Sunday, February 18, 2018

திருமண வாழ்த்துப் பா.

ண்பர் தமிழ்ப்பறவையின் திருமண நாள் வாழ்த்தாக எழுதியது, வெகு ஆண்டுகளுக்கு  முன். பதிவுக்காக இங்கேயும்.


காலைக் கதிரவன் நாளைத் துவக்கிடும்
வேளை நதிக்கரை நீர்நுரை - காலை
நனைகுளிர் போலும் வரும்தினம் யாவும்
மனையுடன் வாழிய நீர்.

வானில் நகர்மதி நோக்கும் மலர்ந்திடும்
ஊனில் வளர்மதி ஊக்கிடும் - தேனில்
கரையாச் சுவையுறு காதலைக் கண்டு
உரையா அடைந்திடும் நாண்.

கீழ்வான் உதித்தொளி கீறிய செவ்வரி
மேல்வான் உதிரொளி தீட்டுதல் - போல்வான்
தருநிழல் தாங்கும் தவப்பெண் அவளின்
வருங்கழல் வாங்கினன் வாழ்வு.
 

(வேறு)

வாயில் இருபுறம் வாழைப் பசுமரம்
வாழ்த்த வரும்பல வாலிபர் நங்கையர்
தாயின் கரம்பிடி தம்பியர் தங்கையர்
தந்தையின் தோளது தாங்கும் மழலையர்
பாயில் சுருட்டிய பஞ்சணைப் போர்வைகள்
பால்நிறைப் பாத்திரம் பச்சைக் கறிகாய்
 வேயின் குழலொளி வேனில் நிழலென
வீதியில் எங்கும் விளங்கும் திருநாள்.

குங்குமம் பன்னீர் குழைத்திட சந்தனம்
மங்களம் பூச மணந்திடும் மஞ்சளும்
திங்களைப் பூட்டிய தேங்காய் இருகனி
தீராப் புகைசூழ் திகழ்மண பத்திகள்
அங்கம் முழுதும் அணிந்தது புன்னகை
அன்பின் அழகின் அரும்புகள் கைகளை
தங்கும் வணங்கும் தவறா தனைவரும்
தானும் இணங்கித் தலையை அசைப்பர்.

வேதமுரை ஞானியரும் வேள்வியிலே தீவளர்ப்பர்
வேண்டியவர் சூழநின்று வாழ்த்திநலம் கூறிடுவர்
நாதமுரை நாயனமும் நல்லிசையின் மேளவொலி
நாற்றிசையும் கேட்டிடவே நல்லவரும் வாழ்த்திடுவர்
பாதம்வரைத் தேடுவரின் பால்நிலவை நாடுவரின்
பாதியுடல் தேவிகொண்ட பைரவரின் ஆசியுடன்
ஏதுகுறை யாதுமின்றி எல்லாநல் செல்வங்கள்
ஏந்திநின்று லட்சுமியும் ராஜனும் வாழியவே!

ஆண்டவர் வெண்பாக்கள்.

ணிணியைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் கடவுள்களைப் பற்றி எழுதிய சில வெண்பாக்கள் கிடைத்தன. ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதியவை. தொலைந்து விடாமல் இருக்க, இங்கே பதிந்து விடுகிறேன்.

பிள்ளையார் பா:

தொந்தி பெருத்தவனே தின்றுகி டக்கமுச்
சந்தியில் சாய்ந்து சரிந்தென - குந்தியுடல்
உந்தியிலே பானை உளமுகமோ ஆனைநீ
எந்திரிக்க ஆகும் யுகம்.

முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கந்தன் பா:

வள்ளியோ பக்கத்தில் வெண்களிறு இந்திரன்
பிள்ளையோ வெட்கத்தில் பின்பிறந்த - கிள்ளையே,
கோலமயில் கொண்டுமா கோரிபூ சுற்றிய
பாலமுரு கன்பே ருனது.

