஸர்களிடம் ரெக்கோவிற்காக மக்கள் அலைவதைக் கண்டு, தலைவர் யோசித்து, பிள்ளையார் போல் முதலில் ரெக்கோ ஒன்று வாங்கி வைத்துக் கொள்வோம்; எக்ஸாம்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ரொம்ப நாட்கள் சிந்தித்து ஒரு ப்ரொஃபஸரைப் 'போக்கிரி'யுடன் சென்று சந்தித்தார்.

ரெக்கோவை இவர்களே தயார் செய்து விட்டார்கள். அதில் அவர் சைன் மட்டும் போட்டால் போதும். அடுத்த ஃப்ளைட் பிடித்து விடலாம்.

ப்ரொஃபஸர் தலைவரின் ரெக்கோ ஷீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் தலைவர் மானாவாரியாகப் புகுந்து விளையாடி இருந்தார்.

'மேற்கண்ட மாணவன் நல்லவன்; வல்லவன்; நாலும் தெரிந்தவன்; வகுப்பு மணியடிப்பதற்கு முன் பெஞ்சில் இருப்பான்; டிப்பார்ட்மெண்ட் மெயின் கேட் சாவி ஒரு டூப்ளிகேட் இவனிடம் இருக்கும்; லேபில் முதல் ரிசல்ட் இவன் தான் காட்டுவான்; ராத்திரி ரொம்ப நேரம் ஆன பின்னாலும் போன் செய்து சந்தேகம் கேட்பான்; அஸைன்மெண்டுகளை சொன்ன தேதியில் முதலில் சப்மிட் செய்வான்; இவனுக்கு ஆராய்ச்சியில் மிக ஆர்வம்; வெர்னியர் ஸ்கேலை வைத்து வெப்பம் அளக்க முடியுமா என்று ஒரு நாள் ஆராய்ந்தான்; மொத்தத்தில் தலைவர் ஒரு சூப்பர் மாணவர்; எனவே To whomsoever it may concern' என்று ஆரம்பித்து தலைவரைச் சேர்த்துக் கொண்டால் உங்கள் பல்கலைக்கழகம் எங்கேயோ போய் விடும்; தலைவரைச் சேர்த்துக் கொள்வது நீங்கள் போன பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்' என்று முடித்திருந்தது.

ப்ரொபஸர் முழு பக்கத்தையும் படித்து விட்டு, தலைவரைப் பார்த்தார். தலைவர் வெகு ஆர்வமாய் அவர் முகத்தையே பார்த்தார்.

ப்ரொபஸர் மீண்டும் அந்தப் பக்கத்தைப் படித்து விட்டு, பேப்பரை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார். தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன சார் தேடறீங்க..?"

"இல்ல... எல்லாம் எழுதி இருக்கு..! ஒரு வரி மிஸ் ஆகுதே..!"

தலைவருக்குப் புல்லரித்தது. ஆஹா..! இவ்வளவு அக்கறையா நம் மேல் என்று எண்ணிக் கொண்டு,

"என்ன லைன் சார்..?"

அப்போது ஜெயம் படம் வந்து வெகு ஹிட்!

"கடைசியா இதுவரை 'விட்டதெல்லாம் ரீலு..' ங்கற லைனைக் காணோமே..!" என்று கேட்டார்.

லைவர் இருக்கின்றார்...!!!!!!