அனுமன் பா:

வாலொடு வந்தனை வானப்பூ நாடினை
மாலொடு மங்கையும் மாரிலே - நாலொடு
ஒன்றினை நம்பியின் நாமமதை நாவிலே
என்றுமே சொல்லுவா ராம்.

சிவன் பா:

நீறணிந்த நெற்றியே நீரறிந்த உச்சியே
தாரணிந்த தோளினாய்த் தாங்காழிச் - சாரறுந்திக்
கண்டநிறம் கார்நீலம் கொண்டுயர் கோனேமுன்
தண்டமிடத் தாரும் அருள்.

Thursday, February 15, 2018

நீலாம்பல் நெடுமலர்.31.


சிறுகுறிஞ்சிப்பூ பூக்கையில் காத்திருக்கும் வண்டு சென்றமர்ந்து தேன் கொள்ள ஆண்டுகள் ஆயினவாம் ஈராறு! காலம் திரண்டு ஒற்றைத் துளியென இனிமை செறிந்த அத்துளியைத் தொட்டுச் சுவைத்து அமரத்துவம் அடைந்தது அப்பூச்சி! மென்னிறக்கைகளில் படர்ந்த அக்குளிர்மை தேகமெங்கும் தித்திக்கப் பறந்தது வனமெங்கும்! ஆயிரமாண்டு நின்ற ஆலங்களும் அவற்றின் விழுதுகளுக்கும் இடை நின்ற காற்றின் பாதையில் நீந்தி நீந்திக் களைத்தமர்ந்தது பசுங்குளத்தில் மீ இளஞ்சிவப்பு வர்ணப் பல்லாயிரம் இதழ்களை விரித்து கூம்பல் தாண்டிய தாமரை மலரொன்றின் மேல்!

குளத்தூறிய நீர் காட்டும் வர்ணங்கள் நாளொன்றுக்கு ஏராளம்! புலரி எழும் முன் வான் கலந்த இருள் நிறத்தின் நிழல் பூசி குளிருக்கு அசைந்து கொண்டிருக்கும்! பொன்னொளி பூசி கிழக்கின் தேசத்தில் ஏழ்காலெடுத்து வைத்து அருணன் சொடுக்கும் சாட்டையின் மீச்சிறு ஒலி கேட்டு கூடு விட்டுக் கிளம்பும் பல கோடி புள்ளினங்களின் சிறகுகளையிம் கீச்சிடல்களையும் எதிரொலித்து மஞ்சள் நிறம் கொள்ளத்துவங்கும்! எழுந்து வந்து மேலேறித் தன் வெம்மைப் போர்வையை ஆகாயத்தின் அத்தனை திசைகளிலும் ஒரு சொடுக்கில் விரித்துப் பரப்பி பகலெனும் திரைக்கீழ் நிகழும் அத்தனை நாடகங்களையும் கண்டு களிக்கையில், தனிமையில் ததும்பும் குளம், தன் மேல் காற்றில் சுழன்று விழும் சருகுகளையும் விளைந்தாடும் நிழல்களையும் சுமந்து சுமந்து களைத்து வெண்ணிற அணிகொள்ளும்! செம்மாந்த அடுக்குகளில் மேல் திசையில் தொலைவின் மலைமுகடுகளில் கூரில் சிதற நீள் போர்வை விரித்து ஆதுரத்துடன் புவிமேல் ஊரும் உயிர்களை அமைதிப்படுத்தி வானரசன் மறைகையில், பெருமூச்சு விட்டு ஒரு நாள் பொழுதைக் கழித்த நினைவில் குளம் அள்ளி அணைக்கும் செம்மை வர்ணத்தை! எல்லாம் அணைந்து வான்மீன் பாட்டையில் ஒய்யார வெண்குயில் உல்லாச உலா துவங்கிச் செல்கையில், எங்கோ ஒரு மூலையின் நட்டு வைத்த சவுக்குக் கூட்டத்து மேனியெங்கும் இட்டு வைத்த பொட்டுப் பொட்டு வட்டத் துளைகள் வழி இளங்காற்று நுழைந்து வெளியேகும் ஒலி வனமெங்கும் கேட்கையில் குளம் அடங்கிக் கொள்ளும் இரவின் கனத்த மோகன மெளனத்தின் கூட்டுக்குள், கருமை கொண்டு! அவ்விரவின் ஒரு துளியில் குளத்தில் விரிந்து மணம் வீசிய ஒரு செந்தாமரை முகட்டில் சென்றமர்ந்த தேன் மயக்கத்து வண்டொன்று கண்டது மதுரக்கனவொன்றை!

எந்நேற்றென்று அறியா நாளொன்றில் எப்பொழுதென்று தெரியாதொரு நேரத்தில் பூக்களால் நெய்த ஓர் இளந்தேவதை முகில் படிக்கட்டுகளில் தவறி விழுந்த பஞ்சுப்பிசிறைப் போல் மிதந்து மிதந்து வனத்தின் குளத்தில் ஓராயிரம் இதழ்கள் விரித்த மையப்பெரும் தாமரை மேல் இறங்கினாள். கனி சுற்றிய தோலை அகற்றல் போல் கொண்டு வந்த ஆடைகளை அகற்றி, பொன்னென பூவண்ணமென கொணர்ந்த தேகத்தை நீரில் ஆழ்த்தினாள். நீராடி நனைதலைத் தவமெனச் செய்யும் தாமரைத்தண்டு போன்ற நீள் விரல்களால் ஆங்குப் பொசியும் துளிகள் தளும்பும் பசிய இலைகளைத் தீண்டினாள். முதுமை களைந்து கன்னியென ஆவது போல் இலைகள் சிறு பொன்வண்டுகளாயின. துளி உதடுகளால் அவள் பெயரைத் தாமும் சொல்லிச் சொல்லித் திசைகளுக்குப் பறந்தன.

அவள் நீராடிக் களித்த ஆயிரம் அலைகள் சிந்திச் சிதறிய கரைகள் ஈரத்தின் விலாசங்கள் ஆயின. அவள் கைவிரல்கள் தடவிய தாமரைத் தண்டுகள் சொர்க்கம் செல்லும் வழிப்பாதைகள் ஆயின. அவள் கச்சை மறைத்த செழும் மார்புகள் நனைந்த பனிமுகடுகள் ஆயின. கூந்தலில் சறுக்கி விழும் வினைநுட்பம் முடித்த குளிர்த்துளிகள் தோளைத் தழுவி தோலில் நழுவி இடைக்குறுக்கலில் இறங்கி காணாமலாயின. ஈரம் குளிரக் குளிர நீராடிய சிறுதேவதை, பொன்னுடல் நீங்கிய மெல்லாடைகளைக் கண்டெடுத்து அணிந்தாள். கண்டு சிவந்து போயிருந்த தாமரை இதழ்களை உந்தி காற்றில் எழும் மென் புகை போல், அவள் மிதந்து உயர்ந்து முகிலணைந்தாள்.

வண்டென வந்த இரு கண்கள் கண்ட கனவில் வந்து மறைந்த அத்தேவதையை மீண்டும் காண வேண்டி, அத்தனிமைக் குளத்துக் கமலங்களிலேயே குடி கொண்டது அது.

Pic: https://society6.com/product/lily-pond-lane_print

Tuesday, February 13, 2018

நீலாம்பல் நெடுமலர்.30.


மானைப் பழிக்கும் இரு விழியலைவு;
தேனை இழிக்கும் ஆழிறங்கு முத்தம்;
வானைக் கிழிக்கும் மின்னலாய்த் தழுவல்;
நானை அழிக்கும் ஈருடல் இணைவு!

தணுமை நிறைந்த விரல்நுனி படுகையில்,
அணுக்கம் என ஒரு வாசனை நாசி தொடுகையில்,
மேலாடை விரிப்பின் ஒரு படலம் முகம் தழுவி விலகுகையில்,
அருகிருப்பதன் வெம்மை தீண்டும் திசைகளில் நிறைகையில்,
இந்நாள் இன்னும் நீளாதோ? இந்நொடி இப்படியே உறையாதோ?

விடியற்காலைச் செம்மை ஒரு கோபம்;
முடிமாலை அந்தி முயக்க பாவம்;
அடிவாரநதிக் கொப்பளிப்பு தீரா அணைப்பு;
முடியா உறவு பிறவிகள் தோறும்!

நாளும் இரவுமென காலம் கழிகின்றது;
கோளும் கிரகமுமென படுத்தும் வாழ்விது;
தாளும் வேலுமென நீ முன் வந்தணைக்கையில்,
நீளும் மோகவடிவில் உன்னில் புதைகிறேன்.

வேனில் மேகங்கள் நீர் காட்டல் போல் வந்தமைந்து துளி சிந்தாது காற்றில் கலைகின்றன;
உன் சொல்லா ஊடல் போல்!
மழைக்கால முகில்கள் வானாழி திறந்தாற்போல் கனமாய்ப் பெய்து முழுதுடல் நனைத்து நடுங்கச் செய்கின்றன;
உன் நில்லாக்கூடல் போல்!

நேரங்கழியாது;
நாள் நகராது;
காணா நொடிகளால் காலம் ஆகுகையில்.

பால் நுரையாலோர் ஆடை;
தீ அனலால் ஓர் அணிகலன்;
நீர் ஈரத்தில் ஒரு முத்தம்;
திடீர் மழையாய் ஒரு முழுதணைவு;
போதும் ஒரு பிறவி!

இன்னும் ஒரு சொல்!
இன்னும் ஒரு பார்வை!
இன்னும் ஒரு புன்னகை!
இன்னும் ஒரு நூறாண்டு!

Tuesday, February 06, 2018

நீலாம்பல் நெடுமலர்.29.



நீ அருகில் வருகையில்...

ண்மலர்கள் மட்டும் பூத்திருக்கும் மெல்லிரவில் ஒரு காலடி ஓசை கேட்டு விழித்தேன். சிலம்பணிந்தல்ல, கழல் சூடியதல்ல, கொலுசு கொண்டதல்ல, ஆயினும் தும்பி தேனருந்தும் கேளா சப்தம் அது. நிழல்களில் பதுங்கிச் செல்லும் பூனை போன்றது. சரிவில் ஒழுகிச் செல்லும் நீர்த்தாரை போன்றது. சருகில் உண்டு படுத்திருக்கும் நீளரவின் உடலுக்குள் ஆடு புரளும் ஒலி போன்றது. ஆயினும் கனவில் கேட்ட மென்னடை போன்ற நிரம்பிய கலத்தில் சொட்டிய இறுதித் துளி போன்று ஒலிக்க, வான் அசையா அவ்விரவில் அக்காலடிகள் ஏதோ ஒரு திசையிலிருந்து எங்கோ ஒரு திசைக்குச் சென்று கொண்டிருந்தன.

பாதையெங்கும் பாறைகள். உருண்டும் திரண்டும் சரிந்தும் சேர்ந்தும் விலகியும் ஒன்றியும் இடுக்குகளைச் சாரைகளுக்குக் கொடுத்து விட்டு கோடைகளையும் மழைகளையும் கண்டு கண்டு சலித்துச் சலித்து காலத்தின் நதிக்கரையில் தேங்கிக் கிடந்தன பலகோடி பாறைகள். நேரமது வழிந்த கோப்பை நுரைக்குமிழிகள் போன்ற ஒவ்வொரு சரளைக்கல்லும் மிதித்துச் சென்ற பல்லாயிரம் பாதச் சுவடுகளை ஒன்றன் மேல் ஒன்று அழுத்தி மண்ணில் புதைந்து போயிருந்த அப்பாதையில் அக்காலடிகள் சென்று கொண்டிருந்தன.

செல்திசை அறியாது கொள்பாரம் விலக்காது வான்மீன்கள் ஒரே நோக்கு கொண்டு நோக்கிய அவ்விரவில் இக்காலடிகள் எங்கு தான் சென்று சேரும்? வழியில் ஒரு வனமுண்டு; வனத்தின் நடுவே ஒரு குளமுண்டு; குளமெங்கும் குவலயத்தில் காணவியலா பொன்பூக்கள் பூத்திருக்கும் இப்போது. அங்கே தான் சென்றடையுமா இக்காலடி? ஒவ்வொரு பூவின் மகரந்தக் குவியத்தில் சென்றிறங்கி அடைய ஓர் உலகம் உண்டு. எவ்வுலகைத் தேரும் இக்காலடி? பூச்சிகள் மட்டுமே உலவும் பொன்னங்காடியா? பூக்கள் மட்டும் நிறைந்திருக்கும் மலர்சாடியா? வெண்முத்துக்கள் மட்டும் குவிந்திருக்கும் மஞ்ஞாடிபுரமா? காலடி சென்று கொண்டேயிருந்தது.

வனம் தாண்டி ஈற்றெல்லைப் புள்ளியான ஒற்றைத்துளசிச் செடிக்கு அப்பால் பெரும்பாலை அல்லவா விரிந்துள்ளது? மணல் மடிப்புகளால் வளைவுகள் நிரம்பிய என்றும் மென்புயல் அடித்துக் கொண்டிருக்கும் அந்நிலத்தில் எதை அடைய இயலும்? முட்செடிகளும், மாயநீர்த்திரைகளும், தனிமைச் சுனையும், பெருங்கழுகுகளும், நச்சூறி நாநுனியில் இருள் தேக்கித் துப்பக் காத்திருக்கும் கொல்லிகளும் நிரம்பிய அப்பழுப்பு நிலத்தில் ஏன் அக்காலடி செல்கிறது? எங்கு எதைச் சென்றடைய அது நிறைகுளிர்க் கடும் போர்வைகளைக் கிழித்துக் கிழித்துச் செல்கிறது?

நீராலான கோட்டையொன்று பாலையின் அந்நுனி தாண்டி ததும்பிக் கொண்டிருக்கின்றது. நுரைகளாலான தூண்களும் அலைகளாலான தரைப்பரப்பும் கொண்ட அங்கு உள்ளறைக்குள் இரு இளவரசிகள் சேர்ந்தும் தனித்தும் காத்திருக்கிறார்கள். வெண்ணிலவின் பிம்பம் போன்றொருத்தி. அலையும் கலையும் கணத்திற்கோர் உரு காட்டும் முகில் போலொருத்தி. நிலவுப்பெண் வெண்மை கொண்டிருப்பினும் விரவிய இருள் அணிந்தவள். முகில் நங்கை ஊடுறுவும் நிலவின் ஒளி பூசியவள். குளிர்ந்த சாளரத்தின் மேல் சாய்ந்து தூரத்து வெளியைப் பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருப்பது, இக்காலடிக்குத் தானா? அதை அறிந்து தான் இக்காலடி இன்னும் கொஞ்சம் விரைவு கொள்கிறதா? அக்காலடியைக் கண்டதும் அது சொல்லும் ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் அவர்கள் என் செய்வர்?

நீர்த் தேசத்தின் அவ்விரு இளவரசியர் ஈரக் கோட்டையை நீங்கி, வெம்பாலையைத் தாண்டி, பல்லாயிரம் உலகங்களைப் பதுக்கி வைத்திருக்கும் ஒரு குளத்துப் பூக்களைக் கடந்து, பாதைப் பாறைகளை மிதித்து, இவ்விரவின் ஓசைகள் அடங்கியபின் ஒற்றைக் காலடி ஓசையை மட்டும் கேட்டுப் படுத்திருக்கும் இம்மனத்தை வந்தடைவரா